காசா பணமா... அட சும்மா சிரிங்க பாஸு!

உலக புன்னகை தின சிறப்புக் கட்டுரை
காசா பணமா... அட சும்மா சிரிங்க பாஸு!

சமூக வலைதளங்களில் இன்றைக்கு, நாம் அதிகமாகப் பயன்படுத்துவது மஞ்சள் நிற ஸ்மைலியாகத்தான் இருக்கும். இதை 1963-ம் ஆண்டிலேயே ஒருவர் உருவாக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடியுமா? ஆமாம்... ஹார்வி பால் என்பவர்தான், மஞ்சள் ஸ்மைலி முகத்தை உருவாக்கினார். வணிகக் கலைஞரான இவர், ஸ்டேட் மியூச்சுவல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன பிரச்சாரத்திற்காக ’ஸ்மைலி ஃபேஸ்’ எனும் டிசைனை உருவாக்கினார். அப்போது, இந்தச் சின்னம், நல்ல எண்ணத்துடன் தொடர்புகொண்டதாகவும் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதைக் கண்டு அவர் மகிழ்ந்தார்.

ஆனால் சில காலம் கழித்து, அது வணிகமயாமனது கண்டு கலங்கிப் போனார். இதனுடைய உண்மையான அர்த்தம் வெளிப்படாமல் போகிறதே... என வருந்தினார். அப்போதுதான் ‘உலக புன்னகை தினம்’ என்று ஒரு நாளைக் கொண்டு வர முடிவு செய்தார். ’’உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு வருடத்தில் ஒரேயொரு நாளையேனும் புன்னகைக்கும், கருணைச் செயல்களுக்கும் ஒதுக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.

2001-ல் ஹார்வி மறைந்தார். அவரின் பெயரையும் நினைவையும் அவரின் நல்லெண்ணத்தையும் போற்றும் வகையில், ’ஹார்வி பால் வேர்ல்ட் ஸ்மைல் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இது ஒவ்வொரு வருடமும் உலக புன்னகை தினத்தைக் கொண்டாடி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும் ‘உலக புன்னகை தினம்’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சரி... ‘புன்னகை’யைக் கொஞ்சம் பார்ப்போமா?

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ’புன்னகை’ என்றும் ‘புன்னகை மன்னன்’ என்றும் படமெடுத்திருக்கிறார். ‘நீதானே புன்னகை மன்னன்’ என்று வைரமுத்து பாடலே எழுதியிருக்கிறார். நம் வாழ்வில் புன்னகை என்பது மிக மிக முக்கியமானதுதான். இரண்டறக் கலந்ததுதான். ‘இடியே விழுந்தாலும் அவன் சிரிக்கக் கூட மாட்டான்யா. அப்படியே அமைதியா இருப்பான்யா’ என்று சிலரைச் சொல்லுவார்கள். ’அட... கொஞ்சம் சிரிச்சா என்ன குறைஞ்சா போயிருவே’ என்று சிலரைச் சொல்லுவார்கள். அதேசமயத்தில், ‘எப்பப்பாரு... ஈஈஈஈஈஈஈனு இளிச்சிக்கிட்டே திரியுறான்’ என்றும் சொல்லுவார்கள்.

‘அவன் எப்பப்பாரு உம்மணாமூஞ்சியா இருப்பான்’ என்று சொல்வது தேவையா? எந்த மிருகமும் சிரிப்பதில்லை. சிரிக்கத் தெரிந்தவர்களும் சிரிப்பின் உணர்வை அறிந்தவர்களும் மனிதர்களாகிய நாம்தான். ‘வீட்டுக்குச் சொந்தக்காரங்க வர்றாங்க. நீபாட்டுக்கு உம்முன்னு இருக்காதே. சும்மா கலகலன்னு சிரிச்சிப் பேசு’ என்று பெற்றோர் அட்வைஸ் செய்வார்கள். நகைக்கடை, ஸ்டார் ஹோட்டல் முதலான இடங்களில் வேலை பார்ப்பவர்களிடம் கூட, ’கஸ்டமர்கிட்ட சிரிச்ச முகமா இருக்கணும்’ என்பதுதான் முதலும் முக்கியமுமான அட்வைஸாக சொல்லப்படும்.

