ப்ரஸ் மீட்ல பேசுறதெல்லாம் பீனல் கோடாகிடும்!

பீதியைக் கிளப்பிய சீமான்
ப்ரஸ் மீட்ல பேசுறதெல்லாம் பீனல் கோடாகிடும்!
ஓவியம்: வெங்கி

அன்று காலையிலிருந்தே ‘பீஸ்ட்’ படம் ஓடும் தியேட்டர் போல பீஸ்ஃபுல்லாக இருந்தது, பீச்சோரம் இருக்கும் பாச்சாவின் அறை. காரணம், பறக்கும் பைக் அன்றைக்கு ஆழ்ந்த சோர்வுடன் இருந்தது. இயந்திரம்தான் என்றாலும் மனிதர்களை, குறிப்பாக அரசியல் தலைவர்களை அடிக்கடி சந்திக்கும் வஸ்து என்பதால், அதுவும் அவ்வப்போது டென்ஷனாகி களைத்து விடுவதுண்டு. அந்த மாதிரியான சமயங்களில் பாச்சாவைக் கிண்டல் செய்யும் அன்றாடப் பணியைக்கூட அது மறந்துவிடும். ஆனாலும், அன்றைக்கு அமைதி கொஞ்சம் அதிகமாகவே நிலவியதால், “ஆளு டல்லாகிட்டியே... என்னாச்சுப்பா?” என்று அக்கறையுடன் நலம் விசாரித்தான் பாச்சா. “நைட் ரொம்ப நேரம் கரன்ட் இல்லை. அண்ணாமலை ஸ்பீச்சைக் கேட்ட அசதியில நீ அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கிட்டே. எனக்கு சார்ஜ் சுத்தமா இறங்கிடுச்சு. அடுத்து கரன்ட் வந்தாதான் எனக்கு உயிரே வரும். பரவால்ல... என்னைப் பத்தி கவலைப்படாதே. வேலையைப் பாரு” என்று கவுரவ வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாநாயகனிடம் பேசும் மாடுலேஷனில் பேசியது பைக்.

அந்த நேரம் பார்த்து மின்சாரம் மீண்டும் வரவே, பறக்கும் பைக்குக்கு சார்ஜ் போட்டுவிட்டு முதன்முறையாகத் தன்னந்தனியனாகப் பேட்டிக்குக் கிளம்பினான் பாச்சா. வந்த மின்சாரம் நல்லத்தனமாக நாள் முழுக்க தங்கியிருக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் போல எடுத்த எடுப்பிலேயே வெளிநடப்பு செய்துவிடுமா எனும் கேள்வி அவன் இருள் மனதிலும் நிழலாடியது.

வாடகைக்கு வண்டி பிடிப்பதிலும் ஆள் ரொம்பவே தடுமாறினான்.

மீட்டருக்கும் மேல் பல கிலோமீட்டர் உயரத்துக்குக் கட்டணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், வழக்கமான ஆட்டோக்களைத் தவிர்த்துவிட்டு ‘ஓலா’, ‘ஊபர்’ என ஒரு மணி நேரமாக முயற்சித்தான். அதற்கும் குறைந்தபட்சம் அரை கிட்னியையாவது அடகுவைக்க வேண்டும் என கட்ட(ண)ம் சொன்னதால் அதைக் கைவிட்டு, கால்நடையாகவே சென்று நகரப் பேருந்தில் ஏறினான்.

முதலில் சீமான்.

அகில உலக ஊடகங்களில் அண்ணாமலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை முறியடித்து எப்படி மீண்டும் லைம்லைட்டுக்கு வருவது எனத் தம்பிகளுடன் ஆவேசமாக ஆலோசித்துக்கொண்டிருந்தார் சீற்றமிகு சீமான்.

“திராவிடத்தைத் தீவிரமா எதிர்க்கிறது தாமரைக் கட்சியா, தம்பிகள் கட்சியான்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி அண்ணாமலைகூட கடுமையா போட்டி போட்டுட்டு இருந்தீங்க... இப்பெல்லாம் அவர்கூட கருமையா(!) போட்டி போட ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கே?!” என்று கேட்டபடி அவர் முன் ஆஜரானான் பாச்சா.

