நீர்மூழ்கிக் கப்பலில் சென்று நீதி கேட்கும் அண்ணாமலை!

நீர்மூழ்கிக் கப்பலில் சென்று 
நீதி கேட்கும் அண்ணாமலை!
ஓவியம்: வெங்கி

அலறவைக்கும் மழை குறித்த செய்திகளைப் பார்த்துக்கொண்டே அலங்கமலங்க முழித்துக்கொண்டிருந்தான் பாச்சா. ‘ஆசிரியரிடம் பறக்கும் பைக்கைக் கேட்டு வாங்கியதற்குப் பதில் மிதக்கும் பைக்கைக் கேட்டு வாங்கியிருக்கலாமோ’ என்று மனசுக்குள் மைல்டாக ஒரு மைண்ட் வாய்ஸ் ஒலித்துக்கொண்டிருக்க, “ஏன் மிதக்கிறதைவிட பறக்குறது ஈஸிதானே? ஆனாலும், ‘ஆழ்கடல்’ல போட் ஓட்டுன அண்ணாமலை கணக்கா லாஜிக் இல்லாம லந்து பண்றியே...” என்று சிரித்தது பறக்கும் பைக்.

ஆக, அன்று காலை முதல் பேட்டி அண்ணாமழை (பிழைதிருத்தம் தேவையில்லை!) தான் என்று முடிவானது.

அண்ணாமலை இல்லம்.

“அவரெல்லாம் இப்ப வீட்லயே இருக்கிறது இல்லீங்க. மாலை பிரச்சினை, மழை பிரச்சினைன்னு மாசம்பூரா போட்டோக்காரர்களோடையும், போட்காரர்களோடையும் சுறுசுறுப்பா சுத்தீட்டு இருக்காருங்கங்க” என அவரது ஆதரவாளர் ஒருவர் சொன்னதால், அங்கிருந்து சென்னையின் வீதிகளுக்குப் பயணமானான் பாச்சா.

வீதிகளில் வெள்ளம் பாய்வதைக் காட்டி நீதி கேட்க, படகுச் சவாரியையெல்லாம் தாண்டி இம்முறை நீர்மூழ்கிக் கப்பலைத் தேர்வுசெய்திருந்தார் அண்ணாமலை. கணுக்கால் அளவே தண்ணீர் இருந்ததால், கயிறு கட்டி முன்னும் பின்னும் அந்தக் கப்பலை இழுத்துக் கொண்டுபோனார்கள் இரண்டு மூன்று தொண்டர்கள்.

அதற்குள் அமர்ந்தபடி, “தமிலகத்துக்குத் துரோகம் செய்த திராவிட முன்னேற்றக் கலகம் மக்கல்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது” என்று ஆவேசமாகச் சொல்லிவிட்டு, அப்படியே திரும்பி, “சரிதானுங்களாண்ணா?” என்று சைடில் நடந்துவந்துகொண்டிருந்த பாஜககாரரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் அண்ணாமலை. “சரிதான், ஆனா ழகரத்துல கொஞ்சம் கான்சென்ட்ரேட் பண்ணுங்க தம்பி” என்று ஆதரவாளர் சொன்னதும், “லகரம்னா... லஞ்சம்னுல்ல அர்த்தம்?! அதுக்கெல்லாம் எதிரானவன்ண்ணா அண்ணாமலை” என்று அவசரமாக ஆவேசமானார்.

அருகே பாஜக ஆதரவாளர்கள் பலர்... ஸாரி சிலர் அண்ணாமலை புகழ்பாடிக்கொண்டே வந்தார்கள். “ஆனானப்பட்ட பாஜக முதல்வர்கள்லாம் ஆன்லைன்ல அட்டெண்ட் பண்ணுன தேசியச் செயற்குழுக் கூட்டத்துல அமித் ஷா அழைப்பின் பேர்ல அண்ணாமலை நேர்லேயே போய் கலந்துக்கிட்டாரு தெரியும்ல...” என்று ஒருவர் சொல்ல, “அண்ணாமலையோட வீடியோ போட்டா, ‘தமிழகத்தோட ஒரே நம்பிக்கையா தம்பியைத்தான் மலையா நம்பியிருக்கோம்’னு தகதகன்னு கமென்ட் விழுகுது... அது தெரியும்ல” என்று இன்னொருவர் எடுத்துரைக்க, எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் கருமமே காதாக முன்னேறிக்கொண்டிருந்தார் அண்ணாமலை.

