அம்மிணிக்குத் தங்க மனசு...

அம்மிணிக்குத் தங்க மனசு...
ஓவியம்: முத்து

கிச்சனுக்குள் கடமுடாவென்று சத்தம். நாலஞ்சு டப்பாக்கள் கீழே விழுந்துச்சு. அம்மிணியோட நிம்மதி பறிபோனதுல எச சத்தம் கொடுத்தாங்க. “உள்ளார போய் எலி மாதிரி எதை உருட்டிக்கிட்டு இருக்கீங்க.”

நான் தேடுனது கிடைக்காம ஏமாற்றத்தோட வெளியே வந்தேன். “திங்கிறதுக்கு வீட்டுல ஒண்ணுமே இல்லியா” அம்மிணி கடுப்பாயிட்டாங்க. “இப்பதான் சாப்பாட்டுத் தட்டைக் கழுவி வச்சீங்க. உடனே திங்கிறதுக்கா”

அசடு வழிஞ்சுக்கிட்டே சொன்னேன். “சரி. கொறிக்கிறதுக்கு” அம்மிணி ரிமோட்டை தொப்புனு பக்கத்துல வச்சாங்க. “முழு நேரமும் என்னை கிச்சன்லயே நிக்க வச்சிருவீங்க. வெளி உலகம் தெரியவே வேணாம்”

அதேநேரம் மகனார், ஒரு தட்டுல மிக்சரைக் கொட்டிக்கிட்டு அவரோட லேப்டாப்போட அடுத்த ரூமுக்குப் போனாரு. இவனுக்கு மட்டும் பதுக்கல் பிரதேசம்லாம் எப்படித் தெரியுதுன்னு என் மண்டை கொதிச்சுருச்சு.

வெக்கத்தை விட்டு நானும் ஒரு காலித் தட்டை அவரு முன்னால போய் நீட்டினேன். போனாப் போவுதுன்னு ஒரு ஸ்பூன் அளவுக்கு அதுல போட்டான்.

கொதிச்சா அதையும் பறிச்சுக்குவான்னு தெரிஞ்சதும் மறுபடி கிச்சன்ல போய் மர்ம தேசத்தை ஆராய ஆரம்பிச்சேன். பதற்றத்துல இன்னும் ரெண்டு டப்பா உருண்டுச்சு. என்னோட கெட்ட நேரம் அதுல ஒண்ணு மாவு டப்பா !

இடுப்புல கை வச்சுகிட்டு கிச்சன் வாசல்ல வந்து நின்னாங்க. “எதையாவது கொறிச்சுக்கிட்டே இருக்க வேண்டியது. அப்புறம் நடு ராத்திரி என்னை எழுப்பி வவுறு சரியில்ல. சுடு தண்ணி வச்சுத் தரியான்னு தூக்கத்தைக் கெடுக்க வேண்டியது”

எப்பவாச்சும் எனக்குள்ர தூங்கிகிட்டிருக்கிற மிருகம் அதாங்க பூனை எந்திரிச்சுரும். இப்ப எந்திரிச்சு நின்னுச்சு.

“ஒரு மனுசனுக்கு வாய்க்குப் பிடிச்சதை திங்கக்கூட இந்த வீட்டுல உரிமை இல்லியா. சாப்பாடு சாப்பிட்டதும் இனிப்பா ஏதாச்சும் எனக்கு வேணும்னு உனக்கே தெரியும்ல. எது வாங்கி வச்சாலும் இருக்கிறதில்ல”ன்னு பொங்கினேன்.

“போக வர திங்கிறது நீங்க. அது என்ன அட்சய பாத்திரமா” அம்மிணியும் பதில் ராக்கெட் விட்டாங்க. அந்த நேரம் தான் கதிர் வீட்டுக்குள்ர அவனோட அம்மிணியோட வந்தான்.

படக்குன்னு நாங்க சிரிச்சுக்கிட்டே வரவேற்றோம். “அம்மிணி அவங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொடு. அப்படியே ஒரு டீயும்”னு ஆர்டர் போட்டேன். அந்த சாக்குல எனக்கும் ஒரு ப்ளேட் கிடைக்கும்னு.

அம்மிணி டெக்னிக்கா ரெண்டு ப்ளேட் மிக்சரோட வந்தாங்க. “அவரு இப்பதான் சாப்பாடு சாப்பிட்டாரு”னு முன் ஜாக்கிரதையா சொல்லிட்டாங்க.

கதிரும் நானும் பக்கத்துல ஒக்கார்ந்ததால அவன் ப்ளேட்லேர்ந்து கூச்சமே இல்லாம எடுத்துச் சாப்பிட்டேன். அம்மிணி என்னை முறைச்சாங்க. “நீயே சொல்லு கதிரு. ஆபிஸ்ல நாம எப்படிலாம் ஷேர் செஞ்சுக்குவோம்...”

அம்மிணி சொன்னாங்க. “கண்ட நேரத்துல கண்டதையும் தின்னுட்டு மலைப்பாம்பு மாதிரி உருண்டா எவ அவதிப்படறது”

அவன் பாடு திண்டாட்டமாயிருச்சு. தட்டுல இருக்கிறதைத் திங்கிறதா வேண்டாமான்னு தடுமாறிட்டான். நல்ல வேளை அவனோட அம்மிணி டாபிக்கை மாத்துனாங்க.

