பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

திருச்சி

டீக்கடையில் இருவர்...

“என்னண்ணே.... எப்பவும் அடியாளுங்களோடதான் வெளிய வருவே? இப்ப என்னாச்சு... தனியா வர்றே?”

“அதான் ரவுடிகள புடிக்கிறதா சொல்லி எங்களை மாதிரி தியாகிகளை வளைச்சி வளைச்சி அரெஸ்ட் பண்றாங்களே... நம்மாளுங்க நாலு பேரைத் தூக்கிட்டாங்கப்பா. அதான் சிங்கம் சிங்கிளா வருது.”

“ஆனா, மெயினே நீதானேண்ணே... சைடுகளை மட்டும் தூக்கி என்ன பிரயோஜனம்?”

“பாவிப் பயலே. நீயே போட்டுக்குடுத்துடுவ போல. ஓசி டீயைக் குடிச்சோமா... ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தோமான்னு இருங்கடா... ஊர் வம்பு இழுத்துக்காதீங்க!”

- க.விஜயபாஸ்கர்,

திருச்சி

வேதாரண்யம்

கடை வீதியில் இரு நண்பர்கள்...

“அதென்ன மாப்பு, கையிலே அரிசிப் பை?"

“அதுவா? கரோனா தடுப்பூசி முகாம்ல முதல் மூணு பேருக்கு அரிசிப் பை கிஃப்ட்டா கொடுத்தாங்கள்ல... அதிலே கிடைச்சதுதான்!"

“ரைட்டு... அப்படியே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணப் போயிருந்தா கூடுதலா ஏதாச்சும் கிஃப்ட்டா கிடைச்சிருக்கும்ல?”

“அந்த ஸ்கீமெல்லாம் இன்னுமா இருக்கு... இத மொதல்லே சொல்லிருக்கக் கூடாதா மாம்ஸ்!”

“என்ன மாப்பு... என்னையே கலாய்க்கிறீங்களா?”

ஏன், உங்களுக்கு மட்டும்தான் காமெடி பண்ணத் தெரியுமா... எங்களுக்கு வராதாக்கும்!”

(நண்பர் கப்சிப் ஆகிறார்)


-எஸ்.சுதாகரன்,

வானவன்மகாதேவி

நாகர்கோவில்

தலைமை அஞ்சலகம் ரோட்டில் இருவர்...

“அண்ணே... நாகராஜா கோயிலுக்கு எப்படிப் போகணும்?”

“ஏம்பா... டூ வீலர்ல போறவனை நிப்பாட்டி வழி கேட்கிறியே? நேரா போய் லெஃப்ட்ல திரும்பு. அங்கேருந்து நாலாவது ரைட்டு.”

“நீங்களும் அங்கதானே போறீங்க... கொஞ்சம் லிஃப்ட் கொடுங்கண்ணே...”

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“பூக்கடையில பூ, பழம், அர்ச்சனைத் தட்டு வாங்கினீங்களே?”

“இப்படி வாட்ச் பண்ற உன்னையெல்லாம் வண்டியில ஏத்திட்டுப் போக லூஸா நானு... நீயே கால்நடையாப் போய்ச்சேரு தம்பி!”

- மகேஷ் அப்பாசுவாமி,

பனங்கொட்டான் விளை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in