அம்மிணி வீடா... அன்னதானக் கூடமா?

அம்மிணி வீடா... அன்னதானக் கூடமா?
ஓவியம்: முத்து

சங்கீதா ட்ராவல்ஸ்னு காட்டுக் கத்தல் கேட்டது போன் அடிச்சதும். அம்மிணியைப் பார்த்தேன். "ஒங்க ஒறவுன்னு நம்பர் சொன்னே. யாரோ சங்கீதான்னு சொல்றாங்க"ன்னு கேட்டேன்.

அம்மிணி தலையில அடிச்சுக்கிட்டாங்க. "அண்ணன் தான் ட்ராவல்ஸ் வச்சிருக்காரு. கொண்டாங்க போனை”ன்னு பிடுங்கிக்கிட்டாங்க.

“இவருதாண்ணே... மத்த நேரம் வாய் கிழியும். நம்ம மனுசங்ககிட்ட பேசணும்னா மட்டும் சொதப்புவாரு”னு புகார் வாசிச்சாங்க. அப்புறம் ஒரே சிரிப்புத்தான். பிறந்த வீடு, அந்த ஊர்க்காரங்கக்கிட்ட பேசுறதுன்னா அம்மிணிக்கு பேச்சு முழுக்க சிரிப்பு மழைதான்.

“இந்தப் பக்கம் ஒங்க வண்டி சவாரி வந்துச்சுன்னா சொல்லுங்கண்ணா. ட்ராப் மட்டும் இருந்தா ரிடர்ன்ல பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்களே. அதுக்குதான் போன் செஞ்சேன்”னாங்க. அவர் பேச ஆரம்பிச்சதும் இரைச்சல் மட்டும் கேட்டுச்சு.

ஊம் ஊம்னு அம்மிணி பாட்டுப் பாடுனாங்க. “இவருக்கு ஓட்டத் தெரியாதுங்கண்ணா. என்னைத்தான் ஓட்டுவாரு. இதோ அவர்ட்ட தரேன். பேசுங்க”ன்னு போனை நீட்டுனாங்க. சங்கீதாட்ட பேச நடுக்கமா இருந்தாலும் மாட்டேன்னு சொல்லவும் பயம்.

“ஒங்க வசதிக்கு சொந்தமாக் கார் வாங்கி ஓட்டலாமே. லைசன்ஸ் கூட வச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அம்மிணி சொல்லுச்சு”ன்னாரு.

“கார் வாங்க வசதி இருக்கு. எதுக்குன்னு விட்டுட்டேன். போன் அடிச்சா ட்ராவல்ஸ் கார் வருதுல்ல”ன்னு கெத்தா சொன்னேன்.

ஹா ஹான்னு சிரிச்சாரு. “எங்களுக்கும் பொழப்பு ஓடும்ல. நல்ல மனசு. அம்மிணி வீட்டுலதான் சின்ன வயசுல வளர்ந்தேன். அவங்கம்மா கையால சோறு ஊட்டுவாங்க. இப்போ நல்ல நிலைமைக்கு வந்தாலும் பழசை மறக்கக் கூடாதுல்ல”ன்னு கத்தி ஓஞ்சாரு.

“என்ன சொன்னாரு”ன்னு அம்மிணி கேட்டாங்க. சோறு ஊட்டுன கதையைச் சொன்னதும் முகமெல்லாம் பூரிப்பு. “எப்பவும் எங்க சொந்தத்துல நாலஞ்சு பேரு எங்க வீட்டுலதான் இருப்பாங்க”ன்னு சொன்னப்போ அது அம்மிணி வீடா இல்லாட்டி அன்னதானக் கூடமான்னு யோசிச்சேன்.

“எம்ப்டியா தானே திரும்பிப் போவும். போய் எறங்கிக்கிடலாம்னு தான் கேட்டு வச்சேன். அவருதான் இந்த ஐடியா கொடுத்தது. உனக்கு ஏதாச்சும் செஞ்சே ஆவணும்னு அடம் பிடிச்சாரு போன தடவை ஒரு பங்ஷன்ல பார்த்தப்போ. அன்னிக்கு நாம கார்ல தான் போயிருந்தோம். அதனால அவரு ட்ராவல்ஸ் கார் யூஸ் பண்ணல.”

“கார் எம்ப்டியா போவுதுன்னு நாம எதுக்கு வெட்டியா ஒரு பயணம் போவணும்”னு ஆரம்பிச்சதும் அம்மிணிக்கு சுர்ர்ன்னு ஏறுச்சு. “படையல் போடணும். வாங்கன்னு அப்பா போன் செஞ்சாருன்னு சொன்னேன்ல”னாங்க.

“நீங்க போயிட்டு வாங்க”ன்னு மகனாரைக் கோத்து விட்டேன். “அப்பாவும் புள்ளையும் இதே ராகத்தைத்தான் எப்பவும் பாடுவீங்க. அவனைக் கேட்டா அப்பாவைக் கூட்டிட்டு போன்னு சொல்றான்”னு நொந்துக்கிட்டாங்க.

தப்பிச்சுட்டானா பய. புத்திசாலின்னு மனசுக்குள்ர பாராட்டுனேன். சங்கீதா மறுபடி போன் பண்ணிட்டாரு. “சரியா நாலு மணிக்கு கார் வந்துரும்”னு. அவர் சொன்ன நேரம் தப்பிப் போய் அம்மிணி போன் அடிச்சே ஓஞ்சுட்டாங்க. சங்கீதா அவரு தப்பிச்சுக்க டிரைவர் நம்பரைக் கொடுத்து நீயே பாலோ பண்ணிக்கன்னுட்டாரு.

