‘ஸ்டியரிங்கையே திருப்பத் தெரியாம திணறிட்டு இருக்காரு ஸ்டாலின்!’

எகிறியடிக்கும் எடப்பாடி
‘ஸ்டியரிங்கையே திருப்பத் தெரியாம திணறிட்டு இருக்காரு ஸ்டாலின்!’
ஓவியம்: வெங்கி

அன்று காலை பாச்சா கண்விழிக்க நெடுநேரமானது. அன்றாடம் அனைத்துக் கட்சித் தொண்டர்களும் வேற்றுமையை மறந்து ஓரணியில் திரண்டு அவனை விரட்டுவது வழக்கம் என்பதால் ஆள் எப்போதும் அதிர்ச்சி நிலையிலேயே இருப்பான்; ஆதலால் அனுதினமும் அலெர்ட் மனநிலையில் அரைகுறைத் தூக்கத்தில் கிடப்பான் எனப் பறக்கும் பைக்குக்குத் தெரியும்.

ஆனாலும் அன்று ஆளுநர் பார்வைக்குச் சென்ற அரசுக் கோப்புகள் மாதிரி அசைவே இல்லாமல் படுத்திருந்ததைப் பார்த்து பைக்கே ஆடிப்போனது. அருகில் சென்று அவனை உலுக்கியதும் ஆவேசமாகக் கண்விழித்த பாச்சா, “நித்தியமாக நித்திரையில் ஆழ்ந்திருந்த எம்மை எழுப்பிவிட்டு எரிச்சல் மூட்ட என்ன துணிச்சல் உனக்கு? பிடி சாபத்தை” என்றான். உடனே, “ஆமா! இவரு பெரிய நித்யானந்தா. சமாதியில இருந்து சப்ஜாடா எந்திருச்சு சாபம் குடுக்குறாரு. அவரே காஸ்மோஸ்... முட்டைக்கோஸ்னு கப்ஸா அடிச்சி காசு பண்ணிட்டு இருக்காரு... இதுல நீ வேறயா?” என்றது.

பின்னர் சற்றே ஆசுவாசமடைந்து, “பாரு... திமுக அரசு எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கு! நிமிஷத்துக்கு நிமிஷம் திட்டம் அறிவிக்கிறது, அப்புறம் நீட்டா நிறுத்திவைக்கிறதுன்னு நிம்மதியா பொழுதுபோக்கிக்கிட்டு இருக்கு. அதுமாதிரி நீயும் என்னத்தையாவது செஞ்சு சுறுசுறுப்பா இருய்யா” என்று பாச்சாவுக்கு அட்வைஸ் செய்தது பைக்.

“இதெல்லாம் அட்வைஸா, அட்வெர்ஸானே தெரியலைப்பா” என்று அலுத்துக்கொண்டபடி கிளம்பினான் பாச்சா.

முதலாவதாக ஈபிஎஸ்.

‘அதிசிறந்த அரசு நிர்வாகம் தருவது எப்படி?’ எனும் தலைப்பில் ஏதோ ஒரு அண்டை நாட்டின் அதிபர் விடுத்த அன்புக் கட்டளையை ஏற்று, தன் ஆட்சிக்காலத்தில் எடுத்த நல்லாட்சி நடவடிக்கைகளைப் பட்டியல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார் பழனிசாமி. எவ்வளவு முயன்றும் ஒன்றுகூட நினைவில் வரவில்லை என்பதால் யார் யாருக்கோ போன் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.

செல்லூர் ராஜூவை ஸ்பீக்கர் போனில் தொடர்புகொள்ள முயன்றபோது, “அட போங்கண்ணே... பொழுதுபோக்குக்காக நம்மகிட்ட கேள்வி கேட்கச் சொல்லி மந்திரிங்கள்லாம் மன்றத்துக்குள்ளேயே மானங்கன்னியா பேசி மானத்தை வாங்குறாங்க... இதுல நம்ம ஆட்சியில நடந்த நல்லது என்னான்னு என்கிட்ட கேட்டீங்கன்னா என்னான்னு சொல்லுவேன்?” என்று செல்லமாகச் சிணுங்கினார் செல்லூரார்.

