பி பிளாக் வரைக்கும் போயிட்டு வரேன்!

பி பிளாக் வரைக்கும் போயிட்டு வரேன்!
ஓவியம்: முத்து

அடவு, ஜதி, முத்திரைன்னு அம்மிணி போன்ல சொல்லிக்கிட்டு இருந்தது கேட்டுச்சு. எங்கியோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிச்சப்போ அம்மிணியே வந்தாங்க.

“பி பிளாக் வரைக்கும் போயிட்டு வரேன். என்னைக் காணோம்னு கலாட்டா பண்ணிராதீங்க”ன்னு வார்னிங் கொடுத்தாங்க. “பி பிளாக்கா... எதுக்கு”ன்னு கேட்டா பதில் சொல்ல அம்மிணி அங்கே இல்லை.

மகனாரைப் பார்த்தேன். “புதுசா குடி வந்தவங்க அம்மாவோட க்ளாஸ்மேட்பா. ரொம்ப திக் ஃப்ரெண்ட்சாம்”னு தகவல் தந்தாரு. பேரு சரஸ்வதின்னு சொன்னதும் எனக்குள்ர ஃப்ளாஷ்பேக் மின்னுச்சு.

கல்யாணம் ஆன புதுசுல கேட்டுட்டேன். “ஒங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் இப்ப டச்ல இல்லியா”ன்னு. “ஒலகமே அழிஞ்சாலும் நானும் சரஸும் டச்ல இருப்போம்”னு. சொன்னவங்க, அவ அதைப் பண்ணுவா, இதைப் பண்ணுவான்னு எப்பவும் சரஸ் பெருமைதான்.

வகுப்புல அவ அடிச்ச லூட்டி எல்லாம் தூக்கம் சொக்கற நேரத்துல அம்மிணி நடிச்சு காட்டுவாங்க. நடிச்சுட்டு அடுத்த நிமிசம் அம்மிணி படுத்துத் தூங்கிருவாங்க. அதைப் பார்த்த பயத்துல நைட் ரெண்டு மணி ஆனாலும் எனக்குத் தூக்கம் வராது.

“கவிதை எழுதுவா, பாட்டுப் பாடுவா, பிரேயர் பாடறது அவதான், டீச்சருக்கு ஒதவியா எக்சாம் பேப்பர் டோட்டல் போட்டுத் தருவா”ன்னு லிஸ்ட் சொல்வாங்க. ப்ளேன் ஓட்டுனா, கப்பல் ஓட்டுனான்னுதான் சொல்லல...

“குறும்புலயும் அடிச்சுக்க முடியாது”ன்னு அம்மிணி பெருமையா சொல்லி இருக்காங்க.. சரஸ் கிட்ட வம்பு வச்சுக்கிட்ட பொண்ணுக்கு தப்பா டோட்டல் போட்டு அதைக் கண்டுபிடிக்கிற வரை அவ க்ளாஸ்ல அழுததை வேடிக்கை பார்த்ததையும் சொன்னாங்க. “சரஸ் கண்ணுல எப்பவும் குறும்பு ஜொலிக்கும்ங்க”னு சொன்னப்போ, “சரஸ் பையனா பொறந்திருந்தா அவனையே கல்யாணம் கட்டியிருப்பியா”ன்னு கேட்டுட்டேன்.

“ஒங்களுக்குன்னு புத்தி போவுதே... ஆமா நிச்சயமா கட்டி இருப்பேன்”னு சொன்னதும் யார்ரா அந்த சரஸ்னு பார்க்கத் தோணுச்சு. அப்பதான் அம்மிணி தகவல். “சரஸ் நம்ம அபார்ட்மென்ட்ல குடி வரப் போறாளாம். விஆரெஸ் கொடுத்துட்டாளாம். வேலை பார்த்தவரை போதும். இனி அவ இஷ்டத்துக்கு இருக்கப் போறாளாம்”னு அம்மிணி சொன்னப்போ அடி வயித்துல பீதி கெளம்புச்சு. சுமுகமா ஓடிக்கிட்டு இருக்கிற என் வாழ்க்கைல சரஸ் அம்மிணி ஆட்டம்பாம் வைக்கப் போறாரான்னு.

பி பிளாக்ல அந்த வீடு ஒரு வருசத்துக்குத்தான் வாடகைக்குன்னு ஓனர் சொன்னாரு. அடுத்த வருசம் அவரே குடி வந்திருவேன்னும் சொன்னாரு. அதை அம்மிணிட்ட சொன்னா அலட்டலா சிரிச்சாங்க. “என் சரஸ் எப்பவுமே வித்தியாசம். அவ சொந்த வீடே கேகே நகர்ல இருக்கு. இங்கே ஒரு வருசத்துக்கு மட்டும் குடி வரப் போறா. என்ன பிளான்னு நேர்ல சொல்றேன்னா.”

குடி வந்தப்போ போனோம். சரஸ் வீட்டுக்காரர் வாங்கன்னு சொல்லிட்டு காணாம போயிட்டாரு. ரெண்டே சேர். ஒண்ணுல சரஸ், இன்னொண்ணுல அம்மிணி! கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு நானும் வாசலுக்கு வந்துட்டேன்.

