இதுக்குத்தானா இத்தன அலப்பறை!

இதுக்குத்தானா இத்தன அலப்பறை!
ஓவியம்: முத்து

“ஒங்க மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க”ன்னு அம்மிணி எதிர்ல வந்து நின்னு மிரட்டுனப்போ ‘பே’ன்னு முழிச்சேன். சுதாரிச்சு, “என்ன... என்ன”ன்னு தடுமாறினப்போ, அம்மிணி சொன்னாங்க. “எங்க வீட்டுல நம்மள வரச்சொல்லி போன் பண்றப்பல்லாம் ஏதாச்சும் சாக்குப்போக்குச் சொல்றீங்க”ன்னு போட்டு ஒடைச்சாங்க.

அம்மிணியைக் கட்டிக்கிட்டு வந்த நாள்ல இருந்து அஞ்சாறு தடவைதான் அவங்க வீட்டுக்குப் போயிருப்பேன். “நீ போயிட்டு வந்துரேன். எனக்கு லீவு கிடைக்காது”ன்னு நைஸா எஸ்கேப் ஆயிருவேன். மகனாருக்கு ஆறேழு வயசு ஆனதும் அவரையே பெரிய மனுசன் ரேஞ்சுக்கு ஒசத்தி, “அம்மாவைப் பத்திரமா கூட்டிக்கிட்டுப் போவியாம்”னு சொல்லி அனுப்புவேன்.

கொஞ்சம் வெவரம் வந்ததும் அவரும் தப்பிச்சுக்க ஆரம்பிச்சாரு. “படிப்பு போவுதும்மா. டெஸ்ட்ல மார்க் குறைஞ்சா என்னைக் குறைசொல்லக் கூடாது”ன்னு பிட் போட்டதும், அம்மிணிக்கு சங்கடம் ஆயிருச்சு. ஊருக்குப் போகமுடியாத நேரத்துல கிச்சன்ல பாத்திரம் உருளும். சாடைமாடையா எதிர்வீட்டு அம்மிணிட்ட என்னைப் பத்தி புகார் வாசிப்பாங்க.

அந்த அம்மிணிக்குத்தான் அது புரியாது. அம்மிணி உணர்ச்சியா பேசும்போது வார்த்தை எல்லாம் சிக்கிக்கும். தள்ளி நின்னு கேக்குற எனக்கு வரி பிசகாமப் புரியும். எத்தனை வருஷ அனுபவம்! அந்த மாதிரி அம்மிணி உச்சத்துல இருக்கிறப்போ வாயைத் தொறக்காம சமாளிச்சுருவேன்.

இன்னிக்கு என்னால தப்பிக்க முடியல. ஒரு மணி நேரமா அம்மிணி போன் பேசிக்கிட்டு இருந்தப்பவே எனக்கு கதி கலங்கிச்சு. நடுநடுவுல அம்மிணி அழுது சிரிச்சு ஆஸ்கார் அவார்ட் வாங்கற அளவுக்கு ஆக்டிங் கொடுத்தாங்க. முட்டுச் சந்துல மாட்டிக்கிட்ட பிரமை வந்துருச்சு அப்பவே எனக்கு. “ஒரு ப்ராஜக்ட்ல நான் பிஸியா இருக்கேன்”னு லாப்டாப்ல தெலுங்குப் படம் பார்த்துக்கிட்டே மகனார் முன் ஜாக்கிரதையா சொல்லிட்டாரு.

“நாலு நாளாவது நாம அங்கே வந்து தங்கணுமாம். அப்பா கண்டிஷனா சொல்லிட்டாரு. அவருக்கும் வயசாகிட்டே போவுதாம். ‘கட்டிக் கொடுத்தப்ப உன்னைப் பார்த்தது. மூஞ்சிகூட மறந்து போச்சு’ன்னு புலம்புறாரு”ன்னு சொன்னாங்க.

மறக்கிற மாதிரியா இருக்கு உன் மூஞ்சி. ஒங்க குடும்பத்துக்கு யாரு டயலாக் எழுதித் தராங்கன்னு கேட்கத் தோணுச்சு.

“இப்பத்தானே ஏதோ ஃபங்ஷன்னு போயிட்டு வந்தே”ன்னு கேட்டுத் தொலைச்சுட்டேன். “அது போன ஜூன்ல. அதுவும் மொத நாள் ஈவ்னிங் போயிட்டு மறுநாள் மதியம் கிளம்பி வந்தாச்சு. அப்பா அம்மாகூட ரெண்டு நிமிஷம்கூட இல்லே”ன்னு மூக்கைச் சிந்துனாங்க.

அன்னிக்கு நைட் அவங்க அப்பா அம்மா தூங்கப் போயிட்டாங்க. விடிய விடிய அம்மிணி கூட்டம் அரட்டை அடிச்சுட்டு, இங்கே வந்து நாலு நாள் தூங்கி விழுந்தாங்க. அதை இப்போ சொல்ல முடியாது.