சடுதியில் ஏதோ சட்டென நினைவுவந்தவராக, “ஆங்... ‘புரட்சித் தலைவி அம்மா ஆட்சியிலதான் மீம்ஸ் கலைஞர்கள் மேம்பாடு அடைந்தனர்’னு ஒரு வரி போட்டுக்கலாம்ணே” என்று சொன்னதும், பல்லைக் கடித்துக்கொண்டு (போன்) காலை கட் செய்த பழனிசாமி, ‘சரி வழக்கம்போல அம்மா இருந்தப்ப நடந்ததையெல்லாம் நம்ம சாதனையா பிரஸ் மீட்ல லிஸ்ட் போட்ட மாதிரி புக்லயும் போட்டுவிட்டலாம்’ என்று முணுமுணுத்தபடி எழுத ஆரம்பித்தார்

ஏற்கெனவே அங்கு ஆஜராகியிருந்த பாச்சா எல்லாவற்றையும் கேட்டபடி, “என்ன சார்... இப்பெல்லாம் பொறுப்பே இல்லாம ஜாலியா இருக்கீங்க போல?” எனும் கேள்வியுடன் வேள்வியை ஆரம்பித்தான்.

அவனைச் சுட்டெரித்துவிடுவதுபோல சுள்ளெனப் பார்த்த ஈபிஎஸ், “என்னப்பா... கற்பனைப் பேட்டிங்கிறதுக்காகக் கன்னாபின்னான்னு கேள்வி கேட்பியா? என்னத்த பொறுப்பு இல்லாம இருக்கிறோமாம் நாங்க?” என்று எகிறினார்.

பாடியில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் ஆடிப்போன பாச்சா, “அய்யோ சார்... கேட்க வந்ததை வழக்கம்போல சரியா கேட்காம உளறிட்டேன். எதிர்க்கட்சித் தலைவர் மாதிரி எனி டைம் கேள்வி மேல கேள்வியா கேட்டு உங்க பொறுப்பைக் குறைச்சுட்டாரே அண்ணாமலை... அதைத்தான் சுருக்கமா கேட்கிறதா நினைச்சு சொதப்பிட்டேன்” என்றான்.

‘அண்ணாமலை’ எனும் பெயரைக் கேட்டதும் தாமரை முகத்தைக் கண்ட (தமிழக) சூரியன் போல் சட்டென முகம் வாடியது ஈபிஎஸ்ஸுக்கு. அதைச் சமாளித்துக்கொண்டு, “அண்ணாமலை சரியாத்தானே கேட்கிறார். இந்த ஆட்சியில நடக்கிற அவலங்கள் ஒண்ணா ரெண்டா? சொல்லப்போனா எங்களைவிட மோசமா ஆட்சி பண்றார் ஸ்டாலின். அதுக்காக நாங்களும் சும்மா இல்லைப்பா. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களே கம்னு இருக்கும்போது நாங்க கடுமையா குரல் குடுத்துட்டுதான் இருக்கோம்” என்றார் பழனிசாமி.

“பிரேக், டயர்னு எதுவுமே இல்லாம பஸ் ஓடும்னு திமுக ஆட்சியைத் திகட்டத் திகட்டத் திட்டியிருக்கீங்களே... வித்தவுட் டிக்கெட்னு சொல்லி வீணா வாங்கிக் கட்டிக்கிட்ட அண்ணாமலை மாதிரி நீங்களும் வினா எழுப்பணுமா?” என்றான் பாச்சா.

“அட நீ வேற! வண்டி வண்டியா வாக்குறுதி குடுத்து ஜெயிச்சு ஸ்டைலா சீட்டுல உட்கார்ந்துட்டு ஸ்டியரிங்கையே திருப்பத் தெரியாம திணறிட்டு இருக்காரு ஸ்டாலின். ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு பேச்சு. வந்ததுக்கு அப்புறம் இன்னொரு பேச்சுன்னு திணறுறதுதானே திமுகவோட ஸ்டைல். இதுக்குத்தான் எங்களை ஜெயிக்க வைங்கன்னு மக்கள்கிட்ட மன்றாடி கேட்டுக்கிட்டோம். கேட்கல... அனுபவிக்கிறாங்க” என்றார் ஈபிஎஸ்.

