மயிலுக்கு தூரத்துச் சொந்தம் மாதிரி இருந்துச்சு...

மயிலுக்கு தூரத்துச் சொந்தம் மாதிரி இருந்துச்சு...
ஓவியம்: முத்து

ஆபிஸ் அம்மிணிகள் எல்லாம் மார்ச் மாசம் வருதுன்னாலே குஷியாயிருவாங்க. ஆடிட் வரும் கணக்கு முடிப்புனு மத்தவங்க டென்ஷன்ல இருக்கிறப்ப, இவங்க மட்டும் ஏன் குஷின்னு கேக்கறீங்களா? பெண்கள் தினக் கொண்டாட்டம் வரும்ல, அதான்.

போன வருசக் கதை இது!

திருச்சி டவுன்ஷிப்ல ஆடிட்டோரியம் உண்டு. பெண்கள் பத்திரிகைல இருந்து ஆசிரியர் வருவாரு, எல்லா அம்மிணிகளும் அவரு கூட போட்டோ எடுத்துக்கலாம்னு, அன்னிக்கு யூனிஃபார்ம் வேணாம்னு முடிவு பண்ணி கலர் ட்ரெஸ்ல வந்தாங்க. பெரும்பாலான அம்மிணிகளின் அடையாளமே தெரியல.

எங்க பாஸ் இதுலயும் மூக்கை நுழைச்சாரு. இல்லாட்டியும் அம்மிணிங்க அவரைக் காக்கா பிடிப்பாங்க. “சார் ஏதாச்சும் புதுசா ஐடியா கொடுங்க”ன்னு. “ரங்கோலி போடுங்க”ன்னு சொல்லிட்டாரு. “அப்படின்னா என்ன”ன்னு ஒரு அம்மிணி கேட்டுச்சு.

“ஒங்க வீட்டுல கோலமே போட மாட்டீங்களா”ன்னு கேட்டுட்டேன். “அதெல்லாம் அவரே போட்டுருவாரு. கோலம் போடறது, டிகாஷன் போடறது எல்லாம் அவரு வேலை”ன்னு அசால்ட்டா சொன்னாங்க. நம்ம எவ்வளவோ தேவலாம்னு நினைச்சுக்கிட்டேன்.

இன்னொரு அம்மிணி சிரிச்சுக்கிட்டே, “எங்க வூட்டுல ஸ்டிக்கர் கோலம். அதைத் தொடச்சா போதும். ஒண்ணு டேமேஜ் ஆனா இன்னொரு ஸ்டிக்கர் ஒட்டிருவோம்”னு வீட்டு ரகசியத்தை பொத்தாம் பொதுவுல போட்டு ஒடைச்சாங்க.

எல்லா கலர்லயும் பொடி வாங்கிட்டு வரச் சொல்லிட்டாங்க. எந்தக் கடைல வாங்கினா நல்லா இருக்கும்னு தகவலும் சொன்னாங்க. பாஸ் ஒடனே என்னைப் பார்த்தாரு. “ஒங்க பங்களிப்பும் இருக்கணும். வாங்கிக் கொடுத்துருங்க”ன்னு அன்பா ஆர்டர் போட்டாரு.

அம்மிணிங்க எதிர்ல அதைச் சொல்லித் தொலைச்சதால பாஸ் போனதும் எல்லா அம்மிணியும் ஆளுக்காளு ஐடியா கொடுத்தாங்க. இந்தத் தகவல் என் வீட்டம்மிணிக்குத் தெரிஞ்சுரக் கூடாதுன்னு எல்லா அம்மனையும் வேண்டிகிட்டு லோக்கல் பர்ச்சேஸ் போனேன். பக்கத்து சீட்டு அண்ணாச்சி கூடத்தான்!

நிகழ்ச்சி நடக்கிற அன்னிக்கு கோலம் போடத் தெரிஞ்ச/தெரியாத எல்லா அம்மிணியும் ஆடிட்டோரியம்ல குழுமிட்டாங்க. “பச்சைய எடு, சிவப்ப எடு, நீலத்தை எடு”ன்னு விரட்டுனாங்க.

மயில்னு நினைச்சு அவங்க போட்டது மயிலுக்கு தூரத்து சொந்தம் மாதிரி இருந்துச்சு. கிளின்னு போட்டது பறவை இனத்துலயே இல்லாத புது தினுசா இருந்துச்சு. எங்க ஆபிஸ் ப்ரோகிராம் எல்லாம் போட்டோ எடுக்கிறவர் வந்ததும் அம்மிணிங்க கோலம் போடறதை விட்டுட்டு போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுவரை காணாத அதிசயத்தைப் பார்த்தாப்ல அவரும் வளைச்சு வளைச்சுப் போட்டோ எடுத்தாரு.

அம்மிணிங்க தள்ளுமுள்ளு பார்த்துட்டு ப சீ அண்ணாச்சி சூப்பர் ஐடியா கொடுத்தாரு. “ஒவ்வொரு கோலத்துக்கு முன்னாடியும் ரெண்டு அம்மிணிங்க நில்லுங்க. கோலத்தையும் கவர் பண்ணாப்ல இருக்கும்”னு. எந்தக் கோலத்துக்கு முன்னால யார் நிக்கறதுன்னு அதுக்கும் போட்டி வந்துச்சு.

