‘ஹிஸ்டரியில வேற மாதிரி எழுதியிருக்குன்னு சொல்லி கஷ்டப்படுத்துறாங்க!’

சீமான் சீற்றம்
‘ஹிஸ்டரியில வேற மாதிரி எழுதியிருக்குன்னு சொல்லி கஷ்டப்படுத்துறாங்க!’

அன்று அதிகாலை தூங்கியும் தூங்காமலும் துக்கடா துயிலில் இருந்தான் பாச்சா. போர்வையிலிருந்து தலையை நீட்டுவதும் புரண்டு படுப்பதுமாக இருந்தவனைப் புன்னகையுடன் கவனித்துக்கொண்டிருந்த பறக்கும் பைக், “என்னய்யா நீ? வேளை கெட்ட வேளையில ‘வெந்து தணிந்தது காடு’ பார்க்கப் போறவன் மாதிரி அரைத் தூக்கத்துல அலப்பறை பண்ணிட்டு இருக்கே... கவுதம் மேனன் போட்ட கண்டிஷனைக் கண்டிஷனா ஃபாலோ பண்ணியிருந்தா இந்நேரம் கண்ணை மூடிக்கிட்டு கம்னு தூங்கியிருக்கலாம்ல?” என்றது.

“அட அதெல்லாம் இல்லைப்பா. ஆளுக்காள் அதிரடியாப் பேசி அந்தந்த வாரத்துக்கு மைலேஜ் ஏத்திக்கிறாங்க...” என்று பாச்சா சொல்ல சொல்ல, குறுக்கிட்ட பறக்கும் பைக், “இல்லைன்னா ஜெயிலே கதின்னு ஆகிடறாங்க. அதுலயும் செலெக்டடாத்தான் சிறைக்கு அனுப்புறாங்க... சில பேரெல்லாம் சின்னாபின்னமா பேசுனாலும் சீந்த மாட்டாங்க. அதையெல்லாம் மைண்ட்ல ஏத்திக்கிட்டா தூக்கம் தூரப்போயிடும். துக்கம் பக்கம் வந்துடும். கூல் சுரேஷ் மாதிரி கூமு... சாரி கும்பிட்டுக்கிட்டே எதையாச்சும் கூவி கொண்டாட்டமா வாழ்ந்துடணும். அதுதான் இப்ப ட்ரெண்டு” என்று அட்வைஸ் செய்தது.

“அது ட்ரெண்டோ ஸ்டன்டோ... சினிமாக்காரங்களைவிட அரசியல்வாதிகள்கிட்டதானே அதிகமா இருக்கு” என்றபடி அன்றைய பணிக்கு ஆயத்தமானான் பாச்சா.

“அப்படீன்னா கூல் சுரேஷுக்கு இணையா எனிடைம் ட்ரெண்டிங்ல ஃப்ரன்ட்ல இருக்கிற பிரபலம்தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டா?” என்று கேட்டது பறக்கும் பைக். ஆமோதிப்பாகத் தலையசைத்தான் பாச்சா.

அன்று முதல் பேட்டி சீமானுடன்!

சீமான் பற்றிய நியூஸ்களைவிடவும் மீம்ஸுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து குறிப்பு எடுத்துக்கொண்டான் பாச்சா. “இதெல்லாம் ரொம்ப ஓவர்யா. அவர் அப்பப்ப சீரியஸா பேசி சிரிப்பு மூட்டத்தான் செய்றார். அதுக்காண்டி மீம்ஸ் மெட்டீரியலாவே அவரை ‘மீன்’ பண்ணி மீட் பண்றதெல்லாம் தப்பு” என்று கண்டித்தது பறக்கும் பைக்.

“நீதான் அப்படிச் சொல்றே... அவரைப் பத்தி வர்ற நியூஸையெல்லாம் ஃபேக்ட் செக் பண்றதுக்குள்ள ஃபாஸ்ட்டா ஒரு க்ரூப் மீம்ஸா மாத்திடுது. அதை பெரியா... பெரியா ‘குரு’மார்களே உண்மைன்னு நம்பி ஊரெல்லாம் பரப்பி பல்பு வாங்குறாங்க... நாமெல்லாம் எம்மாத்திரம்” என்று சிரித்தான்.

சீமான் இல்லம்.

இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லஸுக்கு சவால் விடும் வகையில் அரசர் ஆடை அணிந்து அசத்தலாக இருந்தார் செந்தமிழன். இருந்தாலும், ஏதோ ஒரு தயக்கம் அவர் முகத்தில் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தது.

