இப்ப புரிஞ்சுதா... இவருக்கு ஏன் ப்ரொமோஷனே கிடைக்கலன்னு!

இப்ப புரிஞ்சுதா... இவருக்கு ஏன் ப்ரொமோஷனே கிடைக்கலன்னு!
ஓவியம்: முத்து

உள்ளே நுழைஞ்சதுமே அந்த அழைப்பிதழ் பளிச்சுன்னு கண்ணுல பட்டுச்சு. எடுத்து பார்த்துகிட்டே அம்மிணிட்ட கேட்டேன். “வித்தியாசமா இருக்கே. யாரு வந்தாங்க”ன்னு. கவர்ல தாத்தா மகன் பேரன்னு மூணு பேர் போட்டோ!

அம்மிணி என்னவோ சொல்ல வரும்போது எதிர்வீட்டு அம்மிணி உள்ளார வந்தாங்க. கவரை எடுத்துப் பார்த்தாங்க. அலட்சியமா சொன்னாங்க. “எங்க பாட்டி அம்மா நானு என் மகள்னு நாலு தலைமுறை போட்டோ வச்சிருக்கோமே எங்க வீட்டுல.”

அவங்க போனதும் அம்மிணி கடுப்புக் காட்டுனாங்க. “நம்ம வீட்டுல என்ன நடக்குதுன்னு பார்க்கிறதே பொழப்பா வச்சிருக்கா”ன்னு. அம்மிணியோட இவ்ளோ நாள் குடித்தனம் நடத்துன அனுபவத்துல ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிது.

அம்மிணிக்கும் இதே போல ஒரு பெருமை அர்ஜெண்டா வேண்டும். “ஒங்களுக்குக் காபி வேணாம்ல”னு சொல்லிட்டு கட்டில்ல போய் ஒக்காந்துட்டாங்க. அதுல ஒக்காந்து யோசிச்சாத்தான் புதுப் புது ஐடியா வரும்னு அவங்க நம்பிக்கை.

மகனார்ட்ட கேட்டேன். “ஒனக்கு காபி வேணுமா”ன்னு. வேணும்னு சொன்னா அவரையே போடச் சொல்லிரலாம்னு. பய அம்மிணி போலவே புத்திசாலி. “குடிச்சிட்டேன்”னு வேகமாத் தலையாட்டுனாரு. எ வீ அம்மிணிட்ட அவங்க வீட்டு போட்டோ பார்க்கிற சாக்குல அரை டம்ளர் காபி குடிச்சிரலாமான்னு கிறுக்குத்தனமா யோசிச்சேன். எப்பவோ அவங்க காபின்னு சொல்லிக் கொடுத்த கஷாயம் ஞாபகம் வரவும் ஒடம்பு நடுங்கிச்சு.

பச்சைத் தண்ணியக் குடிச்சுட்டு வந்தப்போ மகனார் அம்மிணிட்ட மொபைலைக் காட்டி சொல்லிக் கிட்டுருந்தார். “இந்தப் பொண்ணு 4 மணி நேரத்துல 2,330 தடவை திருவள்ளுவர்னு வெள்ளைக் குடைல எழுதி இருக்காங்க. சாதனையாளரா ஏத்துக்கிட்டு சர்டிஃபிகேட் கொடுத்து இருக்காங்க”ன்னு.

வரிசையா சில சாதனைகளை அம்மிணிட்ட மகனார் சொன்னபோது நைசா அம்மாவை கேலி செய்யறார்னு தோணுச்சு. இந்த நேரத்துல நான் அமைதி காத்து நின்னா தப்பாயிரும்னு “பின்னாலேயே பத்து கிமீ நடந்து போனாராம்”னு ஒரு யூடியூப்பைக் காட்டுனேன். “நான் கீழே விழுந்து அடி பட்டுக்கணும். அதானே ஒங்க ஆசை எதிர்பார்ப்பு”ன்னு குமுறுனாங்க.

அம்மிணி மகனார்ட்ட சொன்னாங்க. “ஒம் பாட்டி இருந்தப்போ அவ்ளோ புத்தில்லாம் இல்ல. ஒரே ஒரு போட்டோ எடுத்தோம்னு நினைக்கிறேன். எனக்கும் பொண்ணு இல்லாம போச்சு. நாலு தலைமுறைன்னு போட்டோ எடுக்கவே வாய்ப்பு இல்லை”ன்னு புலம்புனாங்க.

மகனார் மொபைலையே உத்துப்பார்த்தாரு. ஆங்னு கூவுனாரு. “அதனால என்ன... நாம வித்தியாசமா செய்வோம். நம்ம ஒறவுல இருக்கிற வயசான பாட்டி, அடுத்த தலைமுறைக்கு இன்னொரு சொந்தம்னு. எப்பவும் சொந்தத்தை விட்டுக் கொடுக்காம வாழறதுதான் எங்க ஸ்பெஷல்னு சொல்லிருவோம்”னாரு.

அம்மிணி கண்ணை மூடி யோசிச்சாங்க. அதாவது கண்ணை மூடுனாங்க. அதை யோசனைன்னு வசதியா நான் நினைச்சேன். “நல்லாத்தான் இருக்கும். ஆனா... இன்னும் பெட்டரா...”ன்னு இழுத்தாங்க.

