என்னடா இந்த சாக்லேட்டுக்கு வந்த சோதன..!

என்னடா இந்த சாக்லேட்டுக்கு வந்த சோதன..!
ஓவியம்: முத்து

அடுத்த சீட்டு அம்மிணி ஒரு நகைப் பெட்டியோட சுத்திக்கிட்டு இருந்தாங்க. “தம்பி ஊர்லேர்ந்து வந்துச்சு. அக்காவுக்குன்னு வாங்கிட்டு வந்தானாம். எத்தனையோ வெள்ளின்னு விலை சொல்லுச்சு”ன்னு சொன்னது கேட்டுச்சு.

பக்கத்து சீட்டு அண்ணாச்சி பொட்டிய வாங்கிப் பாத்தாரு. “தங்க நகையை வச்சுகிட்டு வெள்ளின்னு சொல்றீங்க”ன்னு அறுவை ஜோக் அடிச்சாரு. “சிங்கப்பூர் தம்பியா... எப்ப வந்தாரு”ன்னு விசாரிச்சேன்.

“நகையக் கையில வாங்கிப் பாருங்க. ஒங்கம்மிணிக்கு வாங்கித் தரலாம்ல”னு ப சீ அண்ணாச்சி கோத்து விட்டாரு. பட்டுப் புடவை, நகைன்னாலே எனக்கு அலர்ஜி. எட்டிப் பார்த்து, ”நல்லாருக்கு”ன்னு சொல்லவும், “22 காரட்”னு அண்ணாச்சி கூவுனாரு.

“நான்னா அவனுக்குப் பிரியம். ஆபிசுக்குக் கொண்டு போய் காட்டுன்னு சொன்னான். ‘யாராச்சும் வேணும்னு ஆசைப்பட்டா’ன்னு கேட்டதுக்கு. ‘இப்ப என்ன... விலைக்குக் கொடுத்துரு, அடுத்த முறை வரச்ச இன்னும் சூப்பரா ஒண்ணு வாங்கிட்டு வரேங்கிறான்”னாங்க.

அம்மிணியோட பிசினஸ் டெக்னிக் அப்பதான் புரிஞ்சிது. ஒவ்வொரு தடவையும் இதே போல சிங்கப்பூர் நகைன்னு கொண்டு வந்து ஆபிஸ்ல வித்துருவாங்க. புடவை, நகைன்னு இப்படி ஏதாச்சும் ஒண்ணு ஓடும்.

பாஸுக்கு தகவல் தெரிஞ்சப்போ அம்மிணி அசரவே இல்லை. இருந்ததுலேயே பெஸ்ட்டா ஒரு ஸாரியைக் காட்டுனாங்க. பாஸோட அம்மிணிக்கு நல்லா சூட் ஆவும்னு பிட் போட்டாங்க. “சரி சரி வொர்க் டிஸ்டர்ப் ஆவாம பண்ணுங்க”ன்னு புடவையோட போயிட்டாரு.

“என் ஐட்டம் வரலியா”ன்னு வழிஞ்சேன். “ஒங்க ஐட்டம் இல்லாமயா. அவன் ஊருக்கு வரான்னு போன் செஞ்சதுமே முதல்ல புக் பண்ணது அதான்”னு ஒரு டப்பாவை நீட்டுனாங்க. சாக்லேட்ஸ்!

அதென்னவோ யார் வந்தாலும் சாக்லேட் கொண்டு வந்தீங்களான்னு கேட்டுருவேன். பர்மிஷன், லீவு போடணும்னா, “ஸார் அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டார். அவருதான் சாக்லேட் பேபியாச்சே”ன்னு உசுப்பேத்தி வச்சிருக்காங்க ஆபிஸ்ல.

ப சீ அண்ணாச்சி என் கையிலேர்ந்து டப்பாவைப் பறிக்க வந்தப்ப அம்மிணி ஸ்டாப் சொல்லிட்டாங்க. “அது முழுக்க அவருக்கு. நமக்கு இது”ன்னு இன்னொரு பெரிய டப்பாவைக் காட்டுனாங்க. என் டப்பாவை ஒளிச்சுவச்சிட்டு அதுலயும் ஷேருக்குக் கை நீட்டுனேன்.

ப சீ அண்ணாச்சி முறைச்சாரு. அம்மிணி, “போனாப் போவுது. ஒண்ணு கொடுங்க”ன்னு சிபாரிசு செஞ்சாங்க. ஸ்வீட்னு எது கொடுத்தாலும் வாங்கிக்காம இருக்கிற ஒரு ஜீவன் எங்க ஆபிஸ்லயும் உண்டு. சாக்லேட் டப்பாவை நீட்டுனதும் வேணாம்னு வணக்கம் போட்டாரு.

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம சொல்லிட்டேன். “சாக்லேட் வேணாமா... அதிசயமா இருக்கே”ன்னு. அண்ணாச்சியும், உருகி இருந்த பேப்பரை நக்கிட்டே, “ஆமா... ஆமா”ன்னாரு. ரெண்டு பேர் கேலியா சிரிச்சாங்க.

சாக்லேட் மறுப்பாளர் சொன்னாரு. “அதை எப்படி செய்யறாங்கன்னு தெரியுமா. யூடியூப்ல பார்த்திருக்கீங்களா. மனுசன் தலைமுடில இருக்கிற புரோட்டினைப் பிரிச்சு எடுத்து சாக்லேட்ல கலக்குறாங்க”ன்னு குண்டைப் போட்டாரு.