“அண்ணே இவரு சைட் பிசினஸா என் தம்பி கூட சேர்ந்து கல்யாண கேட்டரிங் எடுத்துருக்காரு. மொத மொதல்ல பெரிய கான்ட்ராக்ட் கிடைச்சிருக்கு. அதான் அண்ணியையும் உங்களையும் இன்வைட் பண்ணிட்டு போலாம்னு வந்தோம். ரிசப்ஷன் மெனு இதான்’னு ஒரு கார்டை நீட்டுனாங்க. ஜொள் கொட்டிருச்சு படிக்கும்போதே.

அம்மிணி ப்ரேக் போட்டாங்க. “யார் வீட்டு ஃபங்ஷனோ. நாங்க எப்படி” கதிர் சிரிச்சுக்கிட்டே சொன்னான். “அண்ணி, நீங்க வந்தா எங்களுக்குப் பெருமை” அவ்ளோதான். அம்மிணி தலையாட்டிட்டாங்க.

மண்டபத்து வாசல்லேயே பன்னீர் தெளிச்சு வரவேத்தாங்க. ‘எப்போ சாப்பிடப் போவலாம்’னு டைனிங் ஹாலையே பார்த்ததுல கழுத்து சுளுக்கிக்கிச்சு. “கதிர் இருக்கானான்னு பார்த்துட்டு வரேன்”னு எந்திரிச்சேன். அம்மிணி கையைப் பிடிச்சு இழுத்து ஒக்கார வச்சுட்டாங்க. “ஒங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. ஏழு மணிக்குத்தான் டின்னர்”

லைட் ம்யூசிக்கை அம்மிணி ரசிச்சு தலையாட்டும்போது கதிர் வந்துட்டான்.

“ஜூஸ் குடிச்சியா. நல்லா இருந்துச்சா. காபி டீ ஹார்லிக்ஸ் பால் எல்லாமே இருக்கு” அவன் கை காட்டுன திசையில் ஓடுனேன். அங்கேர்ந்து பார்த்தப்போ, அம்மிணிகிட்ட வேலை பார்க்கிற சித்தாளு மாதிரி கதிர் பவ்வியமா பதில் சொல்லிக்கிட்டு இருந்தான்.

டின்னர் சூப்பரா இருந்துச்சு. பஃபே வேணாம்னு டேபிள்லயே ஒக்கார வச்சு போட்டதுல ரொம்ப பேருக்குக் குஷி.

தாம்பூலப் பையில ஒரு ப்ளாஸ்டிக் டப்பால ஸ்வீட்டும் மிக்சரும் இருந்துச்சு. அம்மிணி ஒண்ணு போதும்னு சொல்லிகிட்டிருந்தப்பவே, நானும் கையை நீட்டி இன்னொரு பை வாங்கிட்டேன். அதுக்குள்ர ஸ்வீட் டப்பா இருக்கான்னு செக் பண்ணதை கதிர் கவனிச்சுட்டான்.

“இங்கே வா”ன்னு தனியா இழுத்துக்கிட்டுப் போனான். ஒருத்தர்ட்ட ஏதோ கிசுகிசுக்க அவரு ஓடிப்போய் ஒரு கட்டைப்பையோட வந்தாரு. கதிர் அதை என்கிட்டே கொடுத்து, “பத்து டப்பா வச்சிருக்கேன். எஞ்சாய்”னு சொன்னப்போ ஆனந்தக் கண்ணீரே வந்திருச்சு.

“கையில என்ன பையி”ன்னு அம்மிணி அதட்டுனப்போ, “அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்”னு மழுப்பினேன்.

வீட்டுக்கு வந்தப்போ புதையல் கிடைச்ச மகிழ்ச்சி. நாலு நாளைக்கு வேளாவேளைக்கு வச்சு திங்கலாம்னு கனவு கண்டுகிட்டே தூங்குனேன்.

காலைல சாப்பாடு ஆனதும் கட்டைப்பையை தேடுனா காணோம். பதறிப்போய் அம்மிணிகிட்ட விசாரிக்கலாம்னு பாத்தா அவங்களையும் காணோம். கீழே பேச்சுச் சத்தம் கேட்டுச்சு.

எங்க ப்ளாக்ல இருந்த பத்து வீட்டுக்கும் ஒவ்வொரு டப்பாவா கொடுத்துட்டுப் பேசிக்கிட்டிருந்தாங்க.

“ஒங்க தங்க மனசு யாருக்கு வரும்”னு பாராட்டு மழைல குளிச்சுட்டு மேலே வந்தாங்க. போன்ல கதிரைக் கூப்பிட்டாங்க.

“உங்க கேட்டரிங் எல்லோருக்கும் தெரியட்டும்னு நீங்க கொடுத்த கார்டோட ஆளுக்கு ஒரு டப்பாவும் கொடுத்துட்டேன். ரெண்டு பேரு அவங்க வீட்டு ஃபங்ஷனுக்கு புக் பண்றேன்னு சொல்லிட்டாங்க.”

ஸ்பீக்கர்ல போட்டாங்க. கதிர் குரல் கேட்டுச்சு.

“அண்ணி உங்க சாமர்த்தியம் யாருக்குமே வராது. கலக்கிட்டீங்க.”

அம்மிணி முகத்துல ரெட்டிப்பு மகிழ்ச்சி !

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in