ஐடியா அண்ணாச்சி!

ஐடியா அண்ணாச்சி!
ஓவியம்: முத்து

“வாழ்த்துகள் சார்”னு அடுத்த சீட்டு அம்மிணி சிரிச்சப்போ ஒண்ணும் புரியல. “உங்க மெயிலைப் பாருங்க. புரியும். நோட்டிஸ் போர்டுலயே போட்டாச்சு”ன்னு மறுபடியும் சொன்னாங்க.

எங்க ஆபீஸ்ல வருஷா வருஷம் ஆலோசனை வாரம்னு நடத்துவாங்க. கம்பெனி லாபத்தை அதிகரிக்கிற மாதிரி ஏதாச்சும் ஐடியா கொடுத்தா, அதுக்கு பரிசெல்லாம் உண்டு. 5 ஆலோசனை கொடுத்தா பென்சில், 10 கொடுத்தா பேனா, தேர்வாகிற ஆலோசனைக்கு ரொக்கப்பரிசு இப்படி.

இந்த வருஷம் என்னையும் ஒரு கமிட்டி மெம்பரா போட்டுருந்தாங்க. வரும் ஆலோசனைகளைப் பரிசீலிக்கிற கமிட்டி. பாஸுக்கு போன் அடிச்சேன். “என்னை எதுக்கு வம்புல மாட்டி விட்டீங்க”ன்னு. “ஒங்க திறமை வெளிச்சத்துக்கு வரணும். ஜமாய்ங்க”னு கட் பண்ணிட்டார். அவர் ஒரு முடிவு எடுத்துட்டா, அப்புறம் யார் பேச்சையும் கேட்க மாட்டார்.

ஈவ்னிங் ஆபிஸ் முடியற டைம்ல பாஸ் போன். “கிளம்பிராதீங்க. 40 ஆலோசனை வந்துருக்கு. பொட்டியைப் பாருங்க. அப்பப்ப முடிவு எடுத்துட்டா ஒங்களுக்கு ஈசியா இருக்கும்”னு சிரிச்சாரு. வேற வழி. ஒவ்வொரு ஆலோசனையாப் படிச்சேன். ரெண்டு பேர் மட்டுமே 30 ஆலோசனை கொடுத்திருந்தாங்க. மீதி 10-ம் பத்து பேர்கிட்டேர்ந்து.

என் பக்கத்து சீட்டு அண்ணாச்சியோட வீடு ஆபிஸ்லேர்ந்து பக்கத்துலதான். எல்லாரும் போனாலும் அவர் மட்டும் அரை மணி எக்ஸ்ட்ராவா இருப்பாரு. எங்க பாஸ் கண்ணுல படற மாதிரி குறுக்கே நெடுக்கே போவார். “இதெல்லாம் ப்ரோமோஷனுக்கு ஒதவும்”னு டயலாக் அடிப்பாரு.

“என்ன... லேட் ஆகுமா. நான் வேணா ஒதவிக்கு இருக்கட்டுமா... அட்டெண்டர்ட்ட லெமன் டீ கொண்டு வரச் சொல்லவா”ன்னு அக்கறையா கேட்டாரு. ஆபீஸ்ல எந்தச் சலுகை எப்படி அனுபவிக்கலாம்கிறதுல அவரு கில்லாடி.

“ஒரே ஆள் 20 ஆலோசனை போட்டுருக்காரு. கிரேட்”னு சொன்னேன். நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ளேயே, “அவர் பேர் சண்முகமா”ன்னு கேட்டார் அடுத்த சீட் அண்ணாச்சி. ஆச்சரியமா அவரைப் பார்த்தேன். “எப்படித் தெரியும். ஒங்ககிட்ட சொன்னாரா?”

“அவனுக்கு இதே பொழைப்பு. வருசாவருசம் இதே 20-ஐ அள்ளி விடுவான். இந்த வருசம் அவனுக்கு பென்சில், பேனா எதுவும் தரக்கூடாதுன்னு பாஸ் சொல்லிட்டு இருந்தாரு”ன்னு குமுறினாரு லெமன் டீயைக் குடிச்சுக்கிட்டே.

எனக்கு சங்கடமா இருந்துச்சு. “ஆலோசனை சொல்லுன்னு சர்குலர் போட்டுட்டு, இப்போ கிண்டல் அடிக்கிறது நியாயமா”ன்னு கேட்டேன். “நீயே படிச்சுப் பாரு”ன்னு அமைதியா சொன்னாரு அண்ணாச்சி.

‘கேண்டினில் போடும் வடையில் ஓட்டை பெரிதாக வைத்தால் அதிக எண்ணிக்கையில் வடை சுடலாம்.’ ‘காபி டீக்கு வாங்கும் பால் மீதம் இருந்தால் உறை ஊற்றி வைத்து அதில் வெண்ணெய் எடுக்கலாம்.’

இதே மாதிரியேதான் அந்த 20-ம் இருந்துச்சு. “அந்த ஆளு கேண்டின்லயே குடி இருப்பான். ஆபிஸ் வேன்ல வெளி ஆளுங்கள டிக்கெட் போட்டு ஏத்திக்கிட்டு வந்தா லாபம்னு கூட ஒண்ணு கொடுத்திருப்பானே”ன்னு அண்ணாச்சி கேலியா சிரிச்சாரு.

