வாய்ல வாஸ்து சரியில்ல..!
ஓவியம்: முத்து

வாய்ல வாஸ்து சரியில்ல..!

பக்கத்து சீட்டு அண்ணாச்சி பத்து நிமிஷமா போனில் கெஞ்சிக் கொண்டிருந்தார். “இல்ல, வந்து, ஆமா, தப்புதான்” இப்படி எல்லாமே ஒத்தை வார்த்தையில். அதற்கு மேல் அவருக்குப் பேச சான்ஸ் கொடுக்கவில்லை எதிர்முனை. போன் கட்டானதால பேயறைஞ்ச முகத்துடன் மறுபடி முயற்சி செஞ்சார். “ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது” என்கிற குரல் எங்களுக்கும் கேட்டுச்சு.

எதிர் சீட்டு அம்மிணி ஆர்வமாய் விசாரிச்சார். “என்ன சார். எதுவும் பிரச்சினையா”ன்னு கேட்கும்போதே ஏதாச்சும் பிரச்சினை இருக்கணுங்கிற ஆர்வம் அவர் குரல்ல தெரிஞ்சிது. எனக்கு விசாரிக்கத் தயக்கமாய் இருந்துச்சு. பர்சனல் மேட்டர்னு. அம்மிணி தைரியமா கேட்டதும் அண்ணாச்சி புலம்பிட்டார்.

“அவங்க கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்குப் போறாங்க”ன்னு சின்னப் புள்ளையாட்டம் கண் கலங்கினார். அம்மிணி வருத்தமான குரல்ல சொன்னாங்க. “ஹூம். எங்கம்மா போய் ஆறு வருசம் ஆச்சு. நான் கோவிச்சா ஆபிஸ்க்குத்தான் வரணும்.”

“என்னவாம் கோவிச்சுக்குற அளவுக்கு”ன்னு கேட்டேன். அம்மிணி முந்திக்கிட்டுப் பதில் சொன்னாங்க. “ஆம்பளைங்க செய்யறது எல்லாமே கோவப்படுத்துற மாதிரிதான் இருக்கும்”னு.

பொத்தாம் பொதுவா திட்டுனதும் எனக்கு சுர்ருனு ஏறுச்சு. அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு. மன்த்லி ஸ்டேட்மென்ட் இன்னிக்கு ஈவ்னிங்குள்ர போயாகணும். அம்மிணிட்ட வாயை விட்டா கைப்பையைத் தூக்கிட்டுக் கிளம்பிருவாங்க.

“எங்களுக்கும் போகணும்னு தோணும். ஆனா, நாங்க எங்கே போகறது”ன்னு அடக்கமாட்டாமல் சொல்லிட்டேன். “நீங்களும் நாங்களும் ஒண்ணா”ன்னு செவ செவன்னு மூஞ்சியை வச்சுக்கிட்டு அம்மிணி கம்ப்யூட்டர் கீபோர்டைத் தள்ளிவிட்டாங்க.

பதறிப் போய், “அப்படிச் சொல்லல. பாவம் அவருக்கு ஒரு ஆறுதலா இருக்கட்டும்”னு சமாளிச்சேன். அண்ணாச்சி மொபைலையே உத்துப் பார்த்துக்கிட்டிருந்தார். “சும்மா பேச்சுக்கு மிரட்டி இருப்பாங்க. வீட்டுக்குப் போனா இருப்பாங்க”ன்னு தைரியம் சொன்னேன்.

அண்ணாச்சி தேம்புனாரு. “வருசத்துக்கு ஒரு தடவையாச்சும் போயிருவாங்க. இந்த வருசம் ஜூன் வந்துருச்சே. தப்பிச்சுட்டேன்னு நினைச்சேன். ரெண்டு பொட்டப் புள்ளைங்களை வச்சுகிட்டு நான் படற அவஸ்தை...”ன்னு கண் கலங்கினாரு.

அம்மிணி அவருக்கு ஆறுதலா ஏதோ சொல்ல, ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி எப்பல்லாம் ஏன் கோவிச்சுக்கிட்டுப் போனாங்கன்னு ஆனுவல் ஸ்டேட்மென்ட் எடுக்க ஆரம்பிச்சாங்க. ஆபிஸ் ஸ்டேட்மென்ட் என்னாவுமோன்னு நடுங்கிக்கிட்டே பார்த்தேன்.

அஞ்சு மணி ஆனதும் அம்மிணி சொன்னாங்க. “சக மனுசன் கஷ்டப்படும்போது எப்படி சார் வேலைல மனசு ஒட்டும்? ஏதோ போட்டுருக்கேன். நீங்க சரி பாத்துட்டு அனுப்புங்க”ன்னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டாங்க. அண்ணாச்சியும் ஓடிட்டாரு.

கம்ப்யூட்டர் ஃபைலைத் திறந்தா காலிக் கட்டம் மட்டும் தான் இருந்துச்சு. நாலு வீக் நம்பர் மட்டும் அடிச்சு வச்சிருந்தாங்க. முழு வேலையும் பார்த்துட்டு கிளம்பும்போது மணி ஏழரை. எனக்கும் ஒரு ஏழரை ஸ்டார்ட் ஆனது புரியாம வீட்டுக்குப் போனேன்.

