நல்லா தண்ணி காட்டுனாங்கப்பா..!

நல்லா தண்ணி காட்டுனாங்கப்பா..!
ஓவியம்: முத்து

லேண்ட்லைன் போன் அடிச்சுது. அம்மிணி, மகனார் ரெண்டு பேரும் போனைப் பார்த்துட்டு மூஞ்சியைத் திருப்பிக்கிட்டாங்க. எனக்குத்தான் வந்துருக்கும்னு கணிச்ச மாதிரி.

“ஹலோ”ன்னு சொன்னதும் ஒரு கீச் குரல். “குழாய் ஒடஞ்சிருச்சு.”

ஒண்ணும் புரியல. “நீங்க யாரு”ன்னு கேட்டா, “சீக்கிரமா வாங்க”ன்னு வச்சுட்டாங்க அந்த கீச்.

இருக்கிற 35 வீட்டுல எதுன்னு தேட. மெமரில அந்த கீச்.. கீச்.. யாருன்னு துழாவிப் பார்த்தா ஞாபகம் வரல. அம்மிணிதான் நடமாடும் கம்ப்யூட்டர்னு புத்தி சொல்லுச்சு.

“ஏம்மா யார் வீட்டுலயோ பைப் ஒடஞ்சிருச்சாம். பேர் சொல்லல. ஒனக்கு எதுனாச்சும் தோணுதா”ன்னு மனு போட்டேன்.

“கீழ் வீட்டுல. பைப் சரியில்லன்னு சிட் அவுட்ல பேசிக்கிட்டிருந்தாங்களாம்.”

‘தகவல் சுரங்கம் அம்மிணி வாழ்க’ன்னு மனசுக்குள்ர வாழ்த்திட்டு ஓடுனேன். பாத் ரூம்ல பைப் பாதியா ஒடஞ்சி தண்ணி பீச்சிக்கிட்டு இருந்துச்சு.

“எப்படி நிறுத்தறதுன்னு தெரியல. அதான் போன் போட்டேன்”னு நிறுத்தாம பேசிக்கிட்டுப் போனாங்க. சுடிதார் ஒண்ணு பக்கத்துல கெடந்துச்சு. அதை எடுத்து பைப் மேல சுத்தினா கத்துனாங்க.

“மேலே போய் வால்வை மூடிட்டு வந்திடறேன்”னு ரெண்டு மாடி ஏறி மொட்டை மாடிக்குப் போனேன்.

அந்தந்த வீட்டு கனெக்‌ஷனுக்கு நம்பர் போட்டுருந்தோம். வால்வை மூடிட்டு கீழே வந்தா தண்ணி நின்னுருச்சு. “இப்ப என் சுடிதாரை எடுத்துக்கவா”ன்னு பொறுப்பா கேட்டாங்க.

பிளம்பர் நம்பரைக் கொடுத்தேன்.

“நீங்களே சொல்லிருங்க... என் மொபைல் ரிப்பேருக்குக் கொடுத்துருக்கேன். இப்பவே எதிர் வீட்டுல சொல்லித்தான் ஒங்களுக்கு தகவல் தரச் சொன்னேன்”னு குழைஞ்சாங்க.

பிளம்பருக்கு அடிச்சா ஏதோ பாட்டு ஓடுச்சு. அப்புறம் கட் ஆயிருச்சு. திரும்ப அடிச்சா அதே பாட்டு. கட்.

“எடுக்க மாட்டேங்கிறார்.”

“வீட்டு வேலைல்லாம் எப்படி செய்யிறது. வால்வை மூடிட்டீங்களே.”

சுட்டிக் காட்டுன திசைல கழுவ வேண்டிய பாத்திரங்கள், தோய்க்க வேண்டிய துணிகள் எல்லாம் கிடந்துச்சு.

பகீர்னுச்சு. எடுத்துக்கிட்டுப் போய் சுத்தம் செஞ்சு கொண்டு வான்னு சொல்லிருவாங்களோன்னு.

“வெளியே காமன் பைப் இருக்கே...”

“என்னால வெயிட் தூக்க முடியாது”னு மூஞ்சிய சுளிச்சுக்கிட்டாங்க.

அந்த வீட்டுல ரெண்டும் லேடிஸ். அவங்க தம்பி சிங்கப்பூர்ல இருக்கார். எப்பவாச்சும் வாட்ஸ் அப்ல வருவாரு. “நீங்க மட்டும் இல்லேன்னா”னு பெருசா ஒரு பிட்டைப் போடுவாரு.

“தம்பி கூட சொன்னான். எந்தப் பிரச்சினை வந்தாலும் சார்ட்ட சொல்லு. உடனே சரி பண்ணிருவாரு”ன்னு கோரஸா சொன்னாங்க.

ஒரு நிமிஷம் தடுமாறினப்போ, “ஒங்க உடன் பிறப்புன்னு நினைச்சுக்குங்க”னு அடுத்த அம்பு விட்டாங்க.

மேலே எங்க வீட்டுக்குப் போனேன். எப்பவும் ஸ்பேரா ஒரு பைப் வச்சிருப்பேன். நூல்கண்டு, பைப், ரிஞ்ச்னு ஆயுதபாணியா நான் கிளம்பினதைப் பார்த்து அம்மிணி மிரண்டுட்டாங்க.

“என்ன செய்யப் போறீங்க...”

“என்னைத் தடுக்காதே. கீழ் வீட்டுல பிரச்சினை. நான் போய் சரி செய்யப் போறேன்”னு வசனம் பேசுனேன்.

