திராவிட மொழிப் படங்கள் திக்கெட்டும் கொடி நாட்டுனது திமுக ஆட்சியிலதான்!
ஓவியம்: வெங்கி

திராவிட மொழிப் படங்கள் திக்கெட்டும் கொடி நாட்டுனது திமுக ஆட்சியிலதான்!

ஓராண்டு ஆட்சியைப் புகழும் உதயநிதி

அன்று அதிகாலை பாச்சா பாதித் தூக்கத்தில் உளறிப் பதறிக்கொண்டிருந்தான். பறக்கும் பைக் பதைபதைத்து அவனருகில் சென்று உலுக்கியபடி, “என்னாச்சுய்யா? ஏன் இப்படி கனவுல கங்கை அமரனைக் கண்ட மாதிரி கத்தி இம்சை பண்றே?” என்று அதட்டியது. சுற்றுமுற்றும் பார்த்த பாச்சா, “பயமா இருக்கு... ரொம்பப் பயமா இருக்கு” என்று மணி ரத்னச் சுருக்கமாகக் குழறினான். “இதுக்குத்தான் சாயங்காலத்துக்கு அப்புறம் ‘சாணிக்காயிதம்’ மாதிரியான படத்தையெல்லாம் ஒண்டியா ஓடிடி-யில பார்க்காதேன்னு சொன்னேன். கேட்டாத்தானே?” என்று சலித்துக்கொண்டது பைக்.

“அட அது இல்லப்பா. இந்த ஆன்மிகவாதிகள்லாம் ஆக்ரோஷமா மிரட்டுற நியூஸை அதிகாலையில பார்த்துத் தொலைச்சுட்டேன். அதான் ஆடிப்போய் பீதியாகிட்டேன்” என்றான்.

அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக்கொண்ட பைக், “அது சரி, இன்னிக்கு முதல்ல யாரு?” என்று கேட்டது.

“முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” என்று பாச்சா சொன்னதும், இந்த முறை பறக்கும் பைக் பதறியது. “என்னப்பா சொல்றே? ஒரு வருஷத்துலேயே ஸ்டாலின் (ரிட்)டயர்டாகி உதயநிதிகிட்ட பொறுப்பைக் கொடுத்துட்டாரா?” என்று பைக் கேட்டதைப் பார்த்து பல் தெரிய சிரித்த பாச்சா, “உதயநிதி முதல் முறையா அமைச்சராகப் போறார்னு ஊரு முழுக்கப் பேச்சா இருந்துச்சா... அதான் அப்படிச் சொன்னேன்” என்றான்.

உதயநிதி இல்லம்.

அங்கு குழுமியிருந்த அவரது ஆதரவாளர்களைப் பார்க்கும்போது ஏனோ அரசியலுக்குரிய அம்சங்கள் ரொம்பவே குறைவாக இருப்பதாக பாச்சாவுக்குத் தோன்றியது. கரை வேட்டி, கலெக்‌ஷன்...ஸாரி கம்பீர லுக் என வழக்கமான சீருடையில் இல்லாமல் சினிமா நடிகர்கள் போல, சீரியல் நடிகர்கள் போல சீரும் உடுப்புமாக இருந்தனர்.

“யோவ் வெறிக்க வெறிக்கப் பார்க்காதே. அவர் முன்னணி நடிகர்கள்ல ஆரம்பிச்சு முந்தாநேத்து அறிமுகமானவங்க படம் வரை எல்லாத்தையும் அன்பா (!) பேசி வாங்கிடறாரு... அதான் ரெட் ஜெயன்ட்ல சான்ஸ் கிடைச்சாலும் கிடைக்கும்னு ரெடியா இருக்காங்க போல...” என்று பாச்சாவின் காதில் கிசுகிசுத்தது பைக்.

அடுத்து சில அமைச்சர்கள், “பார்வேந்தே... எம்மைப் பார் வேந்தே... மாமன்னா எங்கள் மகாமன்னா” என்றெல்லாம் பாராட்டுப்பா பாட வாசலிலேயே வரிசையில் நின்றனர்.

