நல்லா பாருங்க லாஃப்ட்ல..!

நல்லா பாருங்க லாஃப்ட்ல..!
ஓவியம்: முத்து

அம்மிணி கத்துனது கேட்டுச்சு. “அப்பாவை வரச் சொல்லுரா”. என்னை எதுக்கு இவ்ளோ அவசரமாக் கூப்பிடறாங்கன்னு புரியாம ஓடுனேன். தலையைக் கவுத்துக்கிட்டு (வெக்கம்லாம் இல்லீங்க!) “அங்கே பாருங்க... அங்கே பாருங்க”ன்னு பீதில குரல் கொடுத்தாங்க. அவங்க கை காட்டுன திசைல எனக்கு எதுவும் தெரியல. “சுவரா, ஃபேனா, ஏசியா”ன்னு ஒவ்வொண்ணா கேட்டா அவங்க முகத்துல இன்னும் இறுக்கம். “நல்லாப் பாருங்க. லாஃப்ட்ல பா... பா... பாம்பு”ன்னாங்க. பெட் ரூம் லாஃப்ட்ல பாம்பா!

உத்துப் பார்த்தேன். எப்பவாச்சும் தேவைப்படும்னு எல்லாத்தியும் மேலே ஏத்தி வச்சுருவாங்க. மகனார்ட்ட கேலியா சொல்வேன். கொஞ்சம் இடம் இருந்துச்சுன்னா என்னையும் அங்கதான் வைப்பீங்கன்னு. மகனார் சிரிக்காம சொன்னாரு. “நீங்க எப்பவும் தேவை”ன்னு. கறுப்பா நீளமா வால் மாதிரிதான் தெரிஞ்சுது. அதெப்படி ரெண்டாவது மாடிக்கு பாம்பு வந்து, அதுவும் லாஃப்ட்ல குடித்தனம் இருக்கும்?

“குரங்கு வந்துச்சில்ல. பால் பாக்கெட் எடுத்துகிட்டு போச்சில்ல. பின்னால காம்பவுண்டுக்கிட்ட போன வருசம் குட்டிப் பாம்பு பார்த்தோம்ல. மேலே வர என்ன தடைன்னு” லாஜிக்கா கேட்டாங்க.

வீட்டுக்குள்ர பாம்பு வந்து லாஃப்டில ஏறுகிற வரைக்குமா வேடிக்கை பார்ப்போம்? “வாட்ஸ் அப்ல எவ்ளோ வீடியோ பார்த்துருக்கீங்க”ன்னு அம்மிணி இன்னும் பீதியைக் கூட்டுனாங்க.

“கொஞ்சம் இரு”ன்னு அமைதிப்படுத்திட்டு ஸ்டூலைப் போட்டு ஏறுனேன். வாலைப் பிடிச்சு இழுத்தா அது வரல. ஆனா, அது என்னன்னு புரிஞ்சிருச்சு. வாக்வம் க்ளீனர்!

அம்மிணிக்கு எல்லாம் வீட்டுல வாங்கி வைக்கணும்னு ஆசை. ஆனா, அதை யூஸ் பண்ண பொறுமை இல்லை. கொஞ்ச நாள்ல அது லாஃப்டுக்கு போயிருச்சு. “கீழே இருக்கட்டுமே”ன்னு சொன்னதும், “அதைப் பார்த்துட்டு யாராச்சும் ஓசி கேப்பாங்க”ன்னு புத்திசாலித்தனமா சொல்லிட்டாங்க.

அம்மிணிக்கு பயம் போய் ப்ளானிங் வந்துருச்சு. “புது வருசத்துக்கு க்ளீன் செய்யச் சொல்லணும்னு நினைச்சேன். பொங்கலே முடிஞ்சிருச்சு. இப்பவாச்சும் அதை இறக்கி உங்க கடமையை ஆத்துங்க”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

மகனாரைப் பார்த்தேன். “அது என்ன... பாம்புன்னு நினைச்சதும் என்னைக் கூப்பிடறாங்க. ஏன் உசுரு அவ்ளோ வெல்லமா”ன்னு கேட்கும்போதே அம்மிணி வந்துட்டாங்க.

“அவன் வாழவேண்டிய புள்ளை. எதுக்கு யாரோட ஒப்பிடறதுன்னு புரியாதா”ன்னு உறுமினாங்க.

மகனார் பக்கம் திரும்புனாங்க. “உன் ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறியா, இல்லாட்டி வாசல் வராண்டாக்கு போயிரு. நானும் கீழ் வீட்டுக்குப் போய் அரட்டை அடிச்சுட்டு வரேன்”னு என்னைப் பார்த்தாங்க.

“ஒரு மணி நேரம் டைம். எங்க ரெண்டு பேருக்கும் டஸ்ட் அலர்ஜி. வேலையை முடிச்சுட்டு கூப்பிடுங்க. நீங்களும் முகத்துக்கு கவர் பண்ணிக்குங்க.”

ரெண்டு பேரும் என்னை ஒத்தையில விட்டுட்டுப் போயிட்டாங்க. வாக்வத்தை முறைச்சேன். எப்பவோ யூஸ் செஞ்சது. எதை எதுல சொருகணும்னுகூட மறந்து போச்சு. கீழ் வீட்டுக்குப் போய் கேக்கலாம்னா எந்த வீடுன்னு தெரியல. மகனார்ட்ட போனேன். எதுவும் பேசாம வந்து ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்தாரு.

