போலாமா தோசா மேளா..!

போலாமா தோசா மேளா..!
ஓவியம்: முத்து

பக்கத்து சீட்டு அண்ணாச்சி திடீர்னு ‘உர்ரேய்’னு கத்துனாரு. அடுத்த சீட்டு அம்மிணியும் நானும் அவரை எங்க ஆபீஸ் எலி கடிச்சிருச்சோன்னு ஆர்வமாத் திரும்பிப் பார்த்தோம்.

ஆபிஸ் டைம்லயே அந்த எலி ஜாலியா ஜாக்கிங் போகும். மாடுலர் ஆபிஸ். ஃபுல்லா ஏசி. எலிக்கு இந்த ஜில் ஜில் வாழ்க்கை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. எலிப்பொறில வைக்கிற தேங்காப் பத்தை, மசால் வடைக்கு எல்லாம் மயங்காம தில்லா சுத்தும். ஆபிஸ் ஃபைல்ஸ்னா அதுக்கு உசுரு. ஃபைல் கவரைத் திறந்தாத்தான் தெரியும். உள்ளார வச்ச பேப்பர்லாம் பொடிப்பொடியா உதிரும். அவ்ளோ தொழில் சுத்தம்.

“என்னாச்சி”ன்னு அம்மிணி உரிமையா கேட்டதும் படிச்சுக்கிட்டிருந்த பேப்பரைக் காட்டுனாரு. அவர் கண்ணு ரெண்டும் இருட்டுல முறைக்கிற பெருச்சாளி கண்ணு மாதிரி ஜொலிச்சிச்சு.

‘தோசா மேளா’ன்னு விளம்பரம் போட்டுருந்துச்சு. ஒரு நபருக்கு 100 ரூபாய் தான். எவ்ளோ தோசை வேணா சாப்பிடலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. செட் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மசால் தோசை இன்னும் வகை வகையாய். அது மட்டுமில்லை. 10 வித சட்னி சாம்பாரும் உண்டு. வாங்க வாங்கன்னு விளம்பரமே கையைப் பிடிச்சு இழுக்கிற மாதிரி போட்டுருந்தாங்க.

“வர ஞாயித்துக் கிழமை. வீட்டுல சமைக்க வேண்டாம்னு சொல்லிரலாம். மூணு ஃபேமிலியும் மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு. என்ன சொல்றீங்க”ன்னு அண்ணாச்சி என் கை ரெண்டையும் இறுக்கிப் பிடிச்சுக்கிட்டாரு.

“ஹப்பா. அன்னிக்கு சமைக்க வேண்டாம். ஒரு ஃபுல் கட்டு கட்டிரலாம். அவரு மாட்டேன்னா சொல்லப் போறாரு. அவர் வீட்டம்மிணிட்ட நான் பேசறேன்”னு படக்குன்னு போன் அடிச்சுட்டாங்க.

‘ஹிஹி’ன்னு கொஞ்ச நேரம் வழிஞ்சுட்டு சொன்னாங்க. “பக்கத்துல தான் புடவை எக்சிபிஷன். நீங்க காட்டன் ஸாரி எடுத்து ரொம்ப நாளாச்சுன்னு சொன்னீங்களே. வந்தா ரெண்டு வேலையும் ஈசியா முடிஞ்சுரும்”னு அம்மிணி நல்லாவே ஆசை காட்டுனாங்க. பேசி முடிச்சுட்டு என்கிட்ட சொன்னாங்க.

”என்னவோ பயந்தீங்களே... ஒங்கம்மிணி ஓகே சொல்லிட்டாங்க. போறோம். கலக்குறோம்”னு எழுந்திரிச்சு அடுத்த சீட்டுக்கெல்லாம் மேட்டரை ஒலிபரப்பப் போயிட்டாங்க.

ஈவ்னிங் வீட்டுக்குப் போனா அம்மிணி பீரோவைத் திறந்து எல்லாப் புடவையையும் கீழே போட்டுருந்தாங்க. “ஏதாச்சும் காணோமா”ன்னு கேட்டா “ஒண்ணுகூட நல்லா இல்லே. ஞாயிறு அன்னிக்கு எதைக் கட்டிக்கிட்டு வரதுன்னு குழப்பமா இருக்கு”ன்னாங்க.

பக்னு ஆயிருச்சு. “ஏம்மா நீதானே ஒவ்வொரு புடவையையும் மணிக்கணக்கா அலசி ஆராய்ஞ்சு எடுத்தே. இப்போ எதுவுமே நல்லா இல்லேன்னா என்ன அர்த்தம்”னு புலம்பிட்டேன்.

“அதெல்லாம் வீட்டுக்குக் கட்டிக்கப் போதும்னு எடுத்தது. வெளியே இப்படிக் கட்டிகிட்டு வர முடியுமா”ன்னாங்க. “சரி சரி இந்தத் தடவை வீட்டுக்கு உள்ளே வெளியேன்னு ரெண்டு டைப்லயும் எடுத்துருவோம்”னு பவ்யமா சொன்னேன். அம்மிணி முகமும் ஜொலிச்சிது.

