டிப்போ கணக்குல திட்டம் இருக்கு!

அடுத்த முதல்வர் கனவில் அன்புமணி
டிப்போ கணக்குல திட்டம் இருக்கு!
ஓவியம்: வெங்கி

அன்று காலையில் ‘ஏக் காவ் மேய்(ன்) ஏக் கிஸான்...’ காட்சியைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் பாச்சா. அதிலும் அந்த இந்தி பண்டிட்டை மரத்தைச் சுற்றி ஓடவிட்டு மரண பீதி காட்டும் நாயைப் பார்த்ததும் பாச்சாவின் சிரிப்பு பன்மடங்காகியது.

“ரொம்ப சிரிக்காதே மேன். ஆசிரியர்களை மிரட்டுற மாணவர்கள் எந்தக் காலத்துல உருப்பட்டிருக்காங்க? அதுமட்டுமில்ல... சீக்கிரம் ஓடிடியில ‘உல்லு’ சீரிஸ் பார்த்தாவது இந்தி கத்துக்கப் பாரு. இல்லைன்னா நாட்டைவிட்டே விரட்டிடுவாங்க பாஜககாரங்க” என்று பயங்காட்டியது பறக்கும் பைக்.

சட்டென சந்தோஷத்தைத் தொலைத்த பாச்சா, “அட அச்சா, பச்சான்னாவது சொல்லிக்கூட இந்த பாச்சா இந்தியைச் சமாளிச்சுக்குவான். ஆனா, சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கணும்னு கங்கனா கங்கணம் கட்டிக்கிட்டு களேபரம் பண்ணிட்டு இருக்காங்களே... அதை நினைச்சாத்தான் அடித்தொந்தி கலங்குது” என்றான் பாவமாக.

அன்றைய தினம் முதலில் அன்புமணியைச் சந்திக்கச் சொல்லி ஆசிரியர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதைப் படித்ததும், “ஏம்ப்பா... அன்புமணின்னு ஒரு அரசியல் தலைவர் இருக்காரா? ஆச்சரியமா இருக்கே” என்று அகலச் சிரித்தது பைக். “பார்த்தியா! அண்ணாமலை காட்டுற அன்றாட அதிரடியில அன்புமணியெல்லாம் உனக்கு அரசியல் தலைவராவே தெரியாம போய்டுச்சு. இது மட்டும் ராமதாஸுக்குத் தெரிஞ்சா ரகளையாகிடும்” என்று பாச்சா நிஜமாகவே கோபம் காட்ட, “ராமதாஸா... அவர் யாருப்பா? உத்தர பிரதேச ராமபக்தரா?” என்று பைக் மேலும் ரவுசு காட்டியது.

அன்புமணி இல்லம்.

“சார், நீங்க சீமானைவிட ஆவேசமா மேடையில சீறிட்டு இருக்கீங்க... கட் பண்ணினா 2026. அப்போ ஒருத்தர் முதல் முறையா சிஎம்மா பதவியேத்துட்டு இருக்கார். க்ளோஸப் போறோம். பார்த்தா அந்த சிஎம்மே நீங்கதான் சார்” என்று ஐந்தாறு படங்களை இயக்கிவிட்டு அரசியலுக்கு வந்த ஒருவர் அன்புமணியிடம் ஆசை காட்டிக்கொண்டிருந்தார்.

பரவசமும் பதற்றமும் ஒருசேர உந்தித்தள்ள, ‘அப்படியா?’ என்பதுபோல தலையசைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி.

“சூப்பர் சார். போன தடவை, ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ன்னு முழங்குன மாதிரி, இந்த தடவை ‘சீற்றம்... சீட் சேர்ப்பு... சிஎம் சின்னய்யா’ன்னு சிறப்பு முழக்கம் எதுவும் ரெடியாகுதா?” என்று கேட்டபடியே அன்புமணி முன்னே ஆஜரானான் பாச்சா.

