‘துரை’முகமாகுமா மதிமுகம்?

வைகோவிடம் வம்பிழுக்கும் பாச்சா
‘துரை’முகமாகுமா மதிமுகம்?
ஓவியம்: வெங்கி

அன்று நள்ளிரவைத் தாண்டியும் பாச்சாவின் அறையில் பளீரென விளக்கு எரிந்துகொண்டிருந்தது. “வரவர கனவெல்லாம்கூட பிக் பாஸ் மாதிரி ரொம்ப போரடிக்குதுப்பா” என்று அலுத்துக்கொண்டே யூடியூபில் பழைய படங்களைத் தேடித் தேடிப் பார்த்துக்கொண்டிருந்து பறக்கும் பைக். அடுத்தடுத்து அது பார்த்துக்கொண்டிருந்த படங்களின் பெயர்களை, பாதித் தூக்கத்தில் இருந்தபடியே கவனித்துக்கொண்டிருந்தான் பாச்சா. ‘என் மகன்’, ‘தங்கமகன்’, ‘நான் பெத்த மகனே’ என்று நீண்ட பட்டியல், ‘அடுத்த வாரிசு’ படத்தில் போய் நின்றது. “அப்போ... நாளைக்கு முதல் பேட்டி வைகோவோடதான்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

மறுநாள் காலை. மதிமுக தலைவர் இல்லம்.

“தாயகத்தின் பெயரைத் ‘தந்தையகம்’னு மாத்தலாமா, ‘தனயனகம்’னு மாத்தலாமா?” என்று வாய்விட்டு முணுமுணுத்தபடி வராந்தா சோபாவில் அமர்ந்திருந்தார் வைகோ.

அப்போது, “நல்ல ஐடியா. அப்படியே மதிமுகம் சேனல் பேரை ‘துரை’முகம்னும் மாத்திடலாமே சார்” என்று அழையா விருந்தாளியாக ஆஜரானான் பாச்சா.

கறுப்புக் கண்ணாடிக்குள் கண் சிவந்த வைகோ, சட்டென நிமிர்ந்து பார்த்து, “விட்டா மதிமுகவுக்கு ‘மறுபடியும்திமுக’ன்னு விளக்கம் சொல்லுவ போலிருக்கே?” என்று கர்ஜித்தார்.

"ரோம தேசத்திலே ஒரு ரோஷக்கார மன்னர் ரொம்ப நாளா பதவியில இருந்தார். அவரோட பாசக்காரப் பையனுக்கும் பாலிடிக்ஸ் மேல ஆசை. அந்த நாட்டுல...” என்று ஆரம்பித்தார் வைகோ.

“ஊருக்குள்ள அப்படித்தான் சார் பேசிக்கிறாங்க. திமுகவுல நடந்த மாதிரியே வாரிசு வர்றதால மறுபடியும் திமுக வரலாறு திரும்புதான்னு நிறைய பேரு கேட்கிறாங்க” என்ற பவ்யமாகச் சொன்ன பாச்சாவை ஏற இறங்க பார்த்தார் வைகோ.

பின்னர் கேலிப் புன்னகையுடன், “நிறைய பேருன்னா எத்தனை பேரு?” என்று எதிர்க்கேள்வி கேட்ட வைகோவை எதிர்கொள்வது எப்படி என்று தெரியாமல் திணறிய பாச்சா, ‘ப்ரஸ் மீட்லேயே பின்னியெடுத்தாரு. நாம தன்னந்தனியா மாட்டிக்கிட்டோமே’ என்று தவித்தான்.

அச்சத்தைக் காட்டிக்கொள்ளாமல், “அதை விடுங்க சார். 56 வருஷ அரசியல் பயணத்துல ஓரளவு உங்க வாழ்க்கையை அழிச்சிக்கிட்டதா சொன்னீங்களே... அதுல முழுத் திருப்தி இல்லாததாலதான் உங்க பையனையும் அரசியலுக்குக் கொண்டுவர்றீங்களா?” என்றான்.

“அது கட்சி நிர்வாகிகள் என் கருத்தைக் கேட்காமல் எடுத்த முடிவு. என் பையனை நான் கட்சி ஆஃபீஸுக்கு ஒரு தடவைகூட கூட்டி வந்ததில்லை. அவரா என்கூட கார்ல வருவார். நான் திரும்பி நிற்கும்போது கட்சி நிர்வாகிகள்கிட்ட எனக்குத் தெரியாம சைகை மொழியில ஏதேதோ பேசுவார். மத்தபடி அவர் பல வருஷமா பாலிடிக்ஸ்ல இருக்கார்னே எனக்குத் தெரியாது” என்று துண்டு போர்த்திய தோளைக் தூக்கி இறக்கியபடி சொன்னார் வைகோ.

“எல்லாம் சரி, உங்க பையனுக்கு உதயநிதிகிட்ட இருந்து வாழ்த்து வந்துச்சா?” என்று பாச்சா கேட்க, “ஏன்... இன்பநிதிகிட்ட இருந்தே வாழ்த்து வந்துச்சே. நான்தான் வாரிசு அரசியல் பண்ணலைன்னு வருத்தத்தோட சொல்லிட்டேன். அப்புறம் ஏம்ப்பா அதைப் பிடிச்சிக்கிட்டு வம்பிழுக்கிறே? இதுக்கெல்லாம் வரலாறு தெரிஞ்சிருக்கணும். சொல்றேன் கேட்டுக்கோ. ரோம தேசத்திலே ஒரு ரோஷக்கார மன்னர் ரொம்ப நாளா பதவியில இருந்தார். அவரோட பாசக்காரப் பையனுக்கும் பாலிடிக்ஸ் மேல ஆசை. அந்த நாட்டுல...” என்று ஆரம்பித்தார் வைகோ.

