ராஜாஜி
ராஜாஜி

ராஜாஜியின் 'ஜெய் பீம்' அனுபவங்கள்!

அரசியல் மற்றும் பொதுவாழ்வு சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதுபெற்ற ராஜாஜிக்கு இன்று (டிச.10) பிறந்தநாள். அரசியல்வாதி என்ற பிம்பத்தைத் தாண்டி, தேர்ந்த எழுத்தாளர் என்ற முகமும் ராஜாஜிக்கு உண்டு. பத்திரிகை நடத்தியிருக்கிறார். குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமைபெற்ற ராஜாஜி, 'மகாபாரதம்', 'ராமாயணம்' போன்றவற்றை தன்னுடைய சுவாரசியமான நடையில் எழுதியதுடன், கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். அவரது ராமாயண கதையான 'சக்கரவர்த்தி திருமகன்' நூலுக்கு 1958-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது.

விஷயத்துக்கு வருவோம், 'ஜெய் பீம்' படத்துக்காக அதன் இயக்குநரும், அதில் நடித்த சூர்யாவும் படாதபாடு படுத்தப்பட்டது போலவே, நகைச்சுவை கதைகளை எழுதியதற்காக ராஜாஜியும் சில சாதிக்காரர்களால் படுத்தியெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த அனுபவத்தை, 'முத்துமாலை ஆசிரியரின் கஷ்டங்கள்’ என்ற தலைப்பில் நகைச்சுவை கட்டுரையாகவே வெளியிட்டிருக்கிறார் ராஜாஜி. அந்தக் கட்டுரையை வாசகர்களுக்காகத் தருகிறது, 'காமதேனு' இணையம்.

'முத்துமாலை' ஆசிரியரின் கஷ்டங்கள்

"பரமபதத்திற்குச் செல்லும் பாதை மிக்க கஷ்டமான பாதை. தீட்டிய கத்திமுனைமேல் செல்வதுபோல் அதைக் கொள்க" என்றான் எமன், கடோப நிஷத்தில். அவ்வாறே பத்திரிகை ஆசிரியர்கள் தொழிலும், கத்திமுனைப் பாதையாகவே இருக்கிறது.

சர்க்கார் சமாசாரம் வேண்டாம். அரசியல் விஷயம் வேண்டாம், ஹரிஜனங்களைக் கிறிஸ்தவர்களாக்குவதுங்கூட எக்கேடாக ஆவது போகட்டும். கதைகள் பிரசுரித்துப் பத்திரிகையை நடத்தலாம் என்று 'முத்து மாலை'யை ஆரம்பித்தேன்.

ஒருநாள் எங்கள் ஆபீசுக்குப் பெரிய தலைப்பாகையும் நரைத்த தொங்கு மீசையுங்கொண்ட ஆஜானுபாகு ஒருவர் வந்தார். இவ்வளவு பெரிய மனிதர் எங்கள் ஆபீசுக்கு வந்தாரே என்று மகிழ்ச்சி கலந்த வியப்புடன் எழுந்து நமஸ்காரம் செய்து ஆசனத்தில் அமரச் செய்தேன்.

"ஏன் ஐயா, கதை எழுதினால் இம்மாதிரியா எழுதுவது? நாயுடு ஜனங்களை அவமதிக்கவா உங்கள் பத்திரிகை நடத்துவது?" என்று ஆரம்பித்தார்.

மகிழ்ச்சி தீர்ந்து விசாரங்கொண்டு விஷயம் விசாரித்தேன்.

சென்ற மாதத்திய இதழில் பங்காரு நாயுடுவின் ஆங்காரம் என்று 'தும்பி' எழுதிய சிறுகதையை எல்லாரும் போற்றினார்கள். எங்கள் பத்திரிகைக்கு நல்ல காலம் வந்தது என்றிருந்தேன். அதில் குஜிலிக் கடையில் பங்காரு நாயுடுவை ஒரு பெண் ஏமாற்றிய ஹாஸ்ய விஷயத்தைக் குறித்துத்தான் மீசைக்காரருடைய ஆட்சேபம். “நாயுடுகள் எல்லாம் இப்படி மூடர்கள் என்று எழுதி விடலாமா?" என்றார் பெரியவர்.

"ஒருநாளும் கிடையாது. யாரோ ஒருவர் ஏமாற்றப்பட்டதாகக் கதை. அது ஒரு சாதியைக் குறிக்காது. அகஸ்மாத்தாக நாயுடுவாக அமைந்தது. அவ்வளவுதான்" என்றேன்.

