விக்கலு நிக்கலன்னா..!

விக்கலு நிக்கலன்னா..!
ஓவியம்: முத்து

அந்த வினோதமான சவுண்டு எங்கேர்ந்து வருதுன்னு முதல்ல தெரியல. படுத்த பத்தாவது செகண்ட் தூங்கிருவேன்னு எனக்கு ஒரு பெருமை உண்டு. ஆனா, அம்மிணிக்குக் கோவம் வரவழைக்கிறதும் அதான். “ஒருத்தி வீட்டு வேலைல ஒண்டியா போராடிட்டு இருக்காளேன்னு கொஞ்சமாச்சும் புரியுதா”ன்னு புலம்புவாங்க. மகனார் மட்டும் நல்ல பேர் வாங்கிருவாரு. “இந்த டம்ளரை உள்ர வச்சிரவா”ன்னு அவரு கேட்டதும் “நீ போப்பா. நான் பார்த்துக்கிறேன்”னு கொஞ்சுவாங்க.

நடுத் தூக்கத்துல அந்த பக் பக் சத்தம் கேட்டதும் பக்கத்து வீட்டுல வளர்க்கிற புறா எதுனாச்சும் பால்கனி வழியா வீட்டுக்குள்ர வந்துருச்சோன்னு பதறி முழிச்சேன். முழிச்சபிறகுதான் தெரிஞ்சுது. அது பக் பக் இல்ல, விக் விக்னு. தெரு விளக்கு வெளிச்சம் வீட்டுக்குள்ரயும் தெரியும். அந்த வெளிச்சத்துல சேர்ல யாரோ ஒக்காந்து இருக்கிற மாதிரி தெரியவும் செத்துப் போன என் ஆயா தான் வந்துட்டாங்களோன்னு பயந்துட்டேன்.

எழுந்து விளக்கைப் போட்டேன். அட, அம்மிணி! “ஏன்... தூக்கம் வரலியா”ன்னு அசட்டுத்தனமா கேட்டேன். பதில் இல்லை.

“என்னாச்சு”ன்னு கிட்ட போனா விக் விக்னாங்க. “எந்தக் கவலை விக் யாச்சும் இருக்கா... விக் ஒரு மணி விக் நேரமா விக்”னு விக்கவும் சமாளிக்கப் பார்த்தேன்.

“காரமா எதையாச்சும் முழுங்கி இருப்ப. தண்ணி குடி சரியாயிரும்”னு சொன்னதும் “அரைக் குடம் தண்ணி விக் குடிச்சாச்சு”ன்னு பதில் வந்துச்சு. “சர்க்கரை போட்டுக்கிட்டியா”ன்னு கேட்டா காலி டப்பாவைக் காட்டுனாங்க. அதுக்கும் விக் விக் பிஜியெம் ம்யூசிக்.

“இப்ப எந்த ஆஸ்பத்திரிக்கு போவுறது”ன்னு யோசிச்சப்ப மகனாரும் வந்துட்டாரு.

“24 ஹவர் உண்டே”ன்னு அவர் சொன்னதும் அம்மிணி ஏதோ ஜாடை காட்டுனாங்க. அவங்க காட்டுன சைகை புரியாம முழிச்சதும் பேனா பேப்பரை எடுத்து, “நம்ம டாக்டருக்கு போன் போடுங்க”ன்னு எழுதினாங்க.

“இப்பவா. க்ளினிக் மூடிட்டு படுக்கப் போயிருப்பாரே”ன்னு சொன்னா ‘எமர்ஜென்சி’ன்னு எழுதினாங்க. “ஓ... அவருதான் எமர்ஜென்சின்னா எப்ப வேணா போன் பண்ணுங்கன்னு சொல்லியிருக்காரா”ன்னு நான் கேட்டதும், ”ஹப்பா இப்பவாச்சும் புரிஞ்சிதேன்”னு தலையை ஆட்டுனாங்க.

முதல் ரிங் முழுசா போச்சு. “எடுக்கல”ன்னு அம்மிணிகிட்ட சொல்லவும் மகனார், “மறுபடி அடிங்க”ன்னு அவர் பங்குக்கு மிரட்டுனாரு.

அம்மிணி மகனாரை விக்கிக்கிட்டே பெருமையா பார்த்தாங்க. அடுத்த அழைப்புல உடனே எடுத்துட்டாரு.

அம்மிணி என்கிட்டேர்ந்து போனைப் பிடுங்கி “டாக்டர்... விக் விக் விக்கிகிட்டே இருக்கு”ன்னு சொன்னாங்க. அவரும் தம் பங்குக்கு, ‘தண்ணி, சர்க்கரை’ல்லாம் சொன்னாரு. “ஜெலுசில் ரெண்டு ஸ்பூன் ஊத்திக்க”ன்னு சொல்லவும் “அதையும் செஞ்சாச்சு”ன்னு விக்கினாங்க.

“காலை வரைக்கும் விக்க முடியுமா... அதாவது மேனேஜ் செய்ய முடியுமா”ன்னு கேட்டுட்டாரு போல. அம்மிணி போனை என் கையில கொடுத்துட்டாங்க.

“டாக்டர் ரொம்ப திணற்ராங்க”ன்னு படபடப்பா சொன்னேன். “நர்ஸ் ஒருத்தரை அனுப்பறேன் ஊசி போடுவாங்க”ன்னு வச்சுட்டாரு.

