அடடா... மொபைல விட்டுட்டேனே!

அடடா... மொபைல விட்டுட்டேனே!
ஓவியம்: முத்து

எங்கிட்ட ஒரு கெட்ட பழக்கங்க. அது என்னன்னு கேக்கறீங்களா. ரெண்டாவது மாடில என் வீடா. ஆபிஸ் கிளம்பறப்போ அவசரமா கீழே வந்துருவேன். அப்புறம் தான் என் மூளை வேலை செய்யும். அடடா பர்சை எடுக்கலியே. அம்மிணிக்கு போன் போடுவேன். “ப்ளீஸ் மா... பர்சை மறந்துட்டேன். இறங்கி வர வேணாம். அதைக் கீழே தூக்கிப் போட்டா போதும்”. அலுத்துக்கிட்டே மிகச்சரியா என்னைத் தாண்டி மிஸ்ஸாகி விழறாப்ல போடுவாங்க. ஓடிப் போய் அதைப் பொறுக்கிட்டுப் போவேன்.

ஆபிஸ் கிளம்பும்போது அம்மிணி எதிர்லயே வர மாட்டாங்க. அட, சகுனத்துக்கு சொல்லலீங்க. எதையாச்சும் மறந்துருவேன்னு நான்தான் சொல்லி வச்சிருக்கேன். நான் கிளம்பும்போது பேச்சு கொடுக்காதீங்கன்னு. மகனார் எப்பவுமே வர மாட்டாரு.

அம்மிணி தலை குனிஞ்சு தினசரி பேப்பர்ல மூழ்கி இருப்பாங்க. இல்லாட்டி அவங்க கைபேசில பார்த்துக்கிட்டு இருப்பாங்க. அவங்க அப்படி இருக்காங்கன்னு தப்பா நினைச்சிரக் கூடாது. தலைமுடி ஒவ்வொண்ணும் ஒரு ரேடார் கணக்குல வேலை செய்யும் அவங்களுக்கு.

நான் கிளம்பற வரை என் ஆபிஸ் சமாச்சாரங்களை ஒழுங்கா எடுத்துக்கிறேனான்னு நோட்டம் விட்டுட்டு இருப்பாங்க. மகனார் யூஸ் செஞ்சு வயசான கம்ப்யூட்டர எனக்குன்னு கொடுத்துட்டாரு. அப்பப்ப அது ஒழைச்சது போதும்னு படுத்துரும். அம்மிணியே ஒரு தடவை சொல்லிட்டாங்க. “தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்கிக்கலாம்ல”ன்னு.

நான் எப்பவாச்சும்தான் யூஸ் பண்றதால அதுக்கு மனசு வராம சர்வீசுக்கு கூப்பிடுவேன். அவரும் சலிக்காம வருவாரு. மூணு மணி நேரம் அதுகூட போராடுவாரு. அம்மிணிட்ட சொல்லி டீ சப்ளை செஞ்சிருக்கேன். எப்படியோ கம்ப்யூட்டரை வொர்க் பண்ண வச்சிருவாரு. ஒருமுறை எனக்கே பொறுக்காம போயி, “புதுசு வாங்கிரலாமா”ன்னு கேட்டப்போ அவரு, “வேணாங்க... கொஞ்சம் பொறுப்போம்”னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

கிளம்புற நேரம் வரைக்கும் அதுல எதையாச்சும் பார்த்துட்டு ஷட் டவுன் செய்ய மறந்துருவேன். அம்மிணிதான் கேப்பாங்க. “ஒங்களைத் தவிர வேற யாரும் அதுக்கிட்டே போவறதில்ல. நைட் நீங்க வரவரைக்கும் அப்படியே கெடக்கும். வெடிச்சு கிடிச்சு வச்சுதுன்னா எவ அவதிப்படறது”ன்னு சைடுல பீதி கெளப்புவாங்க.

“நீயே ஷட் டவுன் செய்யலாமே”ன்னு சொல்லப் போக, கடுப்பாயிட்டாங்க. “எந்த பட்டனைத் தட்டுனாலும் கம்முனு இருக்கு. தெரியாம மெயின் சுவிட்சை அணைச்சுட்டு நீங்க வந்து கூப்பாடு போட்டிங்க. ஒங்க வம்பே வேணாம். நீங்களே ஒழுங்கா அணைச்சுட்டு போங்க”ன்னு.

கேண்டின்ல தான் டிபன், சாப்பாடு எல்லாம். சில நாள் அம்மிணி குளுந்து இருக்கும்போது “ஒங்களுக்குப் பிடிக்கும்னு செஞ்சேன்”னு எதையாச்சும் செஞ்சு தருவாங்க. அந்த டிபன் பாக்சை சாப்பாட்டு மேஜை மேலயே வச்சுட்டுப் போயிருவேன். ஆபிஸ் போனதும்தான் ஞாபகம் வரும். போன் போட்டு, “சாரிம்மா”ன்னு முதல் தடவை சொன்னப்போ மன்னிச்சு விட்டுட்டாங்க.

