வம்படியா சிக்கவெச்ச வாட்ஸ்-அப் க்ரூப்!

வம்படியா சிக்கவெச்ச வாட்ஸ்-அப் க்ரூப்!
ஓவியம்: முத்து

அம்மிணி முகத்துல ஒரு சிடுசிடுப்பு தெரிஞ்சுது. மகனார் புண்ணியத்தைக் கட்டிக்கிட்டார். “என்னம்மா ஆச்சு”ன்னு கேட்டு. “நேத்து போன் அடிச்சாளாம். நான் எடுக்கலியாம். அவ பொறந்த நாளைக்கு விஷ் பண்ணக்கூட மனசு இல்லியான்னு வெறுப்பேத்தினா. இவ பொறந்த நாள்னு எனக்கு எப்படித் தெரியும்”னு அம்மிணி வார்த்தைகளைக் கொட்டுனாங்க.

மகனார் நிதானமா சொன்னாரு. “எனக்கே நம்ம ஃபேமிலில நிறைய பேரைத் தெரியாது. பொறந்த நாள், கல்யாண நாள்னு யாராச்சும் நம்ம வீட்டுக்கு விஷ் பண்றச்ச லைட்டா கூச்சமா இருக்கும்.”

அம்மிணி முகத்துல ஒரு பளிச் தெரிஞ்சுது. “நம்ம சொந்த பந்தம் எல்லாரைப் பத்தியும் தகவல் சேகரிச்சா நல்லா இருக்கும்ல”னாங்க. இதையே நான் சொல்லி இருந்தா, “ஒங்களுக்கு வேற வேலையே இல்லை”ன்னு அப்பவே டிஸ்மிஸ் பண்ணி இருப்பாங்க.

வழக்கம் போல எனக்கு உத்தரவு போட்டாங்க. “சும்மா தானே இருக்கீங்க. ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்துட்டு வாங்க”ன்னு. டைனிங் டேபிள் மேல பேப்பரை வச்சுக்கிட்டு பேட்டி எடுக்க வந்த நிருபர் மாதிரி ஒக்கார்ந்தேன்.

மகனார் கேட்டார். “எந்த டிடெய்ல் முதல்ல எடுக்கப் போறீங்க. அப்பா வழி சொந்தமா, ஒங்க வழி சொந்தமா”ன்னு. நல்லாவே கோத்து விடறான்னு மனசுக்குள் பொருமிக்கிட்டேன்.

“எங்க பக்க சொந்தத்துல என் பேரைத் தவிர இவருக்கு வேற என்ன தெரியும். எங்கப்பா, அம்மாவுக்கு டிரெய்ன்ல டிக்கெட் போடுங்கன்னு ஒரு தடவை சொன்னப்போ இனிஷியல் என்ன, பேர் என்னன்னு கேட்டவராச்சே”ன்னு எனக்கு வில்லங்க சர்டிஃபிகேட் கொடுத்தாங்க.

“ரெண்டு பக்கமும் எடுங்க”ன்னு மகனார் சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு. அவர் இன்னும் ஒரு நிமிஷம் இருந்திருந்தா கம்ப்யூட்டர்லயே அவரை விட்டு எடுக்கச் சொல்லி நான் தப்பிக்கலாம்னு நினைச்சேன். மைண்ட் வாய்ஸ் கேட்டுருச்சு போல; ஓடிட்டாரு.

அம்மிணி சொன்னாங்க. “உங்கப்பா பேரு அம்மா பேரு சொல்லணுமா, இல்லாட்டி நீங்களே எழுதிருவீங்களா” அந்த எகத்தாளம் பொறுக்க முடியாம சொன்னேன். “எங்க தாத்தா அவரோட அப்பா பேர் எல்லாமே தெரியும்”னு.

என் பேரு, அம்மிணி, மகனார் பேர் எழுதினேன். என் பொறந்த நாள் எழுதிட்டு ஒரு செகண்ட் தயங்குனப்போ, அம்மிணி நக்கலா சிரிச்சாங்க. “உனக்குத்தான் ரெண்டு தேதி இருக்கே. சர்டிஃபிகேட்ல ஒண்ணு, ஒரிஜினல் ஒண்ணுன்னு. அதான்...”னு பதிலுக்கு வாரினேன்.

“ஒங்க தங்கச்சி குடும்பத்தை எழுதுங்க”ன்னு சொன்னதும் தயங்காம மடமடன்னு எழுதித் தொலைச்சிட்டேன். ஒரு உறுமல் சத்தம் கேட்டுச்சு. “சரி, இப்போ எங்க பக்கம் எழுதலாமா”ன்னு ஆரம்பிச்சாங்க. “இரு, பேப்பர் பத்தாது”ன்னு மையமாச் சொல்லவும் முறைச்சாங்க.

அப்பா, அம்மா பேரைச் சொல்லிட்டு, “ஆடி மாசம் பொறந்தாங்க”ன்னு ஆரம்பிச்சாங்க. “ஆங்கிலத் தேதி தெரியாதா”ன்னு கேட்டதும் யோசிச்சாங்க. அப்பாவோட ஒடம்பொறப்பு, அம்மாவோட வகையறான்னு நாலஞ்சு பேரைச் சொல்லும்போதே திணற ஆரம்பிச்சாங்க.

