அம்மிணி சிக்கன அலப்பறைகள்!

அம்மிணி சிக்கன அலப்பறைகள்!
ஓவியம்: முத்து

அம்மிணி அவசரமா குரல் கொடுத்தாங்க. “ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டாங்க”ன்னு. எதிர்லயே தான் இருந்துச்சு. எடுத்துக் குடுத்ததும், “ஒங்களுக்கு ஒரு வேலை வச்சிருக்கேன்... செய்வீங்களா செய்வீங்களா”ன்னு எக்கோவோட கேட்டாங்க. மாட்டேன்னு சொல்ல வழியா இருக்கு. பூம்பூம் மாடு மாதிரி தலை ஆட்டுனேன்.

என்னவோ லிஸ்ட் போட ஆரம்பிச்சாங்க. ஆங்னு தலையை சொரிஞ்சாங்க. “என் போனை எடுங்க”ன்னு அதட்டுனதும் அதை எடுத்துக் கொடுத்தா சீப்னு ஒரு நம்பர் ஸெவ் பண்ணி இருப்பேன் பாருங்க, அதைக் கூப்பிடுங்கன்னாங்க. “சீப்பா... அப்படின்னா”ன்னு கேட்டா அதுக்குள்ர ரிங் போகவும் உஷ்னு அதட்டி வாய்ல விரல் வச்சு அடக்கினாங்க.

“நாதான்பா. அன்னிக்கு பருப்பு ஐட்டம்லாம் விலை மலிவா நல்லா இருக்குன்னு ஒரு கடை சொன்னியே. ஹோம்லி தானே அந்தக் கடை”ன்னு யார்கிட்டேயோ கேட்டாங்க. போனை மறுபடி என்கிட்ட கொடுத்து, “அல்பம்னு ஒரு நம்பர் இருக்கும் பாருங்க, அதைக் கூப்பிடுங்க”னாங்க.

ஆல்பம்னும் அதைப் படிக்கலாம். அப்படித்தான் இருந்துச்சு. அந்த நம்பருக்கு ரிங் போனதும்அவங்க கிட்டேயும் ஏதோ டவுட் கேட்டாங்க. போனை வச்சதும் அடக்க மாட்டாம விசாரிச்சேன். “எதுக்கு இதெல்லாம்”னு.

“ஒங்ககிட்ட மளிகைச் சாமான், வெஜிடபுள் வாங்கிட்டு வரச்சொன்னா மொதக் கடைல அவங்க என்ன விலை சொன்னாலும் வாங்கிட்டு வந்துருவீங்க. நாங்க லேடீஸ்லாம் அப்படி இல்லை. வெட்டியா பேசுறோம்னு கேலிதான் பண்ணுவீங்க. ஒரு கடைக்கு நாலு கடை விசாரிச்சு எங்கே விலை மலிவா இருக்குன்னு பார்த்து வாங்குவோம். தெரியுமா”னாங்க.

“அது சரி இப்படி சீப் னு வச்சிருக்கியே. ஒரு வேளை உன் போனை அவங்க பார்த்துட்டா”ன்னு மடக்கினதும் “நல்லாப் பாருங்க... Chief னுதான் வச்சிருக்கேன்”னு சொல்லிட்டு கெத்தா சிரிச்சாங்க.

அரை மணி ஓடுச்சு. எக்ஸாம் மாதிரி அடிஷனல் பேப்பர்லாம் கேப்பாங்களோன்னு பயந்துட்டேன். ஒரு வழியா அடிச்சுத் திருத்தி லிஸ்ட் ரெடி பண்ணிட்டாங்க. “எந்தக் கடைல என்ன வாங்கணும்னு இதுல இருக்கு. மொத தடவைங்கிறதால நானும் கூட வரேன். அடுத்த மாசம்லாம் நீங்களே போயிருவீங்கல்ல”ன்னு சொன்னதும் அரண்டுட்டேன்.

டூவீலர்ல அம்மிணியைக் கூட்டிட்டுப் போவறது ரிஸ்க்கான மேட்டர். கடை வீதில போவும் போது எதையாச்சும் பாத்துருவாங்க. “நிறுத்துங்க”ன்னு கத்துனதும் ப்ரேக் அடிக்கலன்னா அலுத்துக்குவாங்க. “ஓரங்கட்ட இடம் வேணாமா”ன்னு கேட்டா, “ஒங்கள மாதிரியா எல்லாரும் பார்க்கிறாங்க. தா பாருங்க, நடுவுல நிறுத்தி வண்டியை விட்டு எறங்காம என்னா அழகா பூ வாங்கறாரு”ன்னு யாரையோ சத்தமா காட்டுவாங்க. பூ வாங்குற அண்ணாச்சி என்னைப் பார்த்து முறைச்சுட்டுப் போவாரு.