மறுபடியும் என் வாய்ல வாஸ்து சரியில்ல. “எனக்கு ஒரு ஐடியா”ன்னு பெருமையாப் பார்த்தேன். “சொல்லித் தொலைங்க”ங்கிற மாதிரி அம்மிணி லுக் விட்டாங்க. “ஒங்க சொந்தம்லாம் வெவ்வேற ஊர்ல இருக்காங்க. ஒரே எடத்துல கொண்டு வந்து வச்சு போட்டோ எடுக்கற சிரமத்த தவிர்க்கலாம்னு இந்த ஐடியா”ன்னு பில்டப் கொடுத்தேன்.

மகனார் சந்தேகமா என்னைப் பார்த்தார். அப்படி என்ன புத்திசாலித்தனமா ஐடியான்னு. மகனார்ட்ட சொன்னேன். “சின்ன வயசுலேர்ந்து எடுத்த அம்மாவோட போட்டோல்லாம் இருக்கு. போட்டோஷாப்ல நீ டச்சப் செஞ்சு எல்லா ஏஜ்லயும் இருக்கிற மாதிரி ஒண்ணு ரெடி பண்ணிரு. ஏழெட்டு தலைமுறை கூட செய்ய முடியும். ஃபிரேம் போட்டு ஹால்ல மாட்டிருவோம். அதை மீறி வேற யாரும் வச்சிர முடியாது”ன்னு சொன்னதும் ரெண்டு பேரும் பார்த்த பார்வைல அக்னி நட்சத்திரம் தெரிஞ்சுது.

“இப்ப புரிஞ்சுதா... இவருக்கு ஏன் ப்ரொமோஷனே கிடைக்கலன்னு” அம்மிணி என்னைக் கலாய்ச்சிட்டு எழுந்து கிச்சனுக்குள்ர போனாங்க. “தலை நோவுது. அரை வாய் சூடா காபி குடிச்சுட்டு வரேன்.”

பின்னாலேயே போய், “எங்க தாத்தா, அப்பா, நானு, மகனார்”னு ஒரு போட்டோ ரெடி பண்ணிரவா”ன்னு ஹேப்பியா கேட்டேன். எனக்குக் கொடுக்க வச்சிருந்த காபியை மடக்குன்னு அவங்களே குடிச்சுட்டாங்க.

நைட் நல்லவேளை சமைச்சாங்க. “இன்னிக்கு உப்பு புளி காரம்லாம் கொஞ்சம் முன்னப் பின்னத் தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”ன்னு மகனார்ட்ட சொன்னாங்க. சாடையா என்கிட்ட சொல்றாங்களாம். சமையல் எப்பவும் போலத்தான் இருந்துச்சு!

அவங்க அம்மாவுக்கு போன் போட்டு ஒரு மணி நேரம் பேசுனாங்க. எதை எதையோ சுத்தி வளைச்சுப் பேச்சு போச்சு. நேரடியா கேட்டுட்டா சஸ்பென்ஸ் சர்ப்ரைஸ்லாம் இருக்காதாம். அம்மிணியோட டெக்னிக் அது.

“என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை”ன்னு அம்மிணி முனகுனாங்க. அப்பப்ப இந்த மாதிரி டயலாக்லாம் எடுத்து விடுவாங்க. மகனார் சிரிச்சு வைப்பாரு. குடும்பத்துலயே நகைச்சுவை உணர்ச்சி இல்லாத ஆளுன்னு எனக்கு முத்திரை குத்தி வச்சிருக்காங்க. காமெடி டிவி பார்த்தாக்கூட உம்முனு பார்ப்பேன்னு சர்டிஃபிகேட்லாம் கொடுத்து இருக்காங்க.

இது பரவலா சொந்த பந்தத்துக்கும் தெரிஞ்சு, “அவரு ஒரு டைப்பு, முசுடு. வணக்கம் சொல்லிட்டு நவுந்துரணும். எதுவானா அம்மிணிட்ட பேசிக்கலாம்”னு தீர்மானமே போட்டுட்டாங்க.

அதுக்கு ஏத்த மாதிரி வீட்டுக்கு யாராச்சும் வரும்போதுதான் அபார்ட்மென்ட் பிரச்சினை ஒண்ணு வெடிக்கும். கொஞ்சம் இறுக்கமா இருந்தா, “ஏன் உர்ருனு இருக்கீங்க. சிரிக்கலாம்ல. இப்ப என்ன நம்ம வீட்டுலயா பிரச்சினை... வெளியே தானே”ன்னு வீட்டுக்கு வந்த சொந்தக்கார அண்ணாச்சில்லாம் இலவசமா புத்திமதி சொல்லிட்டுப் போவாங்க.

மகனார் எங்கியோ வெளியே போயிட்டு ஒரு பேக்கிங்கோட உள்ளார வந்தாரு. அம்மிணிட்ட நீட்டுனாரு. பிரிச்சா எங்க மூணு பேர் போட்டோ. அப்ப சொன்னாரு.

“இப்பதான் கவனிச்சேன். நாம சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோவே நம்ம வீட்டுல இல்லைன்னு!”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in