மணி சார்... மணி சார்னு கத்துனேன்!

மணி சார்... மணி சார்னு கத்துனேன்!
ஓவியம்: முத்து

பால்கனி வழியா எட்டிப் பார்த்தேன் பழக்க தோஷத்துல. அம்மிணி கீழே வாசல் கேட் கிட்டே நின்னாங்க. ‘எதுக்கு நிக்கிறாங்க’ன்னு யோசிச்சா அஞ்சு நிமிஷம் கழிச்சும் அங்கேயே நின்னாங்க. ஒரு டவுட்ல ஃப்ரிட்ஜைத் தொறந்து பார்த்தேன். பால் பாக்கெட் இல்லை!

தினமும் வீட்டுக்கே பால் பாக்கெட் வந்துரும். வாசல் கதவுல ஒரு பை கட்டித் தொங்க விட்டுருப்போம். பாக்கெட் பாலை போட்டுட்டு போவாரு. ஒரு தடவை எடுக்காம ஈவ்னிங் வரை விட்டுட்டாங்க அம்மிணி.

பாக்கெட் எப்படியோ நசுங்கி வாசல்ல பாலாறு ஓட ஆரம்பிச்சதும் தான் தெரிஞ்சுது மிஸ்டேக். பால் பாக்கெட் போடுறவருகிட்ட அம்மிணி புலம்புனாங்க. மறுநாள் பாக்கெட்டைப் போட்டதும் மறக்காம காலிங் பெல்லை அடிச்சுட்டுப் போனாரு.

எங்க வீட்டு காலிங் பெல்லுக்கு வித்தியாசமான குணம். வாசக் கதவைத் தொறக்கிர வரை அடிச்சுக்கிட்டே இருக்கும். எ வீ அண்ணாச்சி கத்துனாரு. “மனுசன் தூங்கறதா வேணாமா”ன்னு. நைட் ஷிஃப்ட் போயிட்டு வந்துருந்தாருன்னு அப்புறம் தெரிஞ்சுது.

“பெல்லை அடிக்காதே”ன்னு சொன்னா தலையை ஆட்டிட்டு மறுநாளும் அடிப்பாரு எங்காளு. அம்மிணி உத்தரவு போட்டாங்க. “பெல்லைக் கழட்டுங்க. இல்லாட்டி கீழே போய் பால் பாக்கெட்டை வாங்கிட்டு வாங்க”ன்னு.

பால்காரர் நினைச்ச நேரத்துக்கு வருவாரு. சீக்கிரம் வந்தாலும் லேட்டா வந்தாலும் எல்லாத்துக்கும் காரணம் வச்சிருப்பாரு. லீவு நாள்ல வேணா நான் போய் கீழே நிக்கலாம். ஆபிஸ் நாள்ல முடியாதே!

ஒரு நாள் அவரு வருவதைப் பால்கனிலேர்ந்து பார்த்துட்டு கீழே ஓடுனேன். இன்னொரு நாள் அவரு தெரு முனையில வரதைப் பார்த்துட்டு கீழே போனா “அப்டியே எனக்கும் வாங்கிட்டு வாங்க”ன்னு எ வீ அம்மிணி சொன்னாங்க. “ரெகுலரா அவர்கிட்டேயா வாங்குறீங்க”ன்னு கேட்டா, “இன்னிக்கு கெஸ்ட் வராங்க”ன்னு பதில். பணத்துக்குக் கை நீட்டுனா “நாளைக்குத் தரேன்னு சொல்லுங்க. ஒத்துக்குவாரு”ன்னு சொல்லிட்டு கதவை மூடிட்டுப் போயிட்டாங்க.

இந்தக் கையில காசு, அந்தக் கையில பாக்கெட்னு அவரு பிடிவாதமா போயிட்டாரு. மேலே ஏறி வந்தா எ வீ அம்மிணி எந்த விசாரணையும் இல்லாம எங்க வீட்டு பால் பாக்கெட்டை லபக்குன்னு பறிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. அம்மிணி அன்னைக்கு என்னை உண்டு இல்லைன்னு பண்ணிட்டாங்க. இன்னைக்கு என்ன கூத்து இருக்குதோன்னு மனசுக்குள்ர கிலி கிளம்புச்சு.

சட்டையை மாட்டிக்கிட்டு கீழே போனேன். “யாராச்சும் ஒங்க சொந்தக்காரங்க வராங்களா”ன்னு உளறித் தொலைச்சேன். அப்புறம் மழுப்பலா சிரிச்சுட்டு “ரொம்ப நேரமா நிக்கிறியா. அதனால கேட்டேன்”னு சொன்னேன்.

“வெளியே பாருங்க”ன்னு அதட்டுனாங்க. எட்டிப்பார்த்தா எழுந்து நின்னா என் உயரத்துக்கு வரும் அளவுக்கு ஒரு கறுப்பு நாய் நின்னுச்சு. அடுத்த வீட்டுக்காரர் வளர்க்கிறாரு. எங்க வீட்டு மாடிப்படில நாங்க நின்னாலே பயங்கரமா குலைக்கும்.