வீட்டுல டிவி ஓடல. மகனார் மௌனச் சாமியாரா லாப்டாப்போட உக்காந்திருந்தார். அம்மிணி மொபைல் சார்ஜ்ல இருந்துச்சு. “ஹிஹி இன்னிக்கு என்ன அமைதி தினமா”ன்னு சிரிச்சுக்கிட்டே கேட்டேன்.

“ஒரு மனுஷி எவ்ளோ தடவை போன் அடிக்கிறது”ன்னு அம்மிணி ஆவேசமா கேட்டாங்க. பதறிப்போய் என் மொபைலை எடுத்துப் பார்த்தா அது சைலன்ட் மோட்ல இருந்துச்சு. வேலையை முடிக்கணும்னு நான் தான் அதை அப்படி வச்சிருந்தேன்.

“ஸாரிம்மா. இன்னிக்கு ஒரு சிக்கல்”னு அண்ணாச்சி மேட்டரைச் சொன்னேன். அதோட விட்டுருக்கணும். வாய்ல வாஸ்து சரியில்லாம காமெடின்னு நினைச்சுக்கிட்டு அடுத்த வரியைச் சொல்லிட்டேன். “எனக்குல்லாம் அப்படி ஒரு அதிர்ஷ்டம் இதுவரை நடக்கல”ன்னு.

மகனாரே அரண்டு போய் நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்ணுல ஒரு பரிதாபம் தெரிஞ்சிது. அம்மிணி விருட்டுன்னு உள்ளே போனாங்க. ஒரு பொட்டியை எடுத்து அவங்க துணியை அடுக்கினாங்க.

பதறிப் போய் பின்னாடியே ஓடுனேன். “விளையாட்டா சொன்னேன்பா. நம்ம வீட்டுல அப்படி எல்லாம் கிடையாதுன்னு சொல்றதுக்கு”ன்னு சமாதானக் கொடி ஆட்டுனேன். ஊஹூம். அம்மிணி அசரவே இல்லை.

எ வீ அம்மிணி குரல் கேட்டுச்சு. “வந்துட்டாரா”ன்னு. என்னைப் பார்த்ததும் அவங்க பங்குக்கு வார்த்தை விட்டாங்க. ”போன் செஞ்சா எடுக்கலன்னு அம்மிணி பாவம் தவிச்சுப் போயிட்டாங்க. என்னதான் ஆபிஸ் வேலைன்னாலும் ஒரு நிமிசம் பேசக்கூட முடியாதா”ன்னு டோஸ் விட்டாங்க.

எ வீ அண்ணாச்சி சிரிச்சுக்கிட்டே இதை வேடிக்கை பார்த்தாரு. “ஒங்களுக்கெல்லாம் பொண்டாட்டின்னா எளப்பம். ஒங்களுக்கு நாங்க அமைஞ்ச மாதிரி இல்லாம வேற டைப்புல வாய்ச்சிருக்கணும். அப்ப புரியும்”னு எ வீ அம்மிணி அர்ச்சனை செஞ்சிட்டுப் போனாங்க. நான் போன் எடுக்காத கோவத்தை எங்கம்மிணி எ வீ அம்மிணிட்ட கொட்டி இருந்துருப்பாங்க போல.

ஆபீஸ் ஸ்டேட்மென்ட் டென்ஷன், லேட்டா வந்ததுன்னு அலுப்பா இருந்துச்சு. சரி, விதி விட்ட வழின்னு பால்கனி பக்கம் போய் நின்னேன். அரை மணி ஓடுச்சு. மகனார் வந்து சாப்பிடக் கூப்பிட்டார். காலைல செஞ்ச மிச்சம்லாம் தட்டுல விழுந்துச்சு. சத்தம் காட்டாம சாப்பிட்டு முடிச்சேன்.

அம்மிணி சாப்பிட்டாங்களான்னு புரியல. கிச்சன்ல எட்டிப் பாத்தா ஒரே களேபரமா இருந்துச்சு. எதையாவது செஞ்சாலும் சிக்கல், செய்யாட்டியும் அதான்னு பயம் வந்துச்சு. மகனார்ட்ட ஏதோ அம்மிணி சொன்னது அரைகுறையாக் கேட்டுச்சு.

அப்பதான் ஆபிஸ் அம்மிணி போன் வந்துச்சு. இவங்க எதுக்கு போன் செய்யறாங்க, நாளைக்கு லீவுன்னு சொல்லப் போறாங்களா, இல்லாட்டி அவங்களும் பெரியம்மா வீட்டுக்குப் போகப் போறாங்களான்னு யோசிச்சுக்கிட்டே எடுத்தேன்.

“சார் ஒரு குட் நியூஸ். அந்த அம்மிணி ஊருக்குப் போகல. நம்ம அண்ணாச்சி நாளைக்கு லீவாம். சொல்லச் சொன்னாரு. என்னவோ செஞ்சு சமாதானம் பண்ணிட்டாரு. நீங்க நிம்மதியா தூங்கலாம்”னாங்க.

எங்கே நிம்மதின்னு ஹாலைப் பார்த்தேன். டிவி ஓடுச்சு. அம்மிணியும் மகனாரும் ஏதோ ஷோ பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் மகனார் சொன்னாரு. “அம்மா குழந்தை மாதிரிப்பா... அவங்கள ஒங்களுக்கு சமாதானம் செய்யத் தெரியல.”

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in