இரவல் ரவி வரான் எஸ்கேப்பு!

இரவல் ரவி வரான் எஸ்கேப்பு!
ஓவியம்: முத்து

அம்மிணியோட உற்சாகக் குரல் கேட்டது. “ஒங்க வீட்டுக்கு வர பர்மிஷன் கேக்கணுமாக்கும். எப்போ வேணா வா.”

யாரா இருக்கும்னு யோசிச்சேன். “இந்தக் குறும்புதான் உன்கிட்ட பிடிச்சது. நடுராத்திரில வந்தா என்ன... பெல்லடிச்சா இவர் எழுந்து வந்து கதவைத் தொறப்பாரு”ன்னு என்னைக் கோர்த்து விட்டதும், நடு முதுகுல ஜிலீர்னு ஒரு அதிர்ச்சி.

“யாரும்மா”ன்னு பதவிசா கேட்டேன். பத்து நிமிஷம் தொடர்ந்து பேசிட்டு பதில் சொன்னாங்க. “நம்ம இளவல் ரவி தான்.”

பகீர்னு ஆயிருச்சு. ஸ்டைலா இளவல் ரவின்னு பேர் வச்சுக்கிட்டு, தெருவுல எந்த வீட்டுல கல்யாணம் துக்கம் நடந்தாலும் போஸ்டர்ல அவன் பேரோட போட்டோவையும் சேர்த்துருவான். அவன் போட்டோ மட்டும் தனியா பெருசா தெரியுறாப்ல பார்த்துக்குவான்.

அவனுக்கு நானும் மகனாரும் வச்ச பேரு ‘இரவல் ரவி’. எப்ப வந்தாலும் ஏதாச்சும் ஓசி வாங்காமப் போக மாட்டான். போனா திரும்பியும் வராது. ‘ஒன்வே ரவி’ன்னும் செல்லமா சொல்லுவோம். அம்மிணிக்கு ஒண்ணுவிட்ட பெரியப்பா மகன். நாப்பது வயசு; கல்யாணம் ஆவல. எந்தப் பொண்ணும் ஏமாறத் தயாரில்லை.

என்ன வேலைல இருக்கான்னு இன்னிவரைக்கும் தெரியல. ஆனா, விசிட்டிங் கார்டு அடிச்சு வச்சுருக்கான். ‘A to Z காண்ட்ராக்ட்’னு. “ஏரோப்ளேன் கூட சர்வீஸ் செய்யலாம். அதுக்கு உண்டான ஆளைப் புடிச்சு ரேட் பேசணும் அவ்ளோதானே”ன்னு சவடாலா சொல்வான்.

அம்மிணிகிட்ட ஒரு மிக்ஸி, ஸ்டவ், டேபிள் ஃபேன் சர்வீசுக்கு வாங்கிட்டுப் போனான். இப்ப வரைக்கும் வீடு திரும்பல. வித்துட்டானா இல்லாட்டி, அவன் யூஸுக்கு வச்சுக்கிட்டானான்னும் தெரியாது.

மகனார் புதுசா பைக் வாங்கினப்போ இரவல் ரவி வந்துட்டான். “நான் வாங்கணும்னு நினைச்ச அதே மாடல், கலர்”னு பைக்கை பாசமா கட்டிக்கிட்டான். எனக்குள்ர ஒரு டேஞ்சர் பல்ப் எரிஞ்சுது. மகனார் முதுகுல நைசா கிள்ளுனேன்.

“சாவியைக் கொடு. ஒரு ரவுண்டு போயிட்டு வரேன்”னு கையை நீட்டுனான்.

“இப்பதான் டெலிவரி எடுத்துருக்கு”ன்னு முனகுனேன். மகனார்கிட்டேர்ந்து சாவியைப் பிடுங்கிட்டான். “பைக் ஓட்டத் தெரியுமா”ன்னு கேக்கும்போதே, ஏறி ஒக்கார்ந்து குத்து மதிப்பா ஒதைச்சான்.

இவன்கிட்ட கொடுக்கவா என்னை வாங்குனேன்னு பரிதாபமா பைக் பார்த்தப்போ, ஓட்டத் தெரியாத ரவி தப்பா கியர் மாத்தி கண்முன்னாடி பைக்கோட விழுந்தான். முழங்கால் வழண்டு போச்சு. மகனார் ஓடிப் போய் பைக்கைத் தூக்கி நிறுத்தினார். நல்ல வேளை, பைக் பொழச்சுது; லைட்டா ஒரு டொக்கோட.

இரவல் ரவி ஆட்டோவைப் புடிச்சு உடனே ஓடிட்டான். பத்து நாள் வீட்டுப் பக்கமே வரல. அம்மிணி ஃபோன் செஞ்சப்போ எடுக்கவே இல்லை. பைக்கை டேமேஜ் செஞ்சதுக்கு கடுப்படிக்கத் தான் ஃபோனுன்னு நினைச்சுக்கிட்டு. அப்புறம் வீட்டுக்கு வந்தப்போ முழங்கால் தழும்பைப் பார்த்து அம்மிணி கண்ணீர் விட்டப்போ, ரவி குஷியாயிட்டான்.

அவன் வரதுக்குள்ர முக்கியமான சாமான் எல்லாத்தியும் ஒளிச்சு வைக்கலாம்னு பரபரப்பாயிட்டேன்.

