‘கார் கதவைச் சாத்திட்டு காலாற வாக்கிங் போற ஆளு நான்!’

ஏக ஆவேசத்தில் எடப்பாடி பழனிசாமி
‘கார் கதவைச் சாத்திட்டு காலாற வாக்கிங் போற ஆளு நான்!’
ஓவியம்: வெங்கி

அன்றைய தினமும் வழக்கம்போல சோக மூட்டமும் தேக வாட்டமுமாகக் காணப்பட்டான் பாச்சா. “என்னப்பா ஒரே டென்ஷனா இருக்கே? நீ எடுக்கிற ஏட்டிக்குப் ‘பேட்டி’யால எரிச்சலடைஞ்சு எந்தத் தலைவராவது ‘இறங்கி’ ஏதாச்சும் செய்யப்போறதா எகிறிட்டாங்களா?” என்று பாசமாக விசாரித்தது பறக்கும் பைக்.

“சேச்சே... அரசியல் தலைவர்கள்லாம் தங்கம்பா. சினிமாக்காரங்க மாதிரி விமர்சனம், வீண் வம்பையெல்லாம் சீரியஸா எடுத்துக்கமாட்டாங்க. அவங்கள்லாம் ‘வந்து பணிந்தது ஆடு’ன்னு வழி மாறி வர்ற தலைவர்களை வச்சு சமாதானமாகிவிடுவாங்க. நல்லா இருக்கிற மாதிரி நாலு சீன் வச்சு எடுக்கிற டைரக்டர்ஸ்தான் ‘டையர் கான்சிக்குவென்ஸஸ்’ வரும்னு டைரக்டா டர்ராக்குறாங்க” என்றான் பாச்சா.

“அப்படிச் சொல்லு” என்று ஆமோதித்த பறக்கும் பைக், அதே வேகத்தோடு அன்றைய பட்டியலை எடுத்து நீட்டியது. அதில் முதலாமவர்... முன்னாள் முதல்வரும் இன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளரும், இதற்கு முன்னால் இரண்டு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்தவருமான எடப்பாடி பழனிசாமி!

பட்டியலைத் தானும் வாசித்த பறக்கும் பைக், “ஏம்பா... அவரே டெல்லியில டேரா போட்டுட்டு சொல்லிக்காம கொள்ளிக்காம சோகமா ரிட்டர்ன் ஆகி... அமாவாசையின்... சாரி அமைதியின் திருவுருவமாகிட்டார். அவர்கிட்ட இன்டர்வியூ எடுத்து எதுக்கு இன்டரப்ட் பண்றே?” என்று கேட்டது.

“நீ வேற... அதிமுகவோட எதிர்காலம் மட்டுமில்ல... தமிழ்நாட்டோட எதிர்காலமே அவர் எடுக்கிற முடிவுலதான் இருக்குன்னு அரசியல் பார்வையாளர்கள்லாம் ஆரூடம் சொல்லிட்டு இருக்காங்க. அவர் கிட்ட நேர்காணல் எடுத்தாத்தானே நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியும்?” என்றான் பாச்சா.

“ஆமாமா, ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் இன்னைக்கெல்லாம் சேகரிக்கிற கையெழுத்தை வச்சுத்தான் தமிழ்நாட்டோட தலையெழுத்தே மாறும்னு சிலர் சொல்லிட்டு இருக்காங்க. அப்ப ரெண்டுல ஒண்ணு... ஐ மீன் ரெண்டு தலைவர்கள்ல ஒருத்தரைப் பார்த்துட வேண்டியதுதான்” என்று சிரித்தது பைக்.

ஈபிஎஸ் இல்லம்.

“இதோ பாருப்பா! நானெல்லாம் கார்ல இருந்து இறங்கியதும் கதவைச் சாத்திட்டு காலாற வாக்கிங் போற ஆளு. கண்டனங்களையெல்லாம் பார்த்து காண்டாகுற ஆள் இல்லைன்னு ஸ்ட்ராங்கா சில பாயின்ட்ஸை ஸ்டேட்மென்ட்ல சேர்த்துடு” என்று உதவியாளருக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்தார் ஈபிஎஸ்.

