நடுவுல நிக்கிறது நம்ம குணாடி..!

நடுவுல நிக்கிறது நம்ம குணாடி..!
ஓவியம்: முத்து

ரெண்டு நாள் தொடர்ச்சியா லீவு, நல்லாத் தூங்கணும்னு மனசுக்குள்ர சொல்லிக்கிட்டது அம்மிணிக்கு கேட்டுருச்சு. “மணி எட்டாச்சு. இன்னும் என்ன தூக்கம்”னு அதட்டுனாங்க. “அலுப்பா இருக்குப்பா”ன்னதும், “எங்களுக்கு எல்லாம் லீவா தரீங்க. சுனாமியே வந்தாலும் வகை வகையா சோறு பொங்கறோம்ல”னு பொங்கினாங்க.

எந்திரிச்சு வந்துட்டேன். “என்ன செய்யணும் சொல்லு”னு கேக்கும்போதே சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு தூக்கத்தை கண்டினியூ செய்யலாம்னு திட்டம் போட்டேன்.

“ஸ்டூலை எடுத்துட்டு வாங்க”ன்னு சொல்லிட்டு பெட் ரூமுக்குள்ர நுழைஞ்சாங்க. குட்டி ஸ்டூலை எடுத்துக்கிட்டுப் போனதும் அவ்ளோ எரிச்சல்லயும் மகனார்ட்ட காட்டி சிரிச்சாங்க. “ஒங்கப்பாருக்கு ஸ்டூல்னா இதான்”னு.

“என்ன பர்ப்பஸ்னு சொல்ல மாட்டியா”ன்னு குரலை தெரியாம உசத்திட்டேன். “சொன்னாத்தான் செய்வீங்களா. நீங்க, கிளம்புன்னா எங்கேன்னு கேக்காம கிளம்பியிருக்கேன். அதெல்லாம் ஞாபகம் இருக்கா”ன்னு கல்யாணமான புதுசுல நடந்த ஒரே ஒரு சம்பவத்தைச் சொல்லிக் காட்டுனாங்க.

பெரிய ஸ்டூலோட போனேன். “இங்கே போட்டு ஏறி நில்லுங்க”ன்னு மார்க் செஞ்சு காட்டுனாங்க பி டி மாஸ்டர் மாதிரி. ஏறுனதும், “லாஃப்ட்ல முன்னால ஒரு அட்டைப் பொட்டி இருக்குல்ல. அதைப் பத்திரமா எறக்குங்க”ன்னு சொன்னாங்க. பொட்டியை எடுத்துட்டு வெயிட் தாங்காம டான்ஸ் ஆடுனேன்.

“போட்டுறாதீங்க. இவனைக் கூப்பிடுறேன்”ன்னு மகனாரைக் கூப்பிட்டாங்க. அவரு எறக்கி வச்சுட்டு “எனக்கு ஸூம் மீட்டிங்மா”னு போயிட்டாரு. அதாவது இனிமே கூப்பிடாதேன்னு.

எதைத் தேடுறாங்கன்னு தெரிஞ்சா சுலபமா இருக்குமேன்னு தோணுச்சு. கேட்டா வசவுதான் வரும்னு புரிஞ்சுது. அஞ்சாறு பொட்டிங்களை எறக்கினதும் நாக்கு தள்ளுச்சு.

“மூலையா ஒரு பானை இருக்கும். நம்ம கல்யாணத்துல கொடுத்த முகூர்த்தப் பானை. ஒடைச்சுராதீங்க”ன்னு வார்னிங் கொடுத்தாங்க. லாஃப்ட்ல ஒரு குடித்தனமே வைக்கலாம்கிற அளவுக்கு பெருசா இருந்துச்சு. பில்டர் வீடு வித்தப்போ அதையே பெருமையா சொன்னாரு. “இந்த அளவுக்கு பெருசா எங்கியும் லாஃப்ட் வச்சுருக்க மாட்டாங்க. நம்ம கட்டுமானத்துல மட்டும் ஸ்பெஷல்”னு.

அம்மிணி சொந்தக்காரங்களும் கிரகப்பிரவேசத்துக்கு வந்தப்போ அதையே சொல்லிட்டுப் போனாங்க. அம்மிணி எப்ப அந்த ரூமுக்குப் போனாலும் அண்ணாந்து பெருமையா பார்ப்பாங்க. “ஏங்க, ஒரு படிக்கட்டு வச்சுத் தரச் சொல்லலாமா பில்டர்ட்ட”ன்னு கேட்டப்போ ஆடிப் போயிட்டேன்.

பில்டர் சிரிக்காம சொல்லிட்டாரு. “ரெடிமேட் ஏணியே வந்துருச்சுங்க. மேலே ஏறிப் போகணும்னா பிரிச்சு வைக்கலாம். வேணாம்னா மடிச்சு ஓரமா வச்சிரலாம்”னாரு. “கொலுப்படி மாதிரியா?”னு அம்மிணி புத்திசாலித்தனமா கேட்டதும் “ஆமா”ன்னு வேகமாத் தலையாட்டுனாரு, தப்பிச்சா போதும்னு.

முகூர்த்த பானை எங்கே இருக்குன்னு தெரியல. ஒரு கட்டைப்பை இருந்துச்சு. எடுக்க ஈசியா இருக்கவும் அதை எடுத்து அம்மிணிட்ட நீட்டுனேன். அம்மிணி பைக்குள்ர கையைவிட்டு எதையோ எடுத்து பார்த்துட்டு, “அட இது இங்கே தான் இருக்கா”ன்னு ஆச்சரியமா கூவுனாங்க.

