நானும் ஒரு ஐடியா சொல்லலாம்னு பார்த்தேன்...

நானும் ஒரு ஐடியா சொல்லலாம்னு பார்த்தேன்...
ஓவியம்: முத்து

வாட்ஸ் அப்பில் வந்த போட்டோவைப் பார்த்ததும் முதல்ல புரியல. அனுப்பின அண்ணாச்சி, “இது என்ன சொல்லுங்க?”ன்னு புதிர் போட்டுருந்தார். அம்மிணிட்ட கேட்டாத் தெரியுதான்னு பார்ப்போம்னு கொண்டுபோய்க் காட்டுனேன்.

“ஏதோ கெரகம்”னு சொன்னாங்க. பத்து நிமிஷம் கழிச்சு அந்த அண்ணாச்சியே விடை கொடுத்தார். “நம்ம வீட்டு வடை சுடுற வாணா சட்டிதான். கவுத்துப் போட்டு க்ளோஸ் அப்ல எடுத்தா செவ்வாய் கெரகம் மாதிரி தெரிஞ்சுதா”ன்னு சொல்லி ஹாஹான்னு சிரிச்சிருந்தார்.

இந்தாளுக்கு இதே வேலைன்னு கடுப்பாச்சு. அரை மணி கழிச்சு இன்னொரு போட்டோ வந்துச்சு. “கோச்சுக்காம இது என்னானு சொல்லுங்க”ன்னு. அப்போ அம்மிணி கிராஸ் பண்ணவும் எட்டிப் பார்த்தாங்க. “ஹை நல்லாருக்கே”ன்னு சொன்னதும் போனாப் போவுதுன்னு நானும் பார்த்தேன்.

வித்தியாசமா இருந்துச்சு. கண்ணாடி மாளிகை மாதிரி. டெக்னிக்கா நடுவுல சின்ன லைட் வேற வச்சிருந்ததால ஜொலிச்சிது. வாட் ஈஸ் திஸ்னு கேட்டதும், ‘கண்டு புடிங்க’ன்னு ஒரு ஸ்மைலி அனுப்புனாரு. போய்யா ஒனக்கு வேற பொழப்பில்லன்னு விட்டுட்டேன்.

அண்ணாச்சியே வழிக்கு வந்தாரு. “அவ்வளவும் பெய்ன் பாம் சின்ன பாட்டில். எங்கூட்டு அம்மிணிக்கு தலைமாட்டுல ஒரு டப்பா இருக்கணும். அதைத் தடவினாத்தான் தூக்கம் வருதுன்னு. அவங்க இதுவரை வாங்குனதைத் தூக்கிப் போடாம எடுத்து ஒளிச்சு வச்சிருந்தேன். பாப்பாதான் சொல்லுச்சு. இதை வச்சு கண்ணாடி மாளிகை கட்டிரலாம்னு. கட்டிட்டோம்ல. அம்மிணி மஹால்னு பேர் வச்சு ஹால்ல ஷோ கேஸ்ல வச்சிருக்கோம் இப்போ”ன்னு விலாவரியா விவரிச்சாரு.

சும்மா இல்லாம எங்க அம்மிணிட்ட அதைக் காட்டுனேன். ரொம்ப நேரம் அதையே உத்துப் பார்க்கவும் எனக்கு பயம் வந்துருச்சு.

“இதெல்லாம் என்ன கிறுக்குத்தனம். தூக்கிப்போட்டு போகாம குப்பையை சேர்த்து வச்சு அதுல மஹால் கட்டி இருக்காங்க”ன்னு அலட்சியமா சொன்னேன். அம்மிணி தீர்க்கமா முறைச்சாங்க.

“இதெல்லாம் கலா ரசனை. ஒங்களுக்கு எங்க புரியப் போவுது. வீட்டுல நான் என்ன ஆல்ட்ரேஷன் செஞ்சாலும் அதுவே நான் சொன்னாத்தான் தெரியும். பொறுக்க மாட்டாம, ஏதாச்சும் நம்ம வீட்டுல சேஞ்ச் இருக்கான்னு ஒரு தடவை கேட்டப்போ அஞ்சாறு எட்டணா, ஒரு ரூபா காயினைக் கொடுத்தவராச்சே நீங்க”ன்னு பழசை எல்லாம் டோண்டி எடுத்து டோஸ் விட்டாங்க.

“நீ ஹெல்தியா இருக்கே. நம்ம வீட்டுல இந்த மாதிரி தலைவலித் தைல பாட்டில்ல்லாம் கிடையாதே”ன்னு ஐஸ் வச்சேன். அம்மிணி நொடிச்சுக்கிட்டாங்க. “அப்படியே அவங்க செஞ்சதைக் காப்பி அடிக்கணுமா... புதுசா யோசனை செய்யமாட்டீங்களா.”

“மகனாரைக் கேட்போமா”ன்னு சொல்லிப் பார்த்தேன். “ஒங்க மேல் மாடி காலின்னு ஒத்துக்குங்க”ன்னு சிக்சர் அடிச்சாங்க. “சரி. யோசிக்கிறேன்”னு நவுந்துட்டேன். நின்னா இன்னும் இஷ்டத்துக்கு அடிச்சு விளையாடுவாங்க.