“ஒங்க லேப்டாப்ல ஏதோ பிரச்சினைன்னு சொன்னீங்களே”ன்னு அம்மிணி கேட்டுக்கிட்டு இருந்தப்போவே, ரவி உள்ளார வந்துட்டான்.

“எங்கே அந்த லாப்டாப்பு”ன்னு தேட ஆரம்பிக்கவும், மகனார் அழுத்தமா சொன்னார்... “அது அப்பவே சரியாயிருச்சு”ன்னு.

இரவல் ரவிக்கு மூஞ்சி தொங்கிருச்சு. இன்றைய வரவுல லேப்டாப்னு ராசிபலன் போட்டிருந்த மாதிரி குஜாலா வந்து ஏமாந்த துக்கம்.

அம்மிணிக்கு எதிர்ல வந்து கும்பிடு போட்டான். “உன்னை அண்ணின்னு கூப்பிடணுமா அக்கான்னு கூப்பிடணுமான்னு கேட்டுருக்கேன், இல்லியா”ன்னு டயலாக் பேசினான். அம்மிணிக்கே தலை சுத்திருச்சு. “என்னடா ஆச்சு. குண்டக்க மண்டக்கப் பேசுற”ன்னு ஆடிப் போயிட்டாங்க.

மூக்கு விடைக்க கண்ணு சிவந்து அம்மிணியைப் பார்த்து சொன்னான். “நீ என் அம்மா”. அம்மிணிக்கு என்ன ஆச்சோ ஆனா எனக்கு சர்வாங்கமும் நடுங்கிருச்சு.

பயபுள்ள என்னமா சென்டிமென்டால பேசுறான். இவனுக்குள்ர இப்படி ஒரு மனசா. உள்ளத்தில் நல்ல உள்ளம்னு மனசுக்குள்ர பாட்டு ஓடுச்சு.

“கொஞ்சம் இரு”ன்னு அம்மிணிட்ட சொல்லிட்டு வெளியே போனான். திரும்பி வரச்ச அவன் இதுக்கு முன்னாடி கொண்டு போன மிக்சி, ஃபேன், ஸ்டவ் எல்லாத்தியும் ஒவ்வொண்ணா கொண்டு வந்து ஹால்ல வச்சான்.

“என்னைய இதுவரை நீ ஒரு வார்த்தை கூட கேட்டதுல்ல என்னாச்சுன்னு. என்மேல நீ வச்ச நம்பிக்கை. ரிப்பேர் செஞ்சு உடனே கொண்டு வராம கொஞ்ச நாள் என்கிட்ட வச்சு பார்த்தேன். அதான் லேட்டு; மன்னிச்சுக்கோ அக்கா.”

அவ்ளோதான். அம்மிணி கண்ணு கலங்கி என்னைப் பார்த்தாங்க. “சும்மா நிக்கிறீங்களே, அவனை ஒக்காரச் சொல்லுங்க. காபி கொண்டு வரேன்”னு உள்ளே போனாங்க.

மகனார் முகத்துலயும் ஒரே குழப்பம். அண்ணே நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேட்கத் துடிச்சாப்ல பார்த்துக்கிட்டுருந்தான்.

அம்மிணி கொண்டு வந்த சுமாரான காபியை சர்ருன்னு உறிஞ்சுட்டு, “பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு”ன்னு இரவல் குரல் கொடுத்தான்.

“இதையெல்லாம் எங்கே எடுத்து வைக்கட்டும்”னு மிக்சி சமாச்சாரங்களைக் காட்டுனான்.

“எல்லாம் அவரு பார்த்துக்குவாரு. பாவம் ஒத்தையா நீ சுமந்து வந்துருக்கே”ன்னு அம்மிணி பாசத்தைக் கொட்டுனாங்க.

“ஒரு சின்ன ஒதவி கேக்கலாமா”ன்னு இரவல் நைசா மேட்டருக்கு வந்தான். “சொல்லுரா”ன்னு இந்தியாவையே எழுதிக் கொடுக்க அம்மிணி ரெடி ஆயிட்டாங்க.

“டூ வீலர் ரெண்டு நாளைக்கு வேணும். ஒரு வேலையா டவுன்ல நாலஞ்சு பேரைப் பார்க்கணும். அண்ணன்ட்ட சொல்லி வாங்கித் தரியா”ன்னு அவன் சொல்லும்போதே, அம்மிணி என் வண்டிச் சாவியை எடுத்துக் கொடுத்துட்டாங்க.

“நீ தெய்வம்”னு அவன் ஓடிட்டான்.

அம்மிணி உள்ளே போய் மிக்சியை டெஸ்ட் ரைடு செஞ்சாங்க. அப்பத்தா செத்துப் போனதுக்கு அஞ்சாறு பேர் ஒப்பாரி வச்சாப்ல ஒரு சத்தம் வந்துச்சு. படக்குனு நின்னுருச்சு.

இரவல் ரவி போன் வந்துச்சு. “சொல்ல மறந்துட்டேனே... ரிப்பேர் செஞ்சாலும் மிக்சி ஓடல. நீயும் புதுசு வாங்கிட்ட. இது இனிமே ஒனக்குத் தேவைப்படாதுன்னு தெரியும்!”

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in