சம்பவ தினம் வந்துச்சு. காலை அஞ்சு மணிக்கே ப சீ அண்ணாச்சி குட்மார்னிங் மெசெஜ் போட்டுருந்தார். தோசை போட்டோல குட் மார்னிங்! ஞாபகப்படுத்துறாராம்!

அம்மிணி வழக்கமா செய்யுற டிஃபனை கட் பண்ணிட்டாங்க. “தெனம் என் தோசையச் சாப்ட்டு அலுத்துப் போயிருக்கும். இன்னிக்கு வெறும் காபி தான். வயிறு காலியா இருந்தாத்தான் கொடுத்த காசுக்கு நல்லா ரொப்பிக்கலாம்”னு சிரிச்சாங்க.

மகனார், யூ ஆர் ரைட், வழக்கம் போல எஸ்கேப் ஆயிட்டாரு. “நீங்க போயிட்டு வாங்க”ன்னு. எனக்கென்னவோ எங்க ஆபிஸ்காரங்களை அவர் டெக்னிக்கா அவாய்ட் செய்யறார்னு தோணுச்சு.

கூட்டம் அள்ளுச்சு. ஒரே தள்ளுமுள்ளு. வாசல்லயே டோக்கனைக் குடுத்துட்டாங்க. ஒரு ப்ளேட்டைக் கொடுத்து ஹேப்பி தோசா டேன்னு ஒரு அம்மிணி சிரிச்சிது. ப சீ அண்ணாச்சி “நீங்க தோசை சுட மாட்டீங்களா”ன்னு ஜொள்ளு விட்டாரு. என்னவோ இந்திய எல்லைல நிக்கிற மாதிரி.

அந்தம்மிணி இவரு மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கும். “சுடறது சோல்ஜர் தான். நான் கேப்டன்”னு அடிச்சு விட்டுச்சு.

அண்ணாச்சியோட அம்மிணி அவரை இழுத்துக்கிட்டுப் போனாங்க. டோக்கனை என்னையே வாங்கச் சொன்னாங்க. உள்ளார வந்ததும் என்னை அம்போன்னு விட்டுட்டு ஆளுக்கொரு ஸ்டாலுக்குப் போயிட்டாங்க.

ப சீ அண்ணாச்சி மட்டும் போறதுக்கு முன்னால நின்னு டிப்ஸ் கொடுத்துட்டு போனாரு. “வழக்கமா வீட்டுல கொடுக்கிற தோசை டைப்பை விட்டுட்டு வித்தியாசமா சாப்பிடுங்க. புரிஞ்சிதா” எங்க அம்மிணி கீ ரோஸ்ட், ஆனியன் ரவான்னு போயிட்டாங்க.

மூலிகை தோசைன்னு போட்டிருந்த ஸ்டாலுக்குப் போனேன். முடக்கத்தான் தோசையை வாங்கி சட்னியோட தோய்ச்சு உள்ளே தள்ளினேன். அது நல்லா இருக்கவும் வித்தியாசமான ஸ்டாலாத் தேட ஆரம்பிச்சேன். ஸ்டப்டு தோசான்னு ஒரு ஸ்டால். அதையும் வாங்கி மெல்ல ஆரம்பிச்சேன்.

நடுநடுவுல எங்க க்ரூப் ஆளுங்க பரபரப்பா தட்டோட க்ராஸ் பண்ணாங்க. அ சீ அம்மிணி, “நான் எட்டு சார்”னு வெக்கத்தோட சொல்லிட்டுப் போச்சு. குழம்பிப் போய் அப்புறம் தான் புரிஞ்சிது. எட்டாவது தோசைன்னு. அண்ணாச்சி பெல்ட் இல்லாத பேன்ட்டோட குறுக்கே வந்து, “பேவ்... பத்து”ன்னாரு.

எங்கம்மிணி நிக்க விருப்பம் இல்லாதவங்க வசதிக்காக போட்டுருந்த இருக்கைல ஒக்கார்ந்து நிதானமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. என்னைப் பார்த்ததும், “எவ்ளோ”னாங்க. மூணு விரலைக் காட்டுனேன். முகத்தை சுளிச்சுக்கிட்டு, “பச்சைக் குழந்தை கூட இந்நேரம் பத்து தின்னுருக்கும்”னாங்க

“நீ எவ்ளோ”ன்னு ஆர்வமா கேட்டேன். ஆறு விரலைக் காட்டுனாங்க தட்டை மடில வச்சுக்கிட்டு. அ சீ அம்மிணி வேகமா வந்து, “அண்ணாச்சி வீட்டுக்குப் போறாராம். சொல்லச் சொன்னாரு”ன்னு சொல்லவும், புரியாம முழிச்சேன். “ஓவராக் கட்டிட்டாரு போல. அதான் ஆட்டோல போறாங்க ரெண்டு பேரும்”னு சிரிச்சாங்க.

“புடவை பார்க்கப் போலாமா”ன்னு நான் இழுக்கவும் எங்கம்மிணி காதுல ஓதுனாங்க. “ஸாரி எடுக்க நாம மட்டும் போவோம். அவங்க வந்தா குழப்பிருவாங்க”ன்னு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in