அப்போது, “அடாத மழையிலயும் விடாம வேலை செய்ற அண்ணாமலை சாருக்கு வணக்கம்” என்று வம்பாக வழிமறித்தான் பாச்சா.

“வாங்கண்ணா... இப்பப் பார்த்தீங்கன்னா...” என்று அடுத்த நொடியே அலெர்ட் ஆன அண்ணாமலை, “இங்கே கடந்த 10 வருசமா திமுகதான் ஆட்சியில இருந்துட்டு இருக்குங்க. 10 வருசமா முதல்வரா இருக்கிற மு.க.ஸ்டாலின் தன்னோட வேலையை ஒழுங்கா செஞ்சிருந்தா வெள்ளம் வந்திருக்குமா?” என்று கூறும்போதே பாச்சா குறுக்கிட முயற்சிக்க, “தெரியும். ஸ்டாலின் இப்பத்தானே சிஎம்மானாருன்னு கேட்பீங்க... அவர் அதிமுக ஆட்சியிலேயே ஆக்டிங் சிஎம்மா இருந்ததுக்கு என்கிட்ட ஏகப்பட்ட ஆதாரம் இருக்கு” என்று எக்ஸெல் ஷீட்டில் எழுதப்பட்ட ‘ரகசிய’ ஆவணத்தை பகிரங்கமாகக் காட்டினார்.

“ஆனாலும் ஆட்சியோட அவலத்தைச் சொல்றேன்னு கிளம்பி காட்சிப்பொருளா மாறிட்டீங்கன்னு கட்சிக்காரங்களே கவலைப்படுறாங்களே” என்று பாச்சா கேட்க, “இது தவறான தகவல். பாரதப் பிரதமர் மோடி பத்தியே பாதகமா மீம்ஸ் போட்டாலும் பாஜககாரங்க பதற மாட்டோம். போட்டோ போட்டுக்கொண்டு... சாரி போட்டி போட்டுக்கொண்டு மக்கள் சேவையில இறங்கிடுவோம்” என்று அதிரடியாகச் சொன்னார் அண்ணாமலை.

“என்னதான் மீம்ஸ் வந்தாலும், முல்லை பெரியாறு விஷயத்துல மு.க.ஸ்டாலினுக்கு எதிரா தேனியில கூட்டம் திரட்டி மிரட்டிருக்கீங்க சார்” என்று பாச்சா பாசமாகச் சொன்னதும், அன்பு மூடுக்கு மாறிய அண்ணாமலை, “ஆமாங்கண்ணா. இந்த விஷயத்தை வெச்சே திமுக அரசைத் திணறடிக்கப்போறோம்ங்க. துணைப் பிரதமரா ஆவதற்காகக் கம்யூனிஸ்ட் அரசுக்குத் தூதுபோற ஸ்டாலின் துணிச்சல் இருந்தா... திராணி இருந்தா தெம்பு இருந்தா...” என்று ஆவேசமாக முழங்கிய அண்ணாமலை, ஒரு கெட்டியான கேப் விட்டுவிட்டு, “...மன்னிப்பு கேட்கட்டும்” என்று சா(வர்க்)காசமாக முடித்ததும் பைக்கே அடக்க முடியாமல் குலுங்கிச் சிரித்தது.

அடுத்து துரைமுருகன்.

‘சட்டப்பேரவையில கண்ணீர்விட்டு கதறுனாலும் காமெடியா பார்க்கிறாங்க. முல்லை பெரியாறு விஷயத்துல காம்ரேடுகளுக்குக் கரிசனம் காட்டுனா காய்ச்சி எடுக்கிறாங்க’ என்று மடைதிறந்த(!) வெள்ளமாகப் பெருக்கெடுத்த மனக்குமுறலை மதகு போட்டு அணைக்க முயன்றபடி, நிம்மதியில்லாமல் அமர்ந்திருந்தார் நீர்வளத் துறை அமைச்சர்.

“அதெப்படி சார் அதிமுக ஆட்சியில இப்படி நடந்தா அகிலமே அழிஞ்சுபோன மாதிரி அறச்சீற்றம் காட்டுறீங்க. உங்க ஆட்சியில நடந்தா மட்டும் லா பாயின்ட், லாஜிக்னு லாவணி பாடிட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடி ஆஜரானான் பாச்சா.