“அதென்ன சார்! இன்னாரோட வழிவந்த ஆள்... என்னா வந்தாலும் பார்த்துக்குவேன்னுதானே எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் சொல்வாங்க? நீங்க என்னடான்னா... ‘நான் கவர்ன்மென்ட் ஸ்கூல் ஸ்டூடண்ட். கவலைப்பட மாட்டேன்’னு லிஸ்ட்லேயே இல்லாத ட்விஸ்ட்டெல்லாம் எடுத்து விடுறீங்களே?” என்று கேட்டபடியே அவர் முன் ஆஜரானான் பாச்சா.

“அட எதுகை மோனையா எதையாச்சும் பேசுனாத்தானேப்பா எதுக்கும் துணிஞ்ச அரசியல்வாதியா ஏத்துக்கிறாங்க?! அதனால அப்ப தோணுன விஷயத்தை அரசியலோட கலந்து அடிச்சுவுட்டேன். அதை ஒரு கேள்வின்னு கேட்க வந்துட்டே” என்று ஈறு தெரியச் சிரித்தார் ஈபிஎஸ்.

“அது எப்படி சார்? திமுக ஆட்சி திருப்திகரமா நடக்கலை; உங்க ஆட்சியில கொண்டுவந்த திட்டங்களை உருப்படியா நிறைவேத்தலைன்னு டெல்லியில கில்லி மாதிரி அரசியல் பேசியிருக்கீங்க... ஆனா அமித் ஜி கிட்ட அரசியல் பேசலைன்னு அசராம அடிச்சு விடுறீங்களே?! இப்பல்லாம் ஓபிஎஸ் கிட்ட மோதுறதுதான் உங்க கணக்குப்படி அரசியல்னு ஆகிடுச்சா?” என்று கேட்டான் பாச்சா.

“இப்பவும் சொல்றேன். மாணவர்களுக்குக் காய்ச்சல் வராம பார்த்துக்கணும்; மண்ணை மாத்தணும்னு பிரையாசப்பட்டுத்தான் தலைநகரத்துல தரையிறங்கினேன். எய்ம்ஸ் மாதிரி என் வேண்டுகோள்களை மொத்தமா நிறைவேத்துறதா ஏகமனதா அமித் ஜி சொன்னதாலதான் கடைசி ஃப்ளட்டைப் புடிச்சி ஊருக்கு வந்துட்டேன்” என்றார் எடப்பாடி.

“அது சரி. அவங்க அதிகத் தொகுதி கேட்டு அழுத்தம் கொடுத்ததாகவும், ஒத்துமையா இருந்தாத்தான் மத்ததையெல்லாம் பத்திப் பேச முடியும்னு தத்துவார்த்தமாக சொல்லி தவிர்த்துட்டதாகவும் தானே ஊ(டக)ங்கள் எல்லாம் சொல்லுது. மோடி ஜியோட தாடியைக் கூட பார்க்க முடியாமத்தானே வாடிப்போய் திரும்பி வந்தீங்க?” என்று கேட்டான் பாச்சா.

“அட போப்பா! முதல்வர் ஸ்டாலினே அரசியல் பிரச்சினை அதிகமாய்டுச்சுன்னா மோடி ஜியைப் பார்க்க ஓடிடறாரு... நீ எப்பப்பாரு எங்க கிட்டேயே வந்து எடக்கு முடக்கா கேள்வி கேட்கிற...” என்றார் ஈபிஎஸ்.

“இப்ப எங்க கிட்ட சொன்னீங்களே அது ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைப்புக்கு அடையாளமா?” என்று கேட்ட பாச்சா, “கடவுள்கிட்ட டைரக்ட்டா டீல் பேச காசி, ராமேஸ்வரம்னு ஓடிக்கிட்டிருக்கிற ஓபிஎஸ்சுக்கு அதிர்ச்சி வைத்திய(லிங்க)ம் கொடுக்க ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடக்குது போல?!” என்று அடுத்த கேள்வியைப் போட்டான்.

