அப்பவே எனக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு!

அப்பவே எனக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு!
ஒவியம்: முத்து

அம்மிணி, “சொல்லவே இல்ல”ன்னு பக்கத்துல வந்தப்போ உதறுச்சு. எதைச் சொல்லாம விட்டோம்னு யோசிச்சேன். “ஒங்க ஆபிஸ் ஃபங்ஷனுக்கு குடும்பத்துல இருக்கிறவங்களும் வரலாமாமே”னாங்க.

ஆயுத பூஜை அன்னிக்கு குடும்பத்தார் வரலாம்னு ஆபிஸ்ல ஒரு சலுகை முன்னொரு காலத்துல கொடுத்துருந்தாங்க. அப்புறம் செக்யூரிட்டி பிரச்சினையால நிறுத்திட்டாங்க. இப்போ ஆபிஸ் ஆரம்பிச்சு 50 வருசம் ஆச்சுன்னு கோல்டன் ஜூப்ளி கொண்டாடலாம்னு முடிவு செஞ்சு ஃபேமிலியும் வரலாம்னு சர்க்குலர் வந்துச்சு.

ஆபிஸ் வாசல்ல பெருசா கிரவுண்டு இருக்கு. அங்கே ஷாமியானா போட்டு ஸ்வீட் பாக்கெட், கூல்ட்ரிங்க்ஸ் தரலாம்னு ஐடியா. ஆபிஸ்க்குள்ர விட்டா கம்ப்யூட்டரை நோண்டறது, ஸ்டேப்ளரைத் தூக்கிட்டுப் போவறதுன்னு புகார் வந்துச்சு. அதைத் தவிர்க்க இப்படி ஒரு யோசனை.

பாஸ் கூப்பிட்டாரு. “ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லேர்ந்தும் நாலு பேர் கமிட்டில வேணுமாம். ஒங்க பேரையும் சொல்லி இருக்கேன். பாதில ஓடிராம ஃபங்ஷன் முடியறவரை பொறுப்பா இருந்து கவனிச்சுட்டு போங்க”ன்னு அன்பா சொன்னாரு.

“நீங்க தான் இன்சார்ஜாமே... எ வீ அண்ணாச்சி சொன்னாரு”ன்னு அம்மிணி ஏதோ உகாண்டாக்கு அதிபர் ஆன மாதிரி பெருமையா பார்த்தாங்க. “என்கிட்ட கூட சொல்லாம என்ன ரகசியம்”னு செல்லமா கன்னத்துல இடிச்சப்போ கடவாய்ப்பல்லு லைட்டா ஆடுச்சு.

அமைதியா கண்ணை மூடித் திறந்து, “நீ நினைக்கிற மாதிரி இல்ல”ன்னு பொறுமையா சொல்லும்போதே “உங்களுக்கு ஆனாலும் இவ்ளோ தன்னடக்கம் ஆவாது. ஒண்ணுமில்லாதது எல்லாம் பீத்திக்கிட்டு திரியுதுங்க. ஒரு கம்பெனி விழாவையே நடத்துற நீங்க என்னடான்னா...”ன்னு சொல்லிக்கிட்டே போனாங்க.

நான் என்னவோ என் சொந்தக் காசைப் போட்டு விழா எடுத்தாப்ல பேசுறாங்களேன்னு நடுங்கிட்டேன். “என் தங்கச்சி குடும்பத்தையும் வரச் சொல்லி போன் போட்டுறவா”ன்னு கேட்டதும் கெஞ்ச வேண்டியதாச்சு. ”வேலை பார்க்கிறவங்க குடும்பம் மட்டும்தான்”னு.

அம்மிணி வார்ட்ரோப்பை தொறந்து விழாக்கு எந்த புடவையைக் கட்டிக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. மகனார்ட்ட சொன்னதும் “என்னால வர முடியாதும்மா”ன்னு நழுவிட்டாரு. அப்புறமா போய், “இட்ஸ் அ போர்”னு யார்கிட்டேயோ போன்ல சொன்னாரு.

ரெண்டு மூணு எடத்துல கொட்டேஷன் வாங்கினதுல ஒருத்தர்ட்ட ஸ்வீட் ஆர்டர் செய்ய முடிவாச்சு. சாம்பிள்னு நாலஞ்சு பாக்கெட் எனக்கும் வந்துச்சு. தெரியாத்தனமா அதுல ஒண்ணை வீட்டுக்கு எடுத்துகிட்டு வந்துட்டேன். அம்மிணி ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் மாதிரி ஒவ்வொரு வீடாக் கொண்டு போய் காட்டிட்டு வந்தாங்க.

“பொட்டி நிறைய கொடுத்தாங்களாம். தனக்கு ஒரு டப்பா போதும்னு மீதியை ஆபிஸ்லயே கொடுத்துட்டாராம்னு அபார்ட்மென்ட்ல சொல்லி வச்சிருக்கேன்”னாங்க. இன்னும் பத்து டப்பா ஏன் கொண்டு வரலன்னு நாசூக்கா கேட்கிறாங்கன்னு புரிஞ்சுது.