“எல்லாம் ஆரிய திராவிட அலும்பு கோஷ்டிகள் பண்ற வேலைதானே தம்பி. நாம்... அதாவது நாங்கள்லாம் தமிழர்கள் தம்பி. நான் தமிழன். அதுதான் உண்மை. மத்தவங்கள்லாம் ‘நான் - தமிழர்கள்’அதாவது ஆங்கிலத்துல non-tamils... அதனாலதான் எங்களை மாதிரி இல்லாம மோடியை வெளிப்படையா ஆதரிக்கிறாங்க” என்றார் சீமான்.

‘ம்க்கும்... ஒருகாலத்துல நீங்க தேர்தல் பிரச்சாரத்துலேயே மோடியை ஓவரா புகழ்ந்தவர்தானே’ என்று மைண்ட் வாய்ஸில் மனதுக்குள் மவுனமாகக் கேட்டுக்கொண்ட பாச்சா, “சரி, திராவிடர் யார்னு திமுககாரங்களைத் திகைக்கவைக்கிற மாதிரி திரும்பத் திரும்பக் கேட்கிறீங்களே? ஜெயக்குமாரே திராவிடத்துக்கு ஆதரவா தீவிரமா பேசியிருக்காரே... என்ன தியரி சார் அது?” என்று சீமானிடம் முதன்முறையாக சீரியஸாகக் கேட்டான் பாச்சா.

சற்று நேரம் சவுண்ட் இல்லாமல் இருந்த சீமான், பின்னர் கண்கள் விரிய கதைக்க ஆரம்பித்தார். “நல்லா கேட்டுக்க தம்பி. கரன்ட் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நைட்டெல்லாம் இருட்டா இருந்துச்சு. அந்த நேரத்துல் இருந்தவங்கள்லாம் திராவிடர்கள்னு சொல்லிக்கிறாங்க. பகல்ல சூரியன் வந்ததும் திராவிடர்கள்லாம் வெள்ளையாகி ஆரியர்களாகிட்டாங்க... ஆக மொத்தத்துல ரெண்டு பேரும் ஒண்ணுதான். நாங்கள்லாம் காலங்காலமா கறுப்பா இருக்கிறவங்க... அதனால நாங்கதான் நயம் ஒரிஜினல் தமிழர்கள்” என்று சீமான் சொல்வதைக் கேட்டு சிலிர்த்துக் கைதட்டினார்கள் தனித்தமிழ்த் தம்பிகள்.

கையை உயர்த்தி அவர்களைக் கட்டுப்படுத்திவிட்டு, மேலும் பேசிய சீமான், “எனக்கெல்லாம் இந்திய மாஸ்க், திராவிட மாஸ்க்னு ஏகப்பட்ட முகமோடி... சாரி மூடி போட்டு அலைய வேண்டிய அவசியமில்லை. சுத்தப் பைத்தியக்காரத்தனம் தம்பி இது” என்றார்.

“இப்பல்லாம் மாஸ்க் போடலைன்னா ஃபைன் சார்... தெரியும்ல?” என்று பாச்சா கேட்டதும், சுற்றி நிற்கும் தம்பிகளை ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்துச் சிரித்துவிட்டு, “வெரி ஃபைன். நான் கட்டிட்டுப் போறேன். ஆனா ஒண்ணு சொல்றேன். இந்த மாதிரியான சட்டதிட்டங்கள் கண்டிஷனுக்கெல்லாம் நான் அதிபரா வர்ற வரைக்கும் தான் ஆயுசு. அதுக்கப்புறம், நான் ப்ரஸ் மீட்ல பேசுறதெல்லாம் பீனல் கோடாகிடும். உள்ளூர் போலீஸையெல்லாம் ராணுவமாக்கிடுவேன். லத்திக்குப் பதிலா எல்லார் கையிலயும் ராக்கெட் லாஞ்சர் கொடுத்துடுவேன்” என்று சொன்னதும் எதிர்காலத்தை எண்ணி ஏக திகிலடைந்தான் பாச்சா.