“சரி, போவலாம்”னு வாக்குக் கொடுத்தேன். அவங்க சிரிச்சுக்கிட்டே நவுந்தப்போ, என் கழுத்துக்கு வச்ச கத்தியை கையோட எடுத்துட்டுப் போன மாதிரி இருந்துச்சு. மறுபடி போன்ல ஆரம்பிச்சுட்டாங்க. “அவரு போவலாம்னு சொல்லிட்டாருப்பா. நாங்க கெளம்பி வரோம்”னு அரை மணி நேரமா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

ஃபாரின் போறவங்க பொட்டி மாதிரி ரெண்டு பெரிய பொட்டில எதை எதையோ ரொப்ப ஆரம்பிச்சாங்க. அதுவும் வாசக் கதவைத் தொறந்து ஹால்ல வச்சு ரொப்பவும் “வீட்டைக் காலி பண்ணிட்டு போவுறோமா”ன்னு எதிர் வீட்டுல சந்தேகப்பட்டு வந்து விசாரிச்சாங்க. அவங்களுக்குப் பதில் சொல்லி அனுப்பிட்டு, “கதவை மூடுங்க. நம்ம வீட்டுல என்ன நடக்குதுன்னு பார்க்கிறதே அவங்க வேலையாப் போச்சு”ன்னு கடிச்சாங்க.

“காருக்குச் சொல்லிருங்க. நாலு நாளும் வச்சுக்குவோம். அக்கம்பக்கம் எங்கியாச்சும் போவுறதா இருந்தாக்கூட ஒதவும்”னு ஐடியா கொடுத்தாங்க. ட்ராவல்ஸ்ல சொன்னதும், ‘நாலு நாள் பில் அமவுன்ட்ட’ ஓனர் மனசுல கணக்குப் போட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டது என் மனசுக்குத் தெரிஞ்சுது. “இப்பவே அனுப்பிடறேன் சார்”னு ஸ்டார்ட்டிங் டைம் போட்டுட்டாரு. அவரு எப்பவுமே போன் செய்யற நேரத்தையே அப்படிப் போட்டுருவாரு.

மகனாருக்கு ஒரு சிக்கலும் இல்லை. எங்கே போனாலும் அவர் ஒலகம் லாப்டாப்ல அடங்கிரும். அந்த வீட்டுலயும் எதுவும் சொல்லமாட்டாங்க. “நம்ம குடும்பத்துலயே நாலெழுத்து படிச்ச புள்ளை”ன்னு ஓவராக் கொஞ்சுவாங்க.

விடியல்ல கிளம்பினோம். “மதியம் சாப்பாட்டுக்கு வந்துடறோம்னு சொல்லிட்டேன்”னு அம்மிணி ஹேப்பியா சொன்னாங்க. ஆறு மணி நேரம் பயணம். அவங்க வீட்டு வாசல்ல கார் நிக்கும்போது கதவு அடைச்சுக் கெடந்துச்சு. “நல்ல மரியாதை”னு சொன்னதும் அம்மிணி கடுப்பு ஆயிட்டாங்க. “வாசக் கதவைத் தொறந்து போட்டு வச்சிருப்பாங்களா”ன்னு கதவைத் தட்டுனாங்க.

அவங்க அப்பா வந்து கதவைத் தொறந்தாரு. “வாங்க” ன்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாரு. “நமக்காக ஏதாச்சும் வாங்கப் போறாரோ என்னவோ”ன்னு சொல்லிட்டு, உள்ளே போனாங்க. டிரைவர் பொட்டிங்களைக் கொண்டு வச்சுட்டு “தேவைன்னா போன் பண்ணுங்க சார்”னு ஓடிட்டாரு.

உள்ளே மாமியார் குரல் கேட்டுச்சு. “என்னவோ தெரியல. காலைல இருந்தே தலை நோவுது. நீ வரியேன்னு முடிஞ்சதை செஞ்சு வச்சேன்”னு. “விருந்து சாப்பிடவா வந்தோம். ஒங்க கூட ரெண்டு நாள் இருந்துட்டு போவணும்னு தானே”னு அம்மிணி இலக்கணமா பேசுனாங்க.

“அப்பா எங்கே போறாரு”னு கேட்டதும், “எதுவும் சமைக்கலியான்னு கேட்டு அவரு வழக்கமா சாப்பிடற கடைக்குப் போயிட்டாரு”னு பதில் வந்துச்சு. எதையோ சாப்பிட்டு ஓரமா போய் ஒடுங்கிட்டேன். அடிச்சுப் போட்டாப்ல தூக்கம். ஒக்கார்ந்தே வந்த அலுப்பு.

சத்தம் கேட்டு முழிச்சா அம்மிணியோட அப்பா அம்மா ஒரு பொட்டியோட நின்னாங்க. “பாரேன். வராதவ வந்துருக்கே. இப்படி ஆயிருச்சே”ன்னு அவங்கம்மா முனகல்.

“என்னங்க. டிரைவருக்குப் போன் போடுங்க. திண்டுக்கல்ல எங்க ஒண்ணு விட்ட பெரியப்பா தவறிட்டாராம். பஸ்ல போனா நேரம் ஆவும்னு நம்ம கார்லயே போவச் சொல்லிட்டேன். அவங்க வந்ததும் நாம கெளம்பிறலாம். வீட்டைப் பார்த்துகிட்ட மாதிரியும் ஆச்சு.”

அம்மிணி அசால்ட்டா சொல்லிக்கிட்டே போனாங்க. கேட்ட எனக்குத்தான் தலை சுத்துச்சு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in