கோலம் முடிஞ்சப்போ மதியம் ஆயிருச்சு. ரெண்டு மணிக்கு மீட்டிங். பாஸ் அம்மிணி தான் தலைமை. மொத நாளே அந்த பெண்கள் பத்திரிகையை வாங்கிக் கொடுக்கச் சொன்னாங்க. நைட் ஃபுல்லா படிச்சிருப்பாங்க போல. தலைமை உரைல ஒவ்வொரு பக்கமா வெளுத்து விளாசிட்டாங்க. எடிட்டர் அம்மிணியே அசந்து போயிட்டாங்க. “உங்க படைப்புகளை எதிர்பார்க்கிறேன்”னு உரை ஆற்றும்போது போட்டுவிட்டாங்க.

ஆபிஸ் அம்மிணிங்க இதை எதிர் பார்த்திருப்பாங்க போல. எடிட்டர் அம்மிணிகிட்ட கத்தை, கத்தையா பேப்பரை நீட்டுனாங்க. சிரிச்சுக்கிட்டே அவங்க வாங்கிக்கிட்டதும் அடுத்த இஷ்யூல வந்துரும்னு எல்லாருக்கும் குஷி. அடுத்த ஒரு மாசம் இதே பேச்சுத்தான் ஆபிஸ்ல.

அடுத்த இதழ்ல மீட்டிங் பத்தி வந்துச்சு. ரெண்டு அம்மிணிங்க கவிதையும். அதுல ஒண்ணு பாஸ் அம்மிணி. “அதை நீங்கதானே எழுதிக் கொடுத்தீங்க”ன்னு என்னை ஓட்டுனாங்க. “பாஸ் எழுதிக் கொடுத்திருப்பார்”னு சமாளிச்சேன். அப்படியும் அம்மிணிங்க விடல. அவங்க எழுதினதைக் கொண்டு வந்து காட்டி “இதை விட அருமையா யாராச்சும் எழுதிர முடியுமா, சொல்லுங்க”ன்னு அதட்டுனப்போ “எல்லா அவார்டும் ஒங்களுக்குத்தான்”னு ஒவ்வொருத்தர்கிட்டேயும் அசராம சொன்னேன்.

“போடாம விட்டா பத்திரிகைக்குத்தான் நஷ்டம்”னு சொன்னதும் திருப்தியாகி போயிட்டாங்க. கூடவே ஒரு பிட்டும் போட்டேன். “பாஸ்ட்ட சொல்லி ஆபிஸ் சார்பா ஒரு சாவ்னீர் கொண்டு வரலாம். ஒங்க படைப்பு எல்லாம் போட்டு”ன்னு. பாஸைக் கோத்துவிட்ட திருப்தி !

இந்த வருசம் என்ன புதுமை செய்யலாம்னு பாஸ்கிட்ட வழக்கம் போல வந்து நின்னாங்க. “சஸ்பென்ஸ்”னு சிரிச்சாரு. எப்பவுமே அதிர்ச்சி கொடுக்கிறதுன்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஆபிஸ் நேரம் முடிஞ்சு வீட்டுக்குக் கிளம்பலாம்னு எந்திரிக்கும் போது அர்ஜென்ட்னு ஒரு மேட்டரோட அப்பதான் வருவாரு.

என்னை மட்டும் தனியா இழுத்துக்கிட்டுப் போனாரு. என் தலைல நானே அடிச்சு சத்தியம் செய்யச் சொன்னாரு. “லீக் பண்ணிரக் கூடாது. வழக்கம் போல டெகரேஷன் கோலம்லாம் இருக்கட்டும். அடிஷனலா நான் சொல்ற மேட்டரு. புரிஞ்சுதா”ன்னு கேட்டாரு. ஒத்துக்கிட்டேன்.

யார் கேட்டாலும் ரகசியத்தை ஒடைக்கல. ப சீ அண்ணாச்சிக்கு அதுல ரொம்ப வருத்தம். நிகழ்ச்சி அன்னிக்கு கலெக்டர வரவேற்று கூட்டிட்டு வர்ற பொறுப்பை ப சீ அண்ணாச்சிக்குக் கொடுத்ததும் அமைதி ஆகிட்டாரு.

கார்லேர்ந்து கலெக்டர் இறங்கினாரு. பாஸ் அம்மிணி பாஸ் கூட நின்னாங்க. ஜிகுஜிகுன்னு கலர்ல ஸாரி கட்டிகிட்டு. கலெக்டரோட அம்மிணி சிம்பிளா காட்டன் புடவைல அமைதியா வந்தாங்க.

பாஸ் என்கிட்ட திரும்பி கண்ணடிச்சாரு. மறைவா நிக்க வச்சிருந்த பாகனுக்கு சிக்னல் கொடுத்தேன். குட்டி யானை மெதுவா நகர்ந்து வந்துச்சு. அவ்ளோதான். அம்மிணிங்க எல்லாரும் உற்சாகமாகி, “சூப்பர் ஐடியா”ன்னு கத்துனாங்க. அட் எ டைம்ல அம்மிணிங்க கத்துனதுலயோ, இல்லாட்டி நகர விடாம அங்குசத்தைப் போட்டு மடக்கி வச்சிருந்த கடுப்போ யானை மாலைய கலெக்டருக்குப் போடாம பாஸ் அம்மிணிக்குப் போட்டுருச்சு.

கலெக்டர் ஒண்ணும் தப்பா எடுத்துக்கல. பாஸ் தான் அசடு வழிஞ்சு நின்னாரு !

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in