அந்த வீட்டுக்கும் எங்க மாடிக்கும் ஒரு நாய் தாவுற தூரம் தான் எ வீ அண்ணாச்சி சிரிக்காம சொன்னாரு. “கையை நீட்டி பிஸ்கட் கொடுக்கலாம்”னு நாய் இல்லாதப்போ கையை நீட்டி நிரூபிச்சாரு. அவர் கை நீளம்னு அபார்ட்மென்ட்ல அரசல்புரசலா பேசிக்குவாங்க!

“ஏன் கட்டிப் போடல”ன்னு குழம்பிக்கிட்டே லைட்டா எட்டிப் பார்த்தேன். நாய் வளர்க்கிறவரும் நின்னாரு. ” “ஹிஹி. இன்னிக்கு சார் வெளியே வந்துட்டார் போல”ன்னு சொன்னேன். “சொந்தக்காரரு வந்திருந்தாரு. அவரோட குழந்தையைக் கொஞ்சவும் மணிக்குக் கோபம் வந்துருச்சு. மேலே பாஞ்சுட்டான். அதான் அதட்டல் போட்டு வெளியே நிக்க வச்சேன். யாரா இருந்தாலும் டிசிப்ளின் வேணும்ல”னு குமுறுனாரு.

மணி பேரைச் சொல்லவும் அவரு முன் காலைத் தூக்கி எஜமானைக் கொஞ்ச வந்தாரு. “கோ பேக்”னு சொல்லவும் மணிக்கு இன்னும் துக்கம் பொங்குச்சு. ரொம்ப நேரமா கோபேக் மணி ஹேஷ்டாக்ல இருந்த எரிச்சல் அவரு ரெண்டு கண்ணுலயும் தெரிஞ்சுது.

டபக்குன்னு பின் வாங்கினேன். “இப்ப என்ன பால் பாக்கெட் போடாம போயிட்டாரு. ஒனக்கு ஒரு லிட்டர் வேணும் அவ்ளோதானே. நீ மேலே போ. நான் பாலோட வரேன்”னு சொல்லி பையையும் காசையும் வாங்கிக்கிட்டேன்.

மணி இருக்கிற திசைல தானே போக முடியாது. இந்தப் பக்கமா ஒரு கிமீ போனா இன்னொரு கடை. அங்கே வாங்கலாம்னு போயிட்டு திரும்புனா எங்க வீட்டு வாசல்ல மணி நின்னாரு.

கேட்டை மூடிட்டு எங்க அபார்ட்மென்ட்காரங்க பத்து பேர் உள்ளார நின்னாங்க. என்னைப் பார்த்ததும் அவங்களுக்கு ஆனந்தம். “ஒங்களைத்தான் தேடுனோம். இப்படி வாசல்ல நாய் நின்னா எப்படி வெளியே போவுறது. வாங்க. வந்து விரட்டுங்க”ன்னு கத்துனாங்க. என்னவோ நாய்க்கும் நான் தான் செக்ரட்டரி மாதிரி.

“மணி சார்... மணி சார்”னு கத்துனேன். அவர் பேர் ஞாபகம் வரல. மணி தன்னையும் ஒருத்தர் சார் போட்டுக் கூப்பிடறாருன்னு முன் கால் ரெண்டையும் தூக்கிட்டு வந்துச்சு. பயத்துல நவுராம நிக்கவும் என் தோள் மேலே காலைப் போட்டுச்சு.

கீழ் வீட்டுக்காரரு இவ்ளோ கலாட்டாலயும் தன் மொபைல்ல அதை போட்டோ எடுத்துட்டாரு. மணியை வச்சிருக்கிறவரு வெளியே வந்தாரு.

“பாருங்க. எவ்ளோ அறிவு. வெளியாளை கிட்ட வர விடாது. கொஞ்ச நேரம் முன்னாடி நாம பேசிக்கிட்டு இருந்தோமா, அதனால நீங்க எனக்கு வேண்டியவருன்னு புரிஞ்சுக்கிட்டு உரிமையா ஒங்க மேலே கால் போட்டுக்கிச்சு. சமர்த்துடா. உம்மா”ன்னு அவரு மணியைக் கொஞ்சவும் இப்போ கால் ரெண்டையும் இடம் மாத்துச்சு.

அவரு மன்னிச்சு மணியை வீட்டுக்குள்ளார கூட்டிக்கிட்டுப் போனாரு. அபார்ட்மென்ட்காரங்க பலமா கை தட்டுனாங்க. “இந்த அபார்ட்மென்ட்டின் நிரந்தர செக்ரட்டரி”ன்னு கூட்டத்துல யாரோ கத்துனாங்க.

வேர்த்துக் கொட்டி பாதி உசுரு போய் பால் பாக்கெட்டை கீழே போட்டுராம பத்திரமா பிடிச்சுக்கிட்டு படியேறி வந்தேன். கீழே நடந்த கலவரம் தெரியாத அம்மிணி சொன்னாங்க. “ஒரு பால் பாக்கெட் வாங்க இவ்ளோ நேரமா”ன்னு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in