ஹால்ல ஆரம்பிச்சேன். ரொம்ப நாளா யூஸ் பண்ணாம வச்சு இன்னிக்கு வேலை வாங்கினதுல, அதுக்கு என்ன கடுப்போ.. ரொர்ர்ர்ர்ர்ன்னு சத்தம் போட ஆரம்பிச்சுது.

எதிர்வீட்டு அண்ணாச்சி கதவைத் தொறந்து பார்த்தாரு. “ஓ வாக்வம் க்ளீனரா. யாரோ யார்கிட்டயோ அடி வாங்கிட்டு அழுவுறாப்ல சத்தம் வந்துச்சா. அதான் பார்த்தேன்னு” குசும்பா சொல்லிட்டு கதவை மூடிட்டாரு.

“டிவிக்குப் பின்னாடி நூலாம்படை இருக்கு. பார்த்துக்குங்க”ன்னு அம்மிணி சொல்லிட்டுப் போயிருந்தாங்க. சமயத்துல தமிழ்ல விளையாடுவாங்க. எங்கியோ கேள்விப்பட்ட வார்த்தையா இருக்கேன்னு முழிச்சப்போ டிவிக்கு பின்னாடி காட்டுனாங்க.

ஒவ்வொண்ணா பார்த்துப் பார்த்து சுத்தம் செஞ்சதுல ஹாலுக்கே அரை மணி ஓடிருச்சு. சூடா ஒரு டீ குடிச்சா தேவலைன்னு கீழ் வீட்டுக்குப் போனேன். அம்மிணி எந்த வீட்டுல இருக்காங்கங்கிற சந்தேகமே இல்லாம சத்தம் கேட்டுச்சு.

“என்ன முடிஞ்சிருச்சா அதுக்குள்ர”ன்னு அம்மிணி கேட்டதும், “டீ...”ன்னு முனவுனேன். “ஒங்க வீட்டுக்காரரா... அடையாளமே தெரியல. அடிச்ச ஒட்டடை முழுக்க அவரு ஒடம்புலதான் இருக்குதா. முனிசிபாலிட்டிலேர்ந்து ஆள் வந்திருக்காருன்னு நினைச்சுட்டேன்”னு அந்த வீட்டு அம்மிணி சொல்லவும் “வேலையை முடிங்க. போங்க”ன்னு எங்க அம்மிணி விரட்டிட்டாங்க.

எ வீ அண்ணாச்சி டிஸ்போ கப்புல டீயோட காத்துக்கிட்டு இருந்தாரு. ஒரு ஆம்பள கஷ்டம் ஒரு ஆம்பளைக்குத்தான் தெரியும் போல.

டீ சகிக்கலன்னாலும் அந்த நேரத்துக்கு தேவையா இருந்துச்சு. “வாக்வம் க்ளீனரோட மேனுவல் கொடுத்திருப்பாங்களே”ன்னு கேட்டாரு. அதை எடுத்துக்காட்டுனதும் ஏதோ வார இதழைப் படிக்கறாப்ல “படிச்சுட்டு தரேன்”னு வாங்கிட்டுப் போயிட்டாரு.

ஜன்னல் பக்கம் அடிக்கும்போது யார் வீட்டுலயோ வெங்காய சாம்பார் வைக்கிற வாசனை வந்துச்சு. பசி வயித்தைக் கிள்ள ஆரம்பிச்சிருச்சு.

வேகமா வேலையை முடிச்சாத்தான் சோறுன்னு புத்தி சொல்லவும், க்ளீனரை வச்சுட்டு வாருகோலால தட்டுனேன். ஒரு தடவை மேலே கீழே பார்த்ததுல சுத்தமா செஞ்சிருந்த மாதிரிதான் தோணுச்சு. கூட்டித் தள்ளிட்டு அம்மிணிக்குக் குரல் கொடுத்தேன்.

முகத்தை மூடிக்கிட்டு வந்தாங்க. நிமிர்ந்து ஃபேனைப் பார்த்தாங்க. “இதை யார் துடைப்பாங்க”ன்னு ப்ளேடுல ஒட்டிக்கிட்டிருந்த தூசியைக் காட்டுனாங்க.

“ஹைட் எட்டல”ன்னு சொல்லவும் “கோக்காலி இருக்குதானே”ன்னு மடக்கினாங்க. ஒவ்வொரு மூலையிலயும் என் பார்வைக்குத் தப்பி தொங்கிட்டிருந்த ஒட்டடையைக் காட்டுனாங்க.

வேலையை முடிச்சதும், “இப்பப் பாருங்க. வீடு எவ்ளோ நீட்டா இருக்கு. பாம்புன்னு கதைவிட்டு ஒங்ககிட்ட வேலை வாங்க வேண்டியதாச்சு”னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டு, மகனார்க்கு சிரிச்சுக்கிட்டே குரல் கொடுத்தாங்க. “இப்ப நீ வரலாம்”னு.

எ வீ அண்ணாச்சி மேனுவலோட வந்தாரு. “அரை மணில திருப்பிக் கொடுத்துடறேன்... நீங்க செஞ்சதைப் பார்த்துட்டு எங்க வீட்டுலயும் ஆர்டர் போட்டுட்டாங்க”ன்னு சொல்லிக்கிட்டே சுதாரிக்கிறதுக்குள்ர, வாக்வம் க்ளீனரைத் தூக்கிட்டு அவர் வீட்டுக்குள்ர போயிட்டாரு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in