‘குடி’க்குக் குறள் எழுதிய கோமகன்

புத்தகம் பழசு... வாசிப்பு புதுசு!
‘குடி’க்குக் குறள் எழுதிய கோமகன்
‘குடிக்குறள்’ நூல்

“குடிக்காதவன் யார் உலகத்திலே...

அவனக் கொண்டு வந்து நிறுத்து பக்கத்திலே...

எல்லாரும் குடிக்கிறான் மொத்தத்திலே...

இல்லைன்னு சொல்லுவான் வெட்கத்திலே” என்றொரு கவிதையை நிறைபோதையில் சொல்லி, சமூக வலைதளங்களில் வைரலான பெரியவரை நமக்குத் தெரியும். இவரைப் போலவே ஒரு பெரியவர் சில தசாப்தங்களுக்கு முன்னர் இதே தமிழுலகில் வாழ்ந்திருக்கிறார். அவரது இயற்பெயரை அறிய முடியவில்லை.

"குடிச்சி அழிச்சது போதாதுன்னு உன் உளறலை எல்லாம் பொஸ்தகமாவா போடுற?" என்று மனைவி, மக்கள் அடிப்பார்கள் என்று பயந்து 'எழில்மதி' என்ற புனைப்பெயரில் புத்தகம் வெளியிட்டிருக்கிறார் அந்தக் குடிமகன். நூலின் தலைப்பு ‘குடிக்குறள்’. அதாகப்பட்டது, உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தழுவி குடியைப் பற்றி எழுதிய இருவரிச் செய்யுள் நூலே இது. திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று முப்பால் இருப்பதுபோலவே, இவரது குடிக்குறளிலும் விற்போர் பால், குடிப்போர் பால், காண்போர் பால் என்று முப்பெரும் பிரிவுகள் இருக்கின்றன.

கொஞ்சம் பொறுமையிருந்தால் மழலையின் உளறலைப் போலவே, குடிமகனின் குதலை மொழியையும் ரசிக்கலாம். பேசும்போதே எழுத்துப்பிழை விடுகிற குடிமகன்கள், புத்தகம் போட்டால் பிழை வராமலா போகும்? மானாவாரியாக வரும். ஆனாலும் நூலாசிரியர் எழில்மதி, அதற்கு வருத்தம் தெரிவித்து முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறார்.

"அச்சில் ஓடும்போது அவ்வப்போது எதிர்ப்பட்ட இடர்பாட்டாலும், ஏச்சுரையாலும், பயமுறுத்தலாலும், இடைவிடாது ஓடிய தொந்தரவினாலும், புலவர்கள் காட்டிய புறக்கணிப்பினாலும், விரைவில் வெளியிடும் வேகத்தினாலும் நேரமின்மை, நிதானமின்மையாலும் எழுத்துப்பிழைகள் விழுந்திருக்கும். ஆகையால், கருத்தைப் பாருங்கள்...! காரிகையைப் பார்க்காதீர்கள்...!!" என்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார். முகம் தெரியாத எழில்மதி, சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் என்றும், அவரது இந்நூல் 1972-ல் வெளியாகியிருப்பதும் தெரிகிறது.

இந்நூலை மது விற்கிற வள்ளல் பெருந்தகைகளுக்கும், மயக்கக் களிப்பில் மிதக்கும் மாமேதைகளுக்கும், விற்பவர்களைப் பார்த்தும், குடிமேதைகளின் குதலை மொழியைக் கேட்டும் இன்பத்தில் மூழ்கித் திளைக்கும் செயல் வீரர்களுக்கும் காணிக்கையாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

'குடிவணக்கம்' என்ற அதிகாரத்துடனும் குடிதான் உலகு என்று முடியும் குறளுடன் தொடங்குகிறது நூல்.

‘பிறந்ததினால் ஆயபய னென்கொல்? விற் போனை / இரந்தும் குடிக்கணும் கள்’ என்பது முதல் அதிகாரத்தில் உள்ள குறள்களில் ஒன்று.

இன்னும் சில குடிக்குறள்கள் இங்கே. அடைப்புக்குறிக்குள் அதிகாரம்.

‘செயற்கரிய செய்வர் குடிப்போர் குடியார் / செயற்கரிய செய்கலா தார்’ - (குடிப்பார் பெருமை)

‘குடியெனச் சொல்லிப் பணம்கொடுப்பா ரின்துணை / நாடியேதேர்ந் துகொள் நலிந்து’ - (குடிப்பார் துணை நலம்)

'குடியுடைமை' அதிகாரத்தில் வரும் இந்தக் குறள் சீமான் உள்ளிட்ட தமிழ்த் தேசியர்களை மகிழ்விக்கும்.

‘கள்ளெனச் சொல்வது யாதெனின் பாளையில் / துளியாய் ஊறிடும் நீர்’

‘வெட்டுவாரைத் தாங்கும் பனைபோல் நீயுமுனைத் / திட்டுவாரைத் தாங்கல் தலை’- (பொறையுடைமை)

‘காலம் இடனறிந்து உண்க மதுவைநீ / வேலைக்கூ டத்தில்வி ழாது’- (அளவுடைமை)

‘யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால் / சோகாப்பர் கள்குடி கற்று’ - (விரும்பாமை)

இதே நூலில் குடிக்கு எதிரான குறள்களும் உள்ளது தனிச் சிறப்பு!

‘இன்றுமட்டும் கள்குடிக்க எண்ணாதே எண்ணினால் / கொன்றழித்தும் வாழுமது சான்று’ - (குடியச்சம்)

‘குடிதரும் போதை நிலையென் றெண்ணும் / அடிமைக்கு உண்டோ அறிவு’ - (நிலையாமை)

‘துணைப்பொருள் கொள்ளல்' அதிகாரத்தில் நிறைய பாடல்களை எனக்கு முன் படித்தவர் முக்கியக் குறி போட்டிருந்தார். எனவே, அதில் இருந்து கூடுதலாய் சில பாடல்கள்.

‘பன்றிகாடை கௌதாரி மீன்முட்டை பூனைநாய் / இன்னும் எலும்பும் கடி’

‘சுண்டல்பட் டாணிகார மிக்சர் தோசையின்னும் / தின்றல் குடியின் சிறப்பு’

‘கடைவைத்தோன் முன்சினம் காக்க இல்லையேல் / உடையும் பாட் டில்பானைப் பார்’ - (வெகுளாமை)

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்தலை / மண்ணில் சாயும்வரை கள்ஊற்று’ - (இன்னா செய்யாமை)

‘அரசே குடிக்க அனுமதி தந்தபின் / வைதல் முறையோ? வாழ்த்து’ - (வையாமை)

‘ஆட்சிக்கே நாணமில்லை மீட்சிகொள்ள எண்ணமில்லை / சீச்சி நாணம் கேடா நமக்கு?’ - (நாணுடைமை)

மனிதர் நிறைபோதைக்காரராக இருந்தாலும், ‘நிதானமாகவே’ சிந்தித்திருக்கிறார் என்பதைக் கடைசி 2 ‘குறள்கள்’ சொல்கின்றன அல்லவா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in