“அய்யோ விட்ருங்க சார்” என்று அலறிய பாச்சா, “ஆனாக்கா, உங்களுக்கு வயசாய்டுச்சுன்னுதான் வாரிசைக் கொண்டுவர்றீங்கன்னு....” என்று கேட்கும்போதே கோபமாகக் குறுக்கிட்ட வைகோ, “யாரைப் பார்த்து வயசாளின்னு சொல்றே. சிவாஜி சார் தூக்குன இளவட்டக் கல் எங்கிட்டதான் இருக்கு. எடுத்துத் தூக்கி நிறுத்தட்டுமா?” என்று எகிற, இருக்கின்ற இடத்திலிருந்து ஏகதேசம் எஸ்கேப்பானான் பாச்சா.

அடுத்து அதிரடி அண்ணாமலை.

“ஆட்டுப் பண்ணை பாணியில சாஃப்ட்வேர் பண்ணை ஆரம்பிச்சு, ‘கம்ப்யூட்டர் கணிதன்’ பத்திரிகையில ஒரு கவர் ஸ்டோரி வர வெச்சா நல்லா இருக்குமாண்ணா?” என்று பக்கத்தில் இருந்த ஒரே ஒரு பாஜக தொண்டரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் அண்ணாமலை.

அப்போது பறக்கும் பைக் மீதேறி பறந்துவந்து, “நல்லா பிக்கப் ஆகும் சார். ஏற்கெனவே ‘எக்ஸெல்’(!) பாடத்துல எக்ஸெலென்ட்டா தேறிட்டீங்க. போட்டோஷாப்ல டாக்டர் பட்டம் வாங்கினவங்களை வெச்சு புகார்ப் பத்திரம் ரெடி பண்ணினா செந்தில் பாலாஜிக்குச் செம்மத்தியா சவால் விடலாம்” என்றான்.

அண்ணாந்து பார்த்த அண்ணாமலை, “ஆமா... டெய்லி ஒரு ஆணவமா... ஸாரி ஆவணமா ரிலீஸ் பண்ணி கரன்ட் மினிஸ்டரைக் கலங்கடிக்கிற அளவுக்கு ஷாக் கொடுக்கலாம்னு ப்ளான் பண்ணிருக்கோம்” என்று அகலச் சிரித்தார்.

“ஆனா நீங்க ஆதாரம்னு கொடுத்ததெல்லாம் உங்களுக்குச் சேதாரமால்ல வந்து சேருது?” என்று சொன்னபடியே தரையிறங்கிய பாச்சாவைப் பச்சாதாபத்துடன் பார்த்த அண்ணாமலை, “ஊழலை ஒளிக்கணும்னு.... ஸாரி ஒழிக்கணும்னு மோடி ஜி முழுமூச்சுப் பயிற்சியா உழைச்சிக்கிட்டிருக்கார். இந்தியா மேப்பை வெச்சு எல்லா ஸ்டேட்டையும் ஸ்டெடியா பார்த்து முறைச்சிக்கிட்டிருக்கார். அதுக்காகவே ‘பிஎம் ஸ்டேர்ஸ்’ (PM Stares)னு ஒரு நிதி வசூலிக்க ஆரம்பிச்சிருக்கார். இனி பாஜக அல்லாத ஸ்டேட்ஸ்ல இருக்கிற மினிஸ்டர்ஸெல்லாம் கரப்ஷனைப் பத்திக் கனவுகூட காண முடியாது” என்று கண்டிஷனாகப் பேசினார் அண்ணாமலை.

“சூப்பர் சார். தமிழக மக்களோட நலனுக்காக இயங்கணும்னு தமிழக பாஜகவுக்கு மோடி ஜி ஆணித்தரமா ஆர்டர் போட்டிருக்கார்னு அடிக்கடி சொல்லிக்கிறீங்க... ஆனா, குத்தாலத்துல குளிக்க விடணும்ங்கிற அளவுக்குத்தானே உங்க கட்சிக்காரங்க கூட்டமா நின்னு போராடுறாங்க. பெட்ரோ டீசல் பத்திப் பேச்சே எடுக்க மாட்டேங்குறீங்களே?” என்று கேட்டான் பாச்சா.

“நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க... வெறும் மூணு ரூபாயைக் குறைச்சிட்டு பெட்ரோல் விலையைக் குறைச்சிட்டதா பீத்திக்கிட்டார் பிடிஆர். அடுத்தடுத்து விலை உயர்ந்தா அதுக்கேத்த மாதிரி விலையைக் குறைக்கணும்னு தெரியாதவங்களை அமைச்சரா உட்கார வெச்சது அநியாயம். கச்சா எண்ணெய்யைக் காய்கறிக் கடையில விக்க முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு பண்ணணும்னு ஸ்ட்ராங்கா ஒரு போராட்டம் நடத்தப்போறோம்” என்றார் அண்ணாமலை.

“பிரதமர் ஸ்டாலின்னு சொல்லுங்க. அவர்தானே இந்தியாவுல நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் பொறுப்பு” என்று சொல்லிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டான் பாச்சா.

வரும் வழியில் பறக்கும் பைக், “ஏம்ப்பா... வாக்காளர் வாக்காளர்னு சொல்றாங்களே... அப்படின்னா காலாற வாக்கிங் போறவங்கன்னுதானே அர்த்தம்?” என்று கேட்க, “தெரியலை. சீமான் இதுக்கு நிச்சயம் ஒரு ஹிலேரியஸா... ஸாரி ஹிஸ்டாரிக்கலா ஒரு விளக்கம் வெச்சிருப்பார். அடுத்த பேட்டியில அவருகிட்ட கேட்கலாம்” என்று சிரிப்பைக் காட்டாமல் சீரியஸாகவே சொன்னான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in