கனவு காணும் வாழ்க்கை யாவும்!

கனவு காணும் வாழ்க்கை யாவும்!

இல்லை. இது சோகமான கட்டுரை அல்ல. தலைப்பு நினைவுபடுத்தும் பாடல் வரிகளை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இது, கனவுக்கன்னிகள் குறித்து பகல், நண்பகல் கனவு கண்டு வாழ்வை ஓட்டிய மனிதர்களைப் பற்றிய ஜாலி பதிவு!

முன்பெல்லாம் பள்ளி நோட்டு புத்தகங்களை அட்டை போடுவது நியூஸ் பேப்பரில்தான். அதுவும் வெள்ளிக்கிழமை பேப்பரில் சினிமா செய்திகள் சற்று தூக்கலாக இருக்கும் என்பதாலும் நடிக, நடிகைகள் கலர் ஸ்டில்ஸ் இருக்கும் என்பதாலும் அந்த நாளில் வெளியான பேப்பரில் அட்டை போடுவது மரபு. பணமப்பு மிகுந்த ஒருவனால் தான் பிரவுன் சீட் பேப்பரில் அட்டை போட முடியும். அன்று வகுப்பறையில் சற்று பரபரப்பு. சில்க் அம்மியில் ஏதோ அரைத்து கொண்டிருந்த ஸ்டில்லை யாரோ ஒருவன் சமூக அறிவியல் புத்தகத்தில் அட்டை போட்டிருந்தான். சிலுக்குக்கும், சமூக அறிவியலுக்கு என்ன சம்பந்தம் என்பது தனி விவாதத்துக்கு உட்பட்டது. அன்று அனைவரும் அதை பார்த்துவிட்டு அந்த வயதில் என்ன கருத்து சொல்ல இயலுமோ அதைப் பகிர்ந்துகொண்டோம்.

பாடம் நடத்த யாரிடமாவது ஆசிரியர் புத்தகத்தை வாங்குவது வழக்கம். அன்று சிலுக்கு அட்டைப் படம் போட்ட புத்தகத்தை வாங்கி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். முதலில் அட்டையை அவர் கவனிக்கவில்லை. சிந்து சமவெளி நாகரிகம் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தவர், சிலுக்கு அம்மி அரைக்கும் படத்தைப் பார்த்துவிட்டார். அவர் எங்களைப் போல் கலைக் கண்ணோடு பார்க்கவில்லை என்பது அவரது கண்கள் சிவக்கும்போது புரிந்தது. பின்புறத்தில் நாலு சாத்து சாத்தியும் அவரது ஆத்திரம் அடங்காமல் புத்தக உரிமையாளரான சுப்ரமணி பெயரை ‘சிலுக்கு சுப்ரமணி’ என்று மாற்றினார். இதனால் சுப்ரமணி அவமானமடைவான் என்று நினைத்தார் போல. மாறாக சிலுக்கு மணி மகிழ்ச்சியடைந்தான். பெருமையடைந்தான். இன்று வரை அதே பெயரில் அழைக்கப்பட்டு வருகிறான். இளம் பிராயத்தில் நடிகைகளால் ஈர்க்கப்படாத ஆண்கள் அரிதுதான்!

லோகு மாமா! ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தின் கமலஹாசனைப் பார்க்கும்போது லோகு மாமாவின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலாது. என் வீட்டுக்கு அருகே இருந்த உணவகத்தில் சமையல்காரராக இருந்தவர். சொந்த ஊர் பரமக்குடி அருகே ஒரு கிராமம். வீட்டில் சண்டை போட்டுவிட்டு வேலைக்கு வந்தவர் இங்கேயே இருந்துவிட்டார். தங்குமிடம், இருப்பிடம் எல்லாமே அந்த உணவகம்தான். தீவிர சினிமா விரும்பி. 90-களின் ஆரம்பத்தில் ஒட்டுமொத்த ஊரே குஷ்பு ரசிகர்களாக இருந்தபோது லோகு மாமா மட்டும் உலகளாவிய பானுப்ரியா ரசிகராக இருந்தார்.

