செய்யுறத சிறப்பா செஞ்சிருவோம்..!
ஓவியம்: முத்து

செய்யுறத சிறப்பா செஞ்சிருவோம்..!

புது மனை புகுவிழான்னு வாசல் போஸ்ட் பாக்ஸ்ல ஒரு கவர் கிடந்துச்சு. வழக்கமா தபால் பெட்டியை ஒரு நோட்டம் விடாம போகமாட்டேன். “என்னவோ அமெரிக்காவுக்குத் தூதரா ஒங்கப்பாவை நியமிக்கிற ஆர்டர் வராப்லல்ல போஸ்ட் பாக்சை ஆர்வமாப் பார்க்குறாரு”ன்னு அம்மிணியே கேலி செய்வாங்க.

பொட்டி கொஞ்சம் பெருசா வச்சதுல ஏதாச்சும் ஒரு லெட்டர் ஒளிஞ்சு கிடக்கும். எங்க செக்யூரிட்டி கண்ணுல அது தென்படாது. கரெக்டா எனக்கு மட்டும் காட்சி தரும். அதுவும் எனக்கு வந்த லெட்டராத்தான் பெரும்பாலும் இருக்கும். வேணும்னே விட்டு வைக்கிறாரோன்னு சந்தேகம் தான். அதை எடுத்துக்கிட்டு நான் நவுரும்போது, “மாட்டி விட்டுருச்சா சனியன்”னு முதுக்குக்குப் பின்னால முனகுவாரு. லெட்டரைச் சொல்றாரா என்னைச் சொல்றாரான்னு டவுட்டே வந்ததுல்ல!

அனுப்பின ஒறவுக்காரர் கொஞ்சம் குசும்பு புடிச்ச ஆளு. அவருக்கு எம்பேர் மட்டும் அடிக்கடி மறந்துரும். நேர்ல பேசும்போது கூட அம்மிணியோட புருசன்னு தான் சொல்வாரு. “அதென்னவோ மாப்ள... இவ்ளோ சொந்தத்துல ஒங்க பேரு மட்டும் நினப்புல நிக்கல. என் வூட்டுக்காரி கூட சொல்லிட்டா. ஒரு நோட்டு வாங்கி 100 தடவை எழுதிப் பாருங்கன்னு” சிரிச்சுக்கிட்டே சொன்னாரு.

“அட அண்ணன் புது வீடு போவுதா”ன்னு அம்மிணி ரொம்ப ஆர்வமா வாங்கிக்கிட்டாங்க. அப்பதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. பழைய தபால் வைக்கிற அட்டைப் பெட்டியை எடுத்துக் கிளறுனேன். ஒன்றரை வருசத்துக்கு முன்னால அவர்ட்டேர்ந்து வந்திருந்த புது மனை புகுவிழா லெட்டரை எடுத்தேன்.

அம்மிணி மூஞ்சிக்கு நேரா நீட்டுனேன். “அதெப்படி வருசா வருசம் ஒங்கண்ணன் புது வீடு குடி போறாரு. எல்லோரும் நோட்டு அடிச்சா இவர் செங்கல்லும் சேர்த்து அடிக்கிறாரா”. வாய்ப்பூட்டை ஒடைச்சுக்கிட்டு வார்த்தை வந்துருச்சு.

அம்மிணிக்கு சுர்ருன்னு ஏறுச்சு. “எல்லாருமே ஒங்கள மாதிரி இருக்கணுமா. அண்ணனுக்கு மூணும் பொண்ணு. சின்ன வயசுலேயே சொல்லிக்கிட்டு இருப்பாரு. நாதான் வசதிக் குறைவா இருந்துட்டேன். எனக்குக் கல்யாணம் ஆகி புள்ளைங்க பொறந்துச்சின்னா நானே வீடு கட்டிக் கொடுத்துருவேன்னு”.

“அப்ப இன்னொரு புது மனை புகுவிழா இருக்குன்னு சொல்லு”ன்னு மறுபடி வாயை விட்டேன். அம்மிணி நொடிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. இனி அவங்க கவலை எண்ணம் எல்லாம் என்ன சிறப்பு செய்யணும் எப்ப விழாவுக்குப் போவணும்கிறதுல தான்.

எங்க ஆபிஸ் விசேஷம்னா மொத்தமா கலெக்ட் செஞ்சிருவாங்க. மொய்யை எழுதினா போதும். சம்பந்தப்பட்டவங்க கிட்ட விசாரிச்சு வசூலான தொகைக்கு ஏத்தாப்ல பிரியப்பட்ட பொருளை வாங்கிக் கொடுத்துருவாங்க. கொஞ்சம் குறைச்சலா இருந்தா விழா வச்ச நண்பரே கொடுப்பாரு.

இப்படித்தான் ஒரு தடவை ஃப்ரிட்ஜ் வேணும்னு பத்திரிகை வச்ச நட்பு சொல்லுச்சுன்னு பேசுனாங்க. அப்பாவித்தனமா நான் கேட்டேன். “எவ்ளோ வசூலாச்சு. கொஞ்சம்தான் குறையுதுன்னா நாமளே போட்டுரலாம்னு” ப சீ அண்ணாச்சி சிரிச்சாரு. “இருபதாயிரம் தான் குறையுது”ன்னு. அழைப்பு வச்ச நட்பு வெளி டிபார்ட்மென்ட். எங்க பகுதில நாலஞ்சு பேர் தான் அவருக்குப் பழக்கமாம். அந்த ரகசியத்தை அப்புறம் போட்டு ஒடைக்கிறாங்க.

