எதையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!
ஓவியம்: முத்து

எதையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

டைனிங் ஹால் கண்ணுக்குத் தெரியறாப்ல உக்காந்திருந்தேன். மேடைக்குப் பக்கத்துல இருந்தா புகை ஒத்துக்காதுன்னு சால்ஜாப்பு சொல்லிட்டு.

இலை போட்டு ஐட்டம்லாம் பரிமாறிட்டு கதவைத் தொறந்தார் கேட்டரிங்காரர். அம்மிணியைக் கூப்பிடலாம்னு பார்த்தா ஒரு பெரியம்மிணி கூட சொக்கிப் போய் பேசிக்கிட்டிருந்தாங்க.

விட்டுட்டுச் சாப்பிடப் போயிரலாம்னு சபலம் தட்டுச்சு. எங்க அறுபதாம் கல்யாணம் வரைக்கும் இதையே சொல்லிக் காட்டுவாங்கன்னு தோணவும் எந்திரிச்சு அம்மிணிட்ட போனேன்.

நான் வந்ததையே வழக்கம் போல கண்டுக்காம அம்மிணி வெக்கத்தோட இருந்தாங்க. அது வெக்கம்னு அவங்களே சொல்லித்தான் தெரிஞ்சுது.

“போங்கம்மா எனக்கு வெக்கம் வெக்கமா வருது.”

பெரியம்மிணி நீட்டி முழக்கினாங்க. “நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். அந்த நாள்ல ஒங்கப்பன் ஆத்தாளைப் பார்க்க வருவேன். நீ கூடத்துல ஒரு ஓரமா உக்காந்துக்கிட்டு பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருப்பே. ஒங்கப்பனுக்கு சங்கீதம்னா உசுரு. எம்பொண்ணுக்கு கத்துக் கொடுக்கணும்னு பிடிவாதமா உன்னை சேர்த்தாரு.”

அம்மிணி அப்படியே சின்ன வயசுக்கு போயிட்டாங்கன்னு முகத்துல தெரிஞ்சுது.

“ஹப்பா... இப்பவும் காதுலயே நிக்கிது உன் குரல்.” பெரியம்மிணி படக்குனு தன் கண்ணை மூடிக்கிட்டாங்க. எதிர்ல இருக்கிற அம்மிணியைப் பார்க்கப் பயந்துகிட்டோன்னு எனக்குத் தோணுச்சு.

எங்க அம்மிணி, மேடைல பக்கவாத்தியத்தோட உக்காந்து இருக்கிற மாதிரியும் சபால ஒக்கார இடம் இல்லாம வெளியே வராண்டாலல்லாம் ரசிகர்கள் நிக்கிற மாதிரியும் அம்மிணியே நினைச்சுக்கிட்டாங்கன்னு முகத்துல தெரிஞ்சுது.

டைனிங் ஹால்ல ஒரு கண்ணும் அம்மிணிட்ட ஒரு கண்ணுமா அல்லாடினேன். பெரியம்மிணியைக் கிளப்பினா கூடவே இவங்களும் வந்துருவாங்கன்னு டெக்னிக்கா கூப்பிட்டேன்.

“சாப்பிடப் போலாமா.”

பெரியம்மிணி மூஞ்சிய சுளிச்சாங்க. “என்ன அவசரம். இவளை ஒரு பாட்டுப் பாடச் சொல்லி கேக்கலாம்னு.”

“ரெண்டு நாளா தொண்டை சரியில்ல”ன்னு அம்மிணி சொல்லவும் பெரியம்மிணி சோகமான மாதிரி மூஞ்சிய வச்சுகிட்டாங்க.

“ஒங்களுக்காக லைட்டா”ன்னு அம்மிணி எதையோ முனகவும் பக்கத்துல ஒரு அண்ணாச்சி சொன்னாரு. “கல்யாணத்துல அழக் கூடாது. அந்த சத்தம் கேக்கக் கூடாதுன்னு தான் தவிலு நாகஸ்வரம்லாம் சத்தமா வைக்கிறது”.

அம்மிணி முறைக்கவும், “பொதுவா சொன்னேன்”ன்னு டைனிங் ஹாலுக்கு ஓடிட்டாரு.

“போலாமா”ன்னு மெதுவா கேட்டேன். பெரியம்மிணிக்கு சுர்ருன்னு கோவம் வந்திருச்சு. “என்ன ஒம்புருசன் சோத்தையே காணாதவர் மாதிரி இப்படிச் சலம்புறாரு.”

“நீங்க போங்க. நான் இவங்க கூட வரேன்”னு அம்மிணி எனக்கு விசா கிளியர் செஞ்சாங்க.

டைனிங் ஹாலுக்கு ஓடுனா அது ஃபுல்லு.

ரசம் முடிச்சு பாயசத்துக்கே வந்துட்டாங்க. நான் போய் ஒருத்தர் பின்னாடி நின்னுகிட்டு அவரு எப்போ எந்திரிப்பார்னு உத்துப் பார்த்தேன். மனுசன் என் தவிப்பு புரியாம இன்னொரு கரண்டி பாயாசம்னு கூவினாரு.

அம்மிணி வீட்டுக்கு வந்ததும் மொபைலை நோண்ட ஆரம்பிச்சாங்க. யார் யாருக்கோ போன் செஞ்சாங்க.

“என்னம்மா”ன்னு விசாரிச்சேன்.

இப்பல்லாம் ஆன்லைன்லயே பாட்டுச் சொல்லித் தராங்க. அதான் தேடறேன்.”