“அப்படீன்னா பால் விலை ஏறும், பஸ் கட்டணம் ஏறும்னு நீங்க சொல்றது மக்கள் மேல இருக்கிற கரிசனத்தால இல்லை... கடுப்பால. அப்படித்தானே சார்?” என்று பாச்சா கேட்கவும், அடுத்து வேலுமணிக்கு விறுவிறுவென போன் செய்தார் பழனிசாமி. அதற்கு மேல் அங்கு இருக்க வேண்டுமா என அடிமனதிலிருந்து வந்த அபாய சமிக்ஞையைப் புரிந்துகொண்டு அங்கிருந்து அகன்றான் பாச்சா.

அடுத்து அண்ணாமலை.

அன்றைய நாளின் ஐநூறாவது பிரஸ் மீட்டுக்காகக் கமலாலயத்தில் கடகடவெனத் தயாராகிக்கொண்டிருந்தார். ‘பிரபஞ்சத்திலேயே அதிகமாக பிரஸ் மீட்டும் ஒரே தலைவர்’ எனும் சாதனையைச் செய்ததற்காக அவரது பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவுசெய்ய லண்டனிலிருந்து வந்த குழு லாபியில் காத்திருந்தது.

“என்ன சார்! உங்க தலைவர் மோடி ஜி, பிரஸ் மீட்டையெல்லாம் கண்டால் ‘ஓ மை காட்’னு சொல்றதா மீம்ஸ் ஓடிட்டு இருக்கு. அவரோட கொள்கைக்கு நேர் மாறா, அநியாயத்துக்கு பிரஸ் மீட்டா கலந்துக்கிட்டு கலக்குறீங்களே!” என்று அண்ணாமலை முன்னர் ஆஜரானான் பாச்சா.

“இல்லீங்ணா. அவரு கிட்ட பிரஸ் பீப்பிள் கேட்ட கேள்வி வேறங்க... இதை வெச்சு எதிர்க்கட்சிக்காரங்க வேணும்னே பொய்த் தகவலைப் பரப்புறாங்க” என்று அண்ணாமலை சொன்னதும், ‘அதானே... ஏழெட்டு வருஷமா பாஜககாரங்க பண்றதை இப்ப எதிர்க்கட்சிக்காரங்க பண்றாங்கன்னா இதை சும்மா விட முடியுமா?’ என்று நினைத்துக்கொண்ட பாச்சா, “உலக நாயகனோட பாட்டுல ‘ஒன்றியத்தின் தப்பாலே’ன்னு வந்திருக்கே.. அப்ப படத்துக்கு மீடியா பார்ட்னர் மாதிரி கமலும் பாஜகவோட பாலிட்டிக்ஸ் பார்ட்னர்ஷிப் போட்டுகிட்டதா சோஷியல் மீடியாவுல சொல்லிக்கிறாங்க... தெரியுமா?” என்றான்.

“புரியுதுங்கண்ணா. நாங்க அதுக்காகவே படத்தை எதிர்ப்போம். பாஜக வாய் வச்சா விக்காத படமே வித்துரும்... ‘விக்ரம்’ வெறித்தனமா ஓடும்ணு மீம்ஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க... அதானே?! இந்த தடவை நாங்க உஷாரா இருப்போம். எங்களுக்குத்தான் கன்டென்ட் மேல கன்டென்ட் தர காத்துக்கிட்டு இருக்கே கழக அரசு! அப்புறம் கமலைப் பத்தி எங்களுக்கு என்ன கவலை?” என்றார் அண்ணாமலை.

அதற்குள் செவ்வாய் கிரகத்திலிருந்து ஸ்பெஷல் டீம் ஒன்று அண்ணாமலையின் பேட்டிக்காகப் பறக்கும் தட்டில் வந்திறங்கியது. அதைப் பார்த்துக்கொண்டே பறக்கத் தொடங்கினார்கள் பைக்கும் பாச்சாவும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in