போன்ல அப்பப்ப க்ளீன் செஞ்சிருவேன். அதனால வாட்ஸ் அப் அண்ணாச்சி இதுக்கு முன்னாடி இதே மாதிரி ஏதாவது அனுப்பியிருந்தா அதை என் ஐடியான்னு போட்டு விடலாம்னு பார்த்தா அண்ணாச்சி இன்னிக்கு அனுப்பின மெசேஜ் மட்டும்தான் இருந்துச்சு.

அவருக்கே போன் அடிச்சு கேக்கலாம்னா... வேற சங்கடமே வேணாம். மனுசன் சாதாரணமாவே 150 மெசேஜ் அனுப்புவாரு. கேட்டா டபுளாயிரும். என் போனே படுத்துரும்.

பாஸ் அடிக்கடி ஒண்ணு சொல்லுவாரு. “எதுலயாவது குழப்பம் வந்தா அதைப் பத்தி தீவிரமா யோசிச்சா குழப்பம் இன்னும் அதிகமாவும். ஒரு பத்து நிமிஷம் வேற சிந்தனைல இருந்துட்டு வந்தா மனசு தெளிவாகி பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்”னு.

மனசை மாத்த பீரோவைத் திறந்து பார்த்தேன். எல்லா ரேக்குலயும் அம்மிணி ஐட்டம்ஸ். கீழ்த்தட்டுல என்னோடது அப்புறம் பீரோல பத்திரமா வைக்கணும்னு நினைச்ச ஐட்டம்ஸ் ரெண்டும் நெருக்கி அடிச்சு இருந்துச்சு. அம்மிணி ஸாரிசைப் பார்த்ததும் எத்தனை வருசமா மூச்சுத் திணறிக்கிட்டு இருக்குன்னு தோணுச்சு.

அப்பதான் ஒரு ஐடியா பளிச்சுன்னு வந்துச்சு. அதை அப்படியே படக்குன்னு போய்க் கேட்டா வொர்க் அவுட் ஆவாதுன்னு அடியிலேர்ந்து ஒரு ஸாரியை உருவினேன். பளப்பளான்னு இருந்துச்சு.

அம்மிணிட்ட அதைக் கொண்டு போய்க் காட்டுனேன். “இது எப்போ வாங்கினதுன்னு ஞாபகம் வருதா”ன்னு விசாரிச்சேன். என் ஐடியா என்னன்னா... 15 வருசம் முன்னாடின்னு சொல்வாங்க, அப்போ என் திட்டத்தை செயல்படுத்தலாம்னு. அம்மிணி முகம் பூரிப்பாச்சு.

“இதைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். ஒங்க வீட்டுக்கு மொத முறையா வந்தப்போ இதைத்தான் கட்டிக்கிட்டு வந்தேன். ஒங்களைத் தவிர எல்லாரும் எனக்கு ரொம்ப பாந்தமா இருக்குன்னு பாராட்டுனாங்க. நீங்க கண்டுகிட்ட மாதிரியே தெரியல. எனக்கும் வாயடிக்கத் தெரியாதா. அதனால அப்ப உங்ககிட்ட துருவித் துருவி விசாரிக்கல. ஒங்க தங்கச்சியே அவளுக்கு இதே போல ஒண்ணு வேணும்னு அடம் பிடிச்சா அப்போ”ன்னு உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தாங்க.

நல்லா ஞாபகம் வந்துச்சு எனக்கு. தங்கச்சி என் காதுல வந்து முனகுனது. “என்ன டேஸ்ட் ஒம் பொண்டாட்டிக்கு. மூஞ்சில அறையாறாப்ல கலர்ல புடவையைக் கட்டிக்கிட்டு மொத தடவையா நம்ம வீட்டுக்கு வராங்க. அவங்க ஊர்ல நல்ல கடையே கிடையாதா. கோணிச்சாக்கு மாதிரி துணி”ன்னு அன்னிக்கு தங்கச்சி சொன்னதை அம்மிணிட்ட இப்ப எப்படிச் சொல்றது.

“இதை எதுக்கு வெளியே எடுத்தீங்க”ன்னு பாயின்டைப் பிடிச்சாங்க. மென்னு முழுங்கவும் அதட்டுனாங்க. “என்னன்னு சொல்லுங்க. நீங்க மறைச்சாலும் கண்டுபிடிச்சிருவேன்”னு அதட்டுனதும் பயந்துட்டேன்.

உன்னை எங்க ஆபிஸ் இன்டர்னல் ஆடிட்ல போட்டுருக்கணும். எங்க கம்பெனி எப்பவும் லாபத்துலேயே இருக்கும்னு நினைச்சுக்கிட்டு அம்மிணி முகத்தைப் பார்த்தேன்.

“நானும் ஒரு ஐடியா சொல்லலாம்னு பார்த்தேன். பீரோவைப் பார்த்ததும் தோனுச்சு. ரொம்ப நாளா கட்டாம வச்சிருக்கிற புடவையை ஜன்னல் ஸ்க்ரீனா தச்சு தொங்க விட்டா நல்லா இருக்குமே. புது ஸ்க்ரீன் வாங்கற காசும் மிச்சம்னு.”

“ஒரு ஞாபகார்த்தமா வச்சிருக்கிறதை எடுத்து ஸ்க்ரீன் தைப்பீங்களா. ஏன் தான் ஒங்க புத்தி இப்டிப் போவுதோ”னுட்டு என் கையில இருந்த ஸாரியைப் பறிச்சுக்கிட்டு பீரோகிட்ட போயிட்டாங்க.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in