ப்ளாட்பாரத்துல சப்போட்டா பழம் வச்சுகிட்டு ஒருத்தர் உக்காந்துருப்பாரு. “பழம் எவ்ளோ”ன்னு அம்மிணி கேக்கும்போதே அவரும், நானும் உஷார் ஆயிருவோம். “விலை மலிவுதான். ரெண்டு கிலோ போடவா”ன்னு அவரு பவ்யமா சதாய்ப்பாரு. “என்னைத் தவிர வேற யாருக்கும் பிடிக்காது. ரெண்டு கிலோ வாங்கி என்ன செய்ய”ன்னு அம்மிணியும் அதே டோன்ல பதிலுக்கு சதாய்ப்பாங்க. அரைக்கிலோ வாங்க ஒரு ஒலக யுத்தமே நடக்கும். எடை முள் எந்தப் பக்கம் ஆடுனாலும் டென்ஷன். “ஒரு பழம் தானே... குடுத்தா குறைஞ்சா போயிரும்”னு இவங்க மல்லுக்கட்டுவாங்க. அவரு, “என் லாபமே அந்த ஒரு பழத்துல தான் இருக்கு”ன்னு பதிலுக்குப் போராடுவாரு.

“வாம்மா போவலாம். அஞ்சாறு கடைக்குப் போவணும்னு லிஸ்ட் போட்டுருக்கே”ன்னு சன்னமா குரல் கொடுத்தாலே போச்சு. “இதுக்குத்தான் ஒங்களைக் கூட்டிகிட்டு வரக்கூடாதுங்கிறது. கால்ல கஞ்சியைக் கொட்டுனாப்ல படபடப்பு”ன்னு புலம்புவாங்க.

முதல் கடைக்குள்ர நுழைஞ்சோம். “அந்த லிஸ்ட்ல கஊன்னு போட்டுருக்கேன் பாருங்க. அதெல்லாம் இந்தக் கடைல. புரிஞ்சுதா”ன்னு அம்மிணி தன் குரல்ல சொன்னதும் எப்போ தீவிரத் தமிழ்ப் பற்றாளர் ஆனாங்கன்னு அரண்டுட்டேன். அவங்க கையெழுத்து புரியாம க2வை கஊன்னு நினைச்சு, “து பருப்பு”ன்னு சொல்லிட்டேன். முழங்கைல கிள்ளி அது, “இங்கே இல்லை”ன்னாங்க.

“நீயே படிச்சுரேன். நான் கண்ணாடி கொண்டு வரல”ன்னு கெஞ்சுனதும் அரை மனசா வாங்கிட்டாங்க. கூடையை எடுத்துகிட்டு அவங்க பின்னாடியே ஓடுனேன். ஒரு ரேக்ல ஒரு சாமானை எடுத்துட்டு அரை பர்லாங் போயிட்டு திரும்பி வந்து அதே ரேக்ல இன்னொரு சாமானை எடுத்தாங்க. அம்மிணி பம்பரமா சுழண்டதைப் பார்த்து கடைக்கு வந்த மத்த அம்மிணிகள் எல்லாருக்கும் ஆச்சரியம்.

ரெண்டாவது கடையை முடிச்சுட்டு மூணாவது கடைக்குப் போனப்போ அடடா இதை மொதக் கடைல வாங்கி இருக்கணும்னு சொன்னதும் எனக்குத் திணறுச்சு. இந்த ட்ராஃபிக்ல மறுபடியும் அம்மிணியோட மொதல்லருந்தான்னு முழிச்சப்போ வயித்துல பால் வார்த்தாங்க. “பரவாயில்ல விடுங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”னு. ஹிஹின்னப்போ “இங்கே முடிச்சுட்டு என்னை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வேற ஏதாச்சும் விட்டுப் போச்சான்னு பார்த்துட்டு மொத்தமா சொல்றேன்”னு அடுத்த ஆட்டம்பாம் போட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் கடை பரப்பி வச்சு ஒவ்வொரு பில்லா எடுத்து செக் பண்ணாங்க. “அய்ய... இதென்ன கோதுமை மாவுக்குப் பதிலா மைதா மாவை எடுத்துருக்கோம்”னு என்னையும் கோத்துவிட்டதும் அதைப் பார்த்தேன். அந்த கம்பெனி மைதாவை சின்ன எழுத்துல போட்டுருந்தாங்க. “உன் மேல தப்பில்ல. எப்படி ஏமாத்தறாங்க பாரு”ன்னு கம்பெனியைத் திட்டுனதும் அம்மிணி மொகத்துல ஒரு பிரகாசம். “நீங்க புழைச்சுப்பீங்க அப்பா”ன்னு மகனார் நைசா சிரிச்சாரு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in