“அட விடுங்கண்ணே... மீம்ஸ்னா மீண்டும் மீண்டும் சீண்டுற சமாச்சாரம்தான். அதுக்காண்டி நாம அரசியல் நடத்தாம இருக்க முடியுமா? பேசாம இந்த கெட்டப்பை மெயின்டெயின் பண்ணுனா கேப் விடாம கெத்து ஏத்திடலாம்ணே... நாமதான் வருஷா வருஷம் வருத்தப்படாம கெட்டப் சேஞ்ச் பண்ணி வசூ... அதாவது வசீகரிக்கிறோம்ல மக்களை!” என்று எப்போதும் தலையாட்டும் தம்பி ஒருவர் சீமானுக்கு சீக்ரெட் உத்திகளைச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

அந்தச் சமயம் பார்த்து அங்கு ஆஜரானான் பாச்சா. “என்ன சார்! முன்னாடியெல்லாம் உள்ளூர்த் தலைவர்கள் உலகத்தைவிட்டு நீத்துவிட்டால், உங்க கட்டுப்பாட்டுல அவங்களோ கருத்து கம் சிந்தனை வந்துடும்னு சொல்வாங்க... நீங்களும் எங்க அய்யன்... எங்க தாத்தன்... எங்க ஒண்ணு விட்ட சித்தப்பன்னெல்லாம் ஏதேதோ உறவு சொல்லி போட்டோவுக்கு மாலை போட்டு சோகமா, வேகமா, ஏகமாப் பேசுவீங்க. இப்ப உலக அளவுல உங்க உத்தியைப் பிரபலப்படுத்தி நிறைய பேச வச்சுட்டாங்களே நெட்டிசன்கள்” என்று அவன் கேட்டதும் சட்டென முகம் சிவந்தார் சீமான்.

“இதுக்குத்தான் ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’னு எங்க அய்யன் வள்ளுவர் சொன்ன குறளைக் ‘கோட்’ பண்ணினேன். யார் வேணும்னாலும் யாரையும் விமர்சனம் பண்ணலாம் தம்பி. இதோ... ஏகே57 பயிற்சி வரைக்கும் முடிச்ச என்னையை இன்னிக்கு நண்டு சிண்டெல்லாம் மீம்ஸ் போட்டுக் கலாய்க்கிறதையெல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன்” என்றார் சீமான்.

உடனே, அருகில் இருந்த மூத்த தம்பி, “அவங்க செய்றதைச் செய்யட்டும். அண்ணன் கைக்கு நிலம் சிக்குற வரைக்கும்தான் அதெல்லாம். அப்புறம் இருக்கு அண்ணனோட அதிரடி சரவெடி” என்றார்.

“அதெல்லாம் சரிதான். சிங்கிள் டிஜிட்ல இருக்கிற சீமான் வாக்கு சதவீதம் டபுள் டிஜிட்டா எப்ப மாறுறது? மத்த கட்சிகள்கிட்ட இருந்து மக்களை எப்படிக் காப்பாத்துறது?” என்று கேட்டான் பாச்சா.

“இதுதான், நம்மளோட பழம்பெருமை தெரியாத பரம்பரையோட பரிதாப நிலை தம்பி” என்று எடுத்தியம்பிய சீமான், “இப்ப நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் மூதாதையர்களோட சில செயல்பாடுகள்தான் காரணம். உதாரணத்துக்கு, அதிமுகவால இன்னைக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினைக்கே திமுகதான் காரணம். திமுகன்னு ஒண்ணு உருவானதாலதானே அதுல இருந்து அதிமுக உருவாச்சு? சுதந்திரம் வாங்கினதுனாலதானே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துச்சு. காங்கிரஸ் கவர்மென்ட் தோத்ததால தானே பாஜக ஆட்சிக்கு வந்துச்சு? ஆகையினால... எல்லாத்தையும் மாத்தியமைக்கணும். ஆனா பாரு... வருஷா வருஷம் நடந்தததையெல்லாம் வரலாறா எழுதிவச்சிட்டாங்க. நான் ஒண்ணு பேசினா... ஹிஸ்டரியில வேற மாதிரி இருக்குன்னு சொல்லி கஷ்டப்படுத்துறாங்க” என்றார்.

“அப்படீன்னா ‘டிக்கிலோனா’பாணியில டைம் மிஷின்ல போய் எல்லாத்தையும் மாத்தி வச்சிடலாமா?” என்று பாச்சா சிரித்துக்கொண்டே கேட்டதை சீரியஸாக எடுத்துக்கொண்ட சீமான், “ஏம்ப்பா. அப்படி ஏதாச்சும் வழி இருக்கான்னு பாருங்களேன்” என்று கேட்க, அதை அவர்களும் சீரியஸாக எடுத்துக்கொண்டு வாட்ஸ்-அப் வரலாற்றுத் தரவுகளில் டைம் - மிஷின் பற்றி தேட ஆரம்பித்தார்கள்.

பாச்சா அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே பறக்க ஆரம்பித்தான்.

அடுத்து ஈபிஎஸ்.

அடுத்த ‘ஹியரிங்’ வரும் வரை ஆதரவாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்வார்கள் என்பதால், வீட்டில் இருந்தால் சரிப்படாது என்று பரந்துவிரிந்த மைதானம் ஒன்றை மேக்‌ஷிஃப்ட் இல்லமாக்கி அங்கு தங்கியிருந்தார் எடபபாடி.

