உசுரு முக்கியம் மிஸ்டர் பர்சனல்..!
ஓவியம்: முத்து

உசுரு முக்கியம் மிஸ்டர் பர்சனல்..!

பாஸ் கூப்பிட்டார்னு ரூமுக்குள்ர போனா பர்சனல் டிபார்ட்மென்ட்காரர் ஒக்காந்திருந்தார் பாஸுக்கு எதிரே. இவர் எதுக்கு இங்கே வந்திருக்கார்னு குழப்பத்தோட வணக்கம் வச்சேன்.

“ஒரு டெத் கேசுக்கு ஃபைனல் செட்டில்மென்ட். வழக்கமா நம்ம அக்கவுன்ட்ஸ் ஆள் ஒருத்தர் கூடப் போவணும்ல. இந்த தடவை நீங்க போயிட்டு வாங்க”ன்னு பாஸ் ஃபைலை நீட்டுனார்.

“சாரை எனக்கு நல்லாத் தெரியும். நல்லா கோஆபரேட் செய்வார்”னு பர்சனல் அண்ணாச்சி சிநேகமா சிரிச்சார். அவருதான் கோத்து விட்டுருப்பாரோன்னு டவுட் வந்துச்சு. வெளியே வந்தோம். பர்சனல் சொன்னாரு. “வழக்கமா வர அண்ணாச்சி இன்னிக்கு லீவாம். அதான் ஒங்களைத் தொல்லை பண்றாப்ல ஆச்சு...”

“அதனால என்ன... ஆபிஸ் டூட்டி தானே”ன்னு வலுக்கட்டாயமா சிரிச்சுட்டு என் சீட்டுக்கு வந்தேன். என் விசிட்டிங் கார்ட் எதுக்கும் இருக்கட்டும்னு ஒண்ணு எடுத்து வச்சுக்கிட்டேன். ஆபிஸ் வேலையா போவும்போது அப்படி ஒரு பழக்கம்.

ப சீ அண்ணாச்சிக்கிட்ட கதை வசனம் சொல்லாம வெளியே கிளம்ப முடியாது. சுனாமியைக் கிளப்பிருவாரு ஆள் இல்லாத நேரத்துல. சொன்னதும் என் கையில் இருந்த ஃபைலைப் பிடுங்கிப் பார்த்தாரு. சம்பந்தம் இருக்கோ இல்லியோ அண்ணாச்சிக்கு எல்லா விவரமும் தெரிஞ்சாகணும். அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியான்னு சொல்வோம்.

செத்துப் போன எம்ப்ளாயி பேரைப் பார்த்ததும் மூஞ்சியை சுளிச்சாரு. “இவுரா... இவரைப் பத்தி ஏதோ கேள்விப்பட்டேனே”ன்னு ஆரம்பிச்சாரு. பர்சனல் பொறுமை போயி என்னை உசுப்பினாரு. “வாங்க சார். சீக்கிரமா போயிட்டு வந்துரலாம்”னு.

மொபைலை ஞாபகமா எடுத்து சட்டைப் பையில போட்டுக்கிட்டு கிளம்புனேன். கார் ரெடியா நின்னுச்சு. செக் கவரை பர்சனல் ஒரு தடவை இருக்கான்னு செக் பண்ணிகிட்டாரு. எல்லா செட்டில்மென்டும் அக்கவுன்ட்டுக்குத்தான் போகும். டெத்ங்கிறதால ஒரு சின்ன அமவுன்டுக்கு செக் கொடுத்து ஒரு மரியாதைக்கு விசாரிச்சுட்டு வர பழக்கம். இவ்ளோ வருசம் வேலை பார்த்தவருக்குக் கொடுக்கிற மதிப்பு.

கார் டிரைவர்ட்ட அட்ரஸ் ஏற்கெனவே சொல்லிட்டார் போல. அதாவது அப்படின்னு நான் நினைச்சுக்கிட்டேன். பர்சனல் கார்ல ஏறுனதும் தன் மொபைல்ல எதையோ பார்த்துக்கிட்டிருந்தவர் கார் நின்னதும் வெளியே பார்த்து முழிச்சாரு.

“இங்கே எதுக்குய்யா கூட்டிக்கிட்டு வந்தே”ன்னு சத்தம் போட்டாரு. செத்துப் போனவர் பேரைச் சொல்லி, “அவரு வீட்டுக்குத்தானே போவணும் சொன்னீங்க”ன்னு டிரைவர் மடக்குனாரு. பர்சனல் அண்ணாச்சி ஃபைலை எடுத்துப் பார்த்து “அது கீதாபுரம்ல போவணும்”னு திருப்பிக் கேட்டாரு.

இந்த ரகளைல வீட்டுக்குள்ர இருந்தவங்க வெளியே வந்தாங்க. டிரைவர் அவங்ககிட்ட, “கம்பெனிலேர்ந்து வரோம் பணம் கொடுக்க”ன்னு சொல்லவும், “வாங்க”ன்னு அத்தன அன்பா கூப்பிட்டாங்க.

பர்சனல் அண்ணாச்சிக்கு பிபீ எகிறிட்டிருக்குன்னு புரிஞ்சுது. பல்லைக் கடிச்சுக்கிட்டு காரைவிட்டு எறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சாரு. இந்தக் கதவைத் திறந்துக்கிட்டு இறங்கி நின்னவன் என்ன செய்யிறதுன்னு முழிச்சேன். அப்பதான் ப சீ அண்ணாச்சிட்டருந்து போன்.

