எக்ஸ்க்யூஸ் மீ... ஒரு கார் அனுப்ப முடியுமா?

எக்ஸ்க்யூஸ் மீ... ஒரு கார் அனுப்ப முடியுமா?
ஓவியம்: முத்து

எதிர் வீட்டம்மிணியும் எங்க அம்மிணியும் பேசிக்கிட்டு இருந்தாங்க. எ வீ தான் நிறைய பேசுனது. இவங்க பேசுனது ஒரே ஒரு பஞ்ச் டயலாக் தான்.

“இவரு பாத்துக்குவாரு”னு என் பக்கமே கையைக் காட்டிச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

எதுல கோத்துவிடப் போறாங்கன்னு புரியல. திடீர் காய்ச்சலே வந்துருச்சு. அப்பதான் அம்மிணி என் பக்கம் நல்லாத் திரும்பி என்னை எழுந்துவரச் சொல்லி சொடுக்குப் போட்டாங்க.

“இவங்களுக்கு கார் வேணுமாம். ஏற்பாடு பண்ணுங்க”னு சொல்லவும் பக்னு ஆயிருச்சு.

“ஒரு விசேஷத்துக்கு போவணும். திரும்ப ரெண்டு நாள் ஆவும். ஒங்களுக்குத் தெரிஞ்ச ட்ராவல்ஸ்ல ஏற்பாடு செஞ்சு தர முடியுமா”னு எ வீ அம்மிணி தெளிவா சொல்லவும் ஹார்ட் பீட் நார்மலாச்சு.

“டிராவல்ஸ் நம்பர் தரேன். பேசிக்குங்க”னு நாசூக்கா சொன்னேன்.

“அது அவங்களுக்குத் தெரியாதாக்கும்... நீங்க பேசுங்க”னு அம்மிணி மிரட்டுனாங்க.

போன் செஞ்சேன். “எட்டு பேர் போவலாம் சார். அனுப்பிரவா”னு டிராவல்ஸ்ல கேட்டாங்க.

“அஞ்சு பேர் தான் இருக்கோம். அதுக்கு தகுந்த மாதிரி அனுப்பச் சொல்லுங்க”னு எ வீ அம்மிணி.

“அஞ்சு பேரும் பெரியவங்களா”னு டிராவல்ஸ்.

“ஆமா”னு எ வீ அம்மிணி.

“கஷ்டம் சார். நாலு பேர் போவலாம். இல்லாட்டி ஏழெட்டுப் பேர். அஞ்சு பேருக்குன்னு எங்ககிட்ட கார் இல்லை”னு டிராவல்ஸ்.

“அவர்கிட்ட பேசிட்டுச் சொல்றேன்”னு எ வீ அம்மிணி ஜகா வாங்கிட்டாங்க.

விட்டுச்சு தொல்லைன்னு உள்ளே போயிட்டேன். நைட் சாப்பிடும்போது பெல் அடிச்சுது. சோத்துக் கையோட போய் கதவைத் தொறந்தா, எதிர் வீட்டு அண்ணாச்சியும் அம்மிணியும்.

“சாப்பிடறீங்களா”ன்னு புத்திசாலித்தனமா கேட்டாரு. என்னன்னு விசாரிச்சா, “சாப்பாட்டை முடிச்சிருங்க. பாதி சோத்துல எழுப்பினா பாவம்”னு டயலாக் விட்டாரு. அவங்கள ஒக்காரச் சொல்லிட்டு அவசர அவசரமா அள்ளிப் போட்டுக்கிட்டு வந்தேன்.

“நாலு பேர் கார் சொல்லிருங்க. ஒருத்தர் டவுட். அப்படி வந்தாலும் அஞ்சு பேர் நெருக்கி ஒக்காந்து போயிடறோம்”னாரு.

அவரும் அம்மிணியுமே மூணு சீட்டை முழுசா முடக்கிருவாங்க.

என் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம, “தொலைவா போவணும்னா சங்கடம். பக்கத்துலனா சிரமம் தெரியாது”ன்னேன்.

“மதுரை தாண்டி போவணும். அதெல்லாம் அட்ஜஸ்ட் செஞ்சுக்குவோம்”னு அதே பாட்டைப் பாடுனாரு.

“எவ்ளோ கேப்பாங்க”னு அடுத்த அஸ்திரத்தை விட்டாரு. “நம்பர் தரேன். பேசிக்கிறீங்களா”ன்னு மறுபடியும் கேட்டேன்.

உடனே எ வீ அம்மிணி, எங்க அம்மிணியை பேர் சொல்லி கூப்பிட்டாங்க. “பாருப்பா. அதையே சொல்றாரு”ன்னு.

நடுங்கிக்கிட்டே டிராவல்ஸ்க்கு போன் செஞ்சேன். அவங்க சொன்ன கி.மீ ரேட்டை சொன்னா இவரு மூஞ்சிய சுளிச்சாரு. “கம்மியால்ல இன்னொரு டிராவல்ஸ்ல சொன்னாங்க”ன்னு.

அப்ப அதுலயே போய்த் தொலைக்க வேண்டியதுதானேன்னு மனசுக்குள்ர சபிச்சுக்கிட்டு, “பார்த்து போட்டுக்குங்க. நமக்கு ரொம்ப வேண்டியவரு”ன்னு கூசாமப் பொய் சொன்னேன்.