பாஸுக்கு போன் அடிச்சேன். “என்ன ஆலோசனைல்லாம் சூப்பரா வந்திருக்கா”ன்னு நக்கலா சிரிச்சாரு. “சார்... தலை வலிக்குது. ஒண்ணு கூடத் தேறல”ன்னு சொன்னதும், “பொறுமையா இரு... 10 நாள் டைம் கொடுத்திருக்கோம்ல. ஏதாச்சும் உருப்படியா வரும்”னு கட் பண்ணிட்டாரு.

வீட்டுக்கு வந்து அம்மிணிட்ட புலம்புனேன். “பத்து நாள் லேட்டாத்தான் வருவேன். புதுசா ஒரு பொறுப்பு வந்துருக்கு”ன்னு. “என்ன மேட்டர்?”னு அக்கறையா விசாரிச்சாங்க. விவரம் சொன்னதும், “நீங்களும் ஆலோசனை சொல்லி அவார்ட் வாங்கலாம்ல”ன்னு தூண்டி விட்டாங்க.

மனசுக்குள்ர நொந்துக்கிட்டுச் சொன்னேன். “நான் போய் எங்க பாஸ்கிட்ட கம்பெனிக்கு லாபம் வர மாதிரி ஒரு ஐடியா சொல்லவான்னு கேட்டா, ‘கையக் குடுங்க, வேலையை விட்டு போகப் போறீங்களா’ன்னு கேப்பாரு. அவ்ளோ குசும்பு புடிச்ச ஆளு”னு.

மகனார் சிரிச்சாரு. அம்மிணி நொடிச்சுக்கிட்டு அந்தப் பக்கம் போயிட்டாங்க. மறுநாள் ஆபீஸ் போகும்போதே பக் பக்னு இருந்துச்சு. இன்னிக்கு என்ன வந்து தொலைச்சிருக்கோன்னு. மதியம் வரை எதுவும் இல்லை. ஹப்பா இன்னிக்கு தப்பிச்சுரலாம், நேரத்துக்கு வீட்டுக்குப் போயிரலாம்னு கேண்டினுக்கு சாப்பிடப் போனேன்.

எனக்குப் பக்கத்துல ஒருத்தர் வந்து உக்காந்தாரு. வணக்கம் போட்டாரு. சோத்தைக் குழைச்சுக்கிட்டு இருந்ததுல அவர் முகத்தைப் பார்க்காம வணக்கம் சொன்னேன். “நீங்கதான் இந்த தடவை கமிட்டில இருக்கீங்கன்னு பார்த்தேன். ரொம்ப மகிழ்ச்சி. நேர்மையான ஒருத்தர். வாழ்த்துகள்”னு சொன்னதும், வாயில சோத்தை வச்சுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்.

சண்முகம்! மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாமன்னு இதுவரை சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ நிஜ அவஸ்தைல இருந்தேன். “சூப்பர் ஐடியாஸ் எழுதிப் போட்டுருக்கேன். உங்க நியாயத் தராசு சரியான தீர்ப்பைச் சொல்லும்னு நம்பறேன்”ன்னு வீராவேசமா பேசிக்கிட்டே போனார். நடுநடுவுல சாப்பிடறதுலயும் குறை வைக்கல. தட்டு எனக்கு முன்னாடியே காலி ஆயிருச்சு.

“யூனியன்ல கூட சொன்னாங்க. ‘எதுனாச்சும் பிரச்சினைன்னா சொல்லுங்க தலைவா’ன்னு. அவங்களை அடக்கி வச்சுட்டேன். என்னிக்கும் நியாயம் வெல்லும்”னு சாப்பிட்ட தட்டை எடுத்துக்கிட்டுப் போயிட்டாரு. சீட்டுக்கு வந்து அண்ணாச்சிட்ட புலம்புனேன்.

பஹ பஹன்னு செந்தமிழன் கணக்கா சிரிச்சுட்டு “ஒண்ணும் கவலைப்படாதீங்க. அவன் வருசா வருசம் இதேபோல யார் கமிட்டி மெம்பரா இருக்காங்களோ அவங்களை மிரட்டுவான். ஆனா இதுவரை ஒரு கிள்ளு கூட கிள்ளினதில்லே”ன்னு கொஞ்சம் வருத்தமா சொன்னாரு. பாஸ்ட்ட மிரட்டலைப் பத்தி சொல்லி வைக்கலாமான்னா... என்னைப் பார்த்துத்தான் சிரிப்பாரு. அம்மிணிட்ட சொல்லலாம்னா அதுக்கு அடியே வாங்கிரலாம்னு மனசுல பட்டுச்சு.

பத்து நாளும் ஓடிருச்சு. 417 ஆலோசனைகள் வந்திருந்துச்சு. உருப்படியா தேறுன 30-ஐ லிஸ்ட் போட்டு பாஸ்ட்ட கொடுத்தேன். அதுலேர்ந்து அவர் ஃபில்டர் செஞ்சுக்குவாரு.

சண்முகம் எதிர்ல வந்தாரு. கப்புனு கையைப் பிடிச்சு குலுக்கினேன். “வாழ்த்துகள்”னு. அவரே எதிர்பார்க்கல. “ஒங்க பேரும் இருக்கு”ன்னு சொல்லிட்டு வேகமா நடந்தப்போ, அம்மிணி நினைக்கிற அளவுக்கு நான் லூசு இல்லேன்னு ஒரு ஹேப்பி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in