அரை மணி கழிச்சு அம்மிணி வந்தாங்க. “நிறைய சாமான் கொண்டு வரலியாம். அவசியத்துக்கு மட்டும் கொண்டு வந்தாங்களாம்”னு சமாதானம் சொன்னாங்க.

வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் சரஸ் புராணம். “இன்னும் ரெண்டு வருசம் சர்வீஸ் இருக்காம். ‘வேணாம்னு விட்டுட்டேன். ஒனக்கே தெரியும். இசை, நாட்டியம்னு எப்பவுமே எனக்கு ஒரு காதல் உண்டுன்னு. பாட்டு பிறவியிலேயே வந்துருச்சு. பொண்ணைக் கட்டிக் கொடுத்தாச்சு. இப்பவாச்சும் டான்ஸ் கத்துக்கலாம்னு. ஒங்க ஊர்ல இருக்கிற நாட்டியாலயாக்கு போன் செஞ்சு விசாரிச்சேன். வயசே தடை இல்லை. வாங்கன்னு சொல்லிட்டாங்க’ன்னு சொன்னா” தகவலாக் கொட்டுனாங்க.

அரை மணி முன்னாடி பார்த்த சரஸை கண்ணை மூடிப் பார்த்தேன். அம்மிணி அடுத்த குண்டைப் போட்டாங்க. “என்னையும் சேரச் சொல்லியிருக்கா.”

அய்யய்யோன்னு என்னையும் மீறிக் கத்துனேன். அம்மிணி முறைச்சுட்டு வீட்டுக்குள்ர போயிட்டாங்க. அம்மிணியும் நாட்டிய வகுப்புல சேர்ந்துட்டாங்க. பட்டைக் கரை வச்ச புடவை நாலு வாங்கினாங்க. அதை அப்படியே மாட்டிக்கிறாப்ல டெய்லர் தைச்சுக் கொடுத்து பட்டுப் புடவைக் காசை கூலியா வாங்கிட்டாரு.

ரெண்டு நாள் தான் வாரத்துல வகுப்புன்னு சொன்னாங்க. முதல் வகுப்பு போயிட்டு வந்த பிறகு அம்மிணியோட ஆக்டிவிட்டீஸ்ல மாற்றம் தெரிய ஆரம்பிச்சுது. முன்னாலல்லாம் காபி டம்ளரை டொக்குன்னு டேபிள் மேல வச்சுட்டுப் போவாங்க. இப்போ கிச்சன்லேர்ந்து டேபிளுக்கு வரவே பத்து நிமிசம் ஆச்சு. ஸ்டைலா வைக்கிறதா நினைச்சு கால்வாசிக் காபியைக் கீழே சிந்துனாங்க.

“சோப் எங்கே”ன்னு கேட்டா கண்ணைச் சுழட்டி ஷெல்பைக் காட்டறது, ஆபீஸ் கிளம்புனா அபிநயம் பிடிச்சு டாட்டா காட்டுறதுன்னு ஓவரா அழும்பு. “நைட் என்ன டிபன்”னு கேட்டா, குத்துக்கால் போட்டு வலது கையை ஒரு ரவுண்டு சுத்தி இடது கையால எதையோ தள்ளுற பாவனை. புரியாம முழிச்சதும் மகனார் “இட்லியாம்மா”ன்னு கேட்டதும் அவருக்கு மாலை போடறாப்ல கையைக் கோத்துக் காட்டுனாங்க.

ஈவ்னிங் ஆபிஸ்லேர்ந்து வீட்டுக்கு வரவே குலை நடுங்கிச்சு. முதல் மாடில குடி இருந்தவர் வழி மறிச்சு, “கொஞ்ச நாளாவே உங்க வீட்டுலேர்ந்து எதையோ உருட்டற சத்தம்லாம் கேக்குதே. கியாஸ் சிலிண்டர் உருட்டிக்கிட்டுப் போறாப்ல. தெனமுமா ஒரு சிலிண்டர் தீருது”ன்னு சந்தேகமா கேட்டாரு.

இன்னொரு வீட்டுக்காரர் வயசானவர். ஹார்ட்ல ஸ்டன்ட் வச்சிருக்காரு. “மதியம் தூங்கலாம்னு மாத்திரையப் போட்டுப் படுத்தா தொம் தொம்னு சத்தம். ஒங்க ஃப்ளோர்ல யாருன்னு தெரியல. கண்டிச்சு வைங்க”ன்னு பாலிஷா சொன்னாரு.

இன்னிக்கு அம்மிணி டல்லா இருந்தாங்க. “சரஸ் ஊருக்குப் போறாளாம். மகளுக்கு டெலிவரி டைமாம். அவளால இங்க வர முடியாதுன்னு. திரும்பி வர அஞ்சாறு மாசம் ஆகுமாம். எனக்குத் தனியா டான்ஸ் போகப் பிடிக்கல.”

நைட் அம்மிணிக்கு போன். சரஸ்தான். “பொண்ணு கார் வச்சிருக்கா. என்னையும் கத்துக்க சொல்றா. டிரைவிங் சேர்ந்துட்டேன். நீயும் கத்துக்கோ!”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in