ஏஐஆர் புகழ் எங்கவீட்டு அம்மிணி

ஏஐஆர் புகழ் எங்கவீட்டு அம்மிணி
ஓவியம்: முத்து

ஆபிஸ்லேர்ந்து வீடு திரும்பும்போது தபால் பெட்டியைப் பார்க்கிறது பழக்கம். செக்யூரிட்டி அந்தந்த வீட்டுல கொண்டு வந்து கொடுத்துருவார். அதையும் மீறி டப்பால ஒண்ணு ரெண்டு தபால் கிடக்கும். விசாரிச்சா, ”டீ குடிக்கப் போன நேரத்துல போட்டுட்டு போயிட்டாங்க”ன்னு கூலா பதில் சொல்வார்.

இன்னிக்கும் ஒரு கவர் கிடந்துச்சு. பிரவுன் கலர். எடுத்துப் பார்த்தா, அம்மிணிக்கு அகில இந்திய வானொலி நிலையம்லேர்ந்து! கிர்ருன்னு தலை சுத்துச்சு. அது அம்மிணிக்குத்தானா இல்லாட்டி வேற யாராச்சுமான்னு பார்த்தேன். அம்மிணியே தான்.

வீட்டுக்குள்ர நுழையும்போது அம்மிணி போன்ல வருத்தப்பட்டுச் சொல்லிகிட்டுருந்தாங்க. “தபால் எதுவும் வரலப்பா... வந்தா முதல்ல ஒனக்குத்தான் சொல்வேன். அவங்க அனுப்பிட்டாங்களாமா. தெரியுமா”ன்னு சொல்லும்போதே கவரை அவங்க முகத்துக்கு எதிரே நீட்டுனேன்.

போனை வச்சுட்டு நிதானமாப் பிரிச்சாங்க. படிக்கும்போதே முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிஞ்சுது. “இதைத்தான் கேட்டாங்களா வந்துருச்சா”னு. நான் கேட்டதும் அம்மிணி அசராம லுக் விட்டாங்க.

“சொல்லி இருக்கலாம்ல. வந்தாச்சு”ன்னு.

”எதை எப்போ எப்படிச் சொல்லணும்னு எனக்குத் தெரியும்”னு பதில் சொல்லிட்டு வேற யாருக்கோ போன் அடிச்சாங்க. “லெட்டர் இப்பதான்பா வருது. எங்க செக்யூரிட்டி மகா மோசம். காலைல வந்த லெட்டரை இப்ப கொண்டு வந்து தந்தாரு. நல்லா திட்டி அனுப்பிட்டேன். என் வீட்டுக்காரர் அவரைப் பார்த்தாலே பம்மிருவாரு. அதட்டி வேலை வாங்கத் தெரியாது”ன்னு பொரிஞ்சு தள்ளுனாங்க.

காபி நொறுக்குத் தீனி ஆசையை விட அந்த கவர் என்னன்னு தெரிஞ்சுக்கத்தான் துடிப்பா இருந்துச்சு. “ஒங்களுக்குத்தான் என்னைப் பத்தி எந்த அக்கறையும் இருக்காதே. ஏஐஆர்ல இருக்கற ஒரு டைரக்டர் அம்மிணியைத் தற்செயலா சந்திச்சேன். ‘ஒரு புரோகிராம் கொடுங்களே’ன்னு கேட்டேன். அட்ரஸ் வாங்கிட்டுப் போனாங்க. ‘ரெண்டு நாள்ல வாய்ஸ் டெஸ்ட்’னு எதார்த்தமாச் சொல்லிட்டுப் போனாங்க.

“உண்மையாவா”ன்னு அவசரமா கேட்டதும் “இதுக்குத்தான் ஒங்ககிட்ட சொல்லவே இஷ்டம் இல்ல. ஒலிபரப்பாகும்போது லட்சக்கணக்கான நேயர்கள்கூட எங்கியாவது ஒரு டீக்கடைல ஒக்கார்ந்து கேட்க விட்டுருக்கணும்”னு பொருமினாங்க.

விஷயம் காட்டுத்தீ போல பரவிருச்சு. பத்த வச்சதே அம்மிணிதான். வாச வராண்டால நின்னு, “உள்ர டவர் எடுக்கல. அதான் வெளியே நின்னு பேசுறேன். ஏஐஆர்லேர்ந்து லெட்டர் வந்துருக்கு. ரெக்கார்டிங்கிற்கு போகணும். அப்புறம் வெவரமா பேசுறேன்”னு இதையே போன்ல நாலு பேருக்குக் கத்துனாங்க.

லெட்டரை யார் கண்ணுலயும் காட்டல. எ வீ அம்மிணி, “ஒனக்கு இருக்கிற தெறமைக்கு எப்பவோ இதெல்லாம் சாதிச்சு இருக்கணும். இப்பவாச்சும் வேளை வந்துச்சே. ஹூம். சரி, எனக்கெல்லாம் வராது. ஒனக்கு வந்த லட்டரையாச்சும் கண்ணுல பார்க்கிறேன். காட்டு”ன்னு பிட் போட்டாங்க.

“இப்பதான் மகனார்ட்ட கொடுத்து அனுப்பிச்சேன். ஸிராக்ஸ் போட்டு வரச்சொல்லி”ன்னு மழுப்பிட்டாங்க. அம்மிணியைத் தனியா விட்டு கூட்டம் போனதும் சொன்னாங்க. “ஆபிசுக்கு லீவு போட்டுட்டு கூட வரமுடியுமா ஒங்களால”ன்னு.