’வாய் விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்’ என்று அந்தக் காலத்தில் இருந்தே சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் வாய்விட்டுச் சிரிப்பது குறைந்துவிட்டது. ஒரு மெல்லியச் சிரிப்பை உதிர்ப்பதே அதிகமாகிவிட்டது. அந்தக் காலப் படங்களின் விளம்பரங்களில், ‘வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் நகைச்சுவைச் சித்திரம்’ என்கிற வாசகம் இடம்பெற்றிருக்கும்.

‘இந்தப் புன்னகை என்ன விலை?’ என்று எம்ஜிஆர் பாடியிருப்பார். நாயகியின் புன்னகை அவரைப் பாடவைத்திருக்கும். ‘சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்’ என்று அதே எம்ஜிஆர் பாடியிருப்பார். ’சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்று நமக்கு அறிவுரையும் சொல்லியிருப்பார். கொஞ்சம் கோபப்பட்டு, ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு’ என்று ஆவேசத்துடன் பாடுவார்.

‘சிரிசிரிசிரி... சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர்’ என்று கமல்ஹாசனும் பாடியிருப்பார். சிரிக்காமல் இருப்பவர்களை ‘இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வைச்சிருக்கான் பாரு’ என்பார்கள். உண்மையில், இஞ்சியைத் தின்ன குரங்கை எவரும் பார்த்திருக்கவே இல்லை என்பதுதான் உண்மை. வெறும் இஞ்சியைத் தின்னால் குரங்கின் முகம் இன்னும் கேவலமாகிவிடும் என்கிற கற்பனையையும் சிரிக்காமல் இருப்பவர்களையும் ஒப்பிட்டிருக்கிறான் நம் முப்பாட்டன்!

சிவாஜியும் ‘சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே’ என்று பாடினார். ’அபூர்வ ராகங்கள்’ படத்தில் ‘கைகொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டுக் கல்யாணமே’ என்று மற்றவர்களின் கேலிச் சிரிப்பைச் சொல்லியிருப்பார் கண்ணதாசன். ’சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது, சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது’ என்று சந்திரபாபு பாடியதை மறக்க முடியுமா என்ன?

சிரிப்பும் அழுகையும் நம்முடன் பிறந்தவை. சந்தோஷம் என்றால் சிரிக்கவும் சோகம் என்றால் அழவும் முடியும் நம்மால். சந்தோஷத்தில் இருக்கும் போது வெடித்துச் சிரித்துவிட வேண்டும்; அதேபோல, துக்கித்து நிற்கும் போது கதறி அழுதுவிடவேண்டும். நாலுபேருக்கு முன், சிரிப்பதும் அழுவதும் நாகரிகமல்ல என்பதாகிவிட்ட உலகமாக மாறிவிட்டது இப்போது! ’சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததுதானே மனித ஜாதி’ என்ற பாடல் பி.பி.ஸ்ரீநிவாஸ் உருக உருகப் பாடியிருப்பார்.

’சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்’ என்றொரு பாட்டு உண்டு. அப்படிச் சிரிக்கும்போது கண்ணீர் வருவதைத்தான் ஆனந்தக் கண்ணீர் என்கிறோம்.

’ஒருபக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்க்குறா அவ உதட்டைக் கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா’ என்பதும் எம்ஜிஆர் பாட்டுத்தான். படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் எம்ஜிஆரிடம் எப்போதும் ஒரு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டே இருக்கும். ’ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தில் ‘நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே நான் அழுகுறேன் அழுகுறேன் அழுகை வல்லே’ என்று பபூன் பாடுவது போல் சிவாஜி பாடி நடித்திருப்பார். ஆகவே, சிரிப்பு வரும்போதெல்லாம் சிரித்துவிட வேண்டும். அழுகை வரும்போதெல்லாம் அழுதுதீர்த்துவிட வேண்டும்.