அட்ரஸ் கண்டுபிடுத்து அவரிடம் சென்று சேர்வதற்குள் பறக்கும் பைக்குக்கே தலை சுற்ற ஆரம்பித்திருந்தது.

“தலைவரே... இப்பெல்லாம் அண்ணாமலைக்கே டஃப் கொடுக்கிற மாதிரி அடிக்கடி அதிரடியா பேசுறீங்க. எதிர்க்கட்சித் தலைவர் நீங்கதான்னு இப்ப மக்கள் ஏகபோகமா முடிவு பண்ணிட்டாங்க. இனி ஒருத்தரை விடாதீங்க” என்று ஏற்றி விட்டுக்கொண்டிருந்தார்கள் ஏடிஎம்கே தொண்டர்கள்.

“அதெப்படி சார்! தமிழ்நாட்டுக்கு நாலு சிஎம் இருக்காங்கன்னு சொல்லி விடியல் ஆட்சிக்கு இடி மாதிரி அடி கொடுத்திருக்கீங்க... உங்க ஆட்சியில இருந்த மாதிரி முதல்வர் - துணை முதல்வர்னு ரெண்டு பேர் கூட இல்லையே?” என்று பாச்சா கேட்டதும், இடி இடி எனச் சிரித்த எடப்பாடி, “தம்பி! இங்க நடக்கிறது குடும்ப ஆட்சி. நானெல்லாம் முதல்வரா இருந்தப்போ சொந்தக் குடும்பத்தைத் தாண்டி சம்பந்தி குடும்பம் வரைக்குமாச்சும் சந்தோஷமா இருந்தாங்க. இப்ப பாரு! விடியல் ஆட்சின்னு சொல்லி லைட் போட்டாலே ஷாக் அடிக்கிற மாதிரி கரன்ட் பில்லை ஏத்தி வச்சிருக்காங்க. எங்க ஆட்சியில எங்கேயாச்சும் துப்பாக்கி ஷூட்டிங் நடந்தாகூட டிவியில பார்த்துத்தான் தெரிஞ்சுக்குவோம். இவங்க ஆட்சியில இந்திப் பட சினிமா ஷூட்டிங்கே இவங்க டைரக்‌ஷன்லதான் நடக்குது. இனிமே கல்யாண வீடியோ ஃபங்ஷனையே அவங்க வாங்கித்தான் ரிலீஸ் பண்ணுவாங்க போல... அந்த அளவுக்கு எல்லாத்துலயும் இன்வால்வ் ஆகியிருக்காங்க. அதை எதிர்க்கட்சிதானே தட்டிக் கேட்கணும்?” என்றார்.

‘எதிர்க்கட்சி யாருங்கிறதுதானே இப்ப பிரச்சினை’ என்று மைண்ட் வாய்ஸை மைல்டாக ஒலிக்கவிட்ட பாச்சா, “எல்லாம் சரி சார்! சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் சமாதானமாகி ஓரணியில திரண்டுட்டா உங்க அருமை பெருமைக்கெல்லாம் ஆபத்து வந்துடும்னு அரண்டுபோயிருக்கீங்களாம்... அதுக்காகத்தான் அதிமுக தொண்டர்களை ஆனந்தப்படுத்த திமுக ஆட்சியைத் திருப்பிப்போட்டு அடிக்கிறீங்களாம்... சொல்லிக்கிட்டாங்க” என்று கேட்டான்.

“அதிமுகவுக்கு அட்வைஸ் பண்ண பழம்பெரும் தலைவர்களுக்கே பாலிடிக்ஸ் ஞானம் பத்தாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ கட்சியிலேயே இல்லாதவங்க பேரைச் சொல்லி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கே” என்றார் எடப்பாடி.

“அதெல்லாம் பரவாயில்லை சார். ஆனா, ‘நான் என்ன ஃபெமிலியர் ஃபிகரா?’ன்னு தன்னடக்கத்தோட பேசியிருக்கீங்க. ஆனா, டெல்லி வரை உங்க பழைய ஃபைலையெல்லாம் எடுத்து வச்சு பேசுற அளவுக்கு ஃபேமஸா இருக்கிற நீங்க இந்த அளவுக்கு இறங்கிப் பேசுறது ரொம்ப ஓவரா இருக்கே!” என்று பாச்சா கேட்டதும், “அடப் போப்பா! என்னைச் சுத்தி இருக்கிறவங்க சோதனை மேல சோதனைன்னு வேதனையில இருக்காங்கன்னு யோசனையில இருக்கேன். மைக் முன்னாடி மனசைத் திறந்து எதையாச்சும் பேசலாம்னு பார்த்தா பைக்ல பறந்துவந்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கேள்வி கேட்டு வருத்தப்பட வைக்கிற” என்று படபடத்தார் பழனிசாமி.

பாச்சாவுக்கும் பாவமாக இருந்தது. பேட்டியை முடித்துக்கொண்டான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in