டிஷ்யூ பேப்பர் பண்டில், வாட்டர் கேன்னு ஏற்பாடு செய்ய லோக்கல்ல அலைய விட்டாங்க. ப சீ அண்ணாச்சியும் கமிட்டில இருந்ததால அவரை அனுப்பிட்டேன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டு குட்டித் தூக்கம் போட்டுட்டு ஈவ்னிங் வந்தாரு. “என்ன பவுடர்லாம் அடிச்சிருக்கீங்க”ன்னு அடுத்த சீட்டு அம்மிணி கேட்டதும், “விளையாடாதீங்க. வெய்யில்ல அலைஞ்சு வெளுத்துட்டேன்”னு ஃபீலிங் விட்டாரு.

நல்லவேளை ஷாமியானா கட்ட என்னைக் கூப்பிடல. ப சீ அண்ணாச்சி அந்த நேரத்துலயும் போயிட்டாரு. கலர் கலரா கொடிக்கட்ட ஐடியா கொடுத்தேன்னு ஆபிஸ் முடியற நேரம் வந்து தகவல் சொன்னாரு. அவரைத் தேடிக் கிடைக்காததுனால அந்த சீட்டு சம்பந்தமா பதில் சொல்ற வேலையும் என் தலையில விழுந்துச்சு.

ஃபங்ஷன் அன்னிக்கு ப சீ அண்ணாச்சி முகத்தை சோகமா வச்சுக்கிட்டாரு. “இன்னிக்கு முழுக்க விழாலயே போயிரும். சீட்டு வொர்க் நின்னுரும்”னு கவலையா உரக்க அவர் சொல்லவும் அதிசயமா பார்த்தேன். பின்னால பாஸ் நின்னுகிட்டிருந்தது அப்புறம் தான் தெரிஞ்சுது.

அம்மிணி கிளம்பிட்டேன்னு போன் செஞ்சாங்க. அப்புறம் ஒவ்வொரு இடமா கடக்கும்போது அதுக்கு ஒரு போன். டிராவல்ஸ்ல கார் ஏற்பாடு செஞ்சிருந்தேன். அதுக்கே இந்த ரகளை. என்னமோ அவங்களை யாரோ கடத்திக்கிட்டு போயிட்டா கடைசியா வந்த போன்ல அவங்க எங்கே இருந்தேன்னு சொன்னாங்கன்னு விசாரிச்சா பதில் சொல்ல உதவுங்கிற மாதிரி.

ஆபிஸ் அம்மிணிங்க ஜிகுஜிகுன்னு கலர் ஸாரில இருந்தாங்க. நாங்க வழக்கம் போல யூனிஃபார்ம்ல. வெளி மாநில ஜி எம், ரெண்டு மூணு பேர் அவங்க அம்மிணியோட வந்திருந்தாங்க. எங்க ஜி எம், டைரக்டர் குடும்பம். பாஸ், “நீதான் கவனிச்சுக்கணும்”னு அப்பப்போ ஜாடை காட்டிக்கிட்டு இருந்தாரு. இந்த வருசம் அவருக்கும் ப்ரோமோஷன்னு பின்னால தெரிஞ்சுது.

ப சீ அண்ணாச்சி எங்கம்மிணியை வரவேத்து முன் வரிசைல ஒக்கார வச்சுட்டாரு. கையில கூல் ட்ரிங்கும் கொடுத்து அசத்திட்டு என்கிட்ட வந்து பெருமை அடிச்சுகிட்டாரு. ரெண்டு லாரி லோடு அடிச்சாப்ல நானும் துளி அழுக்கு இல்லாம நீட்டா அவரும் இருந்ததைப் பார்த்தா ஃபங்ஷனுக்கு கெஸ்ட்டா அவர் வந்தாப்ல இருந்துச்சு.

ஒவ்வொருத்தரா பேச ஆரம்பிச்சு அது முடியவே ஒன்றரை மணி நேரம் ஆயிருச்சு. பாஸ் மேடைக்கு வந்தாரு. வழக்கமா அவரு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு பாரா பாராவா பேசுவாரு. என்ன சொல்ல வராருன்னு நமக்குப் புரியறதுக்குள்ர அடுத்த பாராக்கு போயிருவாரு.

“ஒங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ். இந்த ஃபங்ஷன் இன்னொரு விதத்துல சிறப்பா அமையுது. ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும் விஐபி எம்ப்ளாயின்னு ரெண்டு பேரை செலக்ட் செஞ்சிருக்கோம். அவங்களுக்கு மெடல், சர்டிஃபிகேட் தருமாறு நம் டைரக்டரை கேட்டுக் கொள்கிறோம்”னு அறிவிச்சாரு.

எங்க டிபார்ட்மென்ட்டுக்கு பக்கத்து சீட்டு அண்ணாச்சியையும் அம்மிணியையும் மைக்ல கூப்பிட்டாரு. ப சீ அண்ணாச்சி குதூகலமா வந்து ஸ்டைலா குனிஞ்சு வாங்கிக்கிட்டாரு.

ஃபங்ஷன் முடிஞ்சு ஒண்ணா திரும்பிப் போவலாம்னு அம்மிணிட்ட சொல்லியிருந்தேன். டிராவல்ஸ் காருக்கு போன் அடிச்சா, “அப்பவே அம்மாவ வீட்டுல பத்திரமா எறக்கிட்டேன் சார்”னு டிரைவர் பவ்யமா பதில் சொன்னாரு.

அப்பவே எனக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in