உவேக்னு வந்துச்சு. மறுப்பாளர் விடாம மொபைலை மூஞ்சிக்கு நேரா நீட்டுனாரு. “இதுல பாருங்க... சாக்லேட்ல எதை மிக்ஸ் பண்றாங்கன்னு. படிச்சா இப்பவே நிறுத்திருவீங்க”ன்னாரு.

ப சீ அண்ணாச்சி முழு சாக்லேட்டையும் முழுங்கிட்டுச் சொன்னாரு. “சாக்லேட் மட்டும் இல்லை. நாம் சாப்பிடுற எல்லாத்துலயும் ஏதாச்சும் கலந்துகிட்டுத்தான் இருக்காங்க. ஹோட்டல்ல சாப்பிடறோம். அது மட்டும் சுத்தமா. போவீங்களா...”ன்னு அடுத்த சாக்லெட்டுக்கு கை நீட்டுனாரு.

மறுப்பாளர் பிடிவாதமா என்னை அவர் கட்சிக்கு இழுக்க முயற்சி பண்ணாரு. “சாக்லேட்டை நிறுத்தாட்டியும் பரவால்ல. இதைப் படிங்க. அறிவை வளர்த்துக்குங்க”ன்னு மொபைலை என் கையில திணிச்சுட்டாரு.

அனகோண்டாவோட கக்காவை மிக்ஸ் பண்றாங்கன்னு மட்டும்தான் சொல்லல. கொஞ்சம் படிக்கிறச்சயே டென்ஷன் ஆச்சு. முழுசா படிச்ச மாதிரி பாவ்லா காட்டிட்டு மொபைலைத் திருப்பிக் கொடுத்துட்டேன். அவரு வெற்றிப் புன்னகையோட நகர்ந்து போகவும், ப சீ அண்ணாச்சி கேட்டாரு. “அப்ப உங்க டப்பாவை எனக்குக் கொடுத்துருவீங்களா”ன்னு.

அம்மிணி பதறிப் போய் என்கிட்ட வந்தாங்க. “அவரு எப்பவுமே இப்படித்தாங்க. அன்னிக்கு என் டிபன் பாக்ஸைப் பார்த்துட்டு, ‘இதெல்லாம் ஜங்க் ஃபுட். சாப்டா அல்சர் வரும், கேன்சர்ல கொண்டு போய் விடும்’னு பயமுறுத்திட்டாரு.”

“அப்படி என்ன கொண்டு வந்தீங்க...”ன்னு அண்ணாச்சி ஆர்வமா கேட்டாரு. “இட்லி ஃப்ரையும் வடகறியும். அது என்னன்னு விசாரிக்காம அவராவே ஒரு முடிவு பண்ணி பேசிட்டுப் போயிட்டாரு”னாங்க. என் மொபைல்ல டொய்ங்னு ஒரு சவுண்டு கேட்டுச்சு.

மறுப்பாளர் அனுப்பினது. ஏதோ ஒரு லிங்க். சாக்லேட் ஏன் கூடாதுன்னு. ஒரு ஸ்மைலி போட்டு அனுப்பி இருந்தாரு. ‘வீட்டுக்குப் போய் இதையும் பொறுமையா படிக்கவும்’ ப சீ அண்ணாச்சி எட்டிப்பார்த்துட்டு “போச்சு, அவர்ட்ட மாட்டுனீங்களா, அரை மணிக்கு ஒரு தடவை எதையாச்சும் அனுப்பிட்டே இருப்பாரே”ன்னாரு.

சொல்லிட்டு அந்த லிங்கை அமுக்கிட்டாரு. “மனுசன் இதே பொழப்பா அலைவாரு போல”ன்னு சிரிச்சுட்டு போனைக் கொடுத்தாரு. வீட்டுக்குப் போவறவரை சாக்லேட் விளம்பரமா வந்துட்டே இருந்துச்சு. அம்மிணிட்ட டப்பாவை நீட்டுனதும் ஆச்சரியமா பாத்தாங்க. “ஒங்க ஐட்டமாச்சே. படக்குன்னு கொடுத்துட்டீங்க”ன்னு. மகனாரோ அம்மிணியோ என்னைப் போல சாக்லேட் சாப்பிடமாட்டாங்க. ஒரு லிமிட் தான்.

ஃப்ரிட்ஜ்ல வச்சுட்டாங்க. ஏசி சர்வீசுக்கு கூப்பிடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. என் போனை வாங்கிப் பேசிட்டு திருப்பிக் கொடுக்கிறப்ப பார்த்துட்டாங்க போல. “என்னங்க சாக்லேட் பத்தி கன்னாபின்னானு மெசேஜ் வச்சிருக்கு.”

அப்புராணியா முழிச்சேன். “அதான் என்ன செய்யிறதுன்னு புரியல”ன்னு சொன்னதும் அம்மிணி நொடிச்சாங்க. “நாங்க சொன்னா கேப்பீங்களா. ஒட்டுமொத்த அறிவாளிங்களும் உங்க ஆபிஸ்ல தானே இருக்காங்க. அவங்க சொன்னாத்தான் எடுபடும்.”

வாசல் வராண்டால வந்து நின்னேன். எ வீ அம்மிணி கதவைத் தொறந்து வந்தவங்க, “வந்தாச்சா. கவனிக்கவே இல்லியே”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ர ஓடுனாங்க. திரும்பி வரப்போ கையில ஒரு சாக்லேட் டப்பா.

“ஒங்களுக்குப் பிடிக்குமேன்னு எந்தங்கச்சிட்ட சொல்லி வச்சிருந்தேன்; இந்தாங்க”ன்னு பிரியமா நீட்டுனாங்க!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in