உடனே, உள்சைடும் பார்க்காமல் வெளிசைடும் பார்க்காமல் பொதுவாக மேலே பார்த்து பொறுமையாகப் பேசத் தொடங்கிய அன்புமணி, “திட்டமே இல்லாத திராவிடக் கட்சிகள்தான் திட்டம் போட்டு தேர்தல்ல ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துடுறாங்க. எங்ககிட்ட டிப்போ கணக்குல திட்டம் இருக்கு. எப்போ ஜெயிக்க வச்சாலும் இன்ஸ்டன்ட்டா திட்டங்களை இறக்கி மக்களைத் திணற அடிப்போம்... அதாவது, திளைக்கச் செய்வோம்” என்றார்.

“எல்லாம் சரி. ஆனா, ஆளுங்கட்சியை அனுசரிச்சு அரசியல் பண்ணுனா ஆட்சிக்கு எப்படி வர்றது? சக எதிர்க்கட்சியா இருக்கும்போதெல்லாம் திமுகவைச் சகட்டுமேனிக்கும் விமர்சிப்பீங்க. இப்ப ஆளுங்கட்சியாகிட்ட திமுகவைப் பத்தி கேள்வி கேட்டா, பாஜக பத்தின கேள்வியைப் பார்த்து பதறுற எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரி எஸ்கேப் ஆகிடுறீங்களே... கூட்டணிக்கு அச்சாரமா?” என்று கொக்கி போட்டான் பாச்சா.

“எதுக்குக் கூட்டணி பத்திப் பேச்சு வருது? இப்ப என்ன எலெக்‌ஷன் நடக்குதா? நாங்க எக்ஸிட் போல் முடிஞ்சதுக்கு அப்புறம்கூட கூட்டணியில மாற்றம் செய்ற துணிச்சலான கட்சி. அதனால கூட்டணிக்காகக் குழைஞ்சு போறோம்னெல்லாம் குழம்பிப்போய் கொஸ்டின் பண்ணாதே” என்று அரட்டினார் அன்புமணி.

‘நான் கொன்ஸ்டினா நினைச்சதையெல்லாம் கொள்கை விளக்கமாச் சொல்லிட்டாரே’ என ஆச்சரியமடைந்த பாச்சா, “ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யணும்னு அறிக்கை விட்டிருக்கீங்க... அதே மாதிரி அரசியல் சூதாட்டத்தையும் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டுவந்தா ஆதரிப்பீங்களா?” என்று கேட்டான்.

உடனே கருந்தாடி போக மிச்சம் இருக்கும் கன்னங்கள் சிவப்பாகும் வகையில் கடுப்பான அன்புமணி, “அப்பப்போ அமைதியா இருக்கோம்னு தப்பா நினைச்சுக்காதப்பா. இன்னும் நான் மோசமா பேசுவேன். பிரஸ் மீட்டுன்னு சொல்லி பிரச்சினை பண்ணாம, சோலோவா வந்து பேட்டி எடுக்கிறதால சும்மா விடுறேன்” என்றார்.

அங்கிருந்து அகன்ற பாச்சா நேரடியாக எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தைச் சென்றடைந்தான். பட்டப்பகலிலேயே இருள் சூழ்ந்திருந்த பழனிசாமியின் இல்லம். ‘சூரிய ஒளி’ பட்டாலும் செட் போட்டதுபோல அவரது வீட்டைச் சுற்றி மட்டும் எப்படி இருள் வந்தது என யோசித்துக்கொண்டே உள்ளே சென்றான் பாச்சா.

அந்த இருளுக்குள்ளிருந்து பளிச் வெள்ளை உடையும் பளீர் சிரிப்புமாகப் பேச ஆரம்பித்தார் பழனிசாமி.

“பாருப்பா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முன்னாள் முதல்வரான எனக்கே இந்த கதிதான். அப்படின்னா பொதுமக்கள் கதி என்னன்னு பாரு. திமுக ஆட்சின்னாலே மக்கள் திகிலடையுறாங்கன்னா அதுக்கு இதுதான் காரணம்” என்றார்.