“என்னய்யா... அரை மணில வந்துருவேன். அப்புறம் பேசிக்கலாம்”னு கட் பண்ணப் போகும்போது அண்ணாச்சி கத்துனாரு. “வச்சுராதீங்க. நீங்க இப்ப போவறது ஒரு வில்லங்கமான டெத். அந்தாளுக்கு ரெண்டு பொண்டாட்டி. ஆபிஸ் ரெகார்ட்ல இருக்கிறது கீதாபுரம். இன்னொருத்தி இருக்கிறது வேற எடம்”னாரு.

தலை சுத்துச்சு. “என்னது”ன்னு மறுபடி விசாரிச்சேன். போனை சட்டைப் பையில வச்சுக்கிட்டு பர்சனல்கிட்ட போனேன். அடிக்குரல்ல முழு சமாச்சாரமும் காதுல ஓதுனேன். வெளியே அதுக்குள்ர ஒரு கூட்டமே கூடிருச்சு. மூணு சோடா பாட்டிலை ஒடைச்சு அதாவது ஓப்பன் செஞ்சு எங்கக்கிட்ட நீட்டுனாங்க. டிரைவர் லபக்குன்னு வாங்கிக் குடிச்சு ஏப்பம் விட்டாரு.

பர்சனல் அண்ணாச்சிக்கு மூஞ்சில தான் சோடாவைத் தெளிக்க வேண்டி இருந்துச்சு. கூட்டத்தைப் பார்த்து மயக்கம் போட்டுட்டாரு. கார்க் கதவை அவங்களே தொறந்து அவரை அள்ளிக்கிட்டு வீட்டுக்குள்ர போனாங்க. ஒரு சேர்ல அமுக்கி ஒக்கார வச்சாங்க. எனக்கு, முத்து படத்துல தலைவர் ரஜினிக்கு போட்டா மாதிரி கீழே ஒரு பழைய பாயை தூசு தட்டிப் போட்டாங்க.

பர்சனல் என்னைப் பக்கத்துல இழுத்தாரு. “எப்படி சார் இவங்ககிட்ட செக்கைக் கொடுக்கிறது. அபிஷியலா அவங்க தானே பொண்டாட்டி. பிரச்சினை ஆயிரும் சார் இங்கே கொடுத்தா”ன்னு அழுதாரு.

சுத்தி நின்னவங்க முகத்தைப் பார்த்தேன் கொடுக்காம போனா இப்பவே பிரச்சினை ஆயிரும்னு தோணுச்சு. “உசுரு முக்கியம்”னு பர்சனல் அண்ணாச்சிக்கிட்ட சொன்னேன். எதுவானாலும் நாலு கி.மீ தள்ளிப் போய் பேசிக்கலாம்னு.

அழுதுக்கிட்டே பர்சனல் செக்கை ரெண்டாவது அம்மிணிட்ட நீட்டுனதும் பக்கத்துல நின்னவங்க உச்சு கொட்டுனாங்க. “பாரு சொந்த பந்தம் இல்லாட்டிக்கூட என்னமா கண்ணீர் வுடறாரு ஒம்புருசனுக்காக. நீ கவலைப்படாதே. அவன் தவிக்கவிட்டு போயிட்டான்னு. இந்த சாரே ஒனக்கு கம்பெனில பர்மனென்ட் வேலை வாங்கித் தந்துருவாரு. அவரு கார்டை வாங்கி வச்சுக்க”ன்னு கொளுத்திப் போட்டாங்க.

பர்சனல் கார்ட் கொண்டு வரலன்னு அதை மட்டும் அழாம சொன்னதும் என் பையில கை விட்டு என் விசிட்டிங் கார்டை எடுத்துக்கிட்டாங்க. அவருக்கிட்ட இல்லாட்டி என்ன இந்த சாரைப் போய்ப் பாருன்னு.

அபாய எல்லையைத் தாண்டியதும் ஓரமா காரை நிறுத்தச் சொன்னோம். நாங்க விசாரிக்கிறதுக்குள்ர டிரைவர் முந்திக்கிட்டு, “எனக்கு என்ன தெரியும் சார். அவரு பேரைச் சொன்னதும் நம்ம ஏரியா ஆளுன்னு அங்கே கூட்டிக்கிட்டுப் போயிட்டேன். அடுத்த தெருவுல தான் என் வீடு”ன்னு பாட்டுப் பாடுனாரு. எனக்கென்னவோ டிரைவர் தெரிஞ்சே தான் கூட்டிக்கிட்டு போனதா தோணுச்சு.

ஆபிஸுக்கு வந்ததும் விஷயம் தெரிஞ்சு பாஸ் டோஸ் விட்டாரு. “சின்னப் புள்ளைங்களா நீங்க. இப்போ அந்தம்மிணி என்ன சொல்லும். என்கிட்டதான் செக்கைக் கொடுத்தாங்க. அதனால முழுப் பணமும் என் அக்கவுன்டுக்கு வரணும்னு தகராறு செய்யாதா. இப்படியா சொதப்புவீங்க”ன்னு.

அந்த நேரத்துல அட்டெண்டர் வந்து நின்னாரு. முதல் சம்சாரம் பார்க்க வந்துருக்குன்ற தகவலோட. பாஸ் என்னை முறைச்சாரு. கடவுளே என்னைக் காப்பாத்து!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in