எங்களுக்கும் தெரியணும்ல..!

எங்களுக்கும் தெரியணும்ல..!
ஓவியம்: முத்து

அம்மிணியும் மகனாரும் நல்லா பேசிப்பாங்க. நான் போய் பேசுனா மட்டும், ம்ம்.. தான் மகனார்ட்டேர்ந்து வரும். அவங்க ரெண்டு பேரும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசுறாங்களேன்னு கிட்டப் போனா, அப்படி ஒரு அமைதி வந்துரும். நான் நவுந்து வந்துட்டா கரன்ட் வந்ததும் டிவில சவுண்டு வராப்ல பேச்சு வந்துரும்.

இதைப் போய் ஆபிஸ்ல புலம்பிட்டேன். ”அப்பா புள்ளைன்னா அப்படித்தான்”னு சொன்னாங்க. “பொண்ணா இருந்தா அப்பா கூட நல்லா சிரிச்சுப் பேசும்”னு ஆபிஸ் அம்மிணி சொன்னாங்க.

“அப்படில்லாம் இல்ல. நீங்களும் மகனை இழுத்துவச்சு பேசுங்க”ன்னு, அட்வைஸ் அண்ணாச்சி சொன்னாரு. “நான்லாம் எம்பையன் கூட தோள்ல கை போட்டுக்கிட்டுப் போவேன். அப்பா புள்ளை மாதிரியே இல்லை. ஃப்ரெண்ட்ஸ் மாதிரின்னு சொந்தக்காரங்க சொல்லி இருக்காங்க”. அவர் போன்ல போட்டோவையும் எடுத்துக் காட்டுனாரு. அவரு சீரியசா சொல்லவும் நாமும் முயற்சி செய்யலாம்னு தோணுச்சு.

மகனார் ரிலாக்ஸ்டா இருந்தாப்ல தோணுச்சு. “பிஸியா...”ன்னு முன்னெச்சரிக்கையா கேட்டதும், மகனார்க்கே பாவம்னு தோணிருச்சு. லேப்டாப்பை ஓரங்கட்டிட்டு உத்துப் பார்த்தாரு.

“இன்னிக்கு ஆபிஸ்ல ஒரே கலாட்டா. சிரிச்சுச் சிரிச்சு வயிறு அந்து போச்சு”ன்னு, ஒரு காமெடி மேட்டரா பேச ஆரம்பிச்சேன். எடுத்த எடுப்புல அவன் தோள்ல கை போட வேணாம், கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் அதையும் ஒரு போட்டோ எடுத்து வச்சுக்குவோம்னு தீர்மானிச்சேன்.

“பில்டிங்ல திடீர்னு தீப்பிடிச்சா என்ன செய்யணும்னு போன வாரம் சொல்லித் தந்தாங்க. சைரன் அடிச்சா நாலாவது, மூணாவது மாடில இருக்கிறவங்க எப்படி வெளியேறணும்னு”.

அம்மிணி நாங்க பேசுறதைக் கவனிச்சுட்டு, கொஞ்ச நேரம் அசால்ட்டா இருந்தாங்க. அப்புறம் எதிர்ல வந்து உட்கார்ந்துட்டாங்க.

“சைரன் அடிச்சதும் லிஃப்ட் கூடாது, படில இறங்கிப் போங்க, ஹெல்ப் தேவைப்படறவங்களுக்கு உதவ முடிஞ்சா உதவுங்கன்னு சொல்லி இருந்தாங்க.” சூழ்நிலையை சொல்லிட்டு சிரிப்புக்குப் போவலாம்னு பார்த்தா, அதுக்கே இவ்ளோ பேச வேண்டியதாச்சு.

அம்மிணிக்கு சுவாரசியம் இல்லேன்னு புரிஞ்சுது. எந்திருச்சு போக முயற்சி செஞ்சதும், மகனார் அவங்களை வம்படியாப் புடிச்சு ஒக்கார வச்சுட்டாரு.

“ஒருத்தர் டிபன் பாக்சை எடுக்க ஓடுறாரு. ரெண்டு பேர் லிஃப்ட் பட்டனை அழுத்திக்கிட்டு நின்னாங்க. ஒருத்தர் சீட்டை விட்டே நவுராம இது சும்மா ஒரு டெமோக்குத் தானே, நிஜம்மா தீப்பிடிச்சா அப்ப எழுந்து ஓடிக்கிறேன்னு ஹாய்யா உக்காந்து இருந்தாரு. ஹா... ஹா.”

சொல்லிட்டு நானே சிரிச்சேன். ஃபயர் சர்வீஸ்லேர்ந்து வந்தவங்க, எங்க ஆளுங்க அடிச்ச லூட்டியைப் பார்த்து திண்டாடுனது நினைவுல வந்துச்சு. உண்மையிலேயே அப்போ ஒரே கலாட்டாவாத்தான் இருந்துச்சு.

“உங்க ஆபிஸ்ல மொத்தப் பேருமே இப்படித்தானா”ன்னு அம்மிணி நிதானமா ராக்கெட் விட்டாங்க. இப்போ மகனாரும் அம்மிணியும் சேர்ந்து சிரிக்கவும், தேவையில்லாம ஆணியைப் புடுங்கிட்டேனான்னு டவுட் ஆயிருச்சு.

“ஏகப்பட்ட வேலை கெடக்குது. நான் போறேன்”னு அம்மிணி போகவும் திரும்பிப் பார்த்தா மகனார் மறுபடி லேப்டாப்பை தொறந்துட்டாரு. அவ்ளோதான்... எனக்கு ஒதுக்கின டைம்னு புரிஞ்சுக்கிட்டு வராண்டாக்குப் போயிட்டேன். வேற என்ன வழியில மகனார் தோள்ல கை போடறதுன்னு மண்டை காஞ்சுச்சு.

