என்ன வதந்தி சரவணன் இது..?

என்ன வதந்தி சரவணன் இது..?
ஓவியம்: வெங்கி

பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் வருமா என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதுகூட பரவாயில்லை போலிருக்கிறது. அதை ஒரு விவாதப் பொருளாக்கி மருத்துவ நிபுணர்களின் பேட்டிகளோடு ஊடகங்கள் பிரியாணியை பிரித்து மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தால்தான் இந்த அக்கப்போர் எங்கே போய் முடியும் என அச்சமாய் இருக்கிறது. இந்த பிரியாணி இப்போதைக்கு தேவையில்லாத ஆணிதான்.

இப்படிப்பட்ட தேவையில்லாத ஆணிகள் வாட்ஸ்- அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைதளங்கள் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளன. “பாஸ்… அது தேவையில்லாத ஆணின்னு எப்படி கண்டுபிடிக்கிறது பாஸ்” என நீங்கள் கேட்டால், பார்த்த உடன் பகிர்வதற்காக கை குறுகுறுத்தால் அந்த பதிவு தேவையில்லாத ஆணியாகத்தான் இருக்கும் என வடிவேலு பாணியில் சிரிப்பாக அல்ல, சீரியஸாகவே சொல்லலாம். தேவையில்லாத அந்த சிறப்பான ஆணிகளில் சிலவற்றை பார்க்கலாமா...

‘டாடா குரூப்பின் 150-வது ஆண்டு தினம் கொண்டாட்டத்தில் காரை வெல்ல கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்’ என வாட்ஸ்- அப் வதந்தி ஒன்று குரூப் தவறாமல் இன்னும் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயம் என்னவென்றால்... அதை பகிரும் யாரும் தங்களுக்கு கார் வேண்டாம் என ‘பெரிய மனதுடன்’ மற்றவர்களுக்காக மாய்ந்து, மாய்ந்து ஃபார்வேர்ட் பண்ணிக் கொண்டே இருப்பதுதான்!

தேள் கொட்டி அதற்கு வைத்தியம் பார்த்துவிட்டால் இதய நோய்க்கு அறுவை சிகிச்சையே தேவையில்லை என பெரிய தேள் படத்துடன் ஒரு தகவல் வாட்ஸ் - அப், ஃபேஸ் புக்கில் ‘கொட்டிக்’ கிடக்கும். தேள் கொட்டினால் ரத்தக் கொதிப்பு வராது, செங்குளவி கொட்டினால் கேன்சர் வராது என நீளும் அந்த செய்தியைப் பார்த்துவிட்டு பலரும், ‘கேன்சர் மருத்துவமனையில் ஏன் செங்குளவி வளர்க்கவில்லை... இதய நோயாளியை தேள் கொட்ட விடலாமே...’ என்றெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேளிடம் ஒரே ஒருமுறை கடி வாங்கி விஷம் ஏறினால் ஒழிய இந்த வதந்தியை பரப்புபவர்களின் கை விரல்கள் சும்மா இருக்காது போலிருக்கிறது.

திருநள்ளாறு கோயிலின் மீது பறக்கும்போது அமெரிக்காவின் செயற்கைக் கோள் 3 விநாடி ஸ்தம்பித்ததை பார்த்து நாசா விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது என்றொரு பொய் செய்தி. அதையும் ‘நம் அஞ்ஞானிகள்’ ஆளுக்கு நூறு என ஃபார்வேர்ட் செய்து திருநள்ளாறு பகவானின் அருளாசியைப் பெற்றார்கள். அது வதந்தி என்பதை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உறுதி செய்த பின்பும், ‘இந்த நாசா இருக்கிறதே...’ என இன்னும் அமெரிக்க செயற்கைக்கோளை திருநள்ளாறில் 3 விநாடிகள் திணறவைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

