ஹலோ அண்ணாச்சி... அரியர்ஸ் என்னாச்சி?

ஹலோ அண்ணாச்சி... அரியர்ஸ் என்னாச்சி?
ஓவியம்: முத்து

அவரை எங்கேயோ பார்த்த நினைப்பு. ஆனா, சட்டுனு ஞாபகம் வரல. கடைத் தெருவுல மனுசன் குறுக்கே வந்து கேட் போட்டார். வணக்கம் வச்சதும் பதில் வணக்கம் செஞ்சேன். எங்கம்மிணிக்கும் வணக்கம் வச்சாரு. அம்மிணி கெத்தா தலையாட்டுனாங்க.

“இப்பவும் அதே வீட்டுலதான் குடி இருக்கீங்களா”ன்னு உரிமையா கேட்டார். ஆமான்னு தலையாட்டுனதும், “புள்ளைங்கல்லாம் நல்லா இருக்காங்களா”ன்னு அடுத்த கேள்வி. இந்தாளு என்ன குடும்பத்துல குழப்பம் உண்டாக்கிருவாரு போல இருக்கேன்னு, “ஹிஹி எனக்கு ஒரே பையன் தான்”னு அவசரமா சொன்னேன்.

“வாட்ஸ் அப்ல ஒரு தகவல் வந்துச்சு. உடனே எனக்கு ஒங்க ஞாபகம் தான் வந்துச்சு. சர்வீஸ்ல இருந்தப்போ எப்ப விசாரிச்சாலும் பொறுப்பா பதில் சொல்லுவீங்க”ன்னு எனக்குப் புகழாரம் சூட்டுனாரு. அம்மிணியைத் திம்பி பெருமையா பார்த்தேன்.

“வீட்டுல ஒரு வேலை சொன்னா ஒடம்பு வணங்காது”ன்னு அவங்க மைண்ட் வாய்ஸ் கேக்கவும் படக்குன்னு திரும்பி அவரைப் பார்த்தேன். “என்ன விஷயம்”னு விசாரிச்சா ஏதோ அபிஷியல் சர்குலர்னு சொன்னாரு. போனை வீட்டுல வச்சிட்டு வந்துட்டாராம்.

“ஒங்க நம்பர்லேர்ந்து எனக்கு ஒரு கால் கொடுங்க. ஒங்களுக்கு அந்த சர்குலரை அனுப்பி வைக்கிறேன். அரியர்ஸ் பணம் தரோம்னு போட்டுருக்கு. எவ்வளவு வரும் எப்ப வரும்னு விசாரிச்சு சொல்லுங்க”ன்னு படபடன்னு பொரிஞ்சாரு.

அவரு நம்பரைச் சொன்னதும் அதுக்கு ஒரு மிஸ்டு கால் அடிச்சேன். “ரிட்டையராகி பத்து வருசமாச்சு. செலவுக்கு பத்த மாட்டேங்குது. ஏதாச்சும் இப்ப பணம் வந்துச்சுன்னா ஒபயோகமா இருக்கும்”னு சீவித் தள்ளிட்டுப் போனாரு.

அம்மிணி அலுத்துக்கிட்டாங்க. “இதுக்குத்தான் ஒங்களைக் கடைத் தெருவுக்குக் கூட்டிகிட்டு வரதில்ல. போனவர் வந்தவருன்னு யாராச்சும் பிடிச்சுக்கிடறாங்க. நீங்களும் ஈன்னு இளிச்சுகிட்டு நிக்கிறிங்க”ன்னு பாடுனாங்க.

அவங்க சொல்லி முடிச்சப்போ ஒரு அம்மிணி வேகமா வந்தாங்க. எங்கம்மிணி கையைப் பிடிச்சுக்கிட்டு, “ரெண்டு மாடி ஏறி வர முடியலயே. ஒன்னைய எப்போ பார்க்கிறதுன்னு தவிச்சுட்டேன். நல்லா இருக்கியா”ன்னு குசலம் விசாரிக்கவும் அரை மணி பேச்சு ஓடுச்சு.

அரை மனசா பிரியா விடை கொடுத்துக்கிட்டாங்க. “எவ்ளோ நாளாச்சு இவளைப் பார்த்து”ன்னு அம்மிணி கண்ணுல ஆனந்தக் கண்ணீர். இப்ப லேட் ஆவலியான்னு நான் கேப்பேனான்னு பார்த்தாங்க. பட்டறிவு வேலை செஞ்சதால கம்னு இருக்கவும் “ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு”ன்னு அவங்களே தீர்ப்புச் சொன்னாங்க.

மாடிப்படியேறி வீட்டுக்குள்ர நுழைஞ்சப்போ போன்ல டொய்ங் சத்தம் கேட்டுச்சு. கடைத் தெருவுல பார்த்த ரிட்டையர்ட் அண்ணாச்சிதான். பொடி எழுத்துல ஒரு சர்குலரை அனுப்பி இருந்தாரு. படிக்கும்போதே கண்ணுல பூச்சி பறந்துச்சு.

சம்பளம் போடுற செக்‌ஷன்ல இருக்கிற அண்ணாச்சிக்கு அந்த சர்குலரை அனுப்பிவிட்டேன். கடைத்தெரு அண்ணாச்சி போன் அடிச்சுட்டாரு. “பார்த்தீங்களா... படிச்சீங்களா. தெளிவா போட்டுருக்கான். டிஏ உசத்தி கொடுத்துருக்கான். அரியர்ஸ் எவ்ளோ வரும்னு வொர்க் பண்ணிட்டீங்களா”ன்னு அலப்பறையை ஆரம்பிச்சாரு.