அம்மிணி விடுவாங்களா. டிரைவருக்கு அடிச்சாங்க. “இப்பதான் அய்யா சொன்னாரு. வந்துக்கிட்டே இருக்கேம்மா”னாரு மொத தடவை பதில் சொன்னப்போ. பத்து நிமிசத்துக்கொரு தடவை அம்மிணி அடிச்சதும், “ஒங்க வீடு எங்கே இருக்கு. வழி சொல்லுங்க”ன்னு சாமர்த்தியமா கேட்டாரு.

அம்மிணியும் அப்புராணியா வழி சொல்ல ஆரம்பிச்சதும், “லெஃப்ட்லயா, ரைட்லயா. நேரா வந்தா தெரு முடிஞ்சிருச்சே”ன்னு இஷ்டத்துக்கு பதில் சொன்னாரு.

“இந்தாங்க. நீங்களே அவர்ட்ட பேசுங்க. நான் ரெடி ஆகிக்கறேன்”னு போனை என் கையில கொடுத்துட்டாங்க. “பொறுமையா வாங்க”ன்னு நான் சொன்னதும் டிரைவர் குஷி ஆயிட்டாரு.

அம்மிணி ரெடி ஆவறதுக்குள்ர கார் வந்திருச்சு. அம்மிணி பால்கனிலேர்ந்து எட்டிப் பார்த்து, “எங்க வீட்டுக்குத்தான்”னு தெருவைப் பார்த்துக் கத்துனாங்க. அவங்க ஊருக்குப் போவறதை அபார்ட்மென்ட்டுக்கு தெரிவிச்சே ஆகணும்ல.

கீழே இறங்கி வந்தோம். “ஏஸி இருக்குல்ல”ன்னு ஆரம்பிச்சாங்க. “ஏதோ பிரச்சினை வேலை செய்யல”ன்னு கொட்டாவி விட்டாரு டிரைவர். பின் சீட்டுல ஒக்கார்ந்துகிட்டு என்னை டிரைவர் பக்கத்துல ஒக்காரச் சொல்லிட்டாங்க. “ஒரு நாளாச்சும் ஹாய்யா இடிபாடு இல்லாம வரேன்”னு சமாதானம் சொன்னாங்க.

வண்டி கிளம்புனதும் அம்மிணி போன்ல தகவல் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. பாலம் தாண்டி திரும்பி நாலஞ்சு கிலோ மீட்டர் போயிருக்கும். ஒரு டீக்கடையைப் பார்த்ததும் டிரைவர் ஓரங்கட்டுனாரு. “டீ குடிக்கலாமா”ன்னு கேட்டாரு.

அம்மிணி முந்திக்கிட்டு, “அதெல்லாம் நாங்க வீட்டுலயே குடிச்சுட்டோம்”னு பதில் சொன்னாங்க. டிரைவர் சூசகமா சொன்னதைப் புரிஞ்சுக்கிட்டு நானும் இறங்குனேன். “இவரு ஒருத்தரு. தானே போய் மாட்டிக்குவாரு”ன்னு அம்மிணி முனகுனாங்க.

டீ குடிக்கிறச்ச காரைப் பத்தி விசாரிச்சேன். என்ன மைலேஜ் கொடுக்குது அப்படி இப்படின்னு. “கார் ஒட்டுவீங்களா”ன்னு டிரைவர் கேட்கவும் மையமா தலை ஆட்டுனேன். டீ கிளாசை வச்சுட்டு திரும்பும்போது என்னை முந்திக்கிட்டு என் சீட்டுல அவரு ஒக்காந்தாரு.

“மூணு நாளா சரியான தூக்கம் இல்லாம ஓட்டிக்கிட்டு இருக்கேன். அரை மணி ரெஸ்ட் எடுத்தா தெம்பு வந்துரும். நீங்க ஓட்டறீங்களா”ன்னு என்னைப் பார்த்தாரு.

“அது வந்து நான் காரு ஓட்டி...”ன்னு தடுமாறுனப்போ “ஓட்டுங்க சார். சும்மா ஜம்னு போவும்”னு சீட்டுல சாஞ்சுட்டாரு. அம்மிணிக்கு இப்போ உசுரு பயம் கண்ணுல தெரிஞ்சுச்சு. எறங்கிப் போயிரலாமான்னு யோசிச்ச மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்டுச்சு.

ஸ்டார்ட் செஞ்சபோதே கார் தீனஸ்வரமா முனகிட்டே குலுங்குச்சு. டிரைவர் எதுக்கும் அசராம கர்மயோகி மாதிரி பார்த்தாரு. ஒரு கிலோ மீட்டர் கூடப் போயிருக்க மாட்டோம். பின்னால முன்னால வந்த வண்டிங்க எரிச்சலா ஹார்ன் அடிச்சு ரோட்டை விட்டு போய்யான்னு சொல்றாப்ல மிரட்டுனாங்க.

ஓட்டறதை நிறுத்திட்டு டிரைவரைப் பார்த்தேன். கண்ணுல கெஞ்சலோட. எதுவும் பேசாம டிரைவர் தன் சீட்டுக்கு வந்தாரு. அம்மிணி போன்ல இப்போ சொன்னாங்க. “நல்ல டிரைவர்ண்ணா. பத்திரமா கூட்டிக்கிட்டு வராரு!”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in