அரை மணி கழிச்சு திடீர்னு ஒரு சத்தம். எதுவோ யாரோ கீழே விழுந்தாப்ல. “என்னம்மா ஆச்சு”ன்னு மகனார் குரல் கேட்கவும் பதறிக்கிட்டு உள்ளே ஓடுனேன். அம்மிணி கிச்சன்ல ஜம்னு உக்காந்துக்கிட்டு இருந்தாங்க.

“காலு பிசகிருச்சு”ன்னு கண்ணுல தண்ணியோட சொல்லவும், “வா டாக்டர்ட்ட போவலாம்”னு சொன்னேன். “நவுறவே முடியல”ன்னு தேம்புனாங்க.

எங்க டாக்டருக்கு போன் அடிச்சா, “வீக்கம்லாம் இல்லீல்ல... இந்த மாத்திரையை வாங்கிக் கொடுங்க. ரெஸ்ட்ல இருக்கச் சொல்லுங்க. கிளினிக் மூடுறப்போ வந்து பார்க்கிறேன்”னாரு.

ஸ்ப்ரேலாம் அடிச்சு கட்டில்ல படுக்க வச்சாச்சு. மாத்திரை வாங்கிட்டு வரேன்னு மகனார் கிளம்பிப் போயிட்டாரு.

கிச்சனுக்குள்ர எட்டிப் பார்த்தேன். சமையல் எதுவுமே நடக்கலன்னு புரிஞ்சுது. அம்மிணிக்கிட்ட வந்தேன். “போன் செஞ்சிரவா. மூணு சாப்பாடு வேணும்”னு.

முகத்தைச் சுளிச்சாங்க. “போனமுறை எவ்ளோ அவதிப்பட்டேன். நினைப்பிருக்கா. காரத்தை அள்ளிப் போட்டுடறாங்க.”

“வேற என்ன செய்ய”ன்னு பரிதாபமாப் பார்த்தேன்.

“நீங்களே சமைச்சிருங்க”ன்னு நிதானமாச் சொன்னாங்க. மகனாரும் வந்துட்டாரு. “சாப்பாட்டுக்கு அப்புறம் போட்டுக்கணுமாம்”னு மாத்திரையைக் கொடுத்தாரு.

“உப்புமா செஞ்சிரவா”ன்னு உற்சாகமாக் கேட்டேன். சிம்பிளா முடிஞ்சிரும். ஒரு வேளைக்குத் தானே. நாளைக்கு அம்மிணி எந்திரிச்சு சமைக்கப் போயிருவாங்கன்னு.

“நான் செஞ்சு போட்டா... உப்புமாவைத் தவிர ஒனக்கு வேறெதுவும் செய்யத் தெரியாதான்னு கேப்பீங்க தானே”ன்னு லா பாயின்டை போட்டாங்க. ஃப்ரிட்ஜ்ல பாருங்க.. என்னென்ன காய் இருக்குன்னு. சாம்பாருக்கு, பொரியலுக்குன்னு எடுத்து வைங்கன்னு ஆர்டர் போட்டாங்க. கால் ரெண்டையும் ஸ்டூல் மேல வச்சுக்கிட்டு சேர்ல சாஞ்சுக்கிட்டு அவங்க சொல்லச் சொல்ல எடுத்தேன்.

“பூசணிக்காயை பொரியல் செஞ்சுட்டு வெண்டைக்காயை சாம்பார்ல போடவா”ன்னு கேட்டதும், தலைல அடிச்சுக்கிட்டாங்க. ரசத்துக்கு முதல்ல புளி கரைச்சு வச்சுக்குங்க. இப்படி நறுக்குங்க. அடுப்புல குக்கரை வைக்கும்போதே சாம்பார் ரசத்துக்கு பருப்பும் வச்சிருங்க. இப்படி வரிசையா கட்டளைகள் போட்டுக்கிட்டே இருந்தாங்க. மகனார் எப்பவோ காணாமப் போயிட்டாரு. ஒதவிக்கு ஆள் இல்லாம நான் ஒருத்தனே அல்லாடுனேன்.

ஒன்றரை மணி நேரம். வேர்த்து விறுவிறுத்துப் போய் சமையலை முடிச்சேன். டவுட் கேட்டா, “சாப்பிடும்போது அவ்ளோ கேலி செய்வீங்க, சமைக்கச் சொன்னா மட்டும் எத்தினி சந்தேகம்”னு நையாண்டி செஞ்சாங்க. ஒருவழியா எல்லாத்தையும் டைனிங் டேபிள்மேல கொண்டுவந்து வச்சு பெருமூச்சு விட்டேன்.

“சாப்பிட வாடா”ன்னு அம்மிணி மகனார்க்கு குரல் கொடுத்ததும், தலைமறைவா இருந்தவன் அடுத்த நிமிசம் வந்துட்டான். அப்போதான் அது நடந்துச்சு.

அம்மிணி எழுந்து ஸ்டைலா நடந்தாங்க. “உன் காலு... சுளுக்கு...”ன்னு நான் தடுமாறுனப்போ, அசால்ட்டா சொன்னாங்க.

“வீட்டுலயும் எப்பவாச்சும் தீப்பிடிக்கும். பிரச்சினை வரும். அப்போ நீங்க என்ன செய்வீங்கன்னு எங்களுக்கும் தெரியணும்ல!”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in