“மின்தடைக்கு விடியல் அரசுதான் காரணம்னு சொல்றதுலகூட ஒரு நியாயம் இருக்கு. ஆனாக்கா, ‘டீசல் விலை விண்ணைத் தொடுகிறது’ன்னு சொல்லிட்டு அதுக்குக் காரணமான மத்திய அரசை டீஸ் பண்ணாம டீசன்ட்டா டீல்ல விட்டா எப்படி சார்?” என்றான் பாச்சா.

“நான் என்னப்பா சொல்றது? அதுக்கெல்லாம் திமுக மாதிரியான கட்சிகள்தான் காரணம்னு மோடி ஜியே சொல்லிட்டார்ல? எங்க ஆட்சிக்காலத்துல மத்திய அரசுகூட மனசு ஒப்பி கூட்டாட்சியை நடத்துனோம். திமுககாரங்க திமிரா நடந்துக்கிட்டு மோடி ஜி கிட்ட மோதுறாங்க. பிரதமர் பெருந்தன்மையா எவ்வளவோ சொல்லியும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காம இருக்காங்க... ” என்று எகிறினார் எடப்பாடி.

“ஆனாக்கா, ‘எடப்பாடி ஆட்சிக்காலத்துல 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ஆளுநர் கிடப்புல போட்டப்போ நாங்க போராட்டம் நடத்துனோம். ஆனா, துணைவேந்தர் விஷயத்துல எங்க முயற்சிக்கு அதிமுக துணை நிற்கலை’ன்னு திமுககாரங்க தினப்படி புலம்புறாங்களே?” என்று கேள்வி கேட்ட பாச்சாவை ஏற இறங்க பார்த்த எடப்பாடி, “தம்பி, அதிமுக மாதிரி ஒரு ஜனநாயகக் கட்சியைப் பார்க்க முடியுமாப்பா? ஆளுங்கட்சியா இருந்தப்போ எப்படி அடக்க ஒடுக்கமா இருந்தோமோ, அதே மாதிரி எதிர்க்கட்சியா இருக்கும்போதும் இணக்கமாக இருக்கிறோமேன்னு பாராட்டாம, பாயின்ட் எடுத்து பங்ச்சர் பண்ணப் பார்க்கிறியே?” என்றார்.

“ஆளுநரை விமர்சிக்கவே கூடாதுன்னு ஆணித்தரமா சொல்றீங்களே... எதிர்க்கட்சியா இருக்கும்போது எல்லாத்தையும் எதிர்க்கிறது ஈசிதானே? ஸ்ட்ராங் ஆப்போசிஷனா ஸ்டாலின் அண்ட் கோ அதைத்தானே செஞ்சாங்க? நீட் விலக்கு மசோதாவுல நின்னு விளையாடினா அடுத்த எலெக்‌ஷன்ல யார் தயவும்(!) இல்லாம நீங்களே சிஎம்மாகிடலாமே?” என்று பாச்சா கேட்டதும், “இதுல ஏகப்பட்ட சட்டச்சிக்கல் இருக்குப்பா. எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் செய்ய முடியாது” என்று எச்சில் விழுங்கினார் எடப்பாடி.

“புரிஞ்சுடுச்சு சார். ‘கோடை’காலத்துல ‘நாட்டு’ல நிம்மதியா இருக்கணும்னா கூலா இருந்துக்கணும்னு குறியீடா சொல்றீங்க... அதானே?!” என்ற பாச்சாவைக் கும்பிட்டு வழியனுப்பினார் எடப்பாடி.

திரும்பும் வழியில், “இந்த வாரம் அண்ணாமலை மிஸ்ஸாகிட்டாரே?” என்று கேட்டது பைக். “அதான் அவர் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க ஏரோப்ளேன்ல பறந்துட்டாரே...” என்று பாச்சா சொன்னதும், “அண்ணாமலை அடுத்த சிஎம் ஆகிறாரோ இல்லையோ, அடுத்த சீமான் ஆவார்ங்கிறது மட்டும் நிச்சயம்” என்றது பைக். “ம்க்கும். சீமான் எப்பப்பா சிலோன் போனாரு?” என்று பாச்சா சொன்னதைக் கேட்டதும் பைக் சிரித்துக்கொண்டே பறக்கத் தொடங்கியது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in