இவர் எப்போது பானுப்ரியா ரசிகராகிப் போனார் என்பது குறித்த தரவுகள் இல்லை. உணவகத்துக்கு அருகே இருந்த திரையரங்கில் ‘சத்ரியன்’ படம் ஓடும்போது நான்கு காட்சியையும் ஒரே நாளில் பார்த்த சாதனைக்குச் சொந்தக்காரர். காலை காட்சிக்கு சென்றவர் மறுநாள் காலைதான் வெளியே வந்தார். அதுவும் அவராக வரவில்லை. காலையில் திரையரங்கைப் பெருக்கும் பெண், அங்கு தூங்கிக்கொண்டிருந்த லோகு மாமாவைத் துடைப்பதால் எழுப்பி வெளியே அனுப்பும்போதுதான் இது தெரியவந்தது. அன்று முதல் வெறும் லோகுவாக அறியப்பட்டவர் லோகுப்ரியாவாக அழைக்கப்படலானார்.

ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ரிலீஸ் அன்று ஜெயம் ரவி உருவம் பதித்த பேனரை விட த்ரிஷாவின் பேனர் சற்று அதிகமாக இருந்ததால் இருதரப்பு ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக வந்த செய்தி சற்று ஆச்சரியமாக இருந்தாலும் 91-ல் வந்த ‘கோபுரவாசலிலே’ படத்தில் கார்த்திக் ரசிகர்கள் பெரிய பேனர் வைக்க, அந்த இடத்தின் அருகிலேயே செல்வி பானுப்பிரியா ரசிகர் மன்றம் இவண் லோகநாதன் என்று வெள்ளை வேட்டியில் எழுதி கார்த்திக் ரசிகர்களோடு விரோதம் வளர்த்துக்கொண்டவர் லோகு மாமா. வெகு சீக்கிரமாகவே பானுப்ரியா அண்ணி நடிகையாகிவிட்டதில் லோகு மாமாவிற்கு எதோ மனக்குறை ஏற்பட அவரும் திருமணம் செய்துகொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டார்.

“அடிச்சு சொல்றேன், இந்த ரவாளி புள்ளதான் அடுத்த குஷ்பு. இங்குட்டு பாத்தா ரோஜா மாதிரி இருக்கா... அங்குட்டு பாத்தா மீனா மாதிரி இருக்கா! இன்னொரு சாடைல ரூபிணி மாதிரியும் இருக்கு. இந்தளவுக்கு எல்லா அம்சமும் கொண்ட நடிகை தமிழ் சினிமாவுக்கு வரவே இல்லேன்னு அடிச்சு சொல்லுறேன்” என முருகு அண்ணன் சொல்லுவதை கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

“ஒரே ஆளு எப்படிண்ணே ரோஜா, மீனா, ரூபிணி மாதிரி இருக்க முடியும். நம்புற மாதிரி இல்லையேண்ணே!”

“நீ ‘திருமூர்த்தி’ படம் பாத்தியா?”

“இல்ல!”

“அப்புறம் உனக்கு எப்படி பொது அறிவு கிடைக்கும்? நைட்டு ஜிஈசி டிவில ஒளியும் ஒலியும் போடுவான். அதுல செங்குருவி பாட்டு வரும். அப்பப்பாரு!”

இங்ஙனம் அவர் ரவளிக்கு ரசிகர் குழாமைத் திரட்டிக்கொண்டிருப்பார்.

அப்போதைய நிலவரப்படி சாடிலைட் டிவிகள் தமிழகத்துக்குள் மெல்ல வர தொடங்கியிருந்தன. எனிலும் நாலு பாடல்கள் ஒளிபரப்பு ஆனாலே அதற்கு பெயர் ‘ஒலியும் ஒளியும்’ தான். அது எந்த சேனலாக இருந்தாலும்!

முகி (முத்துகிருஷ்ணன்) அண்ணன், தீவிர குஷ்பு ரசிகர். ‘அண்ணாமலை’ படம் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது வாசலில் உட்காந்திருந்த பெண்ணிடம் குஷ்பு என்று வலது கையில் பச்சை குத்திக்கொண்டவர். அண்ணன் கையில் கட்டியிருக்கும் வாட்சின் உள்ளே குஷ்பு சிரித்துக்கொண்டு இருப்பார்.