அந்த நாள்ல பயன்படுத்துன சின்ன சைஸ் ஆல்பம். தொட்டா பொடிப் பொடியாயிரும் போல. 36 போட்டோ வைக்கிற மாதிரி. கருப்பு வெள்ளைப் படமா இருந்துச்சு. அஞ்சாறு குட்டீஸ் ஒரு போட்டோல நின்னாங்க. “பாத்தீங்களா. எவ்ளோ அழகா இருக்கேன்னு. எவ்ளோ நீளத்துக்கு தலைமுடி”ன்னு காட்டுனாங்க.

“சரியாத் தெரியல. கீழே எறங்கி வரவா”ன்னதும் உஷாராயிட்டாங்க. “அப்புறம் நல்லாப் பார்த்துக்கலாம். எறங்காதீங்க”ன்னு தடுத்துட்டாங்க. ஆல்பத்தை ஒசத்திக் காட்டுன போட்டோல எல்லா மூஞ்சியும் ஒரே மாதிரிதான் தெரிஞ்சுது. இருக்கிறதுலேயே நீளமா தலைமுடி வச்சிருந்த புள்ளை அம்மிணிதான்னு அடிச்சு சொல்லவும் எதுக்கு வம்புன்னு தலையாட்டிட்டேன்.

ரொம்ப நேரமா நின்னதுல வெர்ட்டிகோ பிரச்சினை வந்தாப்ல தலை சுத்துச்சு. அம்மிணி போனை எடுத்து “நம்ம சின்ன வயசு போட்டோ கிடைச்சிருச்சுடி. என்கிட்டே இருக்கும். தேடிப் பார்க்கணும்னு அடிக்கடி சொல்வேன்ல. இன்னிக்கு எதையோ தேடும்போது இது மாட்டுச்சு”ன்னு உற்சாகமாச் சொன்னாங்க.

எதிர் முனைல என்ன சொன்னாங்களோ. அம்மிணி இன்னும் குஷியாகி, “இதோ இப்பவே அனுப்பறேன் வாட்ஸ் அப்ல”ன்னு என்னைப் பார்த்தாங்க. “சரி, கீழே எறங்கி வாங்க. நல்லா பளிச்சுன்னு இந்த போட்டோஸ் எல்லாத்தியும் என் போன்ல எடுங்க. சுந்தரிக்கு அனுப்பணும்”னு ஆர்டர் போட்டாங்க.

ஹப்பாடான்னு எறங்கினேன். “இப்படி இல்லை. இன்னும் ப்ரைட்டா”ன்னு விரட்டி வேலை வாங்கினாங்க. “இந்த நம்பருக்கு அனுப்புங்க”ன்னு அவங்க சொன்ன நம்பருக்கு அனுப்பினேன். அம்மிணி போன் அடிச்சா சுந்தரி “இன்னும் வரலியே”ன்னு சொன்னாங்க.

“யாருக்கு அனுப்புனீங்க”ன்னு என்னை அதட்டி வாட்ஸ் அப்பை பார்த்தாங்க. “அய்ய... இது நம்ம வீட்டுல வேலை செய்யற சுந்தரி. சுந்தரி மெய்ட்னு போட்டுருக்கேனே. படிக்க மாட்டீங்களா”ன்னு டோஸ் விட்டாங்க. சரியான சுந்தரிக்கு மறுபடி அனுப்பினேன்.

வேலை செய்யற சுந்தரி போன் அடிச்சுட்டாங்க. “ஒங்க போட்டோவுங்களாம்மா. சூப்பரா இருக்கீங்க”ன்னு பாராட்டவும் அம்மிணிக்கு சந்தோஷம். “சின்ன வயசுல ஏதோ அழகா இருந்தேன்”னு சொன்னாங்க. “ஒங்களுக்கு என்னம்மா இப்பவும் லெட்சணமாத்தான் இருக்கீங்க. அட்வான்சா அய்யாயிரம் கேட்டுருந்தேனே. அய்யாட்ட சொல்லி வாங்கித் தரேன்னு சொன்னீங்களே. இன்னிக்கு வரப்போ வாங்கிக்கறேன்மா”ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.

“நான் தூங்கப் போகவா”ன்னு கேட்டதும் முறைச்சாங்க. “நாள் முழுக்க தூங்கத்தான் போறீங்க. ஒரே ஒரு நாள் ஒரு ஒதவி கேட்டா சலிச்சுக்கிறீங்க”ன்னு சொன்னதும் டபக்குன்னு ஸ்டூல்ல ஏறிட்டேன்.

லாஃப்ட்க்கு படிக்கட்டே வச்சிருந்துருக்கலாம்னு அப்ப தோணுச்சு. நிம்மதியா ஏறிப் படுத்துருக்கலாம்! அடுத்து என்ன கட்டளை வரும்னு அம்மிணியைப் பார்த்தப்போ போன் அடிச்சுது. சுந்தரிதான்.

“நடுவுல நிக்கிறது நம்ம குணாடி. பக்கத்து வீட்டுப் பையன். அவனுக்கு பொண்ணு வேஷம் போட்டுருந்தாங்க. இப்ப எங்கே இருக்கானோ. இதைக் காட்டி கலாட்டா செய்யலாம்”னு சொல்லும்போதே அம்மிணி நவுந்து ஹாலுக்குப் போயிட்டாங்க!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in