“அதெல்லாம் உங்களை மாதிரி ஊடகங்கள் கிளப்பிவிடுற வதந்தி. எங்க கிட்ட சேரணும்னு வேண்டி விரும்பி வர்றவங்கள ஏமாத்திடாம சேர்த்துக்குறோம்” என்று சொன்ன எடப்பாடியைக் குறுக்கிட்ட பாச்சா, “புரியுது. மாத்துக் கட்சிக்காரங்க மனசை மாத்தி உங்க கட்சியில சேர்த்துக்கிறது எப்படீன்னு ட்ரெய்னிங் எடுக்கத்தான் அமித் ஜியைப் பார்க்கப் போயிருக்கீங்க. என்னைக் கேட்டா அமித் ஷாவைப் பார்க்குறதுக்குப் பதிலா நட்டாவைப் பார்த்திருந்தா 95 சதவீத வேலைகளை செஞ்சுகொடுத்திருப்பார்ல...” என்று கேட்டதும் ஏறிட்டுப் பார்த்தார் எடப்பாடி.

“என்கூட டெல்லிக்கு வந்த சி.வி.சண்முகம் இப்ப ஃப்ரீயாத்தான் இருக்கார். இன்டர்வியூவை அவர்கிட்ட கன்டினியூ பண்றியா?” என்று அவர் கேட்க, பதறிப்போய் பாய்ந்தோடினான் பாச்சா.

அடுத்து ஆ.ராசா.

“நல்லா கேட்டுக்கப்பா. நான் எடுத்துவைக்கிறதெல்லாம் வெறுமனே லாவணி கிடையாது. அதுல லாஜிக் இருக்கும்... லா பாயின்ட் இருக்கும். 2ஜியையே சமாளிச்ச ராசாய்யா நானு” என்று மிச்சம் இருக்கும் ஆதரவாளர் ஒருவரிடம் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார் ஆ.ராசா.

“இப்பவும் ரெண்டு ஜி இருக்காங்க சார். ஒருத்தர் மோடி ஜி. இன்னொருத்தர் அமித் ஜி. 5ஜி யுகத்துல இன்னும் ஏகப்பட்ட ஜிக்கள் பரந்து விரிஞ்சிருக்காங்க. இப்ப போய் மனுதர்மம், ரிட் மனுதர்மன்னு பேசிட்டு இருந்தா... திமுககாரங்களே திரும்பிப் பார்க்க மாட்டாங்க” என்றபடி அவர் முன்னே தோன்றினான் பாச்சா.

வம்புக்காகவே காத்திருக்கும் தோரணையில், அருகில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்ட ஆ.ராசா, “இப்படியெல்லாம் கேள்வி கேட்க ஆளு வரும்னு தெரியும். அதுக்காகத்தான் நானே ஒரு புக் எழுதி, நாலாயிரம் கேள்விக்குப் பதிலும் சொல்லியிருக்கேன். அதுல ஏழரையாவது அத்தியாயத்துல என்ன சொல்லியிருக்குன்னா...” என்று இழுக்க... இடைமறித்த பாச்சா, “நீங்க என்ன சொன்னாலும் பக்தர்கள் மனசைப் புண்படுத்திட்டதா சொல்லி அண்ணாமலை ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் போறார். உதயநிதிக்கே உங்க கட்சிக் கொள்கை என்னான்னு முழுசா தெரியுமான்னு தெரியலை. இதுல எதுக்கு ஊருப் பக்கமெல்லாம் ஒரண்டை இழுத்து வைக்கிறீங்கன்னு... திமுக சார்பா அண்ணாமலையே அக்கறையா விசாரிக்கிறார் தெரியுமா?” என்று கேட்டான்.

உடனே கண்களைச் சுருக்கி, கடுமையாக முறைத்த ராசா, “இதைத்தான் சீனத் தத்துவ ஞானி சீனிகம் சொல்றார்...” என அடுத்த வாதத்தை எடுத்துரைக்க ஆரம்பிக்க... பதறிப்போய் பைக்கில் தாவிப் பறந்தான் பாச்சா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in