இரண்டாம் கைப்பேசிப் போர்..!

இரண்டாம் கைப்பேசிப் போர்..!
ஓவியம்: முத்து

சொன்னா நம்பமாட்டீங்க. கொஞ்ச நாளாவே அம்மிணி போக்குல மாற்றம் தெரிய ஆரம்பிச்சுது. சின்னதாத் தெரிய ஆரம்பிச்சது அப்புறம் பூகம்பமா வெடிச்சுது. என்னன்னு ஆரம்பத்துலேர்ந்து சொல்றேன்.

“இப்பெல்லாம் டக் டக்குனு வேலைய முடிச்சிட்டு எதிர்வீட்டு அம்மிணியும் நீயும் பேசிக்கிட்டு இருக்கீங்க”ன்னு கேட்டு வச்சேன்.

“நம்ம கிச்சனையும் அவ வீட்டையும் போய்ப் பாருங்க. பொரியல் கூட்டு, ரசம், அப்பளம்னு செஞ்சு வச்சிட்டுத்தான் போறேன். அவ சாதம் மட்டும் வச்சிட்டு நேத்துக் குழம்பை ஊத்திக்க சொல்றா”ன்னு குமுறினாங்க.

“அந்த மீனிங்ல சொல்லல... என்ன இருந்தாலும் உன் கைப்பக்குவம் யாருக்கு வரும். முன்னெல்லாம் கிச்சன், வாஷிங் மெஷின்னு சின்ன வட்டத்துல சுத்தி வருவியே... இப்ப என்னாச்சின்னு கேட்டேன்”னு பம்மினேன்.

அம்மிணி மலை ஏறுனவங்க இன்னும் இறங்கல. போனைக் கையில் எடுத்துக்கிட்டு எதிர் வீட்டுக்குப் போயிட்டாங்க. அம்மிணி குரல் தான் வழக்கம் போல ஹைபிட்ச்ல கேட்டுச்சு. எ வீ அம்மிணியும் சளைச்ச மாதிரி தெரியல. அவங்களோட குரலும் ரெட்டை நாயனம் மாதிரி கேக்கவும் எனக்குக் குலை நடுங்கிச்சு.

அக்கம் பக்கத்தோட சுமுக உறவு முறியப்போவுதோன்னு திணறிட்டேன். அரை மணி கழிச்சு அம்மிணி புஸுபுஸுன்னு மூச்சு விட்டுக்கிட்டு வந்தாங்க. என்னன்னு கேக்கவும் பயம். நைட் சாப்பாடு மௌனத்துலயே முடிஞ்சிது. ஒரு வித்தியாச சத்தம் பாதித் தூக்கத்துல கேட்டுச்சு. எரிச்சலோட முழிச்சுப் பார்த்தேன்.

அம்மிணி சேர்ல உக்காந்து போன்ல எதையோ கேட்டுக்கிட்டு இருந்தாங்க. “என்னம்மா இந்த நேரத்துல யார் போன் பண்ணாங்க. ஒடம்பு சரியில்லையா யாருக்காச்சும்”னு யதார்த்தமா கேட்டேன்.

உஸ்னு வாய்ல விரல்வச்சு அதட்டுனாங்க. மணி என்னவோ அஞ்சு ஆயிருச்சு. ஆனா, எங்க அபார்ட்மென்ட் நிசப்தமாத்தான் இருந்துச்சு. கீழ் வீட்டுல மட்டும் இப்பவே சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க போல. லைட்டா ஒரு வாசனை வந்துச்சு. அவருக்கு ஏதோ ஃபேக்டரில வேலை. கேரியர் எடுத்துக்கிட்டுப் போவாரு.

“எங்களுக்கும் அரசியல் தெரியும். வேணாம். விட்டுரு”னு கேட்டுச்சு. ஏதோ ஒரு கட்சியோட ஆதரவு வீடியோ. எதிர்க்கட்சிக்காரர் முன்னால பேசுனதையும் இப்ப பேசுனதையும் மாத்தி மாத்தி வச்சு நடுவுல காமெடிக் காட்சியையும் பொருத்தமா போட்டுருந்தாங்க.

தூக்கம் கெட்டதை விட இப்ப தூக்கமே போயிருச்சு. அம்மிணிக்கு என்னாச்சு. சமையல் குறிப்பு, சங்கீத சீஸன், சீரியல்னு நிம்மதியாத்தானே பொழுது போச்சு. எப்ப அரசியல்ல குதிச்சாங்க? அதுவும் விடியற்காலைல...

‘அரசியல் நோக்கர்கள் உன்னிப்பா கவனிக்கறாங்க. நீங்களும் உடனுக்குடன் எங்கள் செய்திகளை அறிய சப்ஸ்க்ரைப் பண்ணுங்க, பெல் பட்டனை அமுக்குங்க’ன்னு கேட்டாலே உதறுச்சு.

அம்மிணி வேகமாக் கையைத் தட்டுனாங்க. தலையை ஆட்டுனாங்க. “சொன்னா அவ கேட்டாத்தானே. இல்லவே இல்லைன்னு சாதிச்சுட்டா. எந்த வீடியோன்னு தேடறதுக்குள்ர கத்தி ஓஞ்சுட்டா. இப்பவே இந்த லிங்கை அவளுக்கு ஃபார்வேர்ட் பண்றேன்”னு எ வீ அம்மிணிக்கு அனுப்பினாங்க.

