மைண்ட் வாய்ஸுக்கே மைக் வச்சுடுறீங்க..!

பழனிசாமியிடம் கேட்கும் பாச்சா
மைண்ட் வாய்ஸுக்கே மைக் வச்சுடுறீங்க..!
ஓவியம்: வெங்கி

“நீ பூர்வாசிரமத்தில் என்னவா இருந்திருப்பே?” என்று பாச்சா அன்று காலையில் கேட்டபோது, பறக்கும் பைக்குக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்னப்பா திடீர்னு இப்படியெல்லாம் கேட்கிறே? நான் சயின்டிஃபிக் ப்ராடக்ட்ப்பா” என்றது.

“சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன். யார் யார் என்னவா இருந்தாங்கன்னு அப்பப்போ ஒரு கணக்கு இருந்தாத்தானே நல்லா இருக்கும்!” என்று சொன்ன பாச்சாவை ஏற இறங்கப் பார்த்த பைக், “படிச்ச ஆளு மாதிரி பேசுய்யா. என்னைக் கிண்டல் பண்ணிட்டு நீ சீரியல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்ட போல... அதுலதான் பூர்வஜென்மம், பரிகாரம்னு படம் காட்டிட்டு இருக்காங்க” என்று எகிறியடித்தது.

“அட நீ வேற. நான் அன்றாடப் பேச்சுல அரசியல் கலந்து லந்து பண்ணிப் பார்த்தேன். நீ என்னையே மடக்குறியே...” என்றான் பாச்சா.

“அது என்ன க‘லந்து’?” என்றது பைக்.

“அதாம்ப்பா. நானும் ஒரு காலத்துல முதல்வரா இருந்திருக்கேன்னு எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கார்ல...” என்ற பாச்சாவிடம், “ம்க்கும். கிண்டல் பண்றியாக்கும்! முடிஞ்சா அதை அவர்கிட்டயே கேளு” என்றது பைக். “கேட்டுட்டா போச்சு” என்றான் பாச்சா.

ஆக, அன்று முதலாமவர் பழனிசாமி.

‘நல்லவேளை உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துச்சு. இல்லைன்னா எப்பப் பார்த்தாலும் ஊட்டி எஸ்டேட்டைக் காட்டி உசுப்பேத்தி நிம்மதி இழக்க வெச்சுட்டாங்க நியூஸ் சேனல்கள்காரங்க’ என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்த எடப்பாடி முன் என்ட்ரியானான் பாச்சா.

“கேட்டுடுச்சு சார். எல்லாம் கேட்டுடுச்சு. ஆனாக்கா, இப்பல்லாம் ஏன் மைண்ட் வாய்ஸுக்கே மைக் வச்சுடுறீங்க? அதைவெச்சு அஞ்சு நாளைக்கு ஃபேஸ்புக்ல ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்கள்ல ஆளுங்கட்சிக்காரங்க...” என்று அக்கறையுடன் கேட்டான் பாச்சா.

“அவங்க இப்பத்தான் ஆளுங்கட்சியாகியிருக்காங்க. நான் நாலு வருஷமா நல்லாட்சி தந்ததை மறந்துட்டாங்க...” என்று இறுக்கமான குரலில் சொன்னார் எடப்பாடி. “யாரு மக்களா சார்?” என்று கேட்ட பாச்சாவை கெட்ட கோபத்துடன் பார்த்த எடப்பாடி, “எதிர்க்கட்சிக்காரங்களைச் சொன்னேன். அதாவது இன்னாள் ஆளுங்கட்சிக்காரங்களா இருக்கிற முன்னாள் எதிர்க்கட்சிக்காரங்க” என்றார்.

“உண்மைதான் சார். நீங்க சி.எம்மா இருந்தவரைக்கும் அவங்க மேல சிங்கிள் கேஸ் போடலைன்னு சொல்றீங்க... ஆனா, நில அபகரிப்பு கேஸ் நிறைய இருக்குன்னு எலக்‌ஷனுக்கு முன்னாடி நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்து விறுவிறுக்க வெச்சிருக்கீங்களே. நாலு வருஷத்துல ஒரு தடவையாச்சும் நச்சுன்னு ஒரு கேஸ் போட்டிருக்கலாம்ல?” என்று கேட்டான் பாச்சா.

“நீ வேற... அதான் மக்கள் நலனைப் பத்திக் கவலைப்பட்டுட்டு இருந்தோம்னு சொல்லிருக்கோம்ல” என்று எரிச்சல் காட்டினார் எடப்பாடி.

“மக்களே அதைத்தான் சார் கேட்கிறாங்க. அவங்களுக்கு அதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதாம்ல. நீங்க ஸ்டேட் மக்களைச் சொல்றீங்களா... எஸ்டேட் மக்களைச் சொல்றீங்களா?” என்று பாச்சா கேட்டதும், “நீ இன்டர்வியூ பண்ண வந்தியா இல்லை இன்ட்ராகேஷன் பண்ண வந்தியா?” என்று படபடத்தார் பழனிசாமி.

