அவரும் எங்க மாமனாருக்கு சொந்தம்தான்...!

அவரும் எங்க மாமனாருக்கு சொந்தம்தான்...!
ஓவியம்: முத்து

எதிர் வீட்டு அண்ணாச்சி எங்க வீட்டுக் கதவைத் திறக்க வந்த அதே நேரம் நானும் கதவைத் திறந்தேன். ரெண்டு பேர் மூஞ்சியும் க்ளோஸ் அப்ல!

“என்ன...”ன்னு ஒளறுனேன். அவ்ளோ கிட்டக்க அவரு மூஞ்சியைப் பார்த்த அதிர்ச்சில ஒடம்பு நடுங்குச்சு.

“என் மச்சானுக்கு இங்கே மாற்றல் ஆயிருச்சாம். ஒரு வீடு வாடகைக்குப் பாருங்கன்னு போன் செஞ்சான்”னாரு. “இப்போதைக்கு நான் வீடு காலி பண்றதாயில்லையே”ன்னு நக்கலா சிரிச்சேன்.

“எப்பவும் குறும்பு தான். ஒங்க ஃப்ரெண்ட்ஸ்ங்க ரெண்டு மூணு வச்சிருப்பாங்களே. ஏதாச்சும் காலியா இருந்தா விசாரிச்சு சொல்லுங்க”ன்னாரு.

சரின்னு தலையாட்டுனதும், “நம்ம தெருவுலேயே இருந்தா பெட்டர். அதுவும் முதல் மாடின்னா ஓகே. வாடகை எட்டு பத்துக்குள்ர இருக்கணும். லிஃப்ட் இருந்தா டபுள் ஓகே”ன்னு கண்டிஷன்கள அடுக்கிட்டே போனாரு.

வெளியே கிளம்புற மூடே போயிருச்சு. கதவை மூடிட்டு உள்ளார வந்துட்டேன். எ வீ அண்ணாச்சி போன் அடிச்சாரு. “இன்னிக்கே தெரிஞ்சா நல்லது”ன்னு.

ஏழரைல மாட்டிக்கிட்டேன்னு நொந்து ஒரு நண்பருக்கு போன் அடிச்சேன். அவருக்கு ரெண்டு வீடு இருக்கிறது ஞாபகம் வந்துச்சு.

“நூறு ஆயுசு”ன்னாரு முதல் வார்த்தையா. “நானே உனக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன். நீயே பண்ணிட்டே.”

“எனக்கு அர்ஜென்ட்டா ஒரு வீடு வாடகைக்கு வேணும். உன் வீடு காலியா இருக்கா”ன்னு என் கேள்வியை போட்டதும் நண்பர் இன்னும் குஷியா கத்துனாரு. “எப்படிரா... வீடு மேட்டராத்தான் நானும் பேச நினைச்சேன்.”

இவரு குடி வச்ச ஆளு காலி பண்ணவும் மாட்டேங்கிறாராம். வாடகையும் ஆறு மாசமா தரலியாம். “எப்பக் கேட்டாலும் பண முடைங்கிறாரு. நேரா போய் அதட்டலாம்னு பார்க்கிறேன். நீயும் கூட வந்தா எனக்குத் தைரியமா இருக்கும்”னாரு.

“நானா...”ன்னு சந்தேகமா இழுத்தேன். யாராச்சும் குரலை கொஞ்சம் ஒசத்தினாலே நடுங்கிருவேன்.

“நீயே தான். உனக்கு ஞாபகம் இருக்கா. ஒரு தடவை டெல்லில ஆட்டோக்காரர் எக்ஸ்ட்ராவா கேட்டப்போ நை நைன்னு அதட்டுனியே. தும் ஜாவ்னு சொன்னப்போ அவரு வம்பு வளர்க்காம போயிட்டாரே. வடக்கே உன் வீரத்தைக் காட்டுனப்போ சிலிர்த்துப் போச்சு”ன்னு வெவரம் தெரியாமப் பேசிக்கிட்டே போனாரு.

அந்த ஆட்டோக்காரருக்கு அடுத்த சவாரி பெருசா ஒண்ணு வந்துச்சு. எங்ககிட்ட பேசி எனர்ஜி வேஸ்ட் பண்ண வேணாம்னு போயிட்டாரு. “ஒன்னோட குடித்தனக்காரர்ட்ட நான் வந்து பேசறதுல்லாம் சரியா வராது”ன்னு தப்பிக்கப் பார்த்தேன்.

“எதுவும் பேசாதே. பத்து மணிக்கு அந்த அபார்ட்மென்ட்டுக்கு வந்துரு. நானும் வரேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துருவோம்”னுட்டு போனை வச்சுட்டாரு.

பத்தரைக்குத்தான் வந்தாரு. காக்க வச்ச ஃபீலிங்லாம் அவர்ட்ட இல்லை. “லேட் ஆயிருச்சா. கிளம்பறப்பதான் ஆயிரம் அக்கப்போர் வீட்டுல”ன்னு பொதுவா ஒரு சத்தம் போட்டாரு. படியேறி அவர் வீட்டு வாசல்ல காலிங் பெல் அடிச்சோம். வீட்டம்மிணி கதவைத் தொறந்தாங்க.

