அப்பா பேசறாரு... அந்த மிக்சிய ஆஃப்பண்ணுங்க!

அப்பா பேசறாரு... அந்த மிக்சிய ஆஃப்பண்ணுங்க!
ஓவியம்: முத்து

வாய் நமநமன்னுச்சு. ஏதாச்சும் தின்னா நல்லாருக்கும்னு அம்மிணிட்ட கேட்டேன். “ஒங்க தங்கச்சி நாலு நாள் முன்னாடி கொடுத்த ஆப்பிள் இருக்கு. வேணுமா”ன்னாங்க. கேட்ட தொனியிலேயே வில்லங்கம் தெரிஞ்சுது.

ஆப்பிளையும், கத்தியையும் கொண்டு வந்து வச்சாங்க. கட் பண்ணத்தான் முடியல. “ஒலகத்துலயே ஒங்க குடும்பத்துக்கு மட்டும் தான் இப்படி ஒரு பழக்காரர் கிடைப்பாரு”ன்னு அம்மிணி நொடிச்சாங்க.

ஐடியா வந்துச்சு. ஜூஸ் அடிச்சுக் குடிச்சா என்னன்னு. பாடுபட்டு நாலு துண்டா வெட்டி மிக்ஸில போட்டேன். ஆன் செஞ்சா போர் அறிவிச்ச பிரதேசத்துல சைரன் அலறுனாப்ல கத்துச்சு. அம்மிணியும் கத்துனாங்க. “அப்பா பேசறாரு. அந்த மிக்சிய ஆஃப்பண்ணுங்க”ன்னு.

பேசிட்டு வச்சவங்க, நிலை கொள்ளாம தவிச்சாங்க. மகனார்ட்ட விசாரிச்சாங்க. “திருச்சி - மேலூர் ரோட்டுல புதுசா அபார்ட்மென்ட் கட்டுறாங்களே. என்ன ரேட் சொன்னாங்க.” மகனார் ஏதோ முனகவும் “சரி நானே விசாரிச்சுக்கிறேன்”னு என்னைப் பார்த்தாங்க.

“என்னம்மா. எதுக்கு இத்தனை படபடப்பு”ன்னு நிதானமா கேட்டேன். “அப்பா ரிட்டையர் ஆகப் போறாரு. செட்டிலாகி வர பணத்துல எனக்கும் தங்கச்சிக்கும் தரப் போறாராம்”னு உற்சாகமாச் சொன்னாங்க.

“ஒங்கப்பா எத்தன தடவை ரிட்டையர் ஆவாரு”ன்னு அதிசயமாக் கேட்டேன். அம்மிணி கடுப்பாயிட்டாங்க. “ஒங்களுக்கு எல்லாத்தியும் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணும். என் சொந்தம்னா அவ்ளோ எளக்காரம்”னு குமுறுனாங்க.

மகனார் உடனே, “வேணு மாமாவாம்மா...”ன்னாரு. அம்மிணி டக்குனு குளுந்துட்டாங்க. “அவனே தான். எங்கப்பா பேர்தான் அவனுக்கும் வச்சது. அதனால எப்பவுமே அவனை அப்பான்னே கூப்பிடுவேன். அவனும் மகளேன்னு என்னை வாய் நிறைய கூப்பிடுவான். ப்ச். கல்யாணம் கட்டுனானே தவிர புள்ளையே இல்லை. நாங்க வருத்தப்பட்டு பேசுனா நீதான் இருக்கியேன்னு என்னைச் சொல்வான். எந்தங்கச்சிக்கு பொறுக்காம அப்போ நானுன்னு வம்புக்கு வருவா. நீயும்தான்னு அவளையும் சொல்வான்”னு பாசமலர் படம் ஓட்டுனாங்க.

“ஒங்களுக்கு எதுக்குக் கொடுக்கணும். எஃப்டில போட்டா, வர வட்டி மாச செலவுக்கு உபயோகப்படுமே. பின்னால பார்த்துக்கலாம்ல”னு எதார்த்தமா சொல்லித் தொலைச்சுட்டேன்.

“எங்கப்பாரு. எங்களுக்குக் கொடுக்கிறாரு. ஒங்களுக்கு என்ன வலிக்குது”ன்னு சவுண்டு விட்டாங்க. அமைதியா சொன்னேன். “அதுக்கில்லைம்மா... நாளைக்கு அவங்களுக்கே ஒரு தேவைன்னா சிரமப்படுவாங்க தானே.” அதுக்கும் எகிறுனாங்க. “அப்படி அம்போன்னு விட்டுருவோமா. ஓடிப்போய் ஒதவ மாட்டோமா”ன்னு.

பட்டுன்னு ஆஃப் ஆயிட்டேன். அம்மிணி எதிர் வீடு, பக்கத்து வீடுன்னு போய் விசாரிச்சாங்க. எ வீ அண்ணாச்சி சொன்னாராம். “பேங்க் வட்டியை விட ஒரு வட்டி கூடத் தரேன். எனக்குக் கடனாக் கொடுங்க”ன்னு. “இந்தாளுட்ட போய்க் கேட்டேன் பாருங்க”ன்னு வந்து புலம்புனாங்க.

அம்மிணி விசாரிச்சது தமிழ்நாடு முழுக்க எப்படிப் பரவிச்சோ தெரியல? போன்ல மெசேஜா வந்து கொட்டுச்சு. ‘சுலபத் தவணையில் வீடு வாங்க வேண்டுமா உடனே அணுகவும்’னு. சென்னைக்கு மிக அருகில் விழுப்புரத்தில் 3 பெட்ரூம் கார் பார்க்கிங் வசதியுடன்னு அடுத்த மெசேஜ்.