நைட் வீட்டுக்கு வந்ததும் அதையே தின்னுங்கன்னு ஒரு தடவை மிரட்டுனப்போ குலை நடுங்கிச்சு. இதுக்கு நடுவுல என் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்காம, “இப்ப என்ன... மறந்துட்டேன். அவ்ளோதானே. அதான் கேண்டின் இருக்குல்ல”ன்னு வார்த்தையை விட்டதும், அப்புறம் அதையே வாடிக்கையா செஞ்சதும், பொது மன்னிப்பு தர மாட்டேன்னு சொல்லி டிபன் கட்டுறதையே நிறுத்திட்டாங்க.

எப்ப பார் நோண்டிக்கிட்டே இருக்கிறதால மொபைல் பேட்டரி டவுன் ஆயிரும். “அதை ஆபிஸ் கிளம்பறவரை சார்ஜில் போட்டு வைக்கலாம்ல”ன்னு அம்மிணியே ஒரு தரம் இனாமா ஆலோசனை சொன்னாங்க. ஆனா பாருங்க, அவங்க சொல்லி எதைக் கேட்டுருக்கேன். 5% சார்ஜ்ல அதை எடுத்துக்கிட்டுப் போகும்போது தான் பாஸ் போன் பண்ணுவாரு. அவரு அங்கே பல்லைக் கடிக்கிற சத்தம் இங்கே வரைக்கும் கேட்கும்.

எங்க ஆபிஸ்ல ஐடி கார்ட் ரொம்ப முக்கியம். என்னதான் தெரிஞ்ச செக்யூரிட்டின்னாலும் மாசத்துல நாலு தடவை, “மறந்துருச்சு”ன்னு சொன்னா விறைச்சுக்குவாரு. செக்யூரிட்டி மாறிக்கிட்டே இருக்கிறதால, புது ஆளு வந்தா யாரோ அன்னியன் ஆபீசுக்குள்ர வராப்ல லுக் வுடுவாரு. சிபாரிசு புடிச்சு சாட்சிக் கையெழுத்துப் போட்டு உள்ளே போவணும். அதனால காலைல கிளம்புறப்பவே கழுத்துல தாலி மாதிரி தொங்க விட்டுக்கிட்டுத்தான் கிளம்புவேன். யூனிஃபார்ம் ஐடி கார்டோட கிளம்புறப்பவே, என்னவோ எல்லைக் காவலுக்கு என்னை அனுப்பற மாதிரி அம்மிணியும் மகனாரும் வந்தே மாதரம் சொல்லி அனுப்புவாங்க ஆரம்பத்துல.

அதையும் கெடுத்துக்கிட்டேன் என்னோட வாய்க் கொழுப்புனால. “ஐடி கார்டு எடுக்காம போயிட்டேன். சங்கடம் ஆயிருச்சு”ன்னு முதல் தடவை சொன்னதும் அம்மிணி உச்சு கொட்டுனாங்க. “நான் வேணா ஞாபகப் படுத்தவா”ன்னு. அதுல கெத்தாகி அடிக்கடி மறந்துட்டு ஈவ்னிங் வந்து, “பாரு. இன்னிக்கு ஐடி கார்டு ஞாபகப்படுத்தல”ன்னு சொன்னதும் உஷாராயிட்டாங்க. “இனிமே அது ஒங்க பொறுப்பு”ன்னு பொறுப்புத் துறப்பு செஞ்சிட்டாங்க.

இப்போ ரெண்டாவது பாராக்கு போங்க. நான் ஆபிஸுக்குக் கிளம்பும்போது யாராச்சும் ஏதாச்சும் பேசிட்டா, என்னோட மெண்டல் சிஸ்டம் அவுட் ஆவுற மாதிரி ஒரு ஃபீலிங்கு. பேச்சு கொடுக்காம இருந்தா எல்லாத்தியும் ஒழுங்கா செய்வேன்னு பந்தா காட்டுனேன்.

ஆபிஸ்ல சில அண்ணாச்சிங்க ஃபிலிம் காட்டுனாங்க. அவங்க வீட்டு அம்மிணிதான் எல்லாம் எடுத்துக் கொடுத்து ஆபிசுக்கு அனுப்புறாங்கன்னு. “நமக்கு எவ்ளோ டென்ஷன் இருக்கு. இந்த சின்ன ஒதவியைக்கூட செய்யாட்டி அப்புறம் என்ன பொண்டாட்டி”ன்னு உரிமைக்குக் குரல் கொடுத்தாங்க.

இதோ இன்னிக்கு கிளம்பியாச்சு. ஐடி கார்டு, பர்ஸ் எல்லாம் இருக்கான்னு நாலு தடவை செக் பண்ணிட்டேன். இன்னிலேர்ந்து ஒரு புது ஆளைப் பார்க்கப் போறேன்னு அம்மிணிட்ட மனசுக்குள்ர சவால் விட்டு கீழே இறங்கி... அடடா... மொபைல விட்டுட்டேனே!

“அம்மிணி”ன்னு கத்துனதுல, ஒரே சமயத்துல நாலஞ்சு அம்மிணி எட்டிப் பார்த்தாங்க... இவங்களும். “என் மொபைல்... ஹிஹி”ன்னு சொன்னதும், “கீழ தூக்கிப்போடவா”ன்னு கேட்டாங்க பாருங்க... இனிமே ஜென்மத்துக்கும் மறப்பேனா !

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in