தெருவில் வைகுண்ட ஏகாதசி அன்று டிவி டெக் வாடகைக்கு எடுத்து படம் ஓட்டுவார்கள். தெருவில் அனைவரிடமும் பணம் வசூல் செய்து படம் ஓட்டும் பொறுப்பு முகி அண்ணனுடயது. காரணம் அவர் வீட்டில்தான் உயரமான மேசை இருந்தது. அதில்தான் டிவியை வைப்பார்கள். ஒருமுறை கேசட் ரீல் சிக்கியபோது அதை வெகுவாக சரிசெய்து படம் ஓட்டினார். அந்தக் கணமே படம் ஓட்டும் பொறுப்புக் குழு தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கனவுக்கன்னிகளுக்கென்று பிரத்யேகத் தகுதிகள் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லக்கடவது. உறவினர் மகன் ஒருவருக்கு நடிகை சுனைனா என்றால் உயிர். என் ஊகம் சரியென்றால் அந்த சுனைனாவுக்காக ஒரு டஜன் ஒடாத படங்களை முதல் நாளே அவன் பாத்திருக்க வேண்டும். நம்மில் பலருக்கு கனவுக்கன்னி சகவாசம் இருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. காரணம் வளமான கவுரவம் (வறட்டு கவுரவத்திற்கு எதிர்சொல்). கனவுக்கன்னி விஷயத்தில் கள்ளமவுனம் சாதிப்பார்கள். உறவினரின் மகன் விஷயத்தில் அது நடக்கவில்லை. அவனுக்காகப் பெண் தேடி அலையாத இடமில்லை. சர்வ குணநலனும், பெண்ணின் தகப்பன் பணபலனும் இருந்தாலும் பையன் நோ சொல்லி வந்ததை யாராலும் ஏற்க முடியவில்லை.

ஒருநாள் குடும்பக் கூட்டம் கூடி விவாதிக்கப்பட்டது. பையனை கூடத்தில் உட்காரவைத்து குறுக்கு விசாரணை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

“உனக்கு என்னதான்டா பிரச்சினை?”

பையன் பலத்த மவுனம்!

அவனுக்கு உளவியல் ரீதியாகப் பிரச்சினையா, உடல்ரீதியான சிக்கலா என நாசூக்கான கேள்விகள் முதல் நாக்கைப் பிடிங்கிக்கொள்ள வைக்கும் கேள்விகள் வரை பல வீரிய வினாக்கள் எழுப்பப்பட்டன.

பையன் ஒரு கட்டத்தில் மவுனம் கலைத்தான்.

“எனக்கு சுனைனா மாதிரி பொண்ணு வேணும்!”

“என்னடி புள்ள வளத்து வச்சிருக்க? சினிமாக்காரி மாதிரி பொண்ணு கேக்குறான்? அந்தப் பொண்ணு அழகு என்ன இவன் லட்சணம் என்ன? ம்ம்ம்?” என்று அதட்டிய அவனது அப்பாவை, இப்போது கூட்டம் குறுகுறுவெனப் பார்த்தது.

“அப்ப சுனைனான்னா யாருன்னு உங்களுக்கு தெரியும். அப்படித்தானே?” சரியாகப் பிடித்தார் பையனின் அம்மா!

இதைப் படிக்கும் உங்களுக்குக் நம்ப கடினமாக இருக்கலாம். ஆனால் இது நடந்த உண்மை. சபை கலைந்தது. ஒரே மகன். அதுவும் செல்வச்செழிப்பு நிறைந்த குடும்பம். வேறு வழியின்றி. சுனைனா சாயலில் எங்கேனும் ஒரு ஊரில் ஏதேனும் பொண்ணு கிடைக்குமா என ஆளுக்கு ஒரு பக்கம் அலைந்தார்கள்.

“ஏண்டா ஜோதிகா, மாளவிகா மாதிரின்னா கூட நம்ம குடும்பத்துலையே ரெண்டு மூணு முகஜாடையில் இருக்கு. சுனைனாவுக்கு எங்க போறது? பேசாம சுனைனாகிட்டே பேசிப் பாத்துருவோமா?” என்று நெருங்கிய உறவுகளுக்குள் ஏககிண்டல். எனிலும் பையனின் குடும்பம் சுனைனா போட்டோவை ஸ்க்ரீன் சேவராக வைத்துக்கொண்டு ஊரில் சல்லடை போட்டது.

