துபாய்ல எனக்குப் பேரு..!

துபாய்ல எனக்குப் பேரு..!
ஓவியம்: முத்து

அம்மு போன் பேசறதைத் தள்ளி நின்னு ஒட்டுக் கேட்டாலே அஞ்சாறு ஒலகப் போர் ஒண்ணா வந்தாப்ல ஒரு பீதி கெளம்பும். “அய்யோ... அப்டியா என்னடா சொல்ற உண்மையாலுமா”ன்னு யார் கிட்டேயோ பேசிக்கிட்டு இருந்தாங்க. பதறிப் போய் அவங்க சொந்தத்துல யாராச்சும் ஹாஸ்பிடலான்னு கேக்கலாமுன்னு வந்தேன்.

பேசி முடிச்சுட்டு போனைக் கீழே வச்சாங்க. என்னைப் பார்த்தாங்க. மேலே பார்த்தாங்க. என்னைத் தாண்டி அந்தாண்ட பார்த்தாங்க. “வெயிட் ப்ளீஸ்”னாங்க. தண்ணி பாட்டிலை என்கிட்ட நீட்டி, “மே ஐ ஹெல்ப் யூ”னாங்க.

மகனாரைக் கூப்பிட்டேன். “இங்கே வந்து பாரு. ஒங்கம்மாவுக்கு என்னவோ ஆயிருச்சு”ன்னு. மகனார் அங்கிருந்தே கேட்டாரு. “என்னம்மா கன்ஃபர்ம் ஆயிருச்சா”ன்னு. அம்மிணி மொகத்துல அப்டி ஒரு வெளிச்சம். “ஆமாடா”ன்னு பூரிப்பா சொன்னாங்க.

அம்மிணியோட பெரியப்பா மகன் துபாய்ல இருக்காரு. “டிக்கெட் போடறேன், ஒரு வாரம் வந்து தங்கிட்டு போ”ன்னு சொல்லியிருந்தாராம். போனாப் போவுதுன்னு எனக்கும் ஒரு டிக்கெட்டப் போட்டுட்டு, “பொட்டி தூக்கிட்டு வர நம்பிக்கையா ஒரு ஆள் வேணும்ல”ன்னு சிரிச்சாராம். வர மாட்டேன்னு சொல்லிரலாம்னு தோணுச்சு. வழக்கம் போல சிரிச்சு தேத்திக்கிட்டேன்.

இங்கே ஏர்போர்ட்லயே அம்மிணி அலப்பறைய ஆரம்பிச்சுட்டாங்க. ”போனை ஃபுல் சார்ஜ்ல வச்சுக்குங்க. நான் எப்பல்லாம் சொல்றேனோ அப்பல்லாம் போட்டோ எடுக்கணும்”னு மிரட்டி வச்சிருந்தாங்க. ப்ளேன்ல ஹோஸ்டஸ், “மே ஐ ஹெல்ப் யூ”ன்னு சொன்னப்போ அம்மிணி திரும்பி எப்பூடின்னு என்னைப் பெருமையா பார்த்தாங்க.

துபாய்ல வெளியே வந்தப்போ அயல் நாட்டு தூதுவரைக் கூட்டிகிட்டு போறாப்ல அம்மிணியைக் கையைப் பிடிச்சுக் கூட்டிகிட்டு போனாரு. அவங்க பின்னாலேயே மூச்சிரைக்க ஓடுனேன். அந்த மண்ணை மிதிச்சதும் அம்மிணிக்கு என் ஞாபகமே மறந்து போச்சுன்னு தோணுச்சு.

அம்மிணி கையில ஒரு லிஸ்ட் இருந்துச்சு. எங்கெல்லாம் போகணும்னு ஹோம்வொர்க் பண்ணிட்டு வந்துருந்தாங்க. அதை எல்லாம் பெரியப்பா மகனார்ட்ட சொல்ல ஆரம்பிச்சதும் அவரு சிரிச்சுகிட்டே, “ஒங்க கையிலயே வச்சுக்குங்க. ஒவ்வொரு எடமா பார்த்ததும் டிக் அடிச்சுருங்க”ன்னாரு.

நான் புருசரா போட்டோகிராபரான்னு தெரியல. ஆன்னு வாயைப் பொளந்துக்கிட்டு அம்மிணி பில்டிங்கைப் பார்த்தா அதை போட்டோ எடுப்பேன். எந்த இடம் என்ன வெவரம்னு டீடெய்லா அம்மிணிக்கு மட்டும் சொல்வாரு. கேட்க நினைச்சா, “இந்த பேக்கிரவுண்ட்ல ஒரு போட்டோ எடுங்க”ன்னு வெரட்டுவாங்க. ஒரு செல்ஃபி மட்டும் என்னை எடுத்துக்கிட்டேன்.

ஒரு வாரம் ஓடிப்போச்சு. கெளம்புற அன்னிக்கு அம்மிணி தேம்புனாங்க. “என்னை இவ்ளோ மதிச்சு வரவழைச்சு ரொம்பவே மதிப்பு செஞ்சிட்டப்பா”ன்னு கையைப் பிடிச்சப்போ அவரு டக்குனு ஒரு பேப்பரை நீட்டுனாரு. “இதுல ஒரு கையெழுத்துப் போட்டா போதும்”னு.