பயத்தைக் காட்டிக்கொள்ளாத பாச்சா, “இன்னும் ரெண்டு வருஷத்துல எலெக்‌ஷன் வரும்னு சொல்லி ஸ்டாலின் அண்ட் கோவை ஸ்தம்பிக்க வெச்சிருக்கீங்களே? அமித் ஷாவுக்குக்கூட இந்த ஐடியா வந்திருக்காதுன்னு அண்ணாமல அண்ட் கோவே ஆச்சரியத்துல ஆழ்ந்துடுச்சாமே... லிஸ்ட்லேயே இல்லாத அஸ்திரமா இருக்கே சார் இது?” என்று கேட்டதும், ஆவேசத்தைக் கைவிட்டு அமைதிப் புன்னகை சிந்திய பழனிசாமி, “இது ரீமிக்ஸ் காலம்யா. பாஜககாரங்களே மறந்துட்ட ஐட்டத்தை டைமிங் பார்த்து டக்குனு தூக்கிட்டோம் பார்த்தியா...” என்று குதூகலித்ததுடன், “எலெக்‌ஷன் வெச்சாலும் வெக்காமப் போனாலும் எங்களுக்கு லாபம்” என்று பாட ஆரம்பித்தார்.

“சார், லிரிக்ஸை ஜெயக்குமாருக்கு அனுப்பிடுங்க. அவர் டியூனை ஜெனியூனாப் பாடியே உள்ளாட்சித் தேர்தல்ல உங்க கட்சியை ஜெயிக்க வெச்சிடுவார்” என ஆலோசனை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் பாச்சா.

அடுத்து கமல்.

‘பிக் பாஸ்’ ப்ரொமோ ஷூட்டிங். கல்யாண வீட்டுக் கலாட்டாவை வைத்து எடுத்த ப்ரொமோ நன்றாகவே வொர்க் அவுட் ஆனதால், அடுத்து கட்சி அலுவலகம் ஒன்றில் நடக்கும் கலாட்டாவை வைத்து ப்ரொமோ செய்யலாம் என்று யாரோ சொன்ன யோசனைக்குச் சம்மதித்துவிட்டார் போலும் கமல். கடைசியில், அவரது கட்சி அலுவலகத்திலேயே அந்தக் காட்சியைப் படமெடுக்கலாம் என்று முடிவாகிவிட, மனதுக்குள் பொருமியபடி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திலேயே நடித்துக்கொண்டிருந்தார்.

கட்சியில் ஆள் பலம் குறைந்துவிட்டதால், துணை நடிகர்களை வைத்து அட்மாஸ்பியரைக் காட்ட வேண்டியிருந்ததில்தான் கூடுதல் வருத்தமும் அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது பார்த்து அங்கு சென்று சேர்ந்தான் பாச்சா.

“என்ன சார்... கடைசியில கட்சியில கடைசியா இருந்த பழ. கருப்பையாவும் கழண்டுக்கிட்டார் போல... ” என்று பாச்சா சொன்னதைக் கேட்டதும் கமலுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னய்யா சொல்றே? இன்னும் ஷோவே ஆரம்பிக்கலையே... அதுக்குள்ள எப்படி எலிமினேட் ஆனார்?” என்று கன்னத்தைச் சொரிந்தபடி கமல் கேட்க, மொத்த யூனிட்டும் விக்கித்து நின்றது.

“சரியாப் போச்சு போங்க... அவர் உங்க கட்சியில(யும்!) இருந்தவர் சார்” என்று பாச்சா சொன்னதும் தலையை உலுக்கிக்கொண்ட உலக நாயகன், “வெல்... அவர் என் கட்சிக்கு நல்ல வழிகாட்டியா இருப்பார்னு நினைச்சோம். ஆனால், அவர் தனக்குத்தானே வழிகாட்டியா இருந்து, வந்த வழியே போக முடிவு பண்ணிட்டார் போல. எனக்கே இன்னும் எந்த இன்ஃபர்மேஷனும் வரலை. வந்ததும் இதுக்கு விளக்கம் சொல்றேன்” என்றார்.

“ஆனாக்கா, நீங்க அவரை அரசியல் ஆலோசகரா கட்சியில வெச்சிருந்தீங்களாம்... ஆனா, அவர்கிட்ட ஆலோசனையே கேட்கலைன்னு ஆதங்கப்படுறாரே?” என்று விடாமல் கேட்டான் பாச்சா.

“ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கப்பா. என் படத்துல டைரக்டர்னு டைட்டில்ல ஒருத்தர் பேரைப் போட்டா அவர் டைரக்ட்டா டைரக்ட் பண்ணுவார்னு அர்த்தமில்லை. கவர்ன்மென்ட் எழுதித்தர்ற அறிக்கையைத்தான் கவர்னர் வாசிச்சாகணும். கமல் படங்கள்ல டைரக்டர்ங்கிறது கவர்னர் பதவி மாதிரி... புரியுதா?” என்றார் கமல்.

“நீங்க புரிஞ்சா மாதிரி பேசுனீங்கன்னாவே புரிய மாட்டேங்குது” என்று பாச்சா சொன்னதும், “இந்த உலகத்துலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா?” என்று பிக் பாஸ் ப்ரொமோ பாணியில் சோஃபாவில் சேஃபாகச் சாய்ந்தபடி கேட்டார் கமல்.

“கட்சி நடத்துறதுதான்!” என்று சொல்லிவிட்டு, அவர் ‘கட்’ சொல்லுமுன் கம்பி நீட்டினான் பாச்சா.

“அடுத்து, சீமான் பேர் லிஸ்ட்ல இருக்கே பாச்சா!?” என்று கேட்ட பைக்கிடம், “நீ வேற... இப்பல்லாம் சினிமாவுலேயே சீரியஸா சீண்ட ஆரம்பிச்சுட்டாங்கன்னு சீமான் தம்பிகள்லாம் சீறிட்டு இருக்காங்களாம். இன்னிக்கு இத்தோட எண்டு கார்டு போட்டுக்கலாம்” என்றான் பாச்சா.

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக பாச்சாவைச் சுமந்துகொண்டு பறக்க ஆரம்பித்தது பைக்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in