“மொட்டு, ஜில்லின்னு சொல்லுவோம். நிஜப் பேர் டக்குனு ஞாபகம் வரல”ன்னு மழுப்பினாங்க. மகனார் எட்டிப் பார்த்தாரு. “சூப்பரா போவுது போலிருக்கே”ன்னு பாராட்டுனாரு.

“இல்லடா... நிறையப் பேர் ஞாபகம் வரல”ன்னு உண்மையை ஒத்துக்கிட்டாங்க. “ரொம்ப ஈசிம்மா. ஒங்ககிட்டதான் போன் நம்பர் இருக்குல்ல. யாராச்சும் நாலு பேர்ட்ட தகவல் சொல்லுங்கன்னு கேட்டா பெரும்பாலும் கிடைச்சிரும். அப்புறம் மிஸ் ஆவுறதை கேட்டு வாங்கிக்கலாம்”னு ஐடியா கொடுத்தாரு.

“இப்ப எல்லாருக்கும் போன் அடிக்கிறதா. போடா வேற வேலை இல்லே”னு சலிச்சுக்கிட்டாங்க. “ஃபேமிலி க்ரூப் ஆரம்பிச்சு ரெக்வஸ்ட் போடுங்க. கதறிக்கிட்டு தகவல் சொல்வாங்க”ன்னு மகனார் சொன்னதும் அம்மிணி என்னைப் பார்த்தாங்க.

அம்மிணி போன்ல வாட்ஸ் - அப் க்ரூப் ‘நம்ம ஃபேமிலி’ன்னு ஆரம்பிச்சு நம்பரை எல்லாம் சேர்த்து விட்டேன். அம்மிணி added xxxxxxxxxx னு வரிசையா நம்பர் வந்துச்சு. “நீயும் ஒரு தடவை செக் பண்ணிரு”ன்னு அம்மிணிட்ட போனைத் தள்ளிட்டு ஒரு சொம்பு தண்ணியைக் குடிச்சேன். இதுக்கே நாக்கு தள்ளிப் போச்சு.

“அம்பது பேருக்கு மேல சேர்த்தாச்சு. பார்ப்போம். என்ன நடக்குதுன்னு” அம்மிணி சொல்லிட்டு போனை வச்சுட்டு எதிர் வீட்டுக்குப் போயிட்டாங்க. தன்னோட இன்றைய சாதனையைப் பத்தி உடனே நியூஸ் ஃப்ளாஷ் செஞ்சே ஆவணும் அவங்களுக்கு.

டொய்ங்னு சத்தம் அவங்க மொபைல்ல கேட்டுச்சு. ஆர்வக் கோளாறுல எடுத்துப் பார்த்தேன். அம்மிணி சொந்தத்துல ஒருத்தர் மெசெஜ் போட்டுருந்தார். “மிக்க மகிழ்ச்சி. மிகவும் சிரமத்தில் இருக்கிறேன். நம்முடைய உறவுகள் அவரவரால் முடிந்த தொகையை அனுப்பினால் நன்றி உடையவனாய் இருப்பேன். சொந்தத்தை விட்டுக் கொடுக்காதீர்கள் எப்போதும்”னு.

ஏண்டா அதைப் போய் படிச்சோம்னு ஆயிருச்சு. அந்தாளு போன் அடிச்சுட்டாரு. போன் சத்தம் கேட்டு அம்மிணி வந்து பேசினதும் அவங்க முகத்துல செம்ம கடுப்பு. “எங்கிருந்துதான் இப்படிக் கிளம்பி வராங்களோ”ன்னு என்னைப் பார்த்தாங்க. “ஒங்களை யாரு மெசேஜைப் படிக்கச் சொன்னது. ரெண்டு டிக் வந்துச்சு. அதான் போன் செஞ்சே கேட்டுரலாம்னு பண்ணேங்கிறாரு.”

அரை மணில இன்னும் ரெண்டு அழைப்புகள். கடன்கார அண்ணாச்சி மத்த நம்பருக்கும் அடிச்சிருக்காரு. “அவருக்கு எங்க நம்பரே தெரியாம வச்சிருந்தோம். இப்போ புடிச்சுகிட்டாரு”ன்னு சலிப்பைக் கொட்டுனாங்க.

அம்மிணி போனை ஆஃப் பண்ணிட்டாங்க. தப்பு பண்ணிட்டோமோன்னு பதறுனது வெளியே தெரிஞ்சுது. மகனார் நைசா வெளியே ஓடிட்டாரு. என் போன்ல கால் வந்துச்சு. அம்மிணியோட அப்பா. “ஏன் அம்மிணி போன் ஆஃப்னு வருது”ன்னு.

அம்மிணி வேற வழி இல்லாம தன் போனை ஆன் பண்ணாங்க. அவ்ளோதான். வரிசையா எல்லா நம்பரும் +xxxxxxxxxx left னு மெசேஜ் டொய்ங் டொய்ங்னு வந்துகிட்டே இருந்துச்சு. முதல்ல வெளியே ஓடுனது மகனார் தான்! மிச்சம் இருந்தது எங்க ரெண்டு பேர் மட்டும் தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in