அம்மிணிட்ட கேட்டேன். “ஒங்க ஃபேமிலில எல்லாரும் சேர்ந்து ஒரே சிறப்பா செஞ்சிரலாமே. நம்ம பங்கும் கணிசமா இருக்கும். செய்யிற சிறப்பும் நல்லா இருக்குமே”ன்னு. ஆபிஸ் ஐடியாவை வீட்டுல அமல்படுத்தலாம்னு கேட்டா அம்மிணி லுக் விட்டாங்க.

“ஒங்க ஆபிஸ் குணத்தை வீட்டு வாசல்லயே விட்டுட்டு வாங்க. சொந்த பந்தம் வேணும்னு நினைக்கிறவங்க இப்படி எல்லாம் குதர்க்கமா யோசிக்க மாட்டாங்க.”

இந்த யோசனைக்கே இப்படின்னா எங்க ஆபீஸ்ல ஒருத்தரு அவரு வீட்டு விசேஷத்துக்கு மொய் வச்ச லிஸ்ட்லாம் பக்காவா ஃபைல் வச்சிருக்காரு. யாரு அவருக்கு பத்திரிகை வச்சாலும் லிஸ்ட்ல போய் பார்ப்பாரு. எந்த வருசம் என்ன அமௌன்ட்னு பார்த்துட்டு பேங்க் வட்டி போட்டு தோராயமா ஒரு தொகையை இப்போ மொய் வைப்பாரு.

அம்மிணிட்ட இதைச் சொன்னா பூகம்பமே வெடிச்சுரும். ஆனா, எனக்கு என் தலையே வெடிச்சுரும் போல இருந்துச்சு. நாம் என்ன வேணா சிறப்பு செஞ்சுட்டு போவோம். இந்த ஒறவுக்காரர் எனக்கு என்ன செஞ்சார்னு கண்டு பிடிச்சே ஆகணும்னு ஒரு படபடப்பு.

ரெண்டு நாளாத் தேடியும் எதுவும் கிடைக்கல. என் கல்யாணத்தப்போ செஞ்சது கிடைக்காதுன்னு முடிவு பண்ணிட்டேன். மகனார் காது குத்துக்கு, வீட்டு கிரகப்பிரவேசத்துக்குன்னு ரெண்டு தான் நடந்துச்சு. காது குத்து குலதெய்வம் கோயில்ல நடந்துச்சு. அப்பவும் நோட்டுப் போட்டு எழுதுறாப்புல பெரிய வசூல் வேட்டை நடக்கல. சிம்பிளா முடிச்சுக்குவோம்னு விட்டாச்சு. வந்ததே நாலஞ்சு குடும்பம்தான்.

புது வீட்டுக்கு வசூல் வந்துச்சான்னு பொறுமையாத் தேடுனேன். பரண்லேர்ந்து பொட்டியை இறக்கத் திண்டாடுனதைப் பார்த்து மகனார் ஒதவுனார். முக்கியமான ஆபிஸ் பேப்பர், சர்வீஸ்ல சேர்ந்தப்போ கொடுத்ததுன்னு பீலா விட்டதுல அம்மிணி ஆஃப் ஆயிட்டாங்க. “பொறுப்பா வச்சுக்க வேண்டாமா”ன்னு லைட்டா குட்டு வச்சாங்க.

மூணு அட்டை டப்பா இருந்துச்சு. மகனார் எறக்கி வச்சுட்டு இடத்தை விட்டு ஓடிட்டாரு. ஒரு பொட்டியைக் கிளறி மூடுனதுல டஸ்ட் அலர்ஜிதான் வந்துச்சு. என்னோட சின்ன வயசு போட்டோ அதுல கிடைக்கவும் அதையே ஈன்னு பார்த்தேன். அம்மிணிட்ட காட்டுனேன். “மகனார் என் ஜாடை”னு சொன்னதும், “பையன் அம்மா ஜாடைல இருந்தாத்தான் அதிர்ஷ்டம்னு சொல்வாங்க”ன்னு குண்டைப் போட்டாங்க. எதுக்கு வம்புன்னு அம்மிணி ஜாடைதான்னு ஒப்புக்கிட்டேன்.

ரெண்டாவது பொட்டிலயும் கிடைக்கல. “மணி ஒன்பது ஆவுது. எப்போ சாப்பிட வருவீங்க...”ன்னு இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க.

அம்மிணி வீட்டுல ஒவ்வொருத்தரும் தனித்தனியா சிறப்பு செஞ்சாங்க. அழைப்பு வச்ச ஒறவு கண் கலங்கிட்டாரு. “நாங்க கூட தனித் தனியா செஞ்சதே இல்லை. அப்பாரு தானே வீட்டுக்குப் பெரியவரு. அவரு செய்யும்போது நாம செய்யக்கூடாதுன்னு இருப்போம்”னு ரகசியத்தை போட்டு ஒடைச்சாரு அப்பதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in