இப்போது, ‘லாஃபிங் தெரபி’ என்றே வந்துவிட்டது. பார்க்கில் பத்துப் பனிரெண்டு பேர் வட்டமாக நின்றுகொண்டு, எந்த ஜோக்கும் அடிக்காமல், ஒரு அரைமணி நேரம் ‘ஹாஹாஹா’ என்று சிரித்துக் கொண்டே இருப்பார்கள். சிரிப்பது நமக்கு மறந்துவிட்ட நிலையில், பிஸியோதெரபி போல், லாஃபிங் தெரபியில் சிரித்தால்தான் உண்டு என்றாகி விட்ட சோகத்தை என்ன சொல்லி அழுவது? நம்ம குமரிமுத்துவின் வெற்றியே அவரின் வெடிச்சிரிப்புதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வைச்சார் வள்ளுவனார் சரிங்க’ என்று கண்ணதாசன், துன்பம் வரும் போது கூட வள்ளுவர் சிரிக்கச் சொல்லியிருப்பதை உணர்த்துகிறார். ஆனால் நாம் இன்பம் வரும்போது கூட இப்போதெல்லாம் சிரிப்பதே இல்லை. லேசாகப் புன்னகையுடன் கடந்துவிடுகிறோம்.

சினிமா ஏரியாக்களில், ப்ரிவியூ ஷோ போடுவார்கள். பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்களெல்லாம் வருவார்கள். எப்பேர்ப்பட்ட காமெடிப் படம் போட்டாலும் சிரிக்கவே மாட்டார்கள். ‘விமர்சனம் எழுதுவதற்காக பார்க்கிறேன் பேர்வழி’ என்று எல்லோரும் சிரிக்காமலும் அழாமலும் கரவொலி எழுப்பாமலும் பார்ப்பார்கள்.

'சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு’ என்று ‘ராஜா ராணி’ படத்தில் கலைவாணர் பாடியிருப்பதைத்தான் சொல்லியாக வேண்டும்.

’கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்

கண்ணாடி சிரிப்பு / களையை நீக்கி கவலையைப் போக்கி / மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு / துன்ப வாழ்விலும் இன்பம் காணும் / விந்தை புரிவது சிரிப்பு / இதைத் துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில் துலங்கிடும் தனிச் செழிப்பு /

பாதையில் போகும் பெண்ணைப் பார்த்து பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு / அதன்

பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது/ காதறுந்த பழம் செருப்பு காதறுந்த பழஞ்செருப்பு /

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு /வேறு

ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு

இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு / இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு / இது சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு / இது சங்கீதச் சிரிப்பு’ என்றெல்லாம் சிரிப்பின் வெரைட்டிகளை புட்டுப்புட்டு வைத்திருப்பார்.

சிறுவயதில், ‘கிச்சுகிச்சு’ மூட்டி சிரித்து விளையாடியதெல்லாம் நினைவுக்கு இருக்கிறதா? ‘உலக புன்னகை தினம்’ என்றில்லாமல் எப்போதும் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் இருப்போமே!

அப்போதெல்லாம் போட்டோ ஸ்டூடியோவிலோ அல்லது போட்டோகிராஃபர் புகைப்படம் எடுக்கும் தருணத்திலோ நம்மிடம் மறக்காமல் சொல்லுவார்கள்... ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று!

சிரியுங்கள் என்பதைக் கூட கெஞ்சிக் கேட்கிற நிலைமை வரும் என்று புகைப்படக் கலைஞர்களுக்கு அந்தக் காலத்திலேயே தெரிந்திருக்கிறது போல!

அட... காசா பணமா? ச்சும்மா சிரிங்க பாஸு... ‘ஸ்மைல் ப்ளீஸ்!’

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in