கையைப் பிடிச்சு குலுக்கினேன். “நிச்சயமா. எனக்குத்தான் பெருமை. ஆபிஸ்ல சொல்லிப்பேன்ல. என் அம்மிணி ஏஐஆர்ல ஆர்ட்டிஸ்ட்”னு. உண்மையாவே சொன்னதும் அம்மிணி என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க.

“இத்தனை வயசுக்கு வேலை தருவாங்களா”ன்னு ஆபிஸ் அம்மிணி சந்தேகமா கேட்டாங்க. ப சீ அண்ணாச்சி பதில் சொன்னாரு. “பகுதி நேரப் பணில எடுக்கிறாங்களோ என்னவோ”. சிரிச்சுக்கிட்டே சொன்னேன். “கூடப் போவுறேன்ல. போயிட்டு வந்தா தெரிஞ்சுரப் போவுது”ன்னு.

சம்பவ தினத்தன்று அம்மிணி காலைல எந்திரிச்சதுலேர்ந்து மௌனமா இருந்தாங்க. போன் அழைப்பு வந்தாலும் என்னையே பேசச்சொன்னாங்க. நேத்து நைட் பால்ல தேன் கலந்து குடிச்சாங்கன்னு சொல்ல மறந்துட்டேன்.

டிராவல்ஸ் கார்ல போய் இறங்கினோம். வாசல்ல செக்யூரிட்டி, “இங்கெல்லாம் வரக் கூடாது”ன்னு தடுக்கப் பார்த்தாரு. அம்மிணி லெட்டரைக் காட்டுனதும் விட்டுட்டாரு. அம்மிணி அவரை முறைச்சிட்டு உள்ளே போனாங்க. “நாம திரும்பி வரும்போது இவரு வேலைல இருக்க மாட்டாரு”ன்னு சொல்றாப்ல!

நிலைய இயக்குநர்னு போர்டு இருந்த ரூம்ல அம்மிணி அசால்ட்டா நுழையப் பார்த்தாங்க. “இரும்மா. பர்மிஷன் இல்லாம போகக்கூடாது”ன்னு அமைதியா தடுத்தேன். ஒரு அட்டெண்டர் வந்து விசாரிச்சாரு. ரூமுக்குள்ர போயிட்டு வந்து, “ஒங்களை ரெக்கார்டிங் ரூமுக்குப் போகச் சொன்னாங்க”ன்னாரு.

“மீட்டிங்ல பிஸியா இருக்காங்களோ என்னவோ. அப்புறம் வந்து ஸாரி கேப்பாங்க பாருங்க”ன்னு சவடாலா சொல்லிட்டு ரெகார்டிங் ரூமுக்குப் போனாங்க. வெளியே போட்டுருந்த சேர்ல ஒக்கார வச்சிட்டு அட்டெண்டர் எஸ்கேப்.

வேற ஏதோ பதிவு செஞ்சுக்கிட்டிருந்தாங்க. கண்ணாடி டோர் வழியாத் தெரிஞ்சுது. ஹெட்போன் போட்டு யாரோ ஒரு அம்மிணி கையில் இருந்த பேப்பரைப் படிச்சுக்கிட்டிருந்தாங்க. குரல் ரொம்ப நல்லா இருந்துச்சு. நல்ல மாடுலேஷன்ல பேசுனாங்க. என்னை மறந்து கையைத் தட்டப்போனேன். சைலன்ஸ் ப்ளீஸ் போர்டு கண்ணுல பட்டுச்சு.

ஒரு மணி நேரம் ஒக்கார்ந்து இருந்தோம். தொண்டை வறண்டு போச்சு. ஒரு வழியா அந்த அம்மிணி வெளியே வந்தாங்க. “சூப்பர் வாய்ஸ்”னு நான் சொன்னதும் சிரிச்சுட்டுப் போயிட்டாங்க. ஏ கிரேடு ஆர்ட்டிஸ்ட்னு ரெக்கார்டிங் அம்மிணி சொன்னாங்க.

எங்க அம்மிணிக்கும் ஹெட் போன் மாட்டுனாங்க. கையில ஒரு பேப்பரைக் கொடுத்து இன்னொரு ரூமுக்குள்ர போகச் சொன்னாங்க. அம்மிணி படபடப்பா இருந்ததும் “ரிலாக்ஸ்”னு சிரிச்சாங்க.

“கையை மேலே தூக்குவேன். நீங்க பேசணும். ஓக்கேவா”னாங்க. கையைத் தூக்கினாங்க. “சார் போஸ்ட்”னு கீச்சுக்குரல்ல அம்மிணி கத்துனது வெளியே கேட்டுச்சு. டைரக்டர் அம்மிணி அதே நேரம் அங்கே வந்து, “இப்போ ஹேப்பியா. ஒங்க வாய்ஸும் ரேடியோல வரும். அடுத்த ட்ராமால. ஒன் ஹவர் ட்ராமா. நடுவுல ஒங்க குரல் கேட்கும்.”

அம்மிணி கையைக் குலுக்கிட்டுப் போயிட்டாங்க. ரெக்கார்டிங் அம்மிணி சொன்னாங்க. “எப்பவுமே எங்க டைரக்டர் எல்லாரையும் உற்சாகப்படுத்துவாரு”ன்னு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in