“ஒங்களுக்கே இந்த ரேட்டுதான் சார்”னு டிராவல்ஸ்ல என்னையே கவுத்துட்டாங்க.

“ஏசி உண்டுல்ல”னு எ வீ கேட்டார். அதுக்கு ரேட் கூடன்னு பதில் வரவும், “ஏசி வேணாம்”னு அந்தம்மிணி சொல்லுச்சு.

ஃபிக்ஸ் பண்ணி அனுப்பிட்டு கதவை மூடுனா, டொக் டொக் சத்தம். தொறந்தா அவரேதான்.

“கார் நம்பரு, ட்ரைவர் பேரு, போன் நம்பரு எல்லாம் வேணும்”னாரு. “ஒங்க நம்பருக்கு மெசெஜ் பண்ணுவாங்க”னு சமாளிச்சேன். கதவை மூடாமத் தொறந்தே வச்சேன். மறுபடி வருவார்னு.

மறுநாள் விடியல்ல டொக் டொக். “பால்காரரா இருக்கும். போய்ப் பாருங்க”ன்னு அம்மிணி முனகுனாங்க. கதவைத் தொறந்தா எ வீ குடும்பம். “கார் வந்துருச்சு. போயிட்டு வரோம்”னு டாட்டா காட்டுனாரு.

அப்பாடா... ரெண்டு நாள் இவரு தொல்லை இல்லைன்னு அந்த நெருக்கடியிலும் ஒரு சந்தோஷம் வந்துச்சு.

ஆபிஸ்ல இருக்கறப்போ போன். “காரையும் காணோம். டிரைவரையும் காணோம்”னு. போன் அடிச்சாலும் எடுக்கலியாம். “ஓனர் நம்பர் இல்ல. அவர்ட்ட சொல்லுங்க”ன்னு.

டிராவல்ஸுக்கு அடிச்சா, “வருவார் சார்... பக்கத்துல எங்கயாச்சும் போயிருப்பார்”னு அலுப்பா பதில்.

எ வீ அண்ணாச்சிக்கு போன் அடிச்சா, “கார்ல போயிக்கிட்டு இருக்கோம். அப்புறம்பேசறேன்”னாரு. டிரைவர் பாத் ரூம் போன நேரத்துல இந்த கலாட்டா.

அரை மணில இன்னொரு போன். இப்போ டிரைவர். “என்னா சார் ஆளுங்க. ஒன் வேல போகச் சொல்றாங்க. சாப்பாட்டு நேரத்துல கண்டுக்கக்கூட இல்ல. நானா கூச்சத்தவிட்டு சாப்பிடப் போனேன். இவங்களா சோறு போடறாங்க. கல்யாண மண்டபத்துல நூறோட நூத்து ஒண்ணு. கேட்டா, ‘அதான் பேட்டா கொடுக்கிறோம்ல’னு அசால்ட்டா பதில். ஒங்ககூட வரப்ப என்னமா கவனிப்பீங்க. ஒங்க வீட்டு ஆளு மாதிரி.”

டிரைவரை சமாதானம் செஞ்சதுல பத்து நிமிஷம் போச்சு. போன் அடிச்சாலே ஒதறுச்சு.

மறுநாள் நைட் போன் அலறுச்சு. “கேட் பூட்டியிருக்கு. வாட்ச்மேனை காணோம்”னு.

கீழே போய் கதவைத் தொறந்தேன். “பால் பாக்கட் இருக்கா”ன்னு அடுத்த அம்பை விட்டார். நமக்கு இல்லாட்டியும் தொலையுதுன்னு ஃப்ரிட்ஜ்லேர்ந்து எடுத்துக் கொடுத்தேன்.

கதவை மூடுனா டொக் டொக். “ரொம்ப நன்றி சார்”னு வழிஞ்சாரு. டிராவல்ஸ்ல இருந்து போன் வந்துச்சு ரெண்டு நாள் கழிச்சு.

“சார் ரொம்ப தொல்லை பண்ணிட்டார். பில் கொடுத்தா எவ்ளோ கேள்வி கேட்டு குடைச்சல். நாக்கு தள்ளிப் போச்சு”னு டிராவல்ஸ்காரர் புலம்பினாரு.

நான் ஏதோ தப்பு பண்ணாப்ல சாரி கேட்டேன். ரெண்டு வாரம் போச்சு. ஹால்ல ஒக்காந்து பேப்பர் படிச்சுட்டு இருந்தப்போ டிராவல்ஸ் டிரைவர் வந்தாரு.

‘கார் எதுவும் நம்ம புக் பண்ணலியேன்னு' யோசிச்சப்போ, அவரு கூலா எதிர் வீட்டு பெல்லை அடிச்சாரு. எ வீ அண்ணாச்சி கதவைத் தொறந்தாரு துண்டு கட்டிக்கிட்டு.

“வந்துட்டியா... இப்பதான் குளிக்கப் போறேன். இந்தப் பொட்டியை டிக்கில வச்சுரு.”

பொட்டிய தூக்கமுடியாம டிரைவர் தூக்கிட்டுப் போனார்.

திரும்புனா... அம்மிணி முறைச்சுக்கிட்டு. “அவரு சாமர்த்தியமா இல்ல நீங்களா”ன்னு .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in