ஆனாலும், அச்சத்தைக் காட்டிக்கொள்ளாமல், “ஒப்பீட்டுக்கும் உதாரணத்துக்கும் உள்ள வித்தியாசத்தைத் தனியாகவும் வேறுபாட்டைத் தனியாகவும் சொன்னீங்களே சூப்பர் சார். யார் ஃபார்வேர்டு பண்ணின மெசேஜ் அது?” என்று அப்பாவியாக முகத்தை வைத்தபடி கேட்க, தம்பிகள் தாறுமாறாகத் தார்மிகச் சீற்றம் கொள்ள, அங்கிருந்து உடனே அகல வேண்டியது அவசியமானது.

அடுத்து உதயநிதி இல்லம்.

‘எதிர்க்கட்சித் தலைவர்கள் எந்த நேரத்திலும் எனது கார்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்... * கமலாலயம் தொடர்பான கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று போர்டு எழுதிவைக்கப்பட்டிருந்த போர்டிகோவைத் தாண்டி உள்ளே நுழைந்தான் பாச்சா.

“அட என்னப்பா, உங்க வீட்ல மட்டுமா கரன்ட் இல்லை. எங்க வீட்லயும்தான் இல்லை. இதெல்லாம் ஒன்றிய அரசு பண்ற ஒரண்டை. சீக்கிரம் இனிய விடியல் வரும். அதுவரைக்கும் இன்வெர்ட்டர் வச்சு சமாளிங்க” என்று ஒரு ஒவ்வொரு ஊரிலிருந்தும் அழைத்த உடன்பிறப்புகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் உதயநிதி.

“இப்பல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டைவிட அசெம்பிளியில அட்டகாசமா பேசி அசத்துறீங்க போல. ஈபிஎஸ், ஓபிஎஸ்கூட எச்சரிக்கையா வெளிநடப்பு பண்ணாம, இருந்த இடத்துல இருந்து உங்க பேச்சைக் கேட்கிற அளவுக்கு வளர்ந்துட்டீங்க... இதுக்கெல்லாம் டயலாக் யாரு சார்?” என்று எடுத்த எடுப்பில் கேட்டு இம்சித்தான் பாச்சா.

“சினிமாவுக்கும், அரசியலுக்கும் சின்ன அளவுலகூட சம்பந்தமே இல்லைப்பா. ரெண்டும் வேற வேற. என் படங்கள்லேயே சீரியஸான கேரக்டருக்கும் சிரிப்பு கேரக்டருக்கும் வெரைட்டி வெரைட்டியா வித்தியாசம் காட்டியிருப்பேன்” என்று சிரிக்காமல் பேசிய உதயநிதியை இடைமறித்த பாச்சா, “சரி விடுங்க. வருங்கால அமைச்சர் (!) சொல்றதால, வேற வழியில்லாம வழிமொழிகிறேன். ஆனாக்கா, ரெட் ஜெயன்ட் இப்ப ரவுண்டு கட்டி படத்தையெல்லாம் வாங்குதே... அதுக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னா சீரியல்ல நடிக்கிற சின்ன பசங்ககூட நம்பமாட்டாங்களே...” என்றான்.

“தம்பி, நானே வான்டடா எதையாவது பேசி வைரலாகிடக் கூடாதுன்னு, கூட இருக்கிறவங்களையே குறைச்சுப் பேசச் சொல்லிட்டிருக்கேன். நீ என்னைப் டென்ஷனாக்கிப் பேசவச்சு ட்ரெண்ட் பண்ணப் பார்க்கிறியே...” என்று உதயநிதி சொன்னபோது, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அவரது ‘செட்’ அமைச்சர்கள் அங்குவந்து சேர உடனடியாக உஷாராகி, உடன்பிறப்புகளிடமிருந்து விடைபெற்றான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in