பொறுமையாச் சொன்னேன். “டீல் பண்ற ஆளுக்கு அனுப்பி இருக்கேன். நம்ம கார்பரேட் சர்குலர் கொடுத்தாத்தான் நமக்கு பணம் வரும். பார்க்கலாம்”னு. மனுசன் குமுறிட்டாரு. “லட்டு மாதிரி ஒரு சர்குலரை அனுப்பினா இப்படி எங்கியோ மழை பேஞ்சாப்ல பதில் சொல்றீங்க”ன்னு.

“ஒரு போன் கால் வருது. அவருதான்னு நினைக்கிறேன். பேசிட்டு வரேன்”னு கட் பண்ணிட்டேன். வாழ்க்கைல முதல் முறையா போனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சு போட்டுட்டேன். நைட் சாப்பாடு முடிஞ்சதும் போனை எடுத்தா 15 வாட்ஸ் அப் அழைப்பு. கடைத்தெரு அண்ணாச்சி.

மறுநாள் முக்கியமான மீட்டிங்ல இருந்தப்போ என் போன் அலறவும் பாஸ் முறைச்சாரு. ம்யூட்ல போடச் சொல்லி இருக்காரு. மறதில விட்டுருந்தேன். ஸாரி சொல்லிட்டு ம்யூட்ல போட்டாலும் வைப்ரேஷன்ல துடிச்சுது.

கடுப்படிச்சுரலாம்னு மீட்டிங் முடிஞ்சு வெளியே வந்ததும் கால் பண்ணேன். “நாதான் விசாரிச்சு சொல்றேன்னு சொன்னேன்ல”னு.

“என்ன மாப்ளே. எதை விசாரிச்சு சொல்லப் போறிங்க”ன்னு சின்ன மாமனார் குரல் கேட்டுச்சு. புது நம்பர்ல கால் வரவும் கடைத்தெரு அண்ணாச்சின்னு நினைச்சது தப்பாப் போச்சு. அவரு பேச்சு எப்பவுமே தடாலடியாத்தான் இருக்கும்.

“ஃப்ரெண்டுன்னு நினைச்சு...”ன்னு அசடு வழிஞ்சதும் “அம்மிணி அப்பவே சொன்னா. இப்பல்லாம் நீங்க ஒரு நிலையா இல்லன்னு. முடிஞ்சா டோட்டல் செக்கப் ஒண்ணு செஞ்சு பார்த்துருங்க. வயசாகிட்டு போவுதுல்ல. இப்படித்தான் என் பக்கத்து வீட்டுல அசட்டையா இருந்தான். எவ்ளோ சொல்லியும் கேக்கல. கேஸ் டிரபுள்னு அவனாவே தப்பா நினைச்சுகிட்டு”ன்னு பேசிக்கிட்டே போனாரு.

எனக்கும் டிக்கெட்ட் கொடுத்துருவாரோன்னு பயத்துல ஒடனே சொன்னேன். “நான் பார்த்துக்கிறேன்”னு. அவர் விடறதா இல்ல. “ஹெல்த் முக்கியம் மாப்ள. எது போனாலும் சம்பாரிச்சுரலாம். ஆனா ஹெல்த் போனா திரும்ப வராது. என் சகலை ஒருத்தன் இப்படித்தான்”னு அடுத்த மேட்டருக்குப் போனாரு.

“பாஸ் கூப்பிடறாரு. அப்புறம் பேசறேன்”னு கட் பண்ணிட்டு மூச்சுவிட்டேன். மறுபடி போன் அடிச்சுது. யாருன்னு பார்க்காம எடுத்ததும், “எப்ப வருதாம்”னு ஒரு லேடி வாய்ஸ் கேட்டுச்சு. அண்ணாச்சி தான் பேசுனா பதில் வராதுன்னு அவர் வீட்டம்மிணியை பேசச் சொல்லிட்டாரோன்னு எரிச்சல்.

“எது எப்ப வருமோ அது அப்ப வரும்”னு லைட்டா கத்துனேன். “ஒங்களுக்கு என்னாச்சி. சிலிண்டர் புக் பண்ணச் சொன்னேனே. அது எப்ப வருதுன்னு கேட்டா கத்துறிங்க”ன்னு அம்மிணி குரல் தெளிவா கேட்டுச்சு.

அட கடவுளே. அவசரப்பட்டுட்டேனா. “நாளைக்கு வந்துரும்”னு பம்மிட்டு ஜக்ல இருந்த தண்ணி முழுக்கக் குடிச்சேன்.

மீட்டிங்ல பேசுனதைக் குறிச்சுவச்சு கொண்டு வரச் சொல்லி இருந்தாரு பாஸ். கொண்டு போனதும், “அது கிடக்கட்டும். ஏன் பேயறைஞ்சாப்ல இருக்கே”ன்னு விசாரிச்சாரு. சர்குலரைக் காட்டுனேன். “ஒருத்தரு என்னை விடாம டார்ச்சர் பண்றாரு”ன்னு.

படிச்சுட்டு சிரிச்சாரு. “இது நமக்கு இல்ல. நல்லா பார்த்தியா... ஸ்டேட் கவர்ன்மென்ட் சர்குலர்!”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in