வழக்கமான அலட்சியப் பார்வையுடன் அவனைப் பார்த்த அமைச்சர், “தோ பாருப்பா. ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் பொதுப்பணித் துறையில ஒழுங்கா ஒரு வேலையும் செய்யலை. பொதுப்பணின்னா என்னா? சொல்லுப்பா என்னா? எந்த வித்தியாசமும் இல்லாம எல்லாரையும் பொதுவா பார்க்கிற பணின்னு எக்ஸ்பீரியன்ஸ்டு ஆளான எனக்குத் தெரியாதா? நீர்வளத் துறையா பிரிஞ்சதும் அதையெல்லாம் நீட்டா அமல்படுத்திட்டு வர்றேன். அதான் கேரளா கேட்காமலேயே கிஃப்ட்டா அந்தத் தண்ணியெல்லாம் திறக்கச் சொல்லிட்டோம்” என்று சொல்லி கிறுகிறுக்க வைத்தார்.

“அது சரி. ஆனா, அணை திறக்கிற நேரத்துல அந்த ஸ்டேட்டு மினிஸ்டர் எப்படி ஆஜரானார்னு கேட்டா, எதேச்சையா வந்தார்னு எதார்த்தமா சொல்றீங்களே... உதயநிதியை சினிமா நடிகர்னு நம்புற சின்னப் பசங்ககூட இதையெல்லாம் நம்ப மாட்டாங்களே?!” என்றான் பாச்சா.

பாச்சாவின் துடுக்குப் பேச்சால் துணுக்குற்ற துரைமுருகன், “ஏம்ப்பா ஏய்! 80 வயசுலயும் மினிஸ்டரா தட்டுத்தடுமாறியாச்சும் டேம்ல ஏறி தில்லா நிக்கிறேன்ல? இப்படி அணை மேல நின்னு தூரமாப் போற தண்ணியை தொலைநோக்கோட பார்க்கிற என்கிட்ட கேள்வி கேட்டு தொல்லை பண்றியா?” என்று துள்ளிப்பாய்ந்தார்.

‘80 வயசுலயும் ஏன் சார் வம்படியா அமைச்சரா இருக்கீங்க?’ என்று கேட்க முயன்ற பாச்சாவை, பார்வையாலேயே அடக்கிய பறக்கும் பைக், அவனைச் சமாதானப்படுத்தி ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.

அடுத்து ஈபிஎஸ்.

‘மழை வெள்ள பாதிப்புக்குக் காரணம், இன்றைய ஆட்சியின் தோரணம்’ என்கிற ரீதியில் செய்வினை செய்யப்பாட்டு வினையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் கர்மவினையாகக் கண்டனம் தெரிவித்துவிட்டு வந்த மகிழ்ச்சியில் இளைப்பாறிக்கொண்டிருந்தார் எடப்பாடி.

“என்ன சார்... பக்கத்துல இருந்து பன்னீர்செல்வம் தர்ற டென்ஷன் போதாதுன்னு, சைடுல இருந்து சசிகலா பங்கம் பண்றாரு. இதுல ஸ்டாலின் வேற ஸ்மார்ட் சிட்டி பத்தியெல்லாம் ஸ்ட்ராங்கா ஸ்டேட்மென்ட் விடுறாருன்னு டென்ஷனா இருக்கா?” என்று கேட்டு எடப்பாடியின் இடைக்கால நிம்மதியையும் இரக்கமின்றிக் குலைத்தான் பாச்சா.

“அதுக்கெல்லாம் அடுத்த ப்ரஸ் மீட்ல அழுத்தமா பதில் சொல்லிட்டு அடுத்த கம்ப்ளெய்ன்ட்டை கவனிக்கப்போய்டுவோம். நிம்மதியைக் கெடுக்காம நேரா விஷயத்துக்கு வா” என்றார் எடப்பாடி.

“உங்க ஆட்சியில நவீனத் தூர்வாரும் எந்திரத்தையெல்லாம் வெச்சு வேலை பார்த்ததாலதான் நிறைய இடங்கள்ல தண்ணி நிக்கலைனு நெஞ்சை நிமித்தி சொல்லியிருக்கீங்க. மத்த இடங்கள்ல தண்ணி மானாவாரியா தேங்கி நிக்கிறதுக்கு மம்பட்டி வெச்சி வெட்டுனதுதான் காரணமா?” என்று கேட்டதும், இரண்டாவது கேள்விக்கு வழியே இல்லாமல் இன்டர்வியூவுக்கு எண்டு கார்டு போடவைத்தார் எடப்பாடி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in