அந்த காலத்துல அம்மிணி அப்பாவும், பெரியப்பாவும் ஒரு நிலம் வாங்கினாங்களாம். இப்போ அதை விக்கணுமாம். அம்மிணி கையெழுத்து இருந்தாத்தான் சிக்கல் இல்லாம இருக்குனு லாயர் சொல்லி இருக்காரு. “ஒனக்குப் போடாம வேற யாருக்கு போடப் போறேன். அது எங்கே இருக்குன்னு கூட எனக்குத் தெரியாது. எவ்ளோ கையெழுத்து போடணும்”னு ஆவேசம் வந்தாப்ல போட்டாங்க.

ஏர்போர்ட்ல விட்டுட்டு அவரு போனதும் “அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டியா”ன்னு கேட்டேன். அம்மிணி கோவம் ஆயிட்டாங்க. “அவன் நம்ம புள்ளை மாதிரிங்க”ன்னு அழுத்தமா சொன்னதும் என் சொத்தையும் எழுதி வச்சிருவாங்களோன்னு நடுங்கிட்டேன்.

ஃப்ளைட் கெளம்ப ஒரு மணி நேரம் இருந்துச்சு. அப்பதான் என் மகனார் வயசுல ஒருத்தன் அப்புராணியா பொட்டியோட வந்தான். “இதைக் கொஞ்சம் பாத்துக்கிறீங்களா. ஒரு காபி மட்டும் வாங்கிட்டு வந்துடறேன்”னு. அம்மிணி தலையாட்டவும், “ஒங்களுக்கும் வேணுமா” கேட்டான். “அந்த டாலரை அவன் கிட்ட கொடுங்க. பாவம் அவனுக்கு ஏன் செலவு வைக்கணும்”னு 20 டாலர் தான் இருந்துச்சு. கொடுத்துட்டேன்.

ஃபிங்கர் சிப்ஸ், காபி யோட வந்தான். அம்மிணிட்ட கொடுக்கவும் உச்சி குளுந்துட்டாங்க. தம்பி தங்கச்சி இருக்கு, அவன் தான் ஒழைச்சு காப்பாத்தறான்னு அம்மிணிட்ட கதை சொல்லவும் அவன் திருப்பிக் கொடுத்த பத்து டாலரை, “நீயே வச்சுக்க”ன்னு விட்டுட்டாங்க. விட்டா துபாய் ஏர்போர்ட்டையே அவனுக்கு எழுதி வச்சிருவாங்க போல இருந்துச்சு.

ஊர்ல லேண்ட் ஆவறவரை கம்னு இருக்கறதுதான் சேஃப்டின்னு தோணுச்சு. அப்பதான் அந்தப் பையன் ஒரு பிட்டைப் போட்டான். தம்பி, தங்கைக்கு ஸ்மார்ட் போன் வாங்கி இருக்கானாம். நாங்க ஆளுக்கு ஒரு போனை வச்சுக்கிட்டு ஊர்ல எறங்கினதும் திருப்பிக் கொடுத்தா போதும், அவன் வச்சிருந்தா சிக்கல் வரும்னு கெஞ்சுனான்.

அம்மிணி கொஞ்சம் தயங்குனதும் அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கு, நிச்சயம் செய்யத்தான் இப்போ ஊருக்குப் போவுறதாகவும் அவளுக்கு வாங்கின போனை அவன் வச்சிருக்கான்னு சொன்னான். “ஒருத்தர் ரெண்டு போன் வச்சுக்கலாம்”னு கெத்தா சொன்னான்.

நான் உஷாராகி மாட்டேன்னு சொல்ல நினைச்சப்போ, அம்மிணி வாங்கி அவங்க கைப்பைல ஒண்ணு வச்சுக்கிட்டு என்கிட்ட ஒரு போனைக் கொடுத்தாங்க. “இதுல என்னப்பா சிரமம்”னு அவனைப் பார்த்து சிரிச்சு வாழ்த்துகள்னு சொன்னாங்க.

அப்ப ஆரம்பிச்சுது எனக்கு பிபீ. ஃப்ளைட்ல ஏறி ஒக்கார்ந்தாலும் யார் கிட்டக்க வந்தாலும் ஒதறிச்சு. அம்மிணிட்ட ஏதாச்சும் பிரச்சினைல மாட்டிக்க போறோம்னு சொன்னா சத்தமா எதையாவது சொல்லி வம்புல மாட்டிக்குவோமோன்னு வாயை சீல் வச்சுக்கிட்டேன். ஆனா நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.

லேண்ட் ஆனதும் செக் அவுட் செஞ்சு வெளியே வந்தாச்சு. ஏர்போர்ட் வெளியே வந்தப்போ எங்கிருந்தோ வந்து போன்களை வாங்கிட்டுப் போனான்.

மகனார் எங்களைப் பிக்கப் பண்ண ட்ராவல்ஸ் கார்ல வந்திருந்தாரு. போவுறப்போ என்னையும் மீறி புலம்பிட்டேன். “நீட்டுன எடத்துல கையெழுத்து போடறா... போனை வாங்கி வச்சுக்கிறா”ன்னு.

“அம்மா யூ ஆர் க்ரேட். ஐ லவ் யூம்மா”ன்னு மகனார் சொன்னப்போ, அம்மிணி என்னை அலட்சியமா லுக் விட்டாங்க. அதுக்கு மேல பேசுறதுக்கு என்ன இருக்கு... லக்கேஜ்கள இழுத்துக்கிட்டு நடந்தேன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in