“தஞ்சாவூர் பக்கம் ஒரு சுனைனா இருக்காம். போய் பாத்துட்டு வந்துருவோமா?”, “இல்லடா திருச்சி பக்கம் ஒண்ணு இருக்காம். அத மொதல்ல பாத்துட்டு வந்துருவோம்” என்ற சம்பாஷனை அவர்கள் குடும்பத்தில் ரொம்ப சாதாரணமாகிப் போனது.

ஒருகட்டத்தில் 80 சதவீத சுனைனாவைக் கண்டதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்க குடும்பம் காரோடு பறந்து போய்பிடித்தது. ஒரு வழியாக எல்லாம் பேசி முடிக்கப்பட்டது. பையனுக்கு ஏக மகிழ்ச்சி.

‘பய நினைச்ச மாதிரியே சுனைனா மாதிரி புடிச்சிட்டான்’ - உறவுகள் மகிழ்ந்தன.

ஊரின் பெரும் மண்டபத்தில் திருமணம் முடிவாகியிருந்தது. உறவுகள் சூழ திருமணமும் முடிந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சி. நல்ல பிரம்மாண்டமான வரவேற்பு விருந்து. நானும் பெண்ணை பார்த்தேன். கிட்டத்தட்ட சுனைனா போலவே இருந்தது. எல்லோரும் மகிழ்ந்திருக்க மணமகனின் அப்பா மட்டும் சற்று வாட்டமாக இருந்தார். நான் அவரிடம் நேரிடையாக விசாரிக்காவிட்டாலும் நெருங்கிய உறவினர் பெண்ணிடம் வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.

“சுனைனா சுனைனான்னு சொல்லி ராஜஸ்தான்காரங்களோட சம்பந்தம் பண்ண வச்சிட்டான் இந்தப் பய! பொண்ணோட சொந்தக்காரன்ன்னு ஒருத்தன் ஏதேதோ பேசுறான். அது இந்தி மாதிரியும் இல்ல, ஒரு மண்ணுமே புரியமாட்டுது!” என்று அவர் புலம்பும்போது அவரது மனைவி அந்தப் பக்கம் க்ராஸ் ஆகியிருக்கிறார். “அம்பிகா மாதிரி இருக்கேன்னு சொல்லித்தான் எங்க தெரு பொண்ணைப் பொண்ணு பார்க்க வந்தீங்க... அந்தப் பொண்ணு உங்களைப் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு அப்புறம்தானே என்னைப் பொண்ணு பார்த்தீங்க? அப்புறம் உங்க பையன் எப்படி இருப்பான்?” என்று கேட்டிருக்கிறார்.

அந்த மனிதர் சோகமாக வானத்தைப் பார்த்தபடி அமர்ந்துவிட்டாராம். அப்போது, ‘வானிலே தேனிலா ஆடுதே பாடுதே’ என்ற பாடல் எங்கிருந்தோ ஒலிக்க, அந்த இடமே சிரிப்புக் களமானதாம்! இருக்காதா பின்னே!

பின்குறிப்பு: கனவுக்கன்னிகளுக்குக் காதலிகளின் சாயலும் காதலிகளின் சாயல் கனவுக்கன்னிகளுக்கும் அமைத்துவிடுவதுண்டு. இந்த விஷயத்தில் ஆண்களுக்கு இருந்த சுதந்திரம் பெண்களுக்குக் கிடைக்காமலே போய்விட்டது. எத்தனை பாட்டிமார்கள் தியாகராஜபாகவதரை வெளிப்படையாகச் சொல்லி ரசிக்க முடியாமல் மாண்டுபோனர்களோ? ஜெமினி கணேசனை கனவுக்கண்ணனாக கருதிய பெரியம்மாக்களுக்கு வாய்த்தது என்னவவோ பழம்பெரும் நடிகர் ரங்காராவ் முகவெட்டு கொண்ட பெரியப்பாக்கள்தான். கமலஹாசனை நினைத்து ஏங்கிய அக்காக்களுக்கு அமைந்தது எல்லாம் கல்லாபெட்டி சிங்காரம் தோற்றம் கொண்ட மாமாமார்கள் தான்!

கா.ரபீக் ராஜா, எழுத்தாளர், ‘ஒரு எளியவனின் குறிப்புகள்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: rabeek1986@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in