பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

வேதாரண்யம்

கடைவீதியில் இரண்டு இளைஞர்கள்...

“மச்சி... போனஸ் எல்லாம் வாங்கியாச்சா? போன வருஷம் வாங்கினப்போ எனக்குப் பார்ட்டி வச்சே... இந்த வருஷமும் தீபாவளிக்கு அமர்க்களப்படுத்திட வேண்டியதுதானே?”

“அடப் போடா... கரோனாவால கம்பெனியே ஆடிப்போய் கிடக்கு. எங்க ஓனரே தீபாவளிக்கு என்கிட்ட பார்ட்டி கேட்குறாரு.”

“பஞ்சப்பாட்டை ஆரம்பிச்சுட்டியா? வேணும்னா இந்தத் தடவை நானே பார்ட்டி வைக்கிறேன். அதுக்காக கம்பெனியே திவாலாகிடுச்சுன்னு மட்டும் கண்ணீர்விட்டு சீன் போடாதே.”

- மருத.வடுகநாதன், வேதாரண்யம்

வேளாங்கண்ணி

டீக்கடையில் இருவர்...

“என்ன தம்பி... கழுத்துல, கையில செயின் எல்லாம் சும்மா தகதகன்னு மின்னுது. பேட்டரி பைக் வேற பிரமாதமா இருக்கு.”

“கண்ணு வைக்காதீங்கண்ணே! எல்லாம் தலை தீபாவளி சீரா வந்தது.”

“அதுசரி. 90’ஸ் கிட்ஸா பொறந்ததைவிட 20’ஸ் கிட்ஸா பொறந்துருக்கலாம். உங்க பாடு யோகம்தாம்ப்பா!”

“சரி சரி... நைநைன்னு புலம்பாம போய் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணப்பாருங்க. 90’ஸ் கிட்ஸு, நைனா பட்ஸுன்னுக்கிட்டு!”

-எஸ்.சுதாகரன், வானவன்மகாதேவி

தஞ்சாவூர்

ஜவுளிக்கடையில் ஊழியரும் இரு நண்பர்களும்...

“ஸாரி சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கூட்டமா இருக்கு... குறைஞ்சதும் எடுக்கலாம்!"

“கூட்டம் குறைஞ்சதுக்கப்புறம் எப்படிங்க எடுக்க முடியும்?”

“என்ன தம்பி... பார்த்தா டீசன்ட்டா இருக்கீங்க. ஆனா, கூட்டத்தோட 'எடுக்கிற' ஆளுங்க மாதிரி பேசுறீங்க?”

“யோவ்... ரகம் குறைஞ்ச பிறகு எப்படி செலக்ட் பண்ண முடியும்னு கேட்டேன்! இருநூறு ரூபாய் சட்டையை ரெண்டாயிரம் ரூபாய்க்கு விக்கிறது... கஸ்டமர்கிட்ட மட்டும் கன்னாபின்னான்னு பேசுறது.”

(கடுகடுத்தபடியே வெளியேறுகிறார்கள் நண்பர்கள்)

- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்

தஞ்சாவூர்

காய்கறி மார்க்கெட்டில் கஸ்டமரும் வியாபாரியும்...

“ஏங்க...இப்படிச் சகதியாக் கிடக்கே... வியாபாரிகளாவது கொஞ்சம் மண்ணள்ளிப் போடக்கூடாதா!?”

“நாங்க என்ன போடறது... அதான் மழையே மண்ணள்ளிப் போட்டுடுச்சே! வியாபாரமே இல்லியே!”

“அதையும் எங்க தலையிலேதானே கட்டுவீங்க... சகதியில எல்லாம் நீந்தி வர்றோமே... ஏதாச்சும் ரெண்டு காய்கறியாவது கூட போடுறது!”

“ஆமா... இருக்கிற கொடுமைக்குக் கொசுறு ஒண்ணுதான் கொறைச்சல்!”

- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in