அடுத்த ரெண்டாவது நிமிஷம் அம்மிணி போன்ல ஒரு டொய்ங் சத்தம். எ வீ அம்மிணியும் தூங்கல போல. ‘நீ இந்த வீடியோவைப் பாரு’ன்னு அவங்க பங்குக்கு ஒண்ணு அனுப்பியிருந்தாங்க. இந்த இரண்டாம் கைபேசிப் போர் காலங்கார்த்தாலயான்னு எந்திரிச்சு ஹாலுக்குப் போயிட்டேன்.

கரெக்டா எ வீ அம்மிணி கோலம் போட வரச்ச எங்கம்மிணியும் பார்த்துக்கிட்டே இருந்து மக்ல தண்ணியோட போனாங்க. கோலத்தைக் கொஞ்சம் பெருசா இழுத்து எல்லை தாண்டிய கோல வாதத்தை ஆரம்பிச்சாங்க. எ வீ அம்மிணியும் சளைக்கல. ரெண்டு கோலமும் பின்னிப் பிணைஞ்சுக்கிச்சு.

சூடே இல்லாத காபி கஷாயத்தை மடக்குனு முழுங்கிட்டு அம்மிணிட்ட பொது மன்னிப்பைக் கேட்டுப் பார்த்தேன். “அரசியல் தெரிஞ்சுக்கிறது தப்பில்ல. ஆனா, அதுக்காவ எதிர் வீட்டோட வம்புல முடியறது சரியா”ன்னு.

“எனக்கு அப்பவே தெரியும். நீங்க அவ பக்கம்தான் பேசுவீங்கன்னு. 365 நாளும் சோத்தைச் சுடச் சுட பொங்கிப் போட்டாலும் மூணு வருசத்துக்கு ஒரு தடவை கிடைக்கிற சாக்லேட்டுக்குத்தானே ஒங்க சப்போர்ட்”னு ஒரு அம்பை விட்டப்போ போன வருசம் சாப்பிட்ட சாக்லேட்டே வாய்க்கு வந்த பிரமை எனக்கு.

கீழே போய் கொஞ்சம் காத்தும் நிம்மதியும் வாங்கலாம்னு போனா, ஒருத்தர் பிடிச்சுக்கிட்டாரு. “நம்ம அபார்ட்மென்ட் அமைதிப் பூங்காவா இருந்துச்சு. இப்ப உங்க அம்மிணியும் எ வீ அம்மிணியும் அவங்கவங்க சைடுக்கு ஆள் சேர்க்கிறாங்க. வீட்டுக்கு வரவே பயம்மா இருக்கு”ன்னு அழுதாரு.

எனக்கும் அதே பிரச்சினைதான்னு அவர்ட்ட சொல்ல முடியல. மனுசன் டமாரம் அடிச்சிருவாரு. “சரிபண்ணிரலாம்”னு பொத்தாம் பொதுவா ஒரு வாக்குறுதியைக் கொடுத்தேன். அபார்ட்மென்ட் நோட்டீஸ் போர்டுல யாரோ ஒரு விஷமக்கார குடியிருப்பாளர், ‘இங்கு அரசியல் பேசக்கூடாது’ன்னு எழுதி வச்சிருந்தாரு.

அம்மிணியோட மொபைல் எப்பவும் அலறிக்கிட்டே இருந்துச்சு. இல்லாட்டி சார்ஜ்ல இருந்துச்சு. ரெஸ்ட்டே இல்லாம உழைக்கிற அரசியல்வாதி மாதிரி மாறிடுச்சு!

எங்க அம்மிணி சும்மா இருந்தாலும் எ வீ அம்மிணி விடறதா இல்லை. ஒரு டம்ளரோட வந்து, “உறை ஊத்த மறந்துட்டேன். கொஞ்சம் மோர் இருக்கா அம்மிணி”ன்னு கேட்டாங்க. ஒரே உறைல ரெண்டு மோர்னு குண்டக்க மண்டக்க மைண்ட்ல ஓடுச்சு.

மோரை வாங்கிட்டு போய்த் தொலைக்காம “இன்னிக்கு புது வீடியோ ரிலீஸ் பண்ணியிருக்காரு. பாரு. செமயா இருக்கு”ன்னு திரியைக் கிள்ளிப் போட்டுட்டு போனாங்க.

அம்மிணிக்கும் வேண்டி இருந்துச்சு போல. அலட்சியமா கேட்டாப்ல நின்னவங்க எ வீ அம்மிணி போனதும் அந்த வீடியோவை ஹெட் போன் வச்சு கேட்டாங்க.

இதுவும் மாறுச்சு. திடீர்னு ரெண்டு பேரும் அரசியல் பேசாம பொதுவா மறுபடி பேசிக்கிட்டு இருந்தாங்க. குழப்பத்தோட டிவியைப் பார்த்தேன். “வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் இணைய வாய்ப்புண்டு. அரசியல்ல நிரந்தர நண்பரும் இல்லை ... நிரந்தர எதிரியும் இல்லை”ன்னு நியூஸ் ஓடுச்சு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in