“நீதான் கத்துக்கிட்டியே”ன்னேன்.

“அது ரொம்ப நாளைக்கு முன்னால. ஒங்களைக் கட்டிக்கிட்டு வந்ததும் எங்கே என்னைப் பாட விட்டீங்க”ன்னு எனக்குப் பாட்டு விட்டாங்க.

எப்படியோ ஒருத்தரைப் பிடிச்சுட்டாங்க. அவங்க வாரம் எவ்ளோ ஃபீசுன்னு சொல்றதிலேயே குறியா இருந்தாங்க.

“என்னது... வாராவாரமா. மாசம்லாம் போச்சா”ன்னு அதிர்ச்சி காட்டுனேன்.

அம்மிணி கூலா சொன்னாங்க. “ஃபாரின்ல செட்டிலான நம்மாளுங்க இவங்க கிட்டதான் கத்துக்கிறாங்க. டாலர்ல, யூரோலன்னு பணம் கொட்டுதாம்.”

திகைச்சுப் போய் நின்னப்போ அடுத்த பாம் போட்டாங்க. “நாளைக்கே நானும் பாட்டுச் சொல்லித் தந்தா அவ்ளோ வருமானமும் ஒங்களுக்குத்தானே.”

மகனார் குனிஞ்சதலை நிமிராததால சிரிக்கிறாரான்னு கண்டுபிடிக்க முடியல.

“என் பாஸ்புக் என்ஆர்ஐ அக்கவுன்ட்டானு பார்க்கணும். இல்லாட்டி ஒண்ணு ஓப்பன் செய்யணும்”னு அம்மிணி சொன்னப்போ முதல்ல புரியல.

“உனக்கு எதுக்கு அதெல்லாம்”னு கேட்டுத் தொலைச்சிட்டேன்.

மகனார் இப்போ தலையை நிமிர்த்தி, “டாலர், யூரோல ஃபீஸ் வரப்போ வேணும்ல. எதுவா இருந்தாலும் பிளான் பண்ணிப் பண்ணணும்.”

அம்மிணி நொடிச்சுக்கிட்டாங்க. “நல்லா சொல்லுடா இவருக்கு. முன்யோசனையே கிடையாது அவங்க குடும்பத்துக்கே”னு போறபோக்குல ஒரு 'உண்மையை' போட்டு ஒடைச்சாங்க.

பாட்டு அம்மிணி நேரடியா சொல்லித் தருவாங்கன்னு நினைச்சா வீடியோவை அனுப்பிட்டாங்க.

அம்மிணி அதுக்கும் ஏதாவது பதில் வச்சிருப்பாங்க. எப்படியோ அம்மிணி சந்தோஷமா இருந்தா சரின்னு விட்டுட்டேன்.

ஒரு மாசம் ஓடுச்சு. அம்மிணி பாட்டுல பிஸியானதும் சொந்தக்காரங்க ஃபோன்லாம் எனக்கே வந்துச்சு. “என்னாச்சு. ஒடம்புக்கு ஏதும் சரியில்லியா அம்மிணிக்கு.”

சோத்தைப் போட்டுட்டு சாம்பார் கரண்டியை மேல்ஸ்தாயிக்குக் கொண்டு போவாங்க. தட்டைத் தூக்கி கேட்ச் பிடிக்கிற மாதிரி ஆயிரும்.

ஒருநாள் அம்மிணி சொன்னாங்க. “எங்க பாட்டு மிஸ் உங்க போன் நம்பரைக் கேட்டாங்க”ன்னு.

அதான் ஃபீஸ்லாம் ஒழுங்கா வாராவாரம் கட்டிடறேனேன்னு குழம்பிட்டேன். மிஸ், நான் ஆபீஸ்ல இருந்தப்போ மெசெஜ் பண்ணாங்க.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். உங்க அம்மிணி ஆர்வம்லாம் சரி. நான் ஏதோ குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். சரியா வரலைன்னா வேணாம்மா விட்டுருன்னு தைரியமா சொல்லிருவேன். உங்க அம்மிணிக்கு ஆர்வம் இருக்கிற அளவுக்கு குரல் இல்லை. ப்ளீஸ். இது ரொம்ப ரகசியம். என்னைக் காட்டிக் கொடுத்துராதீங்க.”

அம்மிணி விசாரிச்சாங்க. “என்ன பேசுனாங்க. என் வாய்ஸ் ட்ரெண்டா இருக்காமா.”

“அவங்களுக்கு ஒடம்பு சரியில்லியாம். கொஞ்ச நாளைக்கி க்ளாஸ் எதுவும் இல்லை... அம்மிணிக்கிட்ட சொல்ல தயக்கமா இருக்கு. ஆர்வமா வந்தவங்ககிட்ட எப்படிச் சொல்லன்னு சொன்னாங்க.”

“ம்ஹ்ம். என் அதிர்ஷ்டம் அப்படி. சின்ன வயசுலேர்ந்து இதே தான். அப்போ பாட்டு டீச்சர் வீட்டைக் காலி செஞ்சுட்டு வேற ஊருக்கே போயிட்டாங்க. இப்போ இவங்க. பாக்கலாம். எனக்குன்னு ஒரு பாட்டு டீச்சர் பொறக்காமயா இருந்திருப்பாங்க. கண்டுபிடிச்சுடறேன்.”

அம்மிணி மொபைலை நோண்ட ஆரம்பிச்சாங்க... அடுத்த டீச்சருக்கு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in