‘சேலம் அருகே வெளி மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பலில் ஒருவர் பிடிபட்டார். என்னைப் பிடித்து விடலாம் மீதமுள்ள 399 பேரை பிடிக்க முடியாது என அவர் சவால் விட்டார்’ என்ற பொய்ச் செய்தியை நம் ஆட்கள் பரப்பி சேலத்தையே தெறிக்கவிட்டார்கள். இந்த மாதிரியான வதந்திகளின் கீழேயே ‘இது போலீசின் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்’ என இருந்துவிட்டால் நம் மக்களின் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும் பொதுநலவாதி கொட்டாவி விட்டபடி எழுந்து கொதித்துப் போய் ஒரு பத்து குரூப்பிற்காவது ஃபார்வேர்ட் செய்துவிட்டுதான் சாந்தமாவான். அது பல மாதங்கள் சுற்றி வந்தாலும் மீண்டும், மீண்டும் போலீஸ் கண்ணில் படவேண்டும் என ஷேர் செய்பவர்களின் சமூக அக்கறையை நினைத்தால் சிலிர்த்துப் போகிறது உடம்பு.

அண்மைக்காலமாக, பிரிக்க முடியாததில் கரோனாவும் அது தொடர்பான வதந்தியும் கட்டாயம் இடம்பெறும். ‘உப்புப் போட்டு வாய் கொப்பளித்தால் தொண்டையிலேயே கரோனா கிருமி செத்துப் போகும்’ என்ற போலிச் செய்தியை பரப்பாதவர்களை தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். ‘மாத விடாயின் போது கரோனா தடுப்பூசி போடக்கூடாது, கரோனா தடுப்பூசி போட்டவர்கள் 2 ஆண்டுகளில் இறப்பார்கள் என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தகவல், ஆவி பிடித்தால் கரோனாவை மூக்குக்குள்ளேயே கொன்றுவிடலாம்...’ என நம் வதந்தி பிரியர்கள் பாவம் கரோனாவை வைத்து கட்டவிழித்துவிடாத கட்டுக் கதையே கிடையாது. கரோனா மிரட்டலை விட இந்த வதந்திகளின் மிரட்டல்தான் நம் மக்களை நடுநடுங்க வைக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டு கீழே, ‘ஐ.நா, யுனெஸ்கோ, நாசா, அமெரிக்கா என போட்டுவிட்டால் போதும் வதந்திகளுக்கு இறக்கை முளைத்து ஃபேஸ்புக், ட்விட்டர் என பறக்கத் தொடங்கி விடுகிறது.

வாட்ஸ்- அப்பில் வதந்தி பரப்புவதில் இன்னும் ஒரு படி மேலே போய் வாட்ஸ் - அப் பற்றியே வதந்தி பரப்பும் கொடுமையும் உண்டு. ‘வாட்ஸ் - அப் இனி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்... இதை ஃபார்வேர்ட் செய்யாதவர்களின் வாட்ஸ் - அப் கணக்கு அடுத்த 48 மணி நேரத்தில் அழிக்கப்பட்டு விடும்’ என்றெல்லாம் வாட்ஸ் - அப் வழியாகவே ஃபார்வேர்ட் செய்து அந்த நிறுவனத்தையே தலையில் அடித்துக்கொள்ள வைக்கும் அளவுக்கு நம் ஆட்களின் கற்பனைத் திறன் களேபரம் கொண்டது.

சமூக வலைதளங்களுடன் மல்லுக்கட்டும் ஊடகங்களின் நிலமையை பார்த்தால் இன்றைய தங்கம் விலை நிலவரம் போல இன்றைய வாட்ஸ் - அப் வதந்தி என சிறப்பு பத்தி அல்லது காணொலி வெளியிடக் கூடிய நிலைகூட வரலாம். (பொறுப்பு துறப்பு: இதில் எடுத்தாளப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் வதந்திகளே… அது உண்மை என கூறி யாரேனும் இதையும் ஃபார்வேர்ட் செய்தால் நிர்வாகம் பொறுப்பல்ல!)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in