நடுவுல ரெண்டு போன் அழைப்புகளும் வந்துச்சு. அம்மிணி அரண்டு போயிட்டாங்க. “நாம நம்மளுக்குள்ரதானே பேசிகிட்டோம். எப்படி இவங்க விசாரிக்கிறாங்க”ன்னு. மகனாரைப் பார்த்தாங்க. மாங்காய் மோர்க்குழம்பு செஞ்சு பார்க்கணும்னு அம்மிணி சத்தமா சொன்னாலே போன்ல யூடியூப் வந்துரும். ‘ஈசியா மாங்கா மோர்க்குழம்பு ஒங்க வீட்டுலயே வைக்கலாம்னு’.

அதை அம்மிணிக்கு ஞாபகப்படுத்தினேன். “இனிமே பேப்பர்ல எழுதிக் காட்டு. அதுலயே நான் பதில் எழுதறேன்”னு சொன்னதும் கலாய்க்கிறேனா சீரியசா சொல்றேனான்னு புரியாம என்னை முறைச்சாங்க. அம்மிணியோட தமிழ் சங்கத்தமிழ்! வட்டெழுத்து தட்டெழுத்து ரேஞ்சுல இருக்கும். என்ன சொல்ல வராங்கன்னு அவங்களே பொழிப்புரை எழுதினாத்தான் புரியும்!

“நீங்க ஒரு வார்த்தை மரியாதைக்கு பேசிருங்க. அப்பாவே ஒங்ககிட்டேயும் தகவல் சொல்லணும்னு சொன்னாரு”ன்னு அம்மிணி சொன்னாங்க. போனை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்குப் போயிட்டேன். அம்மிணி எதிர்ல பேச முடியாது. எந்த சொந்தத்துக் கிட்டேயும் பேச ஆரம்பிச்சா, “நல்லா இருக்கீங்களா” மட்டும் தான் சொல்லவிடுவாங்க.

படக்குன்னு போனைப் பிடுங்கிட்டு அவங்க நினைக்கிறதைப் பேசுவாங்க. நடுவுல ஒரு செகண்டு போனாப் போவுதுன்னு என்கிட்டே கொடுப்பாங்க. நான், “வந்து...”ன்னு என் குரலைக் காட்டுனதும் மறுபடி போனைக் கைப்பற்றி காதுல வச்சுக்குவாங்க. எங்க போறாத காலம் அம்மிணிக்குத் தெரியாம ஏதாச்சும் சொல்ல நினைக்கிறவரு, போன் என் கையில இருக்குன்னு நினைச்சு ஒளறிக் கொட்டிருவாரு.

இப்படி அவதிப்பட்டதால போனோட மாடிக்கு வந்தாச்சு. டூப்ளிகேட் மாமனாருக்கு இனிய பணி ஓய்வு நல்வாழ்த்துகள் சொன்னேன். மனுசன் தேம்புனாரு. அம்மிணியோட பாசம் மட்டும் இல்லேன்னா வாழ்க்கையே வெறுத்துருக்கும்னு ஒரு ரீல் ஓட்டுனாரு. “வேணும்னா கூட்டிக்கிட்டுப் போய் ஒரு மாசம் வச்சுக்குங்க, ஒங்களுக்கும் ஆறுதலா இருக்கும்”னு சொல்லிட்டேன்.

மனுசன் பட்டுனு நிதானத்துக்கு வந்துட்டாரு. “ஒங்களுக்கு எப்பவுமே தமாஷ் தான். அவளைப் பிரிஞ்சு நீங்க இருப்பீங்களா என்ன”ன்னு கேட்டுட்டு போனை வச்சுட்டாரு.

கீழே வந்தா அம்மிணி ரெண்டு கை விரலையும் பிரிச்சுப் பிரிச்சுக் கணக்குப் போட்டுக்கிட்டுருந்தாங்க. அம்மிணி போன்ல டொய்ங்னு ஒரு சத்தம். எடுத்துப் பார்த்தாங்க. மறுபடியும் முகத்துல பளீர் வெளிச்சம். “நினைச்சேன். எப்பவுமே அவனுக்குப் படபடப்பு அதிகம். எங்கப்பாவே சொல்வாரு. என் பேரை வச்சா என் கொணமுமே அப்படியே இருக்கே. நினைச்சா செஞ்சிரணும்னு.”

“ஒங்கப்பா அப்படி என்ன செஞ்சாரு”ன்னு கேட்டேன். “நாலு ஜாதகம் எனக்கு வந்திருந்துச்சு. ஒங்க ஜாதகம் முதல்ல வந்துச்சாம். இந்த வரனைத்தான் முடிப்பேன்னு பிடிவாதமா கட்டி வச்சுட்டாரு”ன்னு சொன்னப்போ உஷாராகி டாபிக்கை மாத்துனேன்.

“இப்போ என்ன மெசேஜ்”’னு கேட்டதும், “என் அக்கவுண்டு விவரம் வேணுமாம். ஒனக்குத் தனியா அக்கவுண்டு இருக்கில்லன்னு கேட்டுருக்கான்”னாங்க. மகனாரை விட்டு அனுப்பச் சொன்னாங்க. “என் செக் புக் எங்கே இருக்கு”ன்னு அவங்க கேட்கும்போதே போன்ல மெசேஜ்.

‘5000 ரூபாய் உங்கள் கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளது!’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in