‘எமக்கு என்ன தெரியும்?’- பக்திபயம் காட்டும் பன்னீர்செல்வம்

‘எமக்கு என்ன தெரியும்?’- பக்திபயம் காட்டும் பன்னீர்செல்வம்
ஓவியம்: வெங்கி

அன்று காலை பணி நிமித்தமாகப் பறந்துகொண்டிருந்தபோது, “ஏம்பா இந்த ஆந்தைக்கெல்லாம் பகல்ல கண்ணு தெரியாதுன்னு வடிவேலு ஒரு காமெடியில சொல்றாரே, அது உனக்குத் தெரியுமா?” என்று திடீரென கேட்டது பறக்கும் பைக்.

திடுக்கிட்ட பாச்சா, “தெரியாதுப்பா” என்றான் ஒரே வார்த்தையில். “ஆந்தைக்குப் பகல்ல கண்ணு தெரியாதா... இல்லை இந்தக் கேள்விக்கு உனக்குப் பதில் தெரியாதா?” என்று அடுத்த கேள்வியைப் போட்டது பைக். ‘பதில் தெரியலைன்னா பரவால்ல... நமக்குத்தான் கேள்வியே தெரியாதே’ என்று வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல வருத்தப்பட்ட பாச்சாவால், எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் ‘தெரியாது’ என்று பதிலளித்த ஓபிஎஸ்ஸின் வலியை உணர்ந்துகொள்ள முடிந்தது. எனவே, இந்த வார(மு)ம் ‘இருபதாயிரம்’ புகழ் அண்ணாமலையை முதலில் பேட்டியெடுக்க நினைத்திருந்தவன், முடிவை மாற்றிக்கொண்டு ஓபிஎஸ் வீட்டில் தரையிறங்கினான்.

ஓபிஎஸ் தர்மயுத்த பாணியில் தரையில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். ‘என்னைத் தெரியுமா... நான் சிரித்துப் பழகி...’ எனும் எம்ஜிஆர் பாடல் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு ஞாபகத்தில், ‘இல்லைங்க... தெரியாது’ என அனிச்சையாகச் சொன்னபடி அமைதிகாத்தார் ஓபிஎஸ்.

“சார், அது விசாரணை கமிஷன் இல்லை. ஒரு பாட்டு. அதுவும் எம்ஜிஆர் பாட்டு. அதிமுககாரரான நீங்க அதுக்கும் தெரியாதுன்னு பதில் சொன்னா எப்படி?” என்றபடி அவர் முன் ஆஜரானான் பாச்சா.

“இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதில் யாமும் ஒரு நடிகர். அதுவும் யாரோ ஒரு பெயர் தெரியாத துணை நடிகர். எமக்கு என்ன தெரியும்?” என்றபடி பக்திபயத்துடன் கண்ணை பவ்யமாய் மூடிக்கொண்டார் பன்னீர்செல்வம்.

“துணை நடிகரா? சார், நீங்க துணை முதல்வரா இருந்தவர். அம்மா காலமானதுக்கு அப்புறம் முதல்வராவே இருந்தவர். இப்படி ஏகப்பட்ட போஸ்டிங்கைக் கையில வச்சுக்கிட்டு எதுக்கெடுத்தாலும், தெரியாதுன்னு சொல்றது அம்மாவுக்கே அடுக்குமா?” என்று ஆர்ப்பரித்தான் பாச்சா.

பாவிகளை யோகி பார்க்கும் பரிவுப் பார்வையில் அவனைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்த பன்னீர்செல்வம், “தம்பி, விவகாரம், வட்டாரம், விசாரணை கமிஷன், சம்மன், ஆஜர்னெல்லாம் எல்லாத்தையும் ஏத்த இறக்கமா எழுதுறதுக்கு நல்லா இருக்கலாம். ஆனா, எல்லாத்தையும் தாண்டி உண்மைன்னு ஒண்ணு இருக்கு. அது உறங்கிடக் கூடாது. நியாயம்னு ஒண்ணு இருக்கு. அது நீங்கிடக் கூடாது...” என்று நீட்டிக்கொண்டே போக, “தர்மம்னு ஒண்ணு இருக்கு. அது தடுமாறிடக் கூடாது... அதானே! அட போங்க சார்... இடைப்பட்ட காலத்துல ஈபிஎஸ் அணியை நோக்கி என்னென்னவோ கேள்வி வச்சீங்க. இன்னைக்குச் சின்னம்மாவுக்கு நீதி கிடைக்கத்தான் விசாரணை வேணும்னு கேட்டதா சிம்பிளா சொல்றீங்க. அம்மா சமாதியில அன்னைக்கு தர்மயுத்தம் பண்ணினப்ப ‘ஆடிட்டர்’ சொன்ன வார்த்தையை மனசுல ஓட்டி ஆழ்ந்த வருத்தத்துல இருந்தீங்களோ... தமிழ்நாட்டு மக்கள்தான் அதை தர்மயுத்தம்னு தவறா நினைச்சுட்டாங்களோ?” என்று அடுக்கடுக்காகக் கேட்டான் பாச்சா.

“அதான் காலை முதல் மாலை வரை கேட்ட கேள்விகளுக்கு ‘உரிய’ பதிலைச் சொல்லிட்டேன்னு அவங்களும் உட்டுட்டாங்கள்ல?! அப்புறம் அதுக்கு ஒரண்டை இழுக்கிறே?” என்ற ஓபிஎஸ், “உரிய பதிலை உரிய காலத்துல சொல்லிருக்கலாமே... ?” என்று கேட்ட பாச்சாவைக் கண்டுகொள்ளாமல், டிவி பார்க்க ஆரம்பித்தார். ஓபிஎஸ் மாற்றிய சேனலில், ‘நான் யார் நான் யார்... நீ யார்?’ என்று அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர் ஆதியந்தம் புரியாமல் பாடத் தொடங்கினார்.

அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

‘பெட்ரோல் விலையை உயர்த்திய பிரதமர் மோடிக்குக் கண்டனங்கள்’, ‘மோடியே காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது நியாயமா?’ என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வாங்கி வைத்திருந்த அண்ணாமலையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாச்சா, “எல்லா வாரமும் நியூஸ்ல அடிபடுறீங்களோ இல்லையோ, மீம்ஸ்ல நல்லாவே வறுபடுறீங்க... என்னங்க சார் உங்க திட்டம்?” என்று கேட்டபடியே... வந்த வேலையை ஆரம்பித்தான்.

அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் கட்சிக்காரர்களிடம் திரும்பிய அண்ணாமலை, “அதுல ‘மோடியே...’ன்னு இருக்கிற இடத்துல எல்லாம் ‘முதல்வரே...’ன்னு மாத்திடுங்க” என்று உத்தரவிட்டபடி, பாச்சாவை ஏறிட்டார்.

‘என்னா ஒரு புத்திசாலித்தனம்’ என்று மனதுக்குள் வியந்த பாச்சா, “நாட்டு மக்கள் மோடியைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியையெல்லாம் தமிழ்நாட்டு முதல்வர்கிட்ட நீங்க கேட்கிறீங்கன்னு பேசிக்கிறாங்களே... எலெக்‌ஷன் ரிசல்ட்டுக்கப்புறம் பெட்ரோல், டீசல் எகிறுறதுக்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம்னு சொல்றீங்களா?” என்றான் அவரிடம்.

“நல்லா ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்கண்ணா. நான் அரசியல் பண்றது தமிழகத்துல. எங்கே என்ன நடந்தாலும் இங்கே இருக்கிற அரசை எதிர்த்துத்தான் அரசியல் பண்ண முடியும். நீங்க கேட்கிறதால ஒரு விஷயம் சொல்றேன். உக்ரைன் போருக்கு யார் காரணம் தெரியுமா?” என்று பாச்சாவிடம் பதில் கேள்வி கேட்டார் அண்ணாமலை.

‘புதினுக்கே தெரியாத புதிய உண்மைகள் வெளிப்படும் போல. இதை இன்னைக்குத் தலைப்புச் செய்தியாக்கிடலாம்’ என்று மைண்ட் வாய்சில் பொங்கிய மகிழ்ச்சியை மறைத்தபடி, “யார் சார்?” என்று கேட்டான் பாச்சா.

“வேற யாரு? முதல்வர் ஸ்டாலின்தான். அவர்தானே ரஷ்யாவை ஸ்ட்ராங்காக்கி இப்ப ராங்கா பிஹேவ் பண்ண வச்சிருக்கார்?” என்று ஆவேசப்பட்டார் அண்ணாமலை.

“ஆனாக்கா, அவர் அந்த ஸ்டாலின், இது இந்த ஸ்டாலினாச்சே” என்று அதிர்ச்சிக் குரலில் பாச்சா கேட்க, “அதெல்லாம் தெரியாது. ஸ்டாலின்னா கண்டிப்போம்” என்று கடும் குரலில் சொன்னார் அண்ணாமலை.

“சரி விடுங்க... இதுல குறைந்தபட்சம் பெயர்ப் பொருத்தமாவது லாஜிக்கா இருக்கு. ஆனா, அரசு முறைப் பயணமா துபாய் போயிருக்கிற ஸ்டாலின் ஐயாயிரம் கோடி ரூபாய் எடுத்துட்டுப் போயிருக்கார்னு அதிர்ச்சித் தகவலைச் சொல்லிருக்கீங்களே... நீரவ் மோடி, மல்லையான்னு நீளமா ஒரு லிஸ்ட் ஃபாரின்ல செட்டில் ஆனதே அந்த மாதிரி ஸ்டாலின் எஸ்கேப் ஆகிட்டார்னு சொல்ல வர்றீங்களா?” என்றான் பாச்சா.

“நாங்க அப்படியெல்லாம் ஆதாரம் இல்லாம யாரைப் பத்தியும் எதுவும் சொல்ல மாட்டோம். எவ்ளோ புக் படிச்சிருக்கோம் நாங்க!” என்றார் அண்ணாமலை.

“கேட்கணும்னே இருந்தேன். நீங்கபாட்டுக்கு 20 ஆயிரத்துக்கும் மேல புக் படிச்சிட்டதா திரும்பவும் சொல்லிருக்கீங்க. கேட்டா ஆப்ல புக்கோட சாரத்தைப் படிச்சதா விளக்கம் சொல்றீங்க. அட, பாட்டு புத்தகத்துல கூட கதைச் சுருக்கம் போட்டு, ‘மீதியை வெண் திரையில் காண்க’ன்னு போட்டிருப்பாங்களே... புக்கைப் புரட்டியெல்லாம் பார்க்க மாட்டீங்களா?” என்று கேட்டான் பாச்சா.

என்ன பதில் சொல்வது என அண்ணாந்து பார்த்து யோசித்துக்கொண்டிருந்த அண்ணாமலைக்கு அமித் ஷாவிடமிருந்து போன் வந்திருப்பதாக அங்கிருந்தவர்கள் சொல்ல, பாச்சா அ(ச்ச)த்துடன் பேட்டியை முடித்துக்கொண்டான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in