அம்மிணி எதுவும் சொல்லல. ஆனா, அவங்க பார்வை எல்லாத்தியும் சொல்லுச்சு.

கீழ் வீட்டுக்கு வந்தா, பாதி ஒடஞ்ச பைப் வெளியே வருவேனான்னு தகராறு பண்ணுச்சு. குறடு போட்டு இழுத்ததுல கையைக் கீறிக்கிட்டேன்.

பாத் ரூம்ல நான் போராடிக்கிட்டுருந்தப்போ, ரெண்டு அம்மிணியும் காபி குடிச்சுக்கிட்டு ஹால்ல டிவி பார்த்துக்கிட்டுருந்தாங்க.

போராடி, உடைஞ்ச பகுதியை எடுத்துட்டேன். புது பைப்புக்கு நூல் சுத்தி போட்டுட்டு வெளியே வந்தேன்.

“மேலே போய் வால்வ் திறக்கிறேன். தண்ணி வருதான்னு சொல்றீங்களா”ன்னு கேட்டா, ரெண்டு பேரும் முழிச்சாங்க.

“மாடி ஏற முடியாதே.”

“மேலேர்ந்து நான் எட்டிப் பார்க்குறேன். சொல்றீங்களா.”

“அண்ணாந்து பார்த்தா தலை சுத்தும். ஸ்பாண்டீலிட்டீஸ்.”

“நானே கீழே வந்து தொலைக்கிறேன்”னு முனகிட்டு, மாடிக்குப் போய் வால்வைத் திறந்தேன். ரெண்டு மாடி இறங்கி வந்து பைப்பை தொறந்தா சூப்பரா தண்ணி வந்துச்சு.

“அட்டாச்டு பாத் ரூம்ல கூட பைப் சரி இல்ல. அதையும் மாத்திரலாமா”ன்னு அந்தம்மா கேட்கவும் ஆடிப் போயிட்டேன்.

“கையில ஒண்ணு தான் இருந்துச்சு. ப்ளம்பரைக் கூப்பிடலாம்”னு எஸ்கேப் ஆனேன்.

வெளியே வந்தா எதிர் வீட்டுக்காரர் பிடிச்சுக்கிட்டார். “டேங்க்ல தண்ணி இல்லியா...” டவலைக் கட்டிக்கிட்டு எதிர்ல நிக்கவும் புரிஞ்சிருச்சு. குளிக்கப் போன அண்ணாச்சிக்கு குழாய்ல தண்ணி வரலைன்னு கொதிச்சுட்டாரு.

“ஹிஹி இவங்க வீட்டுல பைப் ஒடஞ்சு தண்ணி போயிருச்சு. பத்து நிமிசத்துல தண்ணி வந்துரும்”னு மோட்டாரைப் போட்டேன்.

குளிச்சுட்டு வந்தவரு, “ஒங்களால எனக்கு ஆபிஸ் லேட்டு”ன்னு கத்திட்டுப் போனாரு.

எங்க ஆபிஸ்லேர்ந்து போன். “வருவீங்களா... மாட்டிங்களா”ன்னு. தடதடன்னு மேலே ஓடுனேன். கால் டாக்சில ஆபீஸ் போனதுல துட்டு பழுத்துருச்சு.

ஈவ்னிங் வீட்டுக்கு வரும்போதே வாசல் கேட்டுலயே மறிச்சுட்டாங்க.

“டேங்க்ல தண்ணி இல்ல.”

வாட்ச்மேன் சொன்னாரு. “நிறுத்தாம ஓட்டிக்கிட்டே இருக்கேன்.”

ரெண்டு மோட்டார் இருக்கு. மாத்தி மாத்தி போட்டு ரெண்டும் சூடு வச்ச ஆட்டோ மீட்டர் மாதிரி இருந்துச்சு.

தலை சுத்துச்சு. மூணு மணி நேரம் ஓடுனாலே ஓவர்ஃப்ளோ ஆயிருமே.

ஒவ்வொரு வீடா செக் பண்ணலாம்னு போனா (ஒவ்வொரு வீட்டு பாத் ரூமைப் பார்த்தா குடலைப் புரட்டுச்சு) எங்கியும் சிக்கல் இல்லை.

கடைசியா ஒரு வீடு பூட்டி இருந்துச்சு. காலைல ஏதோ ஃபங்ஷன்னு போனாங்களாம். நைட்டுதான் வருவாங்களாம். சரி, போவலாம்னு திரும்பினா அம்மிணி என்னைத் தடுத்தாங்க.

“உள்ர தண்ணி கொட்டுர சத்தம் கேக்குதா.”

பாம்புக் காது! ஜன்னல் தொறந்திருச்சு. எட்டிப் பார்த்தா ஹால் முழுக்க தண்ணி. வாஷ் பேசின் பைப்லேர்ந்து ஊத்திக்கிட்டுருந்துச்சு.

அந்த வீட்டம்மிணிக்கு போன் போட்டா கூலா சொல்றாங்க..

“அப்பவே நினைச்சேன். எங்க வீட்டு வாலு குழாயைத் தொறந்து மூடி விளையாடுச்சு காலைல. ஹை நல்லாத் தொறக்கறியே குட் பாய்னு சொன்னேன். மூட மறந்துட்டேன் போல.”

நல்லா தண்ணி காட்டுனாங்கப்பா..!

Related Stories

No stories found.