முக்கா மணி ஓடுச்சு. நர்ஸ் வந்து ஊசி போட்டு நைட் தொல்லை பண்ணதுக்காக ரெட்டிப்பு சார்ஜ் வாங்கிட்டு போனாங்க.

ஆர்வமா அம்மிணியைப் பார்த்தோம். “எதுக்கு என் முன்னால டிவி பார்க்கிற மாதிரி ஒக்காந்து இருக்கீங்க”ன்னு அன்பா விக் விக் இல்லாமல் சொல்லவும் கையைத் தட்டிகிட்டோம்.

படுத்தாச்சு. மணி என்னன்னு தெரியல. யாரோ கதவைத் தட்டுற சத்தம் மாதிரி கேட்டுச்சு. கண்ணைத் தொறந்து பாத்தா... அம்மிணி சேர்ல அதே போஸ்ல!

“என்னம்மா”ன்னு கேட்டா இப்ப வேற ராகத்துல விக்கினாங்க. ஊசி போட்ட எஃபெக்ட் அதுக்குள்ர போயிருச்சா?

“டாக்டருக்கு போன் செய்யவா”ன்னு கேட்டதும் வால் கிளாக்கைக் காட்டுனாங்க. மணி ரெண்டு! இன்னொரு சேரை எதிர்ல போட்டுக்கிட்டு ஒக்காந்தேன். சாமியாடிட்டு இருந்ததுல நேரம் போயிருச்சு.

க்ளினிக் ஏழரைக்குத்தான். ஆறு மணிக்கே போய் தொறக்காத க்ளினிக் வாசல்ல ஒக்காந்துட்டோம். முதல்ல நர்ஸ் தான் வருவாங்க. “டோக்கன் நம்பர் ஒண்ணு”ன்னு கையில கொடுக்கவும் அதுல ஒரு அல்ப சந்தோஷம்.

“டாக்டர் எப்போ வருவார்”னு கேட்டதும் “வருவார்”னு மொட்டையா பதில். சைலண்ட்டா இருந்த க்ளினிக்ல அம்மிணி விக் விக் சத்தம் மட்டும் கடிகாரச் சத்தம் மாதிரி கேட்டுகிட்டே இருந்துச்சு.

நர்ஸ் தெர்மாமீட்டரை திருப்பி எடுத்துட்டு போயிட்டாங்க. அம்மிணி அதைக் கடிச்சாலும் கடிச்சிருவாங்கன்னு பயந்துட்டாங்க போல.

டாக்டர் வந்து அம்மிணியைப் பார்த்ததும் அரண்டுட்டார். “என்னாச்சு. நிக்கலியா”ன்னு விசாரிச்சார்.

“என்ன சாப்டிங்க. எப்பவும் இதே போல வருமா. இதுக்கு முன்னாடி வந்துருக்கா. ஒங்க குடும்பத்துல யாருக்காச்சும் இந்த டிரபுள் இருக்கா”ன்னு கேட்டதும் அம்மிணி இல்லைன்னு தலைய ஆட்டுனாங்க.

அதுக்கு மேல என்ன கேட்கிறதுன்னு புரியாம திரும்பி என்னைப் பார்த்தாரு. லைட்டா பயம் வந்துச்சு. “இவரால பிரச்சினையா. அந்த டென்ஷன்ல விக்கிறீங்களா”ன்னு கேட்டுரப் போறாறோன்னு நான் நடுங்கிட்டேன்.

“அட்மிட் ஆகிக்கிறீங்களா”ன்னு கேட்டாரு. அம்மிணி என்னைப் பார்த்தாங்க. பார்வையைப் புரிஞ்சுகிட்டு, “எவ்ளோ நாள் பெட்ல இருக்கணும்”னு கேட்டேன்.

“48 மணி நேரம் போனாத்தான் சொல்ல முடியும்”னாரு. “விக்கல் நின்னுருமா”ன்னு கேட்டா, “48 மணி”ன்னாரு. அடுத்த பேஷன்ட்டைப் பார்க்கணும்னு வெளியே போய் முடிவு எடுக்கச் சொன்னாரு.

அதுக்குள்ர எல்லா சீட்டுலயும் ஆள் வந்துட்டதால ஒக்கார இடம் இல்லாம வெளியே வந்தோம். அம்மிணியே முடிவு எடுக்கட்டும்னு விட்டுட்டு ரோட்டை வேடிக்கை பார்த்தேன்.

மகனார் போன் வந்துச்சு. “அம்மாகிட்ட கொடுங்க”ன்னு.

அம்மிணி, “என்னது... எப்போ...”ன்னு கத்தவும் அக்கம்பக்கத்துல நின்னவங்க திரும்பிப் பார்த்தாங்க.

“வாங்க வீட்டுக்குப் போகலாம்”னு சொன்னாங்க. “அட்மிட் ஆக வேணாமா”ன்னு நான் கேட்டதை காதுல வாங்காம ஆட்டோல ஏறுனாங்க.

“சந்துருத் தடியன் வந்துருக்கானாம். ஒங்க ரெண்டு பேரையும் சுலபமா கண்ணுல மண்ணைத் தூவிருவான். நான் வேற அட்மிட் ஆயிட்டா வீட்டுல எது காணாமப் போனாலும் தெரியாது. ஆட்டோவை வேகமா ஓட்டுப்பா”னாங்க; கொஞ்சங்கூட விக்காம !

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in