"அதெல்லாம் பொய்ப் பேச்சு. ஏன் நாயுடு என்று பேர் வைத்தீர்கள்? செட்டி, ஐயர், ஐயங்கார் யாராவது ஒருவரை வைத்துக் கதை ஏன் எழுதவில்லை? வேணுமென்று நாயுடு குலத்துக்கு முட்டாள் பட்டம் கட்டவே இது எழுதியது” என்றார். நான் எவ்வளவு சொல்லியும் அவருக்குச் சமாதானம் உண்டாகவில்லை.

-----

பத்திரிகை ஆசிரியராக ராஜாஜி
பத்திரிகை ஆசிரியராக ராஜாஜி

அடுத்த இதழில் ஒரு கதை. மதுவிலக்கு விஷயம். 'குடியால் கெட்ட குப்பாசாரி' என்பது கதையின் பெயர்.

'அகில இந்திய விசுவகர்ம குலச் சங்க'த்தின் காரியதரிசி என்று 'விசிட்டிங் கார்டு' ஒன்றை பையன் கொண்டு வந்தான். 'வரலாம்' என்று நாற்காலியைக் காலி செய்து எதிர்கொண்டழைத்து மரியாதை செய்தேன்.

"எங்கள் சமூகத்திற்குப் பெருந்தீங்கு இழைத்துவிட்டது உங்கள் பத்திரிகை" என்றார்.

என்ன சமாதானம் சொல்லியும் பயனில்லை.

"குடித்து கெட்டுப்போன விஷயத்தைப்பற்றி எழுக வேண்டுமானால் வேறு யாரையாவது வைத்துக் கதை எழுதக்கூடாதா? இம்மாதிரி எங்களை அவமானப்படுத்தலாமா? இதற்குத் தாவா போட உத்தேசம் என்றார்.

"ஏதோ தவறு நேர்ந்துவிட்டது, அடுத்த கதை பிராமணனை வைத்து எழுதிவிடுகிறோம்” என்றேன்.

இந்த மாதத்தில் எங்கள் பத்திரிகை ஜாதகமே நன்றாயில்லை போலும்! அடுத்த நாள் என் நண்பர் (பெயர் சொல்லக் கூடாது) ஒரு முஸ்லிம் சகோதரர் வந்தார். கண்கள் சிவந்து முகம் கோணி, பெருங் கோபக் குறிகள் காணப்பட்டன.

“இவ்வளவு நாள் சிநேகிதமும் வீணாய் முடிந்தது” என்றார்.

"ஏன்?" என்றேன் மிகக் கவலையுடன்.

"முஸ்லிம்கள் வியாபாரத்தில் மோசம் செய்வார்கள் என்று பொருள்பட அந்தக் கதை பிரசுரித்தது தருமமா?” என்றார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “இந்த மாதத்திய 'முத்து மாலை'யை எடும்" என்றார்.

எடுத்தேன்.

‘முத்துசாமியின் மோசம்’ என்று ஒரு கதை. அது ஒரு பழைய ருஷ்யக் கதை. பெயர்கள் எல்லாம் மாற்றி ஏதோ ஒரு மாதிரியாக எழுதியிருந்தோம். பகீருத்தீன் என்ற ஒரு முகம்மதிய நகை வியாபாரியாக வைத்துக் கதையையும் கொஞ்சம் மாற்றி இருந்தது.

"கொஞ்சம் நியாயமாகப் பாருங்கள். பகீருத்தீன் என்பதற்குப் பதில் கிருஷ்ணமாச்சாரி என்று எழுதியிருந்தால் பிராமண சமூகத்திற்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்?” என்றார்.

"ஒன்றும் வந்திருக்காது. யாரும் ஆட்சேபித்திருக்க மாட்டார்கள்” என்றேன்.

"சும்மா இப்போது சொல்லலாம். இது மிகவும் அக்கிரமம். இதைப்பற்றி நேற்று மசூதியில் பெரிய கலவரம். பின்னால் உங்களுக்குத் தெரியவரும்" என்று சொல்லிவிட்டுக் கோபமாகவே போய்விட்டார்.

மற்றொரு கதையில் எங்கேயோ 'வெங்கடசாமி பிள்ளை இடறி விழுந்தார்' என்றிருந்தது.

"யாதவ குலத்தார்கள் எல்லாம் நொண்டிகளா? இது பெரிய அபவாதம்” என்று என் நண்பர் பொன்னு கிருஷ்ணப்பிள்ளை பலமாக ஆட்சேபணை செய்தார். (பிள்ளை பட்டம் சில பகுதிகளில் யாதவர்களுக்கும் உண்டு)

---

நம்மவர்களுடைய சாதிப் பிரிவினைகள் அரசியல் சுதந்திரத்துக்கு மட்டும் தடையல்ல; கதை, கட்டுரைகளில் தாராளமாகக் கற்பனை செய்து எழுதவுங்கூடத் தடைகளாய் நிற்கின்றன.

சிரித்து வாழ நாம் எங்கே போய்க் கற்றுக்கொள்கிறது?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in