“என்னாங்க... ஒங்களப் பார்க்க யாரோ ரெண்டு பேர் வந்துருக்காங்க”னு சவுண்ட் கொடுத்துட்டு போயிட்டாங்க. குடி இருந்த அண்ணாச்சி எட்டிப் பார்த்தாரு. “நீங்களா... அடுத்த வாரம் வாடகை தர முடியுமான்னு பார்க்கிறேன்”னாரு.

“எனக்கே வீடு வேண்டியிருக்கு. இதோ இவரு குடி வரணும். காலி பண்ணிக் கொடுத்துடறீங்களா”ன்னு நம்மாளு என்னையக் கோத்துவிட்டாரு. ‘நீயும் சொல்லு’ங்கிற மாதிரி என்னைப் பார்த்தாரு.

“ஆ.., மா. அவசரமா வீடு வேண்டியிருக்கு. அதான்...”னு இழுத்தேன்.

“இப்ப காலி செய்ய முடியாதே. நானும் வீடு பார்க்கணும்ல”னு லாஜிக்கா குடித்தனக்கார அண்ணாச்சி மறுத்தாரு.

“சரி, எப்ப காலி செய்வீங்க. அதையாச்சும் ஒரு டேட் சொல்லுங்க. இவரு அதுவரை டைம் கேட்டுக்குவாரு. என்ன சரிதானே”ன்னு என்னையப் பார்த்தாரு நண்பர்.

“ஆமா ஆமா”ன்னு ஒத்துப் பாடுனேன்.

“இங்க பாருங்க. அதெல்லாம் கரெக்டா சொல்ல முடியாது. இன்னிக்கே அமையலாம். ரெண்டு மாசமும் ஆவலாம். லீவு நாள்ல தான் வீடு தேட முடியும். நான் ஆபிஸ் போக வேணாமா. சொல்லுங்க”ன்னு லா பாயின்ட் விட்டாரு.

“அடுத்த வாரம் வரேன்”னு நண்பர் சொல்லிட்டு கிளம்புனப்போ, குடி அண்ணாச்சி சொன்னாரு. “விக்கிறதா இருந்தா எனக்கே கொடுங்க; நானே வாங்கிக்கறேன்”னு.

வெளியே வந்தப்போ நண்பர் ஆக்ரோஷமா சொன்னாரு. “பார்த்தியா... என்ன தெனாவட்டா பேசறான்னு. நீயாச்சும் நெஞ்சை நிமித்திக்கிட்டு அதட்டி கேப்பன்னு பார்த்தா என்னமோ அவன் வீட்டுல நீ குடி வர மாதிரி கெஞ்சுற. ஆளு விறைப்பா இருக்கியே. குரலை உசத்தி மிரட்டுவேன்னு நம்புனேன்”னாரு.

என்ன சொல்றதுன்னு புரியாம குழம்புனேன். இவரு பிரச்சினையை நைசா என்கிட்ட தள்ளிவிடறாருன்னு புரிஞ்சுது. “வேற யாரையாச்சும் வச்சு மிரட்டிப் பார்க்கலாமா”ன்னு ஐடியா கொடுத்தேன்.

“எப்படியாச்சும் வீடு திரும்பக் கிடைச்சா போதும்”னு வேகமா தலையாட்டுனாரு. ஏரியால இருக்கிற ஒருத்தரைப் பிடிச்சோம். முழுக் கதையும் கேட்டுட்டு “வீடு எங்கேன்னு சொன்னீங்க”ன்னு திரும்பக் கேட்டாரு.

“அட. அங்கே ஒரு வீடு புக் பண்ணலாம்னு போனப்போ ஃபுல் ஆயிருச்சுன்னு சொல்லிட்டாங்க. எங்க அம்மிணி கூட அமைப்பா இருக்கு. நாம கூட ஒண்ணு வாங்கி இருக்கலாம்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க அப்போ”ன்னாரு.

“எப்படியாச்சும் மீட்டுக்குடுங்க. ஒங்களுக்கே வித்துடறேன்”னு நண்பர் கெஞ்சுனாரு. “ஒண்ணும் கவலைப்படாதீங்க. செட்டில் பண்ணிருவோம்”னு தைரியம் கொடுத்தாரு.

அடுத்த மாசமும் போனோம். குடித்தனக்கார அண்ணாச்சி எங்களைப் பார்த்ததுமே வணக்கம் போட்டாரு. “எனக்குக் கொடுத்துருங்கன்னு கேட்டா மழுப்பிட்டீங்க. இப்போ வேற பார்ட்டியை பிடிச்சுட்டீங்க”ன்னாரு.

நண்பர் பம்முனாரு. “நல்ல ஆஃபர் வந்துச்சு...”

“பணம்லாம் வந்துச்சா”ன்னு அண்ணாச்சி கேட்ட தொனில ஒரு நையாண்டி இருந்துச்சு. “பேசி வச்சுருக்கோம்”னு நண்பர் சொன்னதும் குடி அண்ணாச்சி சொன்னாரு.

“எங்களையே இருக்கச் சொல்லிட்டாரு. வாடகை மட்டும் ஏத்திருக்காரு. பழகின எடம்னு ஒத்துக்கிட்டோம். அவரும் எங்க மாமனாருக்கு சொந்தம்தான். அப்புறம்தான் தெரிஞ்சிது”னு கதவை மூடிக்கிட்டாரு.

இப்போ நானும் நண்பரும் ஏரியா பார்ட்டியோட வீட்டுக்கு நடையா நடந்துட்டு இருக்கோம் - பாக்கி பணம் செட்டில்மென்ட்டுக்கு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in