அப்போது, “அண்ணே... அவதாரையும் வாங்கிடணும். அதை மட்டும் விட்டுடாதீங்க” என்று அக்கறையுடன் சொன்ன அணுக்கத் தொண்டரின் தோள் மீது தோழமையுடன் கைவைத்து, “கேமரோனோட அடுத்த படத்துல சான்ஸ் கேட்கலாம்னு நினைச்சுட்டு இருக்கேன். இதையெல்லாம் கேட்டா நல்லா இருக்குமா?” என்று கேட்டுக்கொண்டிருந்தார் உதயநிதி.

“அவதாரோட சினிமாவுக்கு முழுக்கு போடலாம்னு அவர் முடிவெடுத்திருக்கிறதா எங்கேயோ படிச்சேனே சார்” என்று கேட்டவாறு உதயநிதி முன்னர் உதயமானான் பாச்சா.

“அதெல்லாம் வதந்தியா இருக்கும்பா... இப்பல்லாம் இன்டர்நெட்ல எங்க பார்த்தாலும் வதந்தியாதானே இருக்கு” என்று சாந்தமாகவே உரையாடினார் உதயநிதி.

“இருக்கலாம் சார். ஆனாக்கா, நீங்க வருங்கால அமைச்சர்னு வர்ற நியூஸெல்லாம் வதந்தின்னு சில பேர் வதந்தி பரப்பிட்டு இருக்காங்க... இதெல்லாம் பார்த்தா துர்கா மேடம் துக்கப்பட மாட்டாங்களா?” என்று கேட்டு ‘கெத்து’ நாயகனை கெட்ட கோபத்தில் ஆழ்த்தினான் பாச்சா.

“அதையெல்லாம் தலைவர் பார்த்துக்குவார். நீ வந்த வேலையை மட்டும் பார்” என்று பாச்சாவை அதட்டினார் ‘பாஸ் ஆன (!) பாஸ்கரன்’!

“அமைச்சரவைப் புலவரா அமைச்சரையே ஏற்பாடு பண்ணிட்டீங்க... அவர் இம்சை அரசன் புலவர் ரேஞ்சுக்குப் புகழ்பாடி மீம்ஸுக்கு மீல்ஸ் கொடுத்திருக்கார். இவ்வளவுக்குக்கும் மத்தியில செல்லூர் ராஜுவை எப்படி சார் கிண்டல் பண்ண திமுககாரங்களுக்கு மனசு வருது?” என்று கேட்டான் பாச்சா.

“அதெல்லாம் செல்லமா ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள பேசிக்கிறதுப்பா. ஏன் சீரியஸா எடுத்துக்கிறே?” என்று கேட்டார் உதயநிதி.

“ஆனாக்கா உங்க நண்பேன்(!) சந்தானம் சொல்ற மாதிரி கோபம் வர்ற மாதிரி காமடி பண்ணக்கூடாதுல்ல” என்ற பாச்சா, “சரி விடுங்க. உதயநிதி... சாரி உதயசூரியன் ஆட்சி அமைஞ்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு. எதையெல்லாம் சாதனைன்னு சொல்வீங்க?” என்றான்.

“திமுக ஆட்சியில தினமும் சூரியன் உதிக்குது. சாயங்காலம் ஆனதும் சைலன்ட்டா சைன் ஆஃப் பண்ணுது. கரன்ட் கட் ஆனாலும் காத்து வீசுது. ‘புஷ்பா’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப்-2’னு திராவிட மொழிப் படங்கள்லாம் திக்கெட்டும் கொடி நாட்டுனது திமுக ஆட்சியிலதானே? இதெல்லாம் உனக்கு சாதனையா தெரியலையா?” என்று காட்டமாகக் கேட்டார் உதயநிதி.

“அது சரி. நிஜமாவே சாதனை பண்ணியிருந்தா நீங்க ஏன் இப்படி லிஸ்ட்ல இல்லாததையெல்லாம் லிஸ்ட் போடப் போறீங்க? டான்னு வேலை பார்ப்பீங்கன்னு உங்களுக்கு ஓட்டு போட்டா, நீங்க ‘டான்’ வரைக்கும் வாங்கி டர்ன் ஓவர் பண்ணிட்டு இருக்கீங்க” என்றான் பாச்சா.

அப்போது உதயநிதியைச் சுற்றியிருந்த துணை நடிகர் சாயல் தொண்டர்கள் ஆக்‌ஷன் நடிகர்களாகும் அறிகுறிகள் தென்படவே அங்கிருந்து அப்பீட்டானான் பாச்சா.

அடுத்து அண்ணாமலை.

“ஓகே ஜி! உக்ரைன் தானே ஜி! அங்கே சொபிஸ்கி நயவிஸ்கின்னு ஒரு நண்பர் இருக்கார் ஜி. அவரை எனக்கு அழைப்பு அனுப்பச் சொன்னா அடுத்த நிமிஷமே அனுப்பிடுவார் ஜி. உக்ரைன் போய்ட்டு ஒரு எட்டு எல்லை வரைக்கும் போய் விளாதிமிர் புதினை விளாசுற மாதிரி விமர்சிச்சிட்டு வந்துடறேன் ஜி” என்று உள் அறையில் நின்றபடி உள் துறை அமைச்சருடன் பேசிக்கொண்டிருந்தார் அண்ணாமலை.

தொடர்ந்து, “என்னாங்க ஜி? அவர் நம்ம ஃப்ரெண்டுங்களா? சரி ஜி. பார்த்துக்கலாம்... சமாளிக்கிறது நமக்கு சகஜம்தானே!” என்று அண்ணாமலை பேசி முடிக்கவும் பாச்சா அவர் முன் ஆஜராகவும் சரியாக இருந்தது.

“என்ன சார்... தமிழ்நாட்டு அரசியலையெல்லாம் தாண்டி வெளியுறவுத் துறையிலயும் வெளுத்து வாங்குறீங்க... இளையராஜால ஆரம்பிச்சு இலங்கை வரைக்கும் ஏகப்பட்ட ப்ளான் போட்டிருக்கீங்க போல” என்று பாச்சா கேட்டு முடிக்கும் வரை அமைதியாக அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார் அண்ணாமலை.

பின்னர், “பாருங்கண்ணா! எங்கெங்கெல்லாம் பிரச்சினையா இருக்கோ அங்கெல்லாம் போய் பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறது பாரதிய ஜனதா கட்சியோட பாணி... சாரி பணி. பிரச்சினை இல்லைன்னாலும் ப்ளான் பி ஒண்ணு வச்சிருப்போம். அதை ஆரம்பிச்சா ஆட்டோமேட்டிக்கா பிரச்சினை வரும்” என்று அண்ணாமலை சொன்னதும், “அதான் உலகத்துக்கே தெரியுமே” என்று சிரித்த பாச்சா, “பட்ஜெட்டை எதிர்க்கிற போராட்டத்துல ஆரம்பிச்சு பல்லக்கு தூக்குறதுல வந்து நிக்கிறீங்களே? எரிவாயு சிலிண்டர் விலை எகிறிக்கிட்டே இருக்கே... இலங்கைக்கு ஹெல்ப் பண்ற மாதிரி இந்தியாவுக்கும் ஹெல்ப் பண்ணச் சொல்லி மோடி ஜி கிட்ட கேட்கக் கூடாதா?” என்று கேட்டான்.

“அத்தியாவசியப் பொருள் விலை உயர்றதுக்குக் காரணம் திமுக அரசுதான்னு அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. அது அறிக்கையா வந்ததும் மோடி ஜி கிட்ட சொல்லி ஸ்டாலினுக்கு ஸ்ட்ராங்கா அழுத்தம் கொடுப்போம். அதுக்கப்புறம் எல்லாருக்கும் எரிவாயு ஃப்ரீயாவே கொடுப்போம்” என்றார் அண்ணாமலை.

அதற்குள் அடுத்த அழைப்பு வந்தது. “உக்ரைன் இல்லையா? உகாண்டாவா? சரி பரவாயில்லை. நானும் கருப்பு. உங்க மக்களும் கருப்புன்னு சொல்லி உகாண்டா மக்களைக் கவர் பண்ணிடலாம் ஜி!” என்றார் அண்ணாமலை.

பாச்சா அவருக்கு பை சொல்லிவிட்டுக் கிளம்பினான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in