கலகலப்பாக ஒரு காலப் பயணம்!

பாச்சா சந்தித்த பழந்தலைவர்கள்
கலகலப்பாக ஒரு காலப் பயணம்!

காலங்கார்த்தாலே வாய்விட்டு அலறியபடி களேபரத்தைத் தொடங்கிவைத்தது பறக்கும் பைக். விலுக்கென தூக்கிப்போட்டு எழுந்து உட்கார்ந்த பாச்சா பதறியடித்தபடி பைக் பக்கம் திரும்பினான். பார்த்தால், அங்கு பைக்குக்குப் பதிலாக பளபளவென வேறொரு இயந்திரம் இருந்தது. கடிகாரக் கடைகளில் இருப்பதுபோல, ஆங்காங்கே அதன் உடலில் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. டைம் பாம் கணக்காக டிக் டிக் ஒலி வேறு டெர்ரராக ஒலித்தது. அசகாய சூரர்களே அங்கிருந்தால் அரண்டு மிரண்டுவிடுவார்கள். பாச்சாவுக்குக் கேட்க வேண்டுமா? அரற்றிக்கொண்டே அறைக்குள் அங்குமிங்கும் சிதறியோடினான்.

“அட ஏம்ப்பா ஒப்பாரி வெச்சு ஊரைக் கூட்டுற? நான்தான்பா” என்று பரிச்சயமானதொரு குரல் பாந்தமாக ஒலித்தது. பார்த்தால், அது பறக்கும் பைக்கேதான்!

“அடப்பாவி... ஒரு அப்பாவியை அலறவிட்டு அராஜகம் பண்றியே?” என்று ஆசுவாசமடைந்து அதட்டினான் பாச்சா.

“அது ஒண்ணுமில்லைப்பா. அண்ணாமலையோட பிரஸ் மீட் பார்த்தேன். சத்ரபதி சிவாஜி 1967-ல சென்னைக்கு வந்தார்னு அவர் சொன்ன அரிய தகவலைப் பத்தி யோசிச்சுக்கிட்டே இருந்தேன். டக்குனு ஏதோ ஒரு மெக்கானிசம் வொர்க்-அவுட்டாகி நான் டைம் மிஷினா மாறிட்டேன்” என்றது பைக்.

“சரி வா, கலகலப்பா ஒரு காலப் பயணம் போகலாம்” என்றான் பாச்சா.

ஏறி அமர்ந்ததும் 1967 என்று ஆட்டோமேட்டிக்காக நம்பரை செட் செய்தான்.

“1967-ல சத்ரபதி சிவாஜியை இல்லை... ‘சரஸ்வதி சபதம்’ சிவாஜியைத்தான் பார்க்க முடியும்” என்றது பைக். “அந்தப் படம் வந்தது 1966-ல” என்று பாச்சா சொல்ல, “ரொம்ப முக்கியம்... அரசியல்வாதிகளே ஆண்டுக்கணக்கு தெரியாம அடிச்சு விடுறாங்க. நீ அரசர் காலத்துக்கு நம்பர் செட் பண்ணு” என்று உறுமியது பைக். “அட, 1967-ல அண்ணா ஆட்சிக்கு வந்ததுதான் மலை போல அண்ணாமலைக்கு பாரமா கனக்குது போல. அந்தக் கடுப்புலதான் வருஷக் கணக்கு பார்க்காம வருத்தப்படுறார்” என்று பதிலுரைத்தான் பாச்சா.

கிமுவா கிஷ்முவா எனத் தெரியாமல் குத்துமதிப்பாக ஓர் ஆண்டில் லேண்டானார்கள் இருவரும்.

அங்கும் ஆறேழு பேர் கொண்ட பெரும்படை சூழ, அட்டகாசமாக நடைபோட்டுக் கொண்டிருந்தார் அண்ணாமலை. அரசர் காலம் என்பதால் அண்ணாமலையின் ஆடையிலும் மாற்றம்.

“போராடுவோம்... போராடுவோம்” என்று அவரைச் சுற்றியிருந்தவர்கள் பொங்கிக்கொண்டிருந்தனர்.

“இங்கேயும் லாக்டவுன்ல கோயிலையெல்லாம் லாக் பண்ணி வெச்சுட்டாங்கன்னு லா பாயின்ட் பேசுறீங்களா அண்ணாமலை சார்?” என்று கேட்டபடி அவரை அணுகினான் பாச்சா.

“என் பெயர் அண்ணாமலை அல்ல. மலையண்ணா. நாரத நாட்டின் பிரதம அமைச்சர் ‘நரேக்கின்ற தாடி’ அவர்களின் தமிழ்ப் பிரதி... மன்னிக்க தமிழ்ப் பிரதிநிதி” என்று அவர் சொன்னதும், ‘மகா பிரபு இங்கேயும் இருக்காரா?’ என்று மனதுக்குள் ஜெர்க்கானது பைக்.

“சரி, எதுக்காகப் போராடுறீங்கன்னு சொல்லலாமா மலையண்ணா சார்?” என்றான் பாச்சா.

“எங்கள் திவ்யப் பிரதேசத்தை ‘தி.க.கோடாலின்’னு ஒரு தீயசக்தி... அழிவுசக்தி ஆண்டுக்கிட்டு இருக்கு. இங்கே ‘புரானா’ன்னு ஒரு பழைய நோய் பரவிட்டு இருக்கு. ‘செத்துற பிரேததேசம்’ங்கிற நாட்டுல பரவுனதுல பல பேரு ஆசை ஆசையா ஆயுசை முடிச்சிக்கிட்டு அரசாங்க புண்ணியத்துல ஆத்துல அடக்கம் பண்ணப்பட்டாங்க. இங்கே எங்க நாட்டுல அப்பப்போ சிலர் அரசு கவுரவத்துக்கு ஆசைப்பட்டு அடக்கமாகிறாங்க. அதெல்லாம் ஒரு பிரச்சினையா சொல்லுங்க... அதுக்காக நாங்க அன்றாடம் ஆலயத்துக்குப் போக விடாம அலும்பு பண்றாங்க” என்றார் மலையண்ணா.

“தொத்துநோய் வந்தா செத்துப்போக சான்ஸ் இருக்குன்னுதானே அழிவுசக்தி... ச்சே, அரசாங்கம் ஆர்டர் போடுது. அதை மதிக்கலாமே மலையண்ணா சார்?” என்றான் பாச்சா.

“ஆனா, தி.க.கோடாலின் மகன் ‘புதியநதி’ புதுசா ஒரு நாடகம் நடிக்கிறதாவும் அதை நடுரோட்ல நடத்துறதாவும் அறிவிச்சிருக்கார். அந்த மாதிரியான ஆபத்தான காரியங்களுக்குத் தடை போடலாம்ல?” என்றார் அண்ணாமலை.

அடுத்த கேள்வி கேட்கவிருந்த பாச்சா, அங்கே அதிரடியான ‘அச்.ராஜா’ வரும் தகவல் கிடைத்ததும் அங்கிருந்து அவசர அவசரமாக அகன்றான்.

அடுத்ததாக ஸ்ரீமான்.

லெமூரியா கண்டத்திலிருந்து தருவிக்கப்பட்ட தேரில் அமர்ந்து, தம்பிகள் புடைசூழ கிராமவலம் சென்றுகொண்டிருந்தார்.

ஆங்காங்கே அகவை முதிர்ந்த கூலித் தொழிலாளர்கள், ஆறு நாள் வேலைத்திட்டத்தில் அகலக் குழி வெட்டிக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது வியர்வையைத் துடைத்தபடி ஆசுவாசமான அவர்களைப் பார்த்து சீற்றமடைந்த ஸ்ரீமான், “இதுக்குத்தான் ஆறு நாள் வேலைத்திட்டம் ஆபத்தானதுன்னு நான் சொல்றேன். இப்படி வியர்வையைத் துடைக்க நேரத்தை வீணடிக்கிறதுக்கு பதிலா, விவசாயக்கூலி வேலை செய்யலாம். இல்லைன்னா விவசாயிகளைக் காப்பாத்துறதா எடுக்கிற நாடகத்துக்கு விளம்பரம் பண்ணலாம். இதையெல்லாம் மாத்தணும்னுதான் நாலாயிரம் கோடி வருஷமா ‘நாங்கள் மட்டும் தமிழர்’ படை போராடிட்டு இருக்கு” என்றார்.

“ஆனாக்கா, எல்லா பக்கத்துல இருந்தும் உங்களை நோக்கி ஈட்டி எறியுறாங்களே... அச்.ராஜா உங்களை சிலையாளின்னு சின்னாபின்னப்படுத்தினார். இப்ப நீங்க ஒரு ஆறிப்போன பழங்கஞ்சின்னு ‘களத்தூர் முனி’ கலாய்ச்சிருக்கார்... கவனிச்சீங்களா?” என்றான் பாச்சா.

சினம் கொண்ட ஸ்ரீமான், “நானெல்லாம் வேற படையில இருந்திருந்தா இந்நேரம் நாடாளும் மன்னனாகியிருப்பேன். எப்படியோ எனக்கு ஒரு தலைவர் கிடைச்சுட்டார். அவரை வெச்சு அகில உலகத்தையும் ஆளுறதுக்கு ஆயத்தமாகிட்டு இருக்கேன். ஆயிரம் வருசம் தாண்டியும் வந்து அவஸ்தை கொடுப்பேன்” என்றார். கூடவே, “நா மட்டும் ஆட்சிக்கு வந்தேன்... நீ செத்தே” என்று பாச்சாவைத் தாண்டி பார்வையைச் செலுத்தி கோபமாக மிரட்டி குலைநடுங்க வைத்தார்.

“உங்க முன்னாள் தம்பி ‘சேட்டை முருகன்’ முன்னாள் அரசர் குருணைநதியைக் கிண்டல் பண்ணி வீடியோ... ஸாரி காணொலி விட்டிருக்காரே...” என்ற பாச்சாவைப் பார்த்து, “இவரெல்லாம் என் படையிலேயே இல்லை. என் படையில இருக்கிறவங்க படபடன்னு பேசுவாங்களே தவிர பாதகம் பண்ண மாட்டாங்க” என்றார் ஸ்ரீமான்.

தேர் நகரத் தொடங்கியதும், வெள்ளைப் புறா ஒன்று கடிதத்தைக் கவ்வியவாறு அவரது கையில் வந்து அமர்ந்தது. “லட்சத்தீவு(!)ல இருந்து லெட்டர்ங்களா?” என்று கேட்ட பாச்சாவைப் படையினர் பார்வையாலேயே எச்சரிக்க, எஸ்கேப் ஆவது இன்றியமையாததாகியது.

அடுத்ததாக, கடப்பாடி கழனிசாமி.

‘கேடுநாடு’ கேஸில் கிடைத்த கேப்பில் கொஞ்சமாக சந்தோஷத்தில் இருந்தார்.

“ஆனாலும் அப்படி நிம்மதியா இருந்துட முடியுமா கடப்பாடி சார்? போர்ல உங்கள் வியூகம் சரியில்லாததால்தான் தி.க.கோடாலின் படை கிட்ட உங்க படை தோத்துடுச்சுன்னு நாலு வருசமா துணை மன்னரா இருந்த நன்னீர்செல்வம் சொல்லியிருக்காரே?” என்று அந்த சந்தோஷத்துக்கும் அணை போட்டான் பாச்சா.

“நாங்கள் அரியணையை இழந்துவிட்டதால் ஈன்றைக்கு யார் எதை வேண்டுமானாலும் பேசலாம் என ஈஷ்டத்துக்குப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2026-ல் அடுத்த போர் மூளும்போது அதற்கெல்லாம் பதில் சொல்வோம். மீண்டும் அரியணையை வெல்வோம்” என்றார் கழனிசாமி.

அதுவரை பொறுமையாக இருந்த பறக்கும் பைக், “கழனிசாமி ஏதோ கற்பனையில் கதைத்துக்கொண்டிருக்கிறார். நாமாவது நிஜ உலகத்துக்குச் செல்வோம்” என்று செந்தமிழில் சிணுங்